ஆசீவகர்கள் பார்வையில்…..

எனக்கு இந்தத் தமிழிக் கல்வெட்டுகள் இருக்கும் இடத்திற்கெல்லாம் போகும்போது இரண்டு பிரதான கேள்விகள் எழும்.

  1. நமது அரசாங்கம் எப்படி இவற்றை சமணத்தோடு ஒப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது ? சமணர்களாக இருந்தால் தீர்த்தங்கரர்கள் பற்றியோ, இயக்கிகள் பற்றியோ சிற்பங்களோ, குறிப்புகளோ செதுக்காமல் விட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் அந்த அளவுக்கு சமயப் பற்றுள்ளவர்கள். 

என்னுடைய கூற்றுப் படியும், பெரிய அறிஞர்களான முனைவர் நெடுஞ்செழியன் அவர்கள் கூற்றுப் படியும், என்னுடைய ஆய்வு நண்பர்கள் ராஜகுரு, கண்ணன் போன்றோரின் கூற்றுப் படியும் இங்கிருந்தவர்கள் கண்டிப்பாக ஆசீவகத்தோரே.

  • அதேபோல், தமிழிக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ள நிறைய இடங்களில் “ பள்ளி” என்ற பிராகிருத சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கல்விச் சாலை, இடம், உறங்குமிடம்  என்று நிறைய அர்த்தங்கள் இருந்தாலும், பெரும்பாலும் இதை கல்விச் சாலை என்னும் அர்த்ததிலேயே ஆவணப்படுத்தியுள்ளனர் நமது தொல்லியல் துறை. எனக்கு இதில் முழுவதுமாக உடன்பாடில்லை.

அ) கல்விச் சாலையாக இருந்தால் உட்கார்த்து படிப்பதற்குத் தான் கல் ஆசனங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டுமே தவிர படுத்து உறங்குவதற்கு கற்படுக்கைகள் செய்திருக்க மாட்டார்கள். 

ஆ) ஒருவேளை இது ஏன் ஹாஸ்டலாக இருந்திருக்கக் கூடாது என்று உங்களுக்குத் தோன்றலாம் ? இந்தக் குன்றுகள் இருக்குமிடம் அனைத்தையும் சுற்றிலும் இருப்பது கிராமங்கள்தான். தங்கள் குழந்தைகளை மிக அருகில், குன்றின் மீதுள்ள ஹாஸ்டலில் போய் விட்டிருப்பார்களா ? யோசிக்க வேண்டும். 

இ) நான் பார்த்த “பெரும்பாலான” குன்றுகள் நல்ல உயரத்திலும், மிகவும் சரிவான வழுக்குப் பாறைகளைக் கொண்டதாகவும் உள்ளன. வழுக்கி விழுந்தால் உயிர் போவது உறுதி. குறைந்த பட்சம் நிரந்தரமாக கால், கைகளை இழக்க வேண்டி வரும். உதாரணத்திற்கு, யானைமலை , அழகர்மலை, திருப்பரங்குன்றம். இப்படிப்பட்ட இடங்களில், கல்வி சொல்லித் தருகிறேன் என்ற பெயரில் சிறுவர்களையோ, சிறுமிகளையோ கூட்டிச் சென்று ரிஸ்க் எடுத்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு ( இதில் ஒரு குன்றில் ஏறுகையில் ஒரு இடத்தில் தவறி விட்டதில் என் வலது கை உடைந்து 3 மாதங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதுவும் விழுந்த இடம் ஆறடி கூட இருக்காது. ஆனால் குன்றில் மேலிருந்து விழுந்தால் ஸ்வாஹாதான்) 

சரி …நீ என்னதான் சொல்ல வருகிறாய் ராசா என்கிறீர்களா ? சொல்லுவோம்ல….

இவை பெரும்பாலும் மருத்துவமனைகளாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். அதை நிரூபிக்கிறாற்போல், அவர்கள் வசித்த இடங்கள் அனைத்திலும் மருந்துகள் அரைக்கும் குழிகளை இன்றும் காண முடியும். அதில் சில இடங்களில் நான் எடுத்த படங்களை இங்கு பதிவிடுகிறேன்.

அதுமட்டுமல்லாமல், ஆசீவகத் துறவிகள் மருத்துவத்திலும், வானிலை ஆராய்ச்சிகளிலும் சிறந்து விளங்கினர் என்ற குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

அதேபோல், அவர்களுடைய வசிக்கும் இடங்களிலிருந்து, அருகில் உள்ள ஊர்களும், வானமும் தெளிவாகவும், அழகாகவும் தெரியும்படி பார்த்துக் கொண்டதையும் இங்கு பதிவிட்டுள்ள படங்கள் மூலம் காண முடியும்.

இதற்கு இன்னொரு காரணம், இவை மருத்துவமனையாக இருப்பதால், மக்களுக்கு தாங்கள் தங்கும் இடம் தூரத்திலிருந்தே தெரிய வேண்டும் என்ற எண்ணமாகவும் இருக்கலாம். 

எது எப்படியோ, இங்கு தங்கியிருந்த ஆசீவகத் துறவிகள் ஏதோ ஒரு பொது நலச் சேவையில் ஈடுபட்டிருந்தது தெளிவு. 

வெ.பாலமுரளி