அஃஉ
நான் இந்தத் தொடரின் முதல் கட்டுரையில் சொன்னது போல, ஆசீவகத்தைத் தேடி நாம் பயணிக்கத் தொடங்கினால்,நமது பயணம் பாறை ஓவியங்களிலிருந்தும், நீத்தார் நினைவுச் சின்னங்களிலிருந்தும் தொடங்கி, அறிவர் மரபு , பண்டைய தமிழ்ச் சித்தாந்தங்கள், ஆசீவகத்தின் எழுச்சி, அய்யனார் வழிபாடு, தமிழிக் கல்வெட்டுக்கள் என்று மிகவும் மெதுவாகத்தான் பயணிக்க வேண்டியுள்ளது.
அது சரி…அது என்ன பாறை ஓவியங்களிலிருந்தும், நீத்தார் நினைவுச் சின்னங்களிலிருந்தும் ஸ்டார்ட்டிங் பாயிண்ட் என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம்.
காலத்தால், இவையிரண்டும்தான் மிகவும் முற்பட்டவை.
ஸோ ???????
சொல்கிறேன்.
ஆசீவகம் என்ற மதம் டமாலென்று ஒன்றும் ஆகாயத்திலிருந்து குதித்து விடவில்லை.
பண்டைய தமிழரின் மெய்யியல் / சித்தாந்தம், அறிவர் மரபிலிருந்து சில பல தமிழரின் தனித்துவமான திறமைகள் (உதாரணத்திற்கு வானவியல் ஆராய்ச்சி), பண்டைய தாந்திரீகச் சடங்கு முறைகள் என்று நிறைய விஷயங்களை உள்வாங்கி, நிறைய விவாதித்து, முதலில் ஒரு சங்கமாக அமைத்து, அதன் பிறகே ஒரு மதமாக உருவாகியிருக்க வேண்டும்.
மற்ற மதங்கள் போல ஆசீவகம், ஒன்று அல்லது இரண்டு சித்தாந்தங்களை மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை.
அறிவியலை அடிப்படையாக வைத்து நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு சித்தாந்தங்களை ஒரே சமயத்தில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆசீவகர்களின் பலமும் அதுவே, பலவீனமும் அதுவே.
தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில் அது பற்றி விரிவாக பேசலாம்.
இந்தத் தொடரில், தமிழர்களின் பண்டைய மரபுகளைப் பார்க்கலாம்.
நீத்தார் நினைவுச் சின்னங்கள்….
எகிப்தில் உள்ள மம்மிகளைப் பற்றித் தெரிந்த நம்மில் பலருக்கு, நம்மிடமும் அதே கலாச்சாரமும், மரபும் அதே காலகட்டத்தில் இருந்தது தெரியாது.
ஆமாம். எகிப்திய பிரமீடுகள் – நீத்தார் நினைவுச் சின்னங்களே. இறந்தவர்கள் உடலைப் பதப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், துணிமணிகள், கொஞ்சம் பணம், தங்கம், சில சமயம், அவர்களுக்கு உதவி செய்ய பணி ஆட்கள் ( ???? ) என்று சேர்த்து வைத்து, அந்த இடத்தில் கட்டப்பட்டதே பிரமீடுகள்.
நமக்கும் அவர்களுக்கும் உள்ள முக்கியமான மூன்று வித்தியாசங்கள் :
ஒன்று : எகிப்தில் பிரமீடு கட்டப்பட்ட அனைவரும், அரச குலத்தைச் சார்ந்தவர்கள் அல்லது அரசாங்கத்தில் இருந்த பெருந்தலைகள்.
தமிழகத்தில் நீத்தார் நினைவுச் சின்னங்கள் எழுப்பபட்ட அனைவருமே சமூகத்தில் சாதாரணமானவர்கள். இதிலும் சிறு சிறு ஏற்றத் தாழ்வுகள் வசதி வாய்ப்பை வைத்து இருந்ததும் உண்மை. கிராமத்தில் உள்ள பெருந்தலைகளுக்கு செம்பூரான் கற்கள். சாதாரணமானவர்களுக்கு கூழாங்கற் குவியல் போன்று.
ஆனால், பாட்டம் லைன்…..சாதாரண மக்களையும் நினைவுகூர நினைத்தது நமது மரபு.
இரண்டாவது : எகிப்தில் இறந்தவர்களை முறையாக பாடம் பண்ணினார்கள். நாம் அது செய்வதில்லை.
நாம் இறந்தவர்களை நேரிடையாக மண்ணிலோ, அல்லது ஈமத்தாழியிலோ, அல்லது ஈமப் பேழையிலோ வைத்து புதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
சில சமயம், ஓரிடத்தில் புதைத்து விட்டு, சில நாட்கள் கழித்து அந்த இடத்தைத் தோண்டி அங்கிருந்து சில எலும்புத் துண்டுகளை மட்டும் எடுத்து அதை ஈமத் தாழியில் வைத்து, அதைப் புதைத்து அந்த இடத்தைச் சுற்றி கல் வட்டம் அமைப்பது, கல்திட்டை அமைப்பது, கற்பதுக்கை எடுப்பது, நெடுங்கல் (அ) குத்துக்கல் அமைப்பது அல்லது கற்குவியல் வைப்பது என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தோம்.
மூன்றாவது : அவர்கள் பிரமீடு என்ற ராட்சத கோபுரங்களைக் கட்டினார்கள் – ஏராளமான பொருளையும், நேரத்தையும், பல ஆயிரம் அடிமைகளின் உழைப்பையும் செலவழித்து.
நாம்…மிகவும் எளிமையான வழிமுறைகளைக் கையாண்டோம். நினைத்துப் பாருங்கள்….நமக்கும் பிரமீடு கட்டும் பழக்கம் மட்டும் இருந்திருந்தால், அதுவும் அனைவருக்கும் கட்டியிருந்தார்கள் என்றால், இன்று நம்மில் யாருக்கும் வீடு கட்ட ஒரு கிரௌண்ட் இடம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை (இதற்கும் G Square க்கும் யாதொரு சம்பந்தமுமில்லை).
மற்றபடி, நாமும், எகிப்தியர்கள் போலவே இறந்தவர்களுக்குத் தேவையான பொருட்களைப் படைத்து அவற்றையும் சேர்த்தே புதைத்திருக்கிறோம் ( ஆனால், பணியாட்களை சேர்ந்து அனுப்பும் வழக்கம் நம்மிடம் இருந்ததில்லை. அவர்கள் பின்னொரு சமயம் சென்று தங்கள் முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால், அது பற்றிய தகவல் இல்லை).
இங்கே கூர்ந்து கவனிக்கக் கூடிய முக்கியமான விஷயம், இறந்தவர்களை மறக்காமல் நினைவுகூரும் மரபு.
இதன் ஒரு தொடர்ச்சியே இன்றைக்கு நாம் பின்பற்றும் குலதெய்வ வழிபாடு என்பது என் தனிப்பட்ட கருத்து. காரணம், நம்மில் பெரும்பாலான் குடும்பங்கள் வணங்கும் குல தெய்வங்கள், நம்முடைய முன்னோராகவே இருக்கின்றனர். அவர்களை நாம் மறந்து விடக் கூடாது, அவர்களின் வாழ்த்தும் ஆசியும் நம் குடும்பத்திற்குத் தேவை என்பதன் எதிரொலியே குல தெய்வ வழிபாடு.
இன்னொரு விஷயத்தையும் இங்கே நான் சொல்ல வேண்டும்.
இன்று வரை நாம் விடாமல் கடைப் பிடிக்கும் இன்னொரு கலாச்சாரம், வடக்கில் தலை வைத்து படுக்காமல் இருப்பது.
அதற்கு நமக்கு சொல்லப்பட்ட காரணங்கள் இரண்டு :
ஒன்று ஈசனின் தலைமகன் வினாயகன், அப்படித் தலைவைத்ததனால்தான் அவன் தலை துண்டிக்கப்பட்டது. அதன் காரணமாகவே அவனுக்கு யானையின் தலை பொருத்தப்பட்டது. இது நம்மைப் பயமுறுத்தி அந்த வழக்கத்தைப் பின்பற்ற வைக்கும் உக்தி அல்லது உண்மையை நாம் தெரிந்து கொள்ளக் கூடாது என்று நமக்குத் தவறாகச் சொல்லிக் கொடுத்த பாடம்.
இரண்டாவது : வடக்குப் பக்கம் இருக்கும் மித மிஞ்சிய மின் காந்த அலைகள். காரணம், இன்றைய தமிழனிடம் அறிவியல் என்று சொல்லி விட்டால், அடுத்த கேள்வி கேட்காமல் அதை அப்படியே நம்பி விடுவான் என்ற நம்பிக்கை.
அறிவியலை எல்லா விதத்திலும் நம்பும், பின்பற்றும் மேலை நாட்டினர் ஏன் இந்த மின் காந்த அலைகள் கதையை நம்புவதுமில்லை, பின்பற்றுவதுமில்லை என்று நம்மில் யாருமே கேள்வி கேட்பதில்லை.
நான் சென்ற ஏராளமான நாடுகளில் எந்தவொரு நாட்டிலும் இந்த வழக்கம் இல்லை என்பதை இங்கு நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். வெளி நாட்டை விடுங்கள். இந்தியாவிலேயே, வட நாட்டில் இந்த வழக்கம் இல்லை.
அப்படியென்றால்….என்னதான் உண்மை என்கிறீர்களா ?
குமரிக் கண்டத்தில் நம் மூதாதையார் இருந்ததும், ஒரு மிகப் பெரிய கடற்கோளினால் அவர்களில் பெரும்பாலானோர் இறந்ததும், நம்மால் இன்னும் உணர்வு பூர்வமாக மறுக்கவும் இயலவில்லை, மறக்கவும் இயலவில்லை.
அந்தக் குமரிக் கண்டம் இருந்தது இன்றைய கன்யாகுமரிக்குத் தெற்குப் பகுதியில்.
அதனால், நீங்கள் எங்கு வடக்கில் தலை வைத்துப் படுத்தாலும், உங்கள் கால்கள் தெற்கு நோக்கியே இருக்கும். அது, நம் முன்னோரை நாம் அவமானப் படுத்துவதாக ஆகிவிடும் என்பதுவே உண்மையான காரணம்.
இதுதாங்க நமது மரபு.
அதேபோல், இன்றைக்கும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில், வீடுகளின் வாசலில், சோத்துக் கத்தாழை, கொப்புரைத் தேங்காய், எலுமிச்சை, ஒரு சீனிப்படிகாரம் மற்றும் கொஞ்சம் மிளகுத் தூள் முடிச்சு என்று வரிசையாக் கட்டி, வீட்டின் உயரமான இடத்தில் தொங்க விட்டிருப்பார்கள்.
அது என்ன என்று நம்மில் பலரும் கேட்பதில்லை. கேட்டாலும், அது “திருஷ்டிப் பரிகாரம்” என்ற ஒற்றை வார்த்தையில் நம் வாயை மூடி விடுவார்கள். நாமும் அது திரிக்கப்பட்ட பொய் என்பது தெரியாமலேயே, பேசாமல் போய் விடுவோம்.
அப்படியென்றால் என்னதான் அது என்கிறீர்களா ????
திரும்பவும் குமரிக்கண்டம் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம்தான்.
ஒரு வேளை, நாமும் அதுபோல ஒரு கடற்கோளைச் சந்திக்க நேரிட்டால், மேற்சொன்ன பொருட்கள் நம்மை ஒரு சில நாட்களாவது காப்பாற்றும் – அதாவது கடல் நீர் வற்றும் வரையாவது.
அது எப்படி ?
- சோத்துக் கத்த்தாழை – பெயரிலேயே இருப்பது போல, இது சோற்றுக்கு மாற்றான ஒரு உணவுப் பொருள். அவ்வளவு எளிதாகக் கெட்டு விடாது. தோலை மட்டும் நீக்கி விட்டு உண்ணலாம்.
- கொப்புரைத் தேங்காய் – இதுவும் சோத்துக் கத்தாழை போல்தான். கெட்டுப் போகாத ஒரு விஷயம். ஒரே ஒரு கீற்று சாப்பிட்டால்கூட சில மணி நேரத்திற்கு வயிறு “கம்”மென்று இருக்கும்.
- சீனிப் படிகாரம் – அதன் குளிர்ச்சி, ஒரு மினி ஃபிர்ட்ஜ் போல வேலை செய்யும். ஏதேனும் மீந்து போன பதார்த்தத்தை இதன் அருகில் வைத்து ஓரிரு நாட்களாவது சமாளிக்கலாம்.
- எலுமிச்சம் பழம் – நம் வீட்டை கடல் சூழ்ந்து கொண்டால், குடி நீருக்கு எங்கே செல்வது ? எலுமிச்சம் பழத்தை நறுக்கி, நம் நாக்கில் தடவிக் கொண்டாலோ, இல்லை கையால் லேசாகப் பிழிந்து ஒரிரு சொட்டுக்கள் வாயில் விட்டுக் கொண்டாலோ, தண்ணீர்த் தாகத்தைத் தள்ளிப் போடலாம்.
- மிளகு – இறைச்சியைப் பதப்படுத்த உதவும். அதனால்தான், இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் விளைந்த மிளகிற்கு உலகச் சந்தையில் மிகப் பெரிய டிமாண்ட்.
குமரிக்கண்டம் அழிந்தது ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்று எடுத்துக் கொண்டாலும், அதன் நினைவும், தாக்கமும் இன்று வரை நம்மைத் துரத்துவதை என்னென்று சொல்வது ? ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னால், இந்தப் பொருட்கள் மாற்றப்பட்டு, கருப்புக் கயிறு, மிளகாய் எல்லாம் சேர்க்கப்பட்டு திருஷ்டிப் பரிகாரம் என்ற மூட நம்பிக்கை கொண்டுவரப்பட்டது (நிறைய கிராமங்களில் இது பின்பற்றப்படுவதில்லை என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி).
இது போன்ற ஏராளமான மரபுகள் அல்லது கலாச்சார எச்சங்களை திருஷ்டிப் பரிகாரம், மின் காந்த அலை என்று இந்துமதவாதிகள் திசைதிருப்பி விட முயற்சித்தாலும், நாம் இன்னும் கை விடாததுதான் நமது மரபின் சிறப்பு.
அடுத்து அறிவரின் மரபு பற்றிப் பேசுவோம்…
வெ.பாலமுரளி.
அன்பு கலந்த நன்றிகள் :
தம்பிகள் நாராயணமூர்த்தி மற்றும் ஹாருண் பாஷா
அறியப்படாத தமிழ் – முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர்
பெயர் மறந்து போன சில புத்தகங்களும், கட்டுரைகளும்.











