தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் யாவை என்பது நாம் பள்ளியில் படிக்கும்போது 3 மார்க் கேள்வி.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி , குண்டலகேசி என்று நம்மில் பலபேர் மிகச் சரியாகப் பதில் எழுதி 3 மார்க் வாங்கியிருப்போம். பின்னர் அடுத்தடுத்த வகுப்புகளில் கொஞ்சம் சிலப்பதிகாரத்தைப் பற்றியும், கொஞ்சம் மணிமேகலையைப் பற்றியும் படித்திருப்போம்… அவைகளும் கூட வெறும் 5 மார்க் கேள்விகள் என்ற அளவில் மட்டுமே நம் வாழ்க்கையைக் கடந்து விட்டன.
ஏனோ நம் பாடத்திட்டங்கள் நம்மை அதற்கு மேல் பயணிக்க விடவில்லை. தமிழை விட்டு விட்டு ஹிந்தியையும் , ஃபிரெஞ்சையும் எடுத்த மாணவர்களின் நிலை இன்னும் மோசம்.
“வாட் இஸ் காப்பியம் ?” என்று கேட்கலாம்.
சரி விடுங்கள்…..விஷயத்திற்கு வருவோம்….
சிலப்பதிகாரம் – கோவலன், கண்ணகி, மாதவி கதை சிலப்பதிகாரம் . நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எழுதியவர், இளங்கோவடிகள். எழுதியது இரண்டாம் நூற்றாண்டு என்று ஒரு சிலரும் இல்லையில்லை 5ம் நூற்றாண்டு அல்லது 6 ம் நுற்றாண்டு என்று ஒரு சிலரும் கூறுகின்றனர். உண்மை யாருக்கும் தெரியாது.
மணிமேகலை – சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள். கோவலனின் மரணத்தால் மனமுடைந்த மாதவி, தன் மகளை புத்த மதத் துறவியாக வளர்க்க முயற்சித்தாள். அதனால் மணிமேகலைக்கு வரும் சிக்கல்கள். இதற்கிடையில் ஒரு இளவரசன் அவளைக் காதலிக்க, அவள் கடல் கடவுளான மணிமேகலாவின் உதவியுடன் காயசண்டிகை என்னும் உருவெடுத்து , ஒரு அமுத சுரபியைப் பெற்று எல்லா மக்களுக்கும் நல்லது செய்தாள் என்று போகும் கதை. எழுதியவர் சீத்தலைச் சாத்தனார். அவர் எழுத்தாணியால் தன் தலையைக் குத்தி குத்தி சீழ் வைத்து விட்டதால் அவருக்கு அப்படி ஒரு பெயர் என்று ஒரு கதை உண்டு. அது பக்கா உடான்ஸ். அவர் பெயர் சாத்தன். ஊர் சீத்தலை. ஸோ…சீத்தலைச் சாத்தனார். இயற்றியது, இரண்டு அல்லது மூன்றாவது நூற்றாண்டு . இதிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன .
சீவக சிந்தாமணி – இது திருத்தக்கத் தேவர் என்னும் சமணப் புலவரால் ஒன்பது அல்லது பத்தாவது நூற்றாண்டில் எழுதப் பட்டது. இது சீவகன் என்னும் ஒரு மன்னனைப் பற்றிய கதை.அவன் தந்தை சச்சந்தன், பேரழகியான தன் மனைவி விசயையின் மீது கொண்ட காதலால் , தன் அரியணையைத் துறந்து தன் மந்திரி கட்டியங்காரனிடன் அரசை ஒப்படைக்கிறான். அந்தப் பேராசை கொண்ட மந்திரி, நம்ம ஓ. பன்னீர்செல்வம் போலில்லாமல், மன்னன் சச்சந்தனை நயவஞ்சகத்தால் கொன்று விடுகிறான். இறக்கும் தருவாயில் தன் மனைவி விசையையும் , தன் மகன் சீவகனையும் தப்ப வைத்து விட்டே இறக்கிறான். விசயை, சீவகனை ஒரு சுடுகாட்டில் விட்டு விட்டு , அவன் ஒரு வணிகனிடம் பாதுகாப்பாக சேரும் வரைக் காத்திருந்து விட்டு பிறகு துறவறம் மேற்கொள்கிறாள். சீவகன் பெரியவனாக வளர்ந்து வில்லன்களைப் பழிவாங்கும் ( எஸ். ரவிக்குமாரின்) கதைதான் சீவக சிந்தாமணி. இதற்கிடையில் அவன் சந்தர்ப்ப சூழலால் எட்டு பெண்களை மணம் புரிந்து கொள்கிறான் ( எட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆஆஆஆ????? ). இருந்தாலும் அவனைக் காமுகனாக சித்தரிக்காமல், சமய சந்தர்ப்பத்தால் இது போல வேலைகள் செய்யும் நம்ம கமல்ஹாசன் போலவே சித்தரிக்கப்படுகிறான். சீவகசிந்தாமணி மூலமாக திருத்தக்கத் தேவர்தான் விருத்தம் என்னும் செய்யுள் மாதிரியை முதன் முதலில் அறிமுகப் படுத்தியது ( ” விருத்தம் ” என்றால் என்ன என்று விரிவாகப் பின்னால்- இன்னொரு சமயம் ) .
வளையாபதி – பத்தாம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட இந்தக் காவியத்தை யார் எழுதியது , யாரைப் பற்றி எழுதியது என்று நமக்கு முழு விவரமும் கிடைக்கவில்லை. இது பற்றிய 70 செய்யுள்கள் மட்டுமே இன்று கிடைக்கின்றன. இது ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்தான் நம் அஜாக்கிரதையால் தொலைந்திருக்கிறது என்று சொல்லப் படுகிறது. வளையாபதியின் சில ஓலைச் சுவடிகளை, தான் திருவாவடுதுறை தமிழ் நூலகத்தில் ஒரு முறைப் பார்த்ததாகவும், அடுத்த முறை போனபோது அவை தொலைந்து போயிருந்தன என்றும் வேதனையுடன் கூறுகிறார் தமிழ் ஆராய்ச்சியாளர் உ.வே. சுவாமிநாத ஐயர். தமிழர்களின் சாபக் கேடு இது.
குண்டலகேசி – ஐந்தாவது காப்பியமான குண்டலகேசி 10 ம் நூற்றாண்டு வாக்கில் நாதகுத்தனார் என்பவரால் எழுதப்பட்டது. பத்திரை என்னும் குண்டல கேசி ஒரு பெரிய வணிகனின் மகள். தெரியாத்தனமாக, மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஒரு கள்வனை நேசிக்கிறாள். அவன் ஒரு தவறானவன். தன் தந்தையின் செல்வாக்கால் , அவனைக் காப்பாற்றி அவனையே மணமும் செய்து கொள்கிறாள். ஒரு நாள் ஒரு சிறிய வாக்குவாதத்தால், அவன் அவளைக் கொல்ல முடிவெடுத்து, ஒரு மலை உச்சிக்குக் கொண்டு செல்கிறாள். அவன் திட்டம் அறிந்து அவள் ஒரு சிறிய தந்திர நாடகமாடி, மலையிலிருந்து அவனைத் தள்ளி விட்டுக் கொன்று விடுகிறாள். பிறகு அந்தக் குற்ற உணர்ச்சியால் அவள் பைத்தியம் போலத் திரிந்து பின்னர் சமணத் துறவியாகிறாள். பின்னாளில், புத்தரின் மாணவர் சாரபுத்தருடன் ஒரு சமய வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதில் தோற்றுப் போய் புத்த மத்தை மேற்கொள்கிறாள் என்பது கதை….
இன்றிருக்கும் வாழ்க்கை முறையில், இந்தக் கதைகள் எப்படிக் காவியங்கள் ஆகியிருக்க முடியும் என்று தோணலாம். ஆனால், அந்தக் காலத்தில் புதுப் புது ட்விஸ்ட்கள் வைத்து இப்படி கதைகள் எழுதியதே பெரிய விஷயம் என்பதால் காவியங்கள் ஆகியிருக்கலாம்.
எது எப்படியோ, இதெல்லாம் பற்றி அடுத்த தலை முறைக்கு எப்படி எடுத்துச் செல்வது ?
வெ.பாலமுரளி