ஏழு கன்னியர் வழிபாட்டின் வரலாறு சிந்து வெளியிலிருந்து தொடங்குகிறது.
இதன் சரியான மூலம் தெரியாவிட்டாலும் கூட, கிராமங்களில் இது பற்றிய கதைகளுக்கு பஞ்சம் கிடையாது. அதில் ஒன்றுதான், “எழுவரை முக்கி” கிராமத்தில் சொல்லப்படும் கதை.
ஒரு காலத்தில் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழு கன்னிப் பெண்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த வழியாக சென்ற வழிப்போக்கன் ஒருவன், குறும்பு செய்கிறேன் பேர்வழி என்று, கரையில் இருந்த அந்தப் பெண்களின் ஆடையை எடுத்துச் சென்று விட்டான். அந்தப் பெண்கள் எவ்வளவோ மன்றாடியும் அவன் திருப்பித் தராமல் சென்று விடவே, கலக்கமுற்ற
கன்னிப் பெண்கள் தங்கள் மானத்தைக் காக்க அந்த ஆற்றிலேயே மூழ்கி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
முட்டி, மோதி, அழது, புலம்பிய ஊராரின் கனவில் தோன்றிய அந்தக் கன்னிப் பெண்கள், “கவலை வேண்டாம். எங்கள் ஏழு பேரையும் கடவுள் போல பாவித்து வணங்குங்கள், நாங்கள் இந்த ஊரை காக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார்கள். அதிலிருந்து தொடங்கியதுதான் இந்த “ஏழு கன்னியர் வழிபாடு”. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அந்த ஊருக்கு “எழுவரை முக்கி” என்று பெயர் வந்ததும் அதற்குப் பிறகுதான்.
இந்து மதம் இந்த ஏழு கன்னியர் வழிபாட்டை(யும்) உள்ளிழுத்துக் கொள்ளும் வரை இது நாட்டார் வழிபாடுதான். ஏதோவொரு காரணத்தினால், தங்கள் குல (குடும்ப) தெய்வம் பற்றிய விபரம் தொலைந்து போன மக்கள் இன்றும் இந்த “ஏழு கன்னியரை” தங்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அது சரி…இந்த ஏழு கன்னியர் வழிபாடு எப்படி இந்து மதத்திற்குள் வந்தது ? நல்ல கேள்வி.
நாகசாமி என்னும் ஏழரை நம் தமிழ் மொழிக்குச் சொன்னது, 100 சதவிகிதம் இந்து மதத்திற்குத்தான் பொருந்தும். ஆம். சமணம், பௌத்தம், ஆசீவகம், கௌமாரம், நாட்டார் தெய்வங்கள் என்று அனைத்து மதங்களையும் , அதன் தெய்வங்களையும் உள் (கடன்) வாங்கிக் கொண்ட ஒரே காரணத்தினால்தான் நமது இந்து மதம் இன்று வரை தழைத்தோங்கி உள்ளது.
நமது குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் வள்ளி என்னும் ஒரே ஒரு மனைவியோடு வாழ்ந்தவன். அவனுக்கு தெய்வானை என்னும் இன்னொரு மனைவியையும் சேர்த்து வைத்து “ஸூப்ரமணியன்” (அ) “கார்த்திகேயன்” (அ) “ஸ்கந்தன்” ஆக்கப்பட்டது, முருகனின் தாயார் கொற்றவையை “உமாமஹேஷ்வரி”யாக்கி, அவளை சம்பந்தமேயில்லாத சிவனின் மனைவியாக்கி, சிவனும் ருத்ரனும் ஒன்றுதான் என்று சொன்னது, நமது தமிழ் வணிகர்களின் தெய்வமான பிள்ளையாருக்கு புத்தி, சித்தி என்று தத்துவார்த்தமாக இரு மனைவியரைக் கட்டி வைத்து அவரை “கனேஷ்” என்றாக்கியது, மாயோன் என்ற பெருமாளை “விஷ்ணு” வாக்கியது, ஆசீவகர்களின் திருநிலையான மாதங்கியை “கஜலெக்ஷ்மி” யாக்கியது. சமணர்களின் பண்டிகையான “தீபாவலி” யை “தீபாவளி” என்று பெயர் மாற்றம் செய்து தனதாக்கிக் கொண்டது (எந்த ஒரு உண்மையான வீரனும் இரவில் போர் செய்து எதிரியைக் கொல்ல மாட்டான் – எதிரி எவ்வளவு தீயவனாக இருந்தாலும்), சமணத் தீர்த்தங்கரரில் ஒருவரான பார்சுவ நாதரின் ஐந்து தலை நாகச் சின்னத்தை திருமாலுக்காக எடுத்துக் கொண்டது, பௌத்தர்களின் வெஜிடேரியன் கான்சப்டைப் பின்பற்றி இந்து மதம் என்றால் வெஜிடேரியன் மதம் என்றாக்கியது, பீஃபை முழுப் போடு போட்ட சமுதாயம் திடீரென்று பசுவை தெய்வமாக்கியது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
அதேபோல்தான், ஏழு கன்னியர் வழிபாடு, சப்த மாத்தா அல்லது சப்த மாத்ருக்கள் வழிபாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்து மதத்துடன் இணைக்கப்பட்டு விட்டது. வழக்கம் போல் அவர்களுக்குப் புதுப் பெயர் சூடலும் நடந்து விட்டது.
அவர்களின் புதுப் பெயர்கள்:
1. பிராமி – பிரமனின் மனைவி அல்லது பிரமனின் அவதாரம்
2. மகேஸ்வரி – சிவனின் மனைவி அல்லது சிவனின் அவதாரம்
3. கௌமாரி – முருகனின் மனைவி அல்லது முருகனின் அவதாரம்
4. நாராயணி அல்லது வைஷ்ணவி – விஷ்ணுவின் மனைவி அல்லது விஷ்ணுவின் அவதாரம்
5. இந்திராணி – இந்திரனின் மனைவி அல்லது இந்திரனின் அவதாரம்
6. வராஹி – திருமாலின் மனைவி அல்லது திருமாலின் அவதாரம்
7. சாமுண்டி – ருத்ரனின் மனைவி அல்லது ருத்ரனின் அவதாரம்
நாம் காண்பது போல, மேலே உள்ள தெய்வங்கள் கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய தெய்வங்களையும் கவர் பண்ணி விட்டன.
அதனால்தான், குலதெய்வ விபரம் தொலைத்தவர்கள் ஏழு கன்னியரை வழிபட அறிவுறுத்தபட்டது.
எது எப்படியோ, ஏறத்தாழ 5000 வருடங்களாக நமது “ஏழு கன்னியர்” வழிபாடு இன்று வரை தொடர்வது நமக்குப் பெருமையும், மகிழ்ச்சியும்.
வெ.பாலமுரளி
ஆதாரங்களும் நன்றிகளும் :
மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும்
மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும்
முனைவர்.தொ.பரசிவம் எழுதிய இந்து தேசியம்
முனைவர்.தொ. பரசிவம் எழுதிய அழகர் கோயில்
முனைவர் க.நெடுஞ்செழியன் எழுதிய ஆசீவகமும் ஐயனார் வரலாறும்


விக்கிப்பீடியாவும் இன்னும் சில இணைய தளங்களும்