“காடுகளில் அடுத்த நாள் சூரிய உதயத்தை எந்தெந்த விலங்குகள் பார்க்க வேண்டும் என நிர்ணயிப்பது இயற்கைதான்” என்று விக்ரம் படத்தில் ஒரு வசனம் வரும்.
காடுகளைப் பொறுத்த வரையில் இது 100 சதவிகித உண்மை.
விலங்குகள் பாட்டுக்கு புற்களை மேய்ந்து கொண்டும், விளையாடிக் கொண்டும், தேவைப்படும்போது “டூயட்” பாடிக் கொண்டும் ஜாலியாகத் திரியும். திடீரென ஒரு சிங்கமோ, புலியோ, சிறுத்தையோ, சிவிங்கிப் புலியோ வந்து அந்த சாதாரண சூழ்நிலையை மிகவும் அசாதாரணமாக்கி விடும். இயற்கை is a funny fellow.
சரி…நம்ம மேட்டருக்கு வருவோம்….
வழக்கம்போல் காலை 6 மணிக்குக் கிளம்பி விட்டோம்.
What is the plan today ? என்றான் ஜாக். Choice is yours my friend என்றேன் போட்டு வாங்கும் எண்ணத்தில்.
என் ட்ரிக் வேலை செய்தது. கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, அவன் நண்பர்கள் சிலரிடம் ரேடியோவில் மசாய் மொழியில் பேசினான். பேசி விட்டு, திரும்பி என்னிடம் “சிறுத்தையின் வேட்டை அல்லது சிங்கத்தின் வேட்டைதான் இன்று நமது இலக்கு” என்றான். வழக்கம்போல் அந்த “ லட்டு” அசரீரி கேட்டது.
உற்சாகத்துடன் தேடத் தொடங்கினோம்.
If there is a will, there is a way என்ற பழமொழிக்கேற்ப, ஒரு பெண் (தாய்) சிங்கத்தையும் அதன் வளர்ந்த இரு குட்டிகளையும் பார்த்தோம். அதில் அந்தத் தாய், தன்னுடன் விளையாடும் குட்டிகளைக் கண்டு கொள்ளாமல், தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு வில்டபீஸ்ட் கும்பலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த கும்பலில் சில வரிக்குதிரைகளும் இருந்தன.
இது போன்ற ஒரு காட்சி இருந்தால், அது கண்டிப்பாக ஒரு வேட்டைக்கான தொடக்க நிலை என்பது உறுதி. அந்த சிங்கத்தைத் தொந்தரவு செய்யாமல், அவை இரண்டிற்கும் நடுவில் ஒரு புதருக்கு அருகில் வண்டியை நிப்பாட்டி விட்டு காத்திருக்கத் தொடங்கினோம்.
கிட்டத்தட்ட ½ மணி நேரம் கழித்து மெதுவாக நடக்கத் தொடங்கியது அந்தப் பெண் சிங்கம். அவ்வளவு நேரம் விளையாடிக் கொண்டிருந்த குட்டிகள் கொஞ்சம் சீரியஸாக தங்கள் தாயைப் பின் தொடரத் தொடங்கின.
வில்டபீஸ்ட் கும்பலில் யாரும் பார்க்காத இடத்தில் உட்கார்ந்து கொண்டு அவற்றின் செய்கைகளை நோட்டம் விட ஆரம்பித்தது.
சிறிது நேரம் கழித்து மெதுவாக “ஸ்டாக்கிங்” செய்யத் தொடங்கியது ( பதுங்கி பதுங்கி செல்வது).
இதற்கிடையில் ஒரு வரிக்குதிரை தன் தோழியுடன் ஜாலியாக இருந்ததை ஓரிரண்டு படங்கள் எடுத்தேன்.
இன்னொரு திசையில் ஒரு காட்டெருமையும் அதன் முதுகில் சவாரி செய்யும் ஒரு பறவையும் கண்ணில் பட, அதையும் க்ளிக்கினேன்.
மறுபடியும் இந்தப் பக்கம் திரும்ப…..
கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழிந்திருக்கும். இந்த சிங்கம் தங்களை நெருங்குவது தெரியாமலேயே, அந்த வில்டபீஸ்ட் கும்பல் எதிர்த் திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தன.
“ஆக்கப் பொறுத்தவனுக்கு, ஆறப் பொறுக்கலையாம்” என்று நம்ம ஊர்ப் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல, இவ்வளவு நேரம் அமைதியாய் ஸ்டாக்கிங் செய்து கொண்டிந்த நம்ம ஆள், லேசாக Panic ஆக ஆரம்பித்தது.
ஸ்டாக்கிங் பொசிஷனை விட்டு எழுந்து நின்று பார்க்கத் தொடங்கியதுதான் தாமதம், வில்டபீஸ்ட்டுகளும், வரிக்குதிரைகளும் தாறுமாறாக ஓடத் தொடங்கின.
நம்மாளுக்கு பெரிய ஆப்ஷன் ஏதுமில்லை. ஒரு நொடியில் சுதாரித்துக் கொண்டு விரட்டத் தொடங்கியது.
வழக்கமான வாழ்வு Vs சாவு போராட்டம்.
நம்மாளு ஒரு வில்டபீஸ்ட்டை மட்டும் குறி வைத்து துரத்திக் கொண்டிருந்தது. இடையில் மற்றொரு வில்டபீஸ்ட் தன்னையறியாமல் குறுக்கிட, ஒரே ஒரு நொடி நம்மாளு தடுமாறியதை என்னால் பார்க்க முடிந்தது.
அந்த Gap இல் அந்த கும்பல் இரண்டு மூன்றாகப் பிரிந்து வெவ்வேறு திசையில் ஓடத் தொடங்கின.
அவ்வளவுதான். “வட போச்சே” ஃபீலிங்கோட தலையில் கை வைக்காமல் நம்மாளு உட்கார்ந்து விட்டது.
இந்த நிகழ்ச்சி நமக்கும் ஒரு பாடம். நாம் நம் வாழ்க்கையில் எவ்வளவுக்கெவ்வளவு ஃபோக்கஸ்டாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு நமது இலக்கை அடைவது சுலபம் ( நாங்களும் கருத்து சொல்லுவோம்ல).
நமக்கு நல்ல ஹண்ட்டிங் ஷாட் போய் விட்டதே என்று வருந்துவதா இல்லை, நல்ல வேளை ஒரு உயிர் தப்பி விட்டதே என்று சந்தோஷப்படுவதா என்ற குழப்பமான மன நிலையோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.
அப்போதுதான் வழியில் லுலூக்காவைச் சந்தித்தோம்.
லுலூக்கா ஞாபகம் இருகிறதா ? சில வருடங்களுக்கு முன்னால், ஒரு குட்டியை ஈன்று, அதை வாயிலேயே கவ்விக் கொண்டு காப்பாற்ற முயன்று அந்த முயற்சியில் தோல்வியுற்று, அந்தக் குட்டியை இழந்த பரிதாபமான தாய்.
அதற்குப் பிறகு இன்னொரு குட்டியை ஈன்று அதை வெற்றிகரமாகக் காப்பாற்றி ஒரு ஆளாக்கியிருந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
தனியே வேட்டையாடும் அளவுக்கு பெரிய மனிதனாக ஆகியிருக்காவிட்டாலும், ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்திருந்தான் அந்த இளைஞன்.
அப்போதுதான் ஒரு வேட்டையை முடித்திருந்தது லுலூக்கா. தான் நன்றாக உண்டு விட்டு, மீதமுள்ள இரையை கழுதைப் புலியிடமிருந்தும், நரியிடமிருந்தும், கழுகுகளிடமிருந்தும் காப்பாற்றுவதற்கு அந்த இரையை ஒற்றை ஆளாக இழுத்து ஒரு பள்ளத்திற்குள் சென்று கொண்டிருந்தது.
லுலூக்காவின் பையன், கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாமல், தன தாயை வேலை செய்ய விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்டுப்பிட் ஃபெல்லோ.
கொஞ்ச நேரம் அதைப் படம் பிடித்தேன்.
அப்போது அவை இரண்டிற்கும் தண்ணீர்த் தாகம் எடுக்க அருகில் உள்ள ஓடையில் இறங்கத் தொடங்கின.
லுலூக்கா மட்டும் தண்ணீர் அருந்த, அதன் பையன் தன் தாயைத் தாண்டிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது மிகவும் அழகாக இருந்தது.
சலிக்க சலிக்கப் படம் எடுத்து விட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினோம்.
கிளம்பி 10 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. ஒரு டயர் பஞ்சர். புஸ்ஸ்ஸ்ஸென்று கார் உட்கார்ந்து விட்டது.
எல்லா லேண்ட் ரோவர் கார்களிலும் இரண்டு ஸ்டெப்னி வைத்திருப்பார்கள். சோதனைக்கு அன்றைக்கு அந்த இரண்டு ஸ்டெப்னியிலுமே காற்று இல்லாமல் இருந்தது.
ஜாக்கிற்கோ மிகவும் தர்மசங்கடமாகி விட்டது. ஒரு நூறு தடவையாவது சாரி சொல்லியிருப்பான்.
நான், காலை லைட்டிங் முடிந்து விட்டிருந்ததால், , டென்ஷன் ஆகாமல், பரவாயில்லை ஜாக் என்றேன். அதற்குள் ஜாக் தன் நண்பனை அழைக்க, அருகில் எங்கோ இருந்த அவன் வந்து என்னை ஏற்றிக் கொண்டு விடுதியில் விட்டு விட்டான்.
வழக்கம்போல் ஒரு பார்லி ஜூஸ் குடித்து விட்டு, சாப்பாட்டையும் முடித்து விட்டு செமத்தியாக ஒரு தூக்கம் போட்டேன்.
மாராவில் சுற்றும் போது இந்த மதிய தூக்கம் ரொம்பவே முக்கியம். அப்போதுதான், மாலை செஷன் ஜாலியாகப் போகும். அன்றும் அப்படித்தான் சூப்பராக போனது.
நாலு மணிக்கு டயரை பஞ்சர் பார்த்து விட்டு, ஜாக் வந்து சேர்ந்தான்.
மாராவுக்குள் சென்ற போது லைட்டிங் அற்புதமாக மாறியிருந்தது. ஆமாம். மாராவுக்குள் டமால் டுமீலென்று லைட்டிங் மாறும். அதிர்ஷ்டம் இருந்தால் அந்த வெளிச்சத்தில் நிறைய படங்கள் எடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
இப்போது எதுவும் மாட்டுகிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே, வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு கழுதைப் புலி, ஏதோ ஒரு விலங்கின் பாகத்தைக் கவ்விக் கொண்டு துண்டைக் காணோம் துணியைக் காணொம் என்று ஓடிக் கொண்டிருந்தது.
அருகில் ஏதோ ஒரு வேட்டை நடந்துள்ளது என்பதை உணர்ந்து நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்.
ஏழெட்டு சிங்கங்கள் கொண்ட ஒரு பெரும் குடும்பத்தை அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே சந்தித்தோம்.
தூரத்தில் ஒரு வில்டபீஸ்ட் இறந்து கிடக்க, அதன் தலையைத்தான் மிஸ்டர்.கழுதைப் புலியார் தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்திருக்கிறார்.
ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னால் வந்திருந்தால் அந்த வேட்டையைப் பார்த்திருக்க முடியும். இது போன்ற ஏமாற்றங்கள் காட்டுக்குள் சகஜம். அப்போது ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டிராமல், அடுத்தது என்ன என்று போய்க் கொண்டேயிருக்க வேண்டும் (இப்படித்தான் அடிக்கடி என் மனசை நானே தேற்றிக் கொள்வேன். வேறு வழி ?).
அப்போது அந்த சிங்கங்கள் அனைத்தும் அருகில் உள்ள ஒரு குட்டைக்குள் இறங்கி தண்ணீர் அருந்தத் தொடங்க, எனக்கு செம ஷாட்ஸ் கிடைத்தன.
அங்கே தண்ணீருக்குள் “டிஷ்யூம் டிஷ்யூம்” என்று சின்னச் சின்ன சண்டைகள் வேறு. நல்ல பொசிஷனுக்காக நாங்கள் வண்டியைத் திருப்பிக் கொண்டிருந்ததால், அந்த ஃபைட்டை எடுக்க முடியவில்லை. இதுவும் வழக்கமாக நடப்பதுதான். எவ்வளவுதான் அலர்ட்டாக இருந்தாலும் இது போன்ற தவறுகளை நம்மால் தவிர்க்க இயலாது ( அந்த நேரங்களில் என்னை நானே க்ரீன் க்ரீன் வேர்ட்ஸால் திட்டிக் கொள்வேன்).
அவற்றுடன் சிறிது நேரம் செலவழித்து விட்டு, வழக்கம்போல், சில்யூட்ஸ் எடுக்க நல்ல இடத்தையும், விலங்குகளையும் தேடத் தொடங்கினோம்.
நல்ல ஒரு பள்ளத்தில் வண்டியை நிறுத்தி விட்டு காத்திருக்கத் தொடங்கினோம்.
மூன்று காட்டெருமைகளும், சில வரிக்குதிரைகளும், ஈலண்ட் என்ற ஒரு வகை மானினங்களும் அந்த இடத்திற்கு வர, சூரியனாரும் மறையத் தொடங்க பாலா சுறு சுறுப்பாக செயல்படத் தொடங்கி விட்டான்.
செம தீனி பாஸ்…..
வெ.பாலமுரளி.



















