கட்டுரையை எழுதியவர் : ச. தனசேகர் – கோராவில். நன்றிகள் ஐயா.
திருக்குறள் என்ற ஓர் உயர்ந்த தமிழ் அற நூல் நமக்கு கிடைக்க ஒரு ஆங்கில அதிகாரியும் ,ஒரு சமையல்காரரும் தான் காரணம்.
அயோத்தி தாசர் (மே 20, 1845 – 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர்,
தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். தலித் இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர்.
இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அவர்கள் தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல்
போயிருந்த திருக்குறளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் ,
அதன்பின் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது .
எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிசு வைட் எல்லிசு
(Francis Whyte Ellis 1777-1819)( எல் = சூரியன் , கடவுள் , எல் + ஈசன் = ஈசனாகிய கடவுள் = எல்லீசன் = எல்லிஸ் )
என்பார் 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு
வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி ஆவார்.
1810 ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் ஆனார். ஒரு அரச அதிகாரி
என்ற அளவில் இவர் சென்னை மாகாண மக்களுக்கு ஆற்றிய பணி ஒருபுறம் இருக்க, மொழியியல்
துறையிலும் இவர் தமிழ் மொழிகள் தொடர்பில் ஆற்றிய பணிகளும் நினைவு கூரத் தக்கவை. 1816 ஆம்
ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து,
” தமிழ் மொழிக் குடும்பம்” என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர் இவரேயாவார்.
“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூலைக் கால்டுவெல் எழுதுவதற்கு
40 ஆண்டுகள் முன்னரே இது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்த முன்னோடியும் ஆவார்.
கி.பி. 1818-இல் சென்னையில்; உருவான குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்க, எல்லீஸ் வெட்டிய கிணறுகளில்
ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. இக்கிணற்றின் கைப்பிடிச்
சுவரில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில் எல்லீஸ் துரை 1818-ம் ஆண்டில் வெட்டி வைத்த கல்வெட்டு இன்றளவும்
நம் பார்வைக்கு உள்ளது. அதில்,
சாயங்கொண்ட தொண்டியசாணுறு நாடெனும்
ஆழியிலிழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குடகடலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத் தெல்லீச னென்பவன் யானே
பண்டார காரியப் பாரஞ்சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு
என்பதின் பொருளை யென்னுள்ளாய்ந்து… என்ற வரிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக்
கையாண்டிருக்கிறார்.
மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரிலுள்ள எல்லிஸ் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது.
இதில் ( ‘எல்லீசன் என்னும் இயற்பெயருடையோன்
திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
அருள் குறள் நூலுள் அறப் பாலினுக்குத்
தங்கு பல நூல்உ தாரணக் கடலைப் பெய்(து)
இங்கி லீசுதனில் இணங்க மொழி பெயர்த்தோன்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும்
அவருக்குத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் இருந்த ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றன.
எல்லிஸ் மாநில நிதி அதிகாரியாகவும், அக்கசாலை (Mint)யின் தலைவராகவும் இருந்த காரணத்தால்,
திருவள்ளுவர் உருவம் பொறித்த (புழக்கத்தில் வராத) தங்க நாணயங்களை வெளியிட்டார் என்று தெரிகிறது.
இந்நாணயங்களை அண்மைக் காலத்தில் நாணயவியல் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன்,
அளக்குடி ஆறுமுக �தாராமன் ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழறிஞர் எல்லிசு-சை மறைத்த திராவிட தேசியம்!
எல்லிசும் தமிழ் மொழிக் குடும்பமும்!!
தமிழும், அதன் கிளை மொழிகளான கன்னடம், தெலுங்கு, மழையாளம், துளு போன்ற திராவிட மொழிகளும்
முன்பு தமிழிய மொழிக் குடும்பமாகவே கருதப்பட்டு வந்ததுள்ளது.
கால்டுவல் காலத்திற்குப்பின் தான் அவை திராவிட மொழிக் குடும்பங்களாயின. கால்டுவலின் நூல் வெளிவருவதற்கு
முன்பே 1852 வாக்கிலேயே, என்றி ஒய்சிங்டன் (Henry Hoisington) என்பவர் தென்னிந்திய மொழிகளான
தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளை தமிழே தோற்றுவித்தது என்ற கருத்தை முன் வைத்தார்.
1816 வாக்கிலேயே ‘எல்லிசு’ (இயற்பெயர் – பிரான்சிசு வைட் எல்லிசு – Francis Whyte Ellis 1777-1819)
தென்னிந்திய மொழிகள் தனி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனவும் அவைகளுக்கான மூலமொழி தமிழ் எனவும்
கருத்துக் கொண்டிருந்தார். அதன்பின் 40 வருடம் கழித்துத்தான் (1856) கால்டுவல் திராவிட ஒப்பிலக்கணம் என்ற நூலை
எழுதினார். “தென்னிந்திய மொழிகள் ஒன்றோடொன்று உறவுடையன, சமற்கிருத செல்வாக்கு என்பது சொற்களில்
உள்ளதே தவிர இலக்கணத்தில் இல்லை, இம்மொழிகள் எல்லாம் ஒரே வினையடிச் சொற்களை உடையவை, தமிழ் மற்ற
மொழிகளுக்கு மூலம் என்ற கருத்துக்களை எல்லிஸ் முன் வைத்தார்” என்கிறார் தாமஸ் டிரவுட்மன்.
தமிழ் யாப்பியலை உள்ளடக்கிய நான்கு ஆய்வுரைகளை எழுத எல்லிசு திட்டமிட்டிருந்தார். அவை
1.தமிழ் பேசும் நாடுகளின் வரலாறு,
2.தமிழ்மொழி, அதன் பழைய, புதிய கிளை மொழிகள்,
3.தமிழ் யாப்பியல்,
4.தமிழ் இலக்கியம் ஆகியனவாகும்.
இந்த ஆய்வுரைகள் கிட்டத்தட்ட நிறைவுற்றதாகவும், சில திருத்தங்கள் மட்டும் செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நான்கு ஆய்வுரைகளும் வெளி வந்திருக்குமானால் அவை எல்லிசுக்குப் பெரும் புகழை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை
என்கிறார் தாமஸ் டிரவுட்மன். தமிழும் அன்றே பெரும்புகழ் பெற்றிருக்கும். எல்லிசின் திட்டத்தின் மையப்பகுதியும் முதன்மை
ஆய்வுரையும் தமிழ் மொழி குறித்தது ஆகும். ஆனால் அவை வெளி வரவில்லை.
எல்லிசு 1819இல் எதிர்பாராமல் தனது 41ஆவது வயதில் இறந்து போனார். இது தமிழுக்கும் தமிழர்க்கும் மாபெரும் இழப்பாகும்.
இவருடைய கையெழுத்துப் படிகள் துரோகிகளால் அடுப்பெரிக்கப் பயன்படுத்தப்பட்டன.
அவரது தமிழ் ஆய்வுகள் நூலாக வெளிவரவில்லை. எல்லிசின் ஆய்வு முடிவடைந்து நூலாக வெளி வந்திருக்குமானால் தமிழ் மொழிதான்
தென்னிந்திய மொழிகளுக்கு மூலமொழி என்ற கருத்தும், தென்னிந்திய மொழிகள் தமிழிய மொழிக் குடும்பம் என்ற கருத்தும் நிலை
பெற்றிருக்கும். அவர் மூலத்திராவிட மொழி குறித்தோ, திராவிடமொழிக் குடும்பம் குறித்தோ எதுவும் சொல்லவில்லை. எல்லிஸ் அவர்கள்
கால்டுவலுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே தனது ஆய்வின் மூலம் இம்மொழிகளுக்கு மூலமொழி தமிழ்தான் என்பதைக் கண்டறிந்திருந்தார்.
உண்மையில் ‘திராவிடம்’ என்ற ஒரு மொழி இல்லை. தமிழ் என்ற சொல்தான் திரமிள, திரவிட என உருமாறி ‘திராவிடம்’ என்ற
சொல்லாக ஆகியது. இன்று இக்கருத்துக்கள் பல மொழியியல் அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக உள்ளது. ஆகவே
இம்மொழிகளுக்கு தமிழ்தான் மூலம் என்பதால் இம்மொழிக் குடும்பத்தை தமிழியமொழிக் குடும்பம் எனக்கொள்வதே பொருத்தமானதாகும்.
திராவிடத்தை சுட்டிக்காட்டிய தமிழகத்தில் தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தால் கால்டுவெல்லை
மட்டும் தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி, தமிழ் ஆய்வறிஞர் எல்லிசை இரட்டாடிப்பு செய்து வரலாற்றிலிருந்து மறையச் செய்தனர்.