“தமிழரைத் தேடி” என்ற அற்புதமான புத்தகத்தின் ஆசிரியர் உயர்திரு தங்கவேலு அவர்களுடனான சமீபத்திய உரையாடல்களும், சில ஆரோக்கியமான விவாதங்களுமே இந்தக் கட்டுரை எழுத முக்கிய காரணம். அதன் காரணமாக தங்கவேலு ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இதில் நான் பார்த்த இடங்களில், இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தவற்றை எழுதியிருக்கிறேன். கண்டிப்பாக தவறுகள் இருக்கலாம். ஆதாரத்துடனோ அல்லது லாஜிக்குடனோ சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.
“வரலாறு என்பதே கோடிட்ட இடங்களை நிரப்புகின்ற பம்மாத்து வேலைதான்” என்பார் என்னுடைய குரு, மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.
நம்மிடையே உலவிக் கொண்டிருக்கும் நிறைய வரலாறுகள் அப்படித்தான் எழுதப்பட்டன, எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், சில நேரங்களில் போதுமான ஆதாரங்கள் இருந்தாலும், சில வரலாறுகள் எழுதப்படுவதில்லை அல்லது மாற்றி எழுதப்படுகின்றன.
அப்படி ஒரு “சொல்லப்படாத கதை”தான் நம் அறிவர்களின் வரலாறு.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம் தமிழர்கள், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிகச் சிறந்த கடலோடிகளாகவும், வணிகர்களாகவும் இருந்துள்ளனர் என்பது அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம். 3 அல்லது 4 மிமீ விட்டம் மட்டுமே கொண்டுள்ள ஒரு மணியில் மிகத் துல்லியமாக ஒரு துளையிட்டிருக்கின்றனர்(கீழடியில் இன்றும் நீங்கள் அதைக் காணலாம்). ஏறத்தாழ 2500 வருடங்களுக்கு முன்னரே. உலகில் உள்ள அனைவரும், இவ்வுலகம் நான்கு பூதங்களால் ஆனது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, “சாரி, ஜெண்டில்மென்”, இவ்வுலகம் ஐந்து பூதங்களால் ஆனது என்று வானத்தையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்தவர்கள் தமிழர்கள். அத்துடன் சூரியன், நிலவின் சுழற்சி என்று அனைத்தையும் ஏறத்தாழ 3000 வருடங்களுக்கு முன்னரே பாறை ஓவியங்களாக வரைந்து வைத்தவர்கள் தமிழர்கள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த வைத்தியத்தை உலகிற்கு வழங்கியவர்கள்.
மொபைல் ஃபோன், ஏவுகணை, விமானம், அணுகுண்டு, கம்ப்யூட்டர், AI தொழிற் நுட்பம், எலெக்ட்”ரிக்” கார் தொழில் நுட்பம் என்று தங்கள் வேதங்களில் இல்லாதது எதுவுமே இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு ”உயர்ந்த சமூகத்தின்” மொழிக்கு ஒரு அடிப்படையான எழுத்து வடிவம் என்பது கூட இன்று வரை கிடையாது.
ஆனால், ஏறத்தாழ 3000 வருடங்களுக்கு முன்னரே நம் தமிழுக்கு செம்மையான ஒரு இலக்கணத்தைத் தந்து உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தது நம் தமிழர்கள். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் இரும்பு என்னும் உலோகம் ரொம்பவே முக்கிய பங்கை வகிக்கிறது. அந்த இரும்பை உருக்கி, பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்தவர்கள் நம் தமிழர்கள் ( அரசு ஒத்துக் கொள்ளவில்லை என்பதற்காக உண்மை எப்போதும் பொய்யாகி விடாது).
அப்படிப்பட்ட தமிழர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நம்மை வழி நடத்திச் சென்றவர்கள் யார் ? வேத கால மக்களுக்கு ரிஷிகள் என்று ஒரு குழுவினர் இருந்தது போல், நமக்கு யாருமே இருந்ததில்லையா ? இருந்திருந்தால் , அவர்கள் யார் ? தங்கள் அறிவை மக்களுக்கு எப்படிக் கடத்தினார்கள் ? ஜெயினப் பள்ளி, பௌத்தப் பள்ளி , அந்தணர் பள்ளி, குரு குலம் என்ற வரிசையில் தமிழர்களுக்கென்று எதுவுமே இருந்ததில்லையா ? அப்படி எதுவுமே இல்லாமல் ஒரு அறிவார்ந்த சமூகம் உருவாக வாய்ப்புள்ளதா ?
இது போன்ற ஏராளமான கேள்விகளுக்கு பதிலாக வந்து நிற்கும் ஒரே இடம் “ அறிவர்கள் “ என்ற “ஐயன்கள்” தான்.
சுமேரியாவிலும், பழைய கிரேக்க இலக்கியங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படும் “முனிவர்கள்” என்பவர்கள், நம் ஐயன் தொல்காப்பியர் சொல்லும் இந்த அறிவர்கள்தான் என்பது என் கருத்து.
நான் தமிழியைத் தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் அல்லது பெரும்பாலான இடங்களில் ஒரு காலத்தில் அங்கு ஒரு பள்ளி இயங்கியிருப்பதை கண்கூட காண முடிந்தது.
அங்கிருந்த நிறைய கற்படுக்கைகள், மாணவர்களும் அங்கேயே தங்கியிருந்து கல்வி பயின்ற ஒரு குருகுல ஹாஸ்டலாக இருக்க வாய்ப்புள்ளது என்பது என் கருத்து. இல்லாவிட்டால், ஒரு மலையின் மீது அல்லது ஒரு குன்றின் மீது அவ்வளவு கற்படுக்கைகளுக்கு வேலை இல்லை.
நான் முன்பு ஒரு கட்டுரையில் சொன்னது போல, அனைத்து இடங்களிலும் நிலாப்பாறைகளை இன்றும் காண முடிகிறது. இரவு நேரத்தில் அந்தப் பாறைகளில் படுத்துக் கொண்டு, 360 டிகிரி கோணத்தில் வானத்தை ஆய்வு செய்ததையும், தான் கண்டறிந்ததை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததையும், நான் சொல்லும் இடங்களுக்கு சென்றால் இன்றும் நீங்கள் உணர முடியும்.
அதே போல் மருந்து அரைக்கும் குழிகள். கொங்கர் புளியங்குளம், மாங்குளம் என்ற மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் கற்படுக்கைகள் ஐம்பதிற்கும் மேலாக இருந்தாலும், மருந்து அரைக்கும் குழிகள் என்னவோ நான்கைந்துதான். அவையும் வெவ்வேறு வடிவங்களில், ஒன்று வட்டமாக. ஒன்று செவ்வகமாக. ஒன்று நீள் வட்டமாக என்று. அதாவது. ஓரிரு ஆசிரியர்கள் வெவ்வேறு மருத்துவ முறைகளை நிறைய மாணவர்களுக்கு விளக்கி சொல்லிக் கொடுத்ததைப் போல் உள்ளன.
சில இடங்களில், அந்த ஆசான்கள் என்ற அறிவர்கள் அமர்ந்திருந்த கல் ஆசனங்களையும், அந்த ஆசனத்திற்கு முன்னால் பத்திலிருந்து நூறு மாணவர்கள் வரை வசதியாக அமர்ந்து ஆசானின் பாடங்களை கேட்க வசதியான சம தளங்களையும் குன்றுகளின் மீது காணும்போது உங்களுக்கு அறிவர் பள்ளி பற்றி கொஞ்சம் நஞ்சம் சந்தேகம் இருந்தாலும் சுத்தமாகப் போய் விடும். நான் அங்கு எடுத்த படங்களையெல்லாம் இங்கு பதிவிடுகிறேன். பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள்.
நான் பார்த்த அனைத்து அறிவர் பள்ளிகளிலும் தலைமை ஆசான் அல்லது தலைமை அறிவர் என்று ஒருவர் மட்டும்தான் இருந்திருக்க வேண்டும். காரணம், அந்த இடங்களுக்கு அருகில் ஒரே ஒரு ஐயனார் கோயில் மட்டும்தான் எழுப்பப்பட்டுள்ளன (உயிருடன் இருக்கும்போது ஐயனாக இருந்த அறிவர்கள் , இறந்தவுடன் ஐயனாராக போற்றப்பட்டிருக்க வேண்டும்).
அவர் வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தால், அந்த ஐயனார் கோயிலுக்கு ஆகாச ஐயனார் என்று பெயர். ஒருவேளை அவருக்கு காது மந்தமாக இருந்தால், அந்த ஐயனுக்கு “ செவிட்டு ஐயனார்” அல்லது “ செகுட்டு ஐயனார்” என்று பெயர். நிறைய இடங்களில் ஊருக்கு வெளியில் இருந்து கொண்டு, விவசாயிகளுக்கு நீரின் மேலாண்மையை சொல்லிக் கொடுத்து ஏரிகளின் பயன்பாட்டை அதிகரிக்க உதவிய அறிவர்களுக்கு “ ஏரி காத்த ஐயனார்” என்று பெயர். அவர் நிறைய ஏழை மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அனைத்து கல்வி அறிவையும் வழங்கியிருந்தால் அவருக்கு “ அடைக்கலம் காத்த ஐயனார்” என்று பெயர்க்காரணங்களை சூட்டியிருப்பது தற்செயலான செயலாக எனக்குத் தெரியவில்லை.
மீனாட்சிபுரம், யானைமலை, வரிச்சியூர் , கீழவளவு, கொங்கர் புளியங்குளம், அழகர் மலை, நடு முதலைக் குளம், சித்தன்னவாசல், பெருமாள் மலை, ஐயனார் குளம், சமணர் மலை என்று தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் நான் சொல்லும் அறிவர் பள்ளிகள் இருந்ததற்கான தடயங்கள் நிறையவே இருந்தாலும், மாங்குளம் என்னும் மீனாட்சிபுரம் மட்டும் ரொம்பவே ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு ஸ்பெஷலான இடம். .
காரணம்:
ஆச்சரியம் எண் 1: மீனாட்சிபுரத்தில் மட்டும்தான், மலையின் மேலே, தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் வழியில் இரண்டு சங்க காலக் கட்டிடங்களை நம் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது. அதில் ஒன்று கிச்சனாக இருந்திருக்க வேண்டும். அந்தக் கட்டிடத்தின் அருகில் நிறைய பானை ஓடுகளை இன்றும் காண முடிவது ஆச்சரியம்.
ஆச்சரியம் எண் 2 : அந்த இரண்டாவது கட்டிடம் அங்கிருந்த தலைமை அறிவர் தங்கியிருந்த இடமாக இருந்திருக்க வேண்டும்.
ஆச்சரியம் எண் 3 : ஆசீவகத்துக்கும் வானியல் ஆய்விற்கும் ரொம்பவே நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த ஆசீவகத்தில் கழி வெண்மை என்ற உச்ச நிலையை அடைந்த மூவரில் கணி நந்தாசிரியனும் ஒருவர். அந்த கணி நந்தாசிரியனின் பெயர், மீனாட்சி புரத்தில் கண்டெடுக்கப்பட்ட 6 கல்வெட்டுக்களில் மூன்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, இங்கிருந்த வானியல் ஆய்வுப் பள்ளியின் தலைமை ஆசான் அல்லது தலைமை அறிவர் கணி நந்தாசிரியனாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
ஆச்சரியம் எண் 4 : சங்க காலப் பாண்டியன் நெடுஞ்செழியன் பெயர் பொறித்த ஒரே கல்வெட்டு இங்கு மட்டும்தான் உள்ளது.
ஆச்சரியம் எண் 5 : இங்குள்ள நிலாப்பாறையில் நூறு மாணவர்கள் வரை அமர்ந்து வானியலை கணி நந்தனின் தலைமையில் ஆய்வு செய்திருக்க வேண்டும். அந்த அளவிற்கு பிரமாண்டமாக உள்ளது ( இந்த இடத்தில் எனக்கேற்பட்ட அனுபவத்தை “ கணி நந்தனைத் தேடி” என்று தனியாக ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன்).
இப்போது நீங்களே சொல்லுங்கள், மீனாட்சிபுரம் ரொம்பவே ஸ்பெஷல்தானே ?
தமிழிக் கல்வெட்டுக்களோ, நிறைய கற்படுக்கைகளோ இல்லாத அறிவர் பள்ளிகளும் இருந்திருக்கின்றன.
அவற்றில் என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியவை இரண்டு.
ஒன்று, விழுப்புரத்திற்கு அருகில் உள்ள ஆலம்பாடி என்னும் இடம். அங்கு ஒரு குன்றின் அடியில் ஒரு பெரிய பாறையில் ஒரு விலங்கியல் பாடம் நடத்தியதற்கான தடயமாக நிறைய செஞ்சாந்து ஓவியங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர் சில அறிவர்கள். ஏன் அங்கு விலங்கியல் பாடம் மட்டும் எடுத்துள்ளனர் என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை. ஒரு வேளை அது Zoology Campus ஆக இருந்திருக்கலாம்.
இரண்டாவது அற்புதமான இடம், உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள புலிப்பொடவு. இது பற்றி நான் தனியே ஒரு கட்டுரை எழுதி முன்பே பதிவிட்டிருக்கிறேன். இன்னொரு சமயம் திரும்ப ஒரு முறை பதிவிடுகிறேன். இங்கு நிலவின் சுழற்சியையும், சில நட்சத்திரக் குறிப்புகளையும் வெண் சாந்தில் வரைந்து வைத்துள்ளனர்.
இவை தவிர, இன்னும் எத்தனை எத்தனை அறிவர் பள்ளிகள் நம் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டிருக்கின்றனவோ, தெரியவில்லை.
சரி….அப்படிப்பட்ட அறிவர் பள்ளி கலாச்சாரம் எப்படி அழிந்து போயிருக்கும் ?
எப்படி யோசித்துப் பார்த்தாலும், எனக்கு சில காரணங்கள் மட்டுமே கண்ணுக்கு முன் தெரிகின்றன.
- கி.பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் வந்த சித்தர் மரபின் எழுச்சி, மக்களை குழப்பியிருக்க வேண்டும்
- பக்தி இயக்க காலத்தில் பெரிய மதங்களாக உருவெடுத்த சைவ, வைணவ மதங்கள் உருவாக்கிய சரணாகதி தத்துவம். கடவுளை சரணடைந்து விட்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் போலிருக்கே என்ற தவறான நம்பிக்கை. அதனால், “ தீதும் நன்றும் பிறர் தர வாரா” “ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தம் மெய் வருத்தக் கூலி தரும்” “தம்மை அறிய தமக்கோர் கேடில்லை…” “அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் “ போன்ற அறிவார்ந்த பாதைகளை விட்டு மக்கள் விலக ஆரம்பித்திருக்க வேண்டும். இன்றும் கோயில்களில் நமக்குப் புரியாத சமஸ்கிருத ஸ்லோகங்களில் நாம் மெய் மறந்து நின்றிருப்பது, என்னை அப்படி யோசிக்க வைக்கிறது.
- வேத பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த குருகுல கல்வி முறை. “ நமக்குக் கிடைக்கவில்லை. அதனால், அதுதான் உண்மையான கல்வி முறை போலிருக்கு” என்று நாமே அறிவர் பள்ளியை ஒதுக்கியிருக்கலாம்.
எது எப்படியோ, ஆயிரம் வருடங்கள் கழித்து மெக்காலே என்னும் ஒரு அறிவர் மறு பிறப்பு எடுத்து வந்தாரோ நாம் அனைவரும் தப்பிப் பிழைத்தோமோ.
வெ.பாலமுரளி
பி.கு: மறக்காமல், இத்துடன் இணைத்திருக்கும் அனைத்துப் புகைப்படங்களையும் ஒன்று விடாமல் பொறுமையாகப் பார்க்கவும். அப்போதுதான் நான் சொல்ல வருவதன் அர்த்தம் புரியும்.
நன்றிகள் : மறைந்த பேராசிரியர் ஐயா நெடுஞ்செழியன் அவர்கள், உயர்திரு. தங்கவேலு அவர்கள், என் தமிழி ஆசான் ராஜகுரு அவர்கள், என் பாறை ஓவிய ஆசான் பாலா பாரதி அவர்கள் மற்றும் என்னுடைய எழுத்துக்களை பொறுமையாக வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
























