இந்த ஊரின் பெயரும், இங்குள்ள கற்குவியல் அமைப்பின் பெயரும் ஏழு சுத்துக் கோட்டை.
ஏழு சுத்துக் கோட்டை, சேலத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் ஈரோடு செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
இது போன்ற கற்குவியல் இந்த ஊரில் நான்கு இடங்களில் உள்ளன.
அங்கு ஒரு பெரியவரைப் பார்த்து இந்த ஊரின் காரணப் பெயர் பற்றிய கதையைக் கேட்டேன்.
1000 வருடங்களுக்கு முன்னர் இங்கு ஒரு ராஜா வாழ்ந்து வந்ததாகவும் , தான் சாகும்போது பூமிக்கடியில் ஏழு சுற்றுக் கோட்டை ஒன்றை கட்டி வைத்து, அதில் தன்னுடைய ஆபரணங்கள், பணம் போன்ற தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் புதைத்து வைத்து விட்டு இறந்து விட்டதாகவும், ஒரு கர்ப்பிணி பெண்ணை நரபலி கொடுத்தால் மட்டுமே அதை அடைய முடியும் என்றும் ரொம்பவே சீரியஸாகவே என்னிடம் சொன்னார்.
அவர் சொன்ன கடைசி மேட்டரை கேட்டதும் எனக்கு பக்கென்று போய் விட்டது.
அது மட்டுமல்லாது, சில ஆண்டுகள் முன்பு வரை சில பேர் ரகசியமாக அவ்வப்போது புதையலைத் தேடுவதும் நடந்ததாகக் குறிப்பிட்டார்.
அவரைப் பயமுறுத்தும் வகையில், நான் டிபார்ட்மெண்டில் இருந்து வருகிறேன் இங்கு ஏதாவது அது போன்ற சம்பவம் நடந்தால் ஒட்டு மொத்த ஊரையும் உள்ளே வைத்து விடுவோம் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடுத்து விட்டு வந்தேன் ( நான் எந்த டிபார்ட்மெண்ட் என்று அவரும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை).
இந்த வட்டத்துக்குள் உள்ளே போய் விட்டு கற்களைத் தாண்டாமல் யாராலும் வர முடியாது என்று வேறு சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவரின் முன்னிலையிலேயே அந்த வட்டத்துக்குள் நுழைந்து கற்களைத் தாண்டாமல் திரும்பினேன். கொஞ்சம் சுற்றி சுற்றி போவது போல் இருந்தது. அவ்வளவே.
பார்த்தீங்கள்ல ? அதெல்லாம் மூட நம்பிக்கை ஐயா. உள்ளே புதையல் இருக்கு என்று சொல்வதும் அது போலத்தான்.. அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று சொல்லி விட்டு கிளம்பினேன். இந்த வட்டங்களை ட்ரோனில் எடுத்தால் மட்டுமே சிறப்பாக வரும். ஆனால், மீனாட்சிபுரத்தில் ( மாங்குளத்தில்) கணி நந்தாசிரியன் புண்ணியத்தால் என்னுடைய ட்ரோன் ரிப்பேர் ஆகி விட்டது.
வேறு வழியின்றி என்னுடைய நார்மல் கேமராவில் அதை சுட்டு விட்டு கிளம்பினேன்.
சரி…விஷயத்திற்கு வருவோம்.
இதன் உண்மைப் பெயர் “ புதிர் நிலை வட்டம்” . ஆங்கிலத்தில் LABYRINTH .
இது இந்தியாவில் சில இடங்களிலும் , இன்றைய கிரேக்கம், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி போன்ற வெளி நாடுகளிலும் கிடைக்கின்றன.
இந்தப் புதிர் நிலை வட்டம் இது போன்று நிலைத்தில் கற்குவியல்களாகவும், பாறை ஓவியங்களாகவும், பாறைக் கீறல்களாகவும், பண்டைய காசுகளிலும் காணப்படுகின்றன.
இவற்றின் காலம் கி.மு.2000 முதல் கி.மு. 1000 வரை ( பெருங்கற்காலம்) என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது பெருங்கற்கால பண்பாட்டு மக்களின் நீத்தார் நினைவுச் சின்னம் என்று சிலரும், அன்றைய சமய வழிபாடு தொடர்புடையது என்று சிலரும், அன்றைய காலத்து வணிகக் குழுக்களின் குடியிருப்புகளின் வடிவம் என்று சிலரும்,அன்றைய காலத்து கோட்டைகளின் வடிவம் என்று சில அறிஞர்களும் கூறுகின்றனர். வழக்கம்போல், நம் இந்தியாவில் இது மகாபாரதத்தில் வரும் சக்கர வியூகம் என்று புராண கதைகளுடன் தொடர்பு படுத்துகின்றனர் ( சக்கர வியூகம் என்பது இவ்வளவு சிம்பிளா ? )
நிறைய நாடுகளில் இது பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்பு படுத்துவதால், நம் ஊரில் உள்ள புதிர் நிலை வட்டங்களும் கண்டிப்பாக பெருங்கற்காலச் சின்னங்களே.




இன்று புதிர் நிலை வட்டத்தின் நடுவில் ஒரு கல்லை வைத்து, அதை உள்ளூர் கடவுளாக மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
நமக்கெதுக்கு வம்பு என்று நானும் உள்ளே சென்று ஒரு கும்பிடை போட்டு விட்டு கிளம்பினேன்.
வெ.பாலமுரளி
நன்றிகள் : இந்த இடத்தைப் பற்றி எனக்குச் சொல்லி என்னை இங்கு செல்ல வைத்த தம்பி குமரவேலுக்கும்,தன்னுடைய “தமிழரைத் தேடி” புத்தகத்தில் இந்த புதிர் நிலை வட்டங்களைப் பற்றி தெளிவாக விளக்கி எழுதிய ஐயா தங்கவேலு அவர்களுக்கும்.