எடக்கல் அதிசயங்கள்….

எடக்கல் அதிசயங்கள்….

நான் திண்டிவனத்துக்கு அருகில் உள்ள பாறைக் கீறல்கள் நிறைந்த “பெருமுக்கல்” சென்று வந்தபிறகு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு தூங்கவே முடியவில்லை. அங்குள்ள பாறைக் கீறல்களும். சில தமிழிக் கல்வெட்டுக்களும் , கன்னா பின்னாவென்று கீறப்பட்டிருந்த குறியீடுகளும் என்னை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தன. 

ஆனால், சென்ற வாரம் கேரளாவில் எடக்கல்லில் உள்ள அம்புக் குத்திப் பாறையிலிருக்கும் பாறைக் கீறல்களைப் பார்த்த பிறகு இன்னும் ஒரு மாதத்திற்கு தூக்கம் வராது போலிருக்கிறது. 

பெருமுக்கலைப் போல 10 அல்லது 20 மடங்கு பாறைக் கீறல்கள். அதுவும் பெருமுக்கலை விட இன்னும் தெளிவாக,அழகாக, ஒரு மிகச் சிறந்த ஓவியனால் வரையப்பட்ட ஓவியங்கள் போல உள்ளன. 

எடக்கல் பாறைக் கீறல்களை வைத்து மட்டுமே “குறைந்தபட்சம்” ஒரு 10 பேராவது PhD  பண்ண முடியும். அந்த அளவுக்கு குறியீடுகளும், குறியீடுகளை நெஞ்சில் ஏந்திய மனித உருவங்களும், விலங்குகளும் ஏகப்பட்ட செய்திகளை தன்னகத்தே தாங்கி காலத்தால் அழியாமல் ஜம்மென்று நிற்கின்றன.

இங்கு பாறைக் கீறல்கள் உள்ள குகை மேற்குகை என்றும், அதற்கு செல்லும் வழியில் உள்ள முதல் குகை கீழ்க் குகை என்றும் அழைக்கப்படுகிறது. 

இங்கு செல்வதற்கு முறையான பாதை உள்ளது. ஒன்றரை கி.மீ. மேடான பாதையில் சென்றால் முதலில் கீழ்க் குகை வருகிறது. அதில் நுழைந்து  ஒரு 250 மீட்டர் தொலைவு, அரசு போட்டிருக்கும் முறையான செங்குத்துப் படிக்கட்டுக்களில் ஏறிச் சென்றால் பாறைக் கீறல்கள் உள்ள மேற்குகையை சென்றடைந்து விடலாம்.

இரண்டு குகைகளிலும் நிறைய மக்கள் தங்கி பாறையில் கீறும் வேலைகளைச் செய்ததை நம்மால் நன்றாக உணர முடிகிறது. அதிலும் கீழ்க் குகையில் உள்ள ஒரு சமதளப் பாறையில் ஒருவர் அமர்ந்து எப்படி கீற வேண்டும், என்னென்ன கீற வேண்டும் என்று பாடம் எடுத்ததைப் “போன்ற” அமைப்பு நம்மை திகைக்க வைக்கிறது.  

இங்கு ஆய்வு செய்வதற்கு கன்னாபினாவென்று விஷயங்கள் இருந்தாலும், மேலோட்டமாக பார்த்தவுடன் மனதில் பதியும் சில விஷயங்களை பதியவே இந்தக் கட்டுரை. 

Disclaimer: இது பற்றி நிறைய படித்த பிறகு, ஆய்வு செய்த பிறகு, திரும்ப ஓரிரு முறை சென்ற பிறகு, உயர்திரு.பாலா பாரதி, உயர்திரு.தங்கவேலு  போன்ற நண்பர்களுடன் நிறைய விவாதித்த பிறகு நான் கீழே சொல்லும் கருத்துக்கள் மாறலாம். இப்போதே சொல்லி விட்டேன். 

  1. இதன் காலத்தை கேரள அரசு கி.மு. 4000 முதல் கி.மு.1000 வரை என்கிறது. அதை “தென்னிந்தியாவின் புதிய கற்காலம்” என்றும் வரையறுக்கிறது.  
  2. என்னுடைய கணிப்பில் இதன் காலம் கி.மு.1000 முதல் கி.மு. 500 வரை இருக்க வேண்டும். ஓவியங்களின் தெளிவையும், அழகையும், நேர்த்தியையும் வைத்து அப்படி சொல்கிறேன். 
  3. பாறைக்கீறல்களுக்கு நடுவில் “ காத” என்ற தமிழிக் கல்வெட்டும் பாறைக்கீறல்கள் ஸ்டைலிலேயே , அதே ஆழ அகலத்தில் உள்ளது. அதை கி.மு. 4000 க்கு கொண்டு செல்ல முடியுமா என்று தெரியவில்லை. 
  4. இது கண்டிப்பாக பெருங்கற்காலமாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அதாவது இரும்புக் காலம். 
  5. அங்குள்ள பாறைக் கீறல்கள் அனைத்தும் கூர்மையான இரும்புக் கம்பியினால் கீறியதுபோலவே எனக்குத் தோன்றுகிறது. கல்லில் இன்னொரு கல்லை வைத்து செதுக்கினால் இவ்வளவு சீராக ஒரே அளவில் எந்தவித சேதாரமில்லாமல் செதுக்க முடியுமா என்பது சந்தேகமே.
  6. இந்தப் பாறைக் கீறல்கள் உள்ள பாறை Sand Stone என்னும் வகையைச் சேர்ந்தது.
  7. இங்குள்ள மனித உருவங்களின் தலை அலங்காரத்தைப் பார்த்தால், பழங்குடி மக்களின் தலைவர், தலைவி போல் உள்ளன. கிரீடம் ஸ்டைலில் வித விதமான அலங்காரங்கள், அதி அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன.
  8. அவற்றின் சில உருவங்களில், கழுத்துக்குக் கீழே இடுப்பு வரைக்கும் குறிப்பிட்ட குறியீடுகளையே உடலாக வைத்து செதுக்கியுள்ளனர் ( கீழே உள்ள படங்களில் அதைத் தனியே காட்டியுள்ளேன்). 
  9. இங்கு மான் போன்ற சில ஓவியங்களும் கீறப்பட்டுள்ளன.
  10. இங்குள்ள இந்த மான் கீறல்களும் சில மனித உருவங்களும் பெருமுக்கல் கீறல்களையும், புலிப்பட்டி பாறை ஓவியங்களையும் ஒத்துள்ளன. இது எதேர்ச்சையாக நடந்த செயலா, அல்லது அந்த கால கட்டத்தில் இது ஒரு பொதுவான கூறாக இருந்திருக்கலாமா என்பது ஆய்வுக்குரிய விஷயம். 
  11. அதேபோல் இங்குள்ள சில குறியீடுகளை சில பாறை ஓவியங்களிலும் காண முடிவது மற்றுமொரு சிறப்பு
  12. இந்தப் பாறைக் கீறல்கள் செதுக்கி சில நூற்றாண்டுகள் கழித்து இதே இடத்தில் சில தமிழிக் கல்வெட்டுக்களும் , அதன் பின் பல நூற்றாண்டுகள் கழித்து செதுக்கிய கிரந்தக் கல்வெட்டுக்களும் உள்ளன. 
  13. இந்தப் பிற்காலக் கல்வெட்டுக்களின் கோடுகள், பாறைக்கீறல்களில் உள்ள கோடுகளோடு ஒப்பிடும்போது மிகவும் மெலிசாகவும், ஆழம் குறைவாகவும் காணப்படுகின்றன
  14. அந்தத் தமிழிக் கல்வெட்டுக்களில் “நாக” நாக நாத” “ணாக” என்று முன்று நான்கு இடங்களில் திரும்பத் திரும்ப ”நாக” என்று தொடங்கும் சொல்  பொறிக்கப்பட்டுள்ளன.
  15. எனவே, இங்குள்ள குறியீடுகளும், இங்கு சொல்ல வந்த விஷயங்களும் ஏன் நாகர் பழங்குடியினரைச் சார்ந்ததாக இருக்கக் கூடாது என்ற கேள்வியை என்னால் தவிர்க்க முடியவில்லை. 
  16. இங்கு நமது தொல்லியல் துறை ஆவணப்படுத்தியுள்ள நான்கு தமிழிக் கல்வெட்டுக்களில் ஒன்றைத் தவிர மற்றவற்றை கண்டு பிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது.  
  17. சில கல்வெட்டுக்களில் சமீப காலத்தில் காவி நிறத்தில் சாந்து போன்ற ஏதோவொன்றை வைத்து அழித்த தடம் உள்ளன. அவை தமிழிக் கல்வெட்டுக்களாக இருக்கவும் “சிறிது” வாய்ப்பு உள்ளது. 
  18. அங்கிருந்து ஒரு 8 கிமீ தூரத்தில் உள்ள “ வயநாடு ஹெரிட்டேஜ் மியூசிய”த்தில்  பிற்காலத் தமிழ்க் கல்வெட்டுள்ள ஒரு சிறிய கல் துண்டு ஒன்றை காட்சிப் படுத்தியுள்ளனர். அதன் கீழே அந்தக் கல்வெட்டு பற்றிய விவரங்களை ஒரு வெள்ளைக் காகிதத்தில் பிரிண்ட் செய்து வைத்து, பின்னர் அதை யாரும் படித்து விடாதபடி கிழித்தும் வைத்துள்ள தடம் இன்றும் உள்ளது. அங்கு ஒரு அரசு மியூசியத்திலேயே தமிழுக்கு அவ்வளவுதான் மரியாதை என்னும்போது, காட்டுக்குள் ஒரு குகைக்குள் இருக்கும் தமிழிக் கல்வெட்டுக்கு என்ன மரியாதை கிடைக்கப் போகிறது என்ற பயத்தினாலேயே இந்த சந்தேகத்தை எழுப்புகிறேன். என் சந்தேகம் முற்றிலுமாக தவறாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. 
  19. இந்த எடக்கல் குகைத் தளங்களை அமர்க்களமான சுற்றுலாத் தலமாக அமைத்து வைத்துள்ளது கேரள அரசு. குகைகளையும், செல்லும் வழியையும் அவ்வளவு சுத்தமாக பராமரித்து வைத்துள்ளனர். வழியெங்கும் நிறைய கடைகளும் உள்ளன. அங்கு செல்லும் சுற்றுலா வசிகளுக்கு குடிக்கும் பானங்களுக்கோ, உணவுக்கோ பஞ்சமில்லை. நமது கார்களை பார்க் செய்யவும் மிகவும் அழகாக Organized ஆக இடங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். 
  20. நமது தொல்லியல் இடங்களையும் இது போல ஒரு நாள் பார்க்க முடியுமா என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

நிறைய படித்து விட்டு, இன்னும் கொஞ்சம் ஆய்வு செய்து விட்டு, நண்பர்களுடன் நிறைய விவாதித்து விட்டு, மிகவும் விரிவாக பிறிதொரு சமயம் உங்களை சந்திக்கிறேன்.

வெ.பாலமுரளி