முள்றியின் டைரி :71 – ” 85″

எல்லோருக்குமே பழைய நினைவுகள் என்னும் “ஆட்டோகிராஃப்” சுகானுபவம்தான், அதனால்தான் ஆட்டோகிராஃப் மற்றும் “96” படங்கள்  சக்கைப் போடு போட்டன.

அந்த 96 பட ஸ்டைலில், என்னுடைய இரண்டு பள்ளி காலத்து உயிர் நண்பர்களுடன் சேர்ந்து நான் படித்த பள்ளி(கள்), வாழ்ந்த ஊர் (தேவகோட்டை) , வாழ்ந்த வீடு, விளையாடிய தெரு, சென்ற கோயில்(கள்) என்று சுற்ற முடிவு செய்து சென்ற வாரம் கிளம்பினோம்.

படித்த பள்ளிகள் எல்லாம் மொட்டப் பசங்க படிக்கும் பள்ளிகள் என்பதால் நோ “ ஜானு” (    ) .

முதல் ஸ்டாப், “ De Britto” School. 

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை இங்குதான் படித்தேன். மறக்க முடியாத பள்ளி. கிறிஸ்தவ மிஷனரி பள்ளி. நல்ல படிப்பு, ஒழுக்கம், நேரம் தவறாமை என்று என்னிடம் இருக்கும் கொஞ்சூண்டு சில நல்ல குணங்கள் இங்கு கற்றுக் கொடுத்தவைதான். 

அத்துடன், இயேசு கதைகளையும் சொல்லி அவர் நடத்திய அற்புதங்களையும் சொல்லிக் கொடுப்பார்கள். ஆவென்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கள் அப்பா மட்டும் கொஞ்சம் கண்டிப்பு காட்டியிருக்காவிட்டால், நான் எப்போதோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருப்பேன். அவ்வளவு ப்ரெயின் வாஷ் நடக்கும்.

எனக்கு, அந்த நினைவுகளையெல்லாம் அசை போட்டுக் கொண்டே பள்ளியைச் சுற்றிப் பார்க்க ஆசை.

உதவி தலைமை ஆசிரியரிடம் போய் எங்கள் ஆசையைச் சொல்ல, தாராளமாக சுற்றவும் , வகுப்பினுள் நுழைந்து புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதித்தார்.

அதிலும் ஒரு வகுப்பில் எங்களைப் பேசச் சொல்ல, கண்ணில் நீர் மல்கியதைத் தடுக்க இயலவில்லை.

ஸ்டாப் 2 : நகரத்தார் ஶ்ரீ மீனாட்சி வித்யாசாலய பரிபாலண சங்க மேல்நிலைப் பள்ளி எனப்படும் NSMVPSHSS.  

முதலில் உள்ளேயே நுழைய விடவில்லை. ரொம்ப நேரம் மன்றாடிய பிறகு, தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்குங்கள் என்று அவர் அறையின் வாசலில் போய் நிற்க வைத்து விட்டார்கள்.

அவர் உள்ளே சில ஆசிரியர்களுடம் மிகவும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். 

காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தால், “ ஸ்டார்ஸ்” என்னும் பெயர் போட்டு +2 வில் முதலிடம் வாங்கியவர்களின் பெயர்களும் அவர்கள் வாங்கிய மதிப்பெண்களும் போட்டிருந்தார்கள்.

நம்ம விஜய் சேதுபதி, “ராமச்சந்திரன்” என்னும் பெயரை போர்டில் தேடிப் பார்த்து, கண்டுபிடித்ததும் சந்தோஷத்தில் குதிப்பாரே, அதே மொமெண்ட் எனக்கும்.

போர்டில் என்னுடைய பெயரைப் பார்த்ததும் சத்தியமாக கண்கள் குளமாகி விட்டன. அதை ஒரே ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்துக் கொள்ளலாமா என்று தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டேன்.

ஆனால், தற்போதிருக்கும் தலைமையாசிரியர், இது கொரோனா டயம், போர்டை ஃபோட்டோவெல்லாம் எடுக்கக் கூடாது என்று செம ஏழரையைக் கூட்டி விட்டார். ஒரு ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு என்னை “வூஹான்” மாநில கவர்னர் மாதிரி ட்ரீட் பண்ணியதெல்லாம் ரியலி டூ மச் ( அதுசரி….ஃபோட்டோ எடுத்தா கொரோனா வேகமாக பரவி விடும்னு யாரும் அவருக்கு சொல்லியிருப்பாய்ங்கெளோ ?).

அரசியல் தலைவர்கள் கூட்டும் கூட்டத்திற்கும், சின்ன மம்மிக்கு கொடுத்த வரவேற்பிற்கு வந்த கூட்டங்களை இவர் பார்த்திருக்க மாட்டாரோ ?

கடைசியில் கெஞ்சிக் கூத்தாடி ஒரு ஃபோட்டோ எடுப்பதற்கும், ஐந்தே அந்து நிமிடம் சுற்றிப் பார்த்துக் கொள்வதற்கும் அனுமதி கொடுத்தார்.

கொடுத்து விட்டு, எங்கள் காது படவே பள்ளியின் செக்யூரிட்டியை அழைத்து, இனி ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ் என்று சொல்லிக் கொண்டு ( ????) யாரேனும் வந்தால் உள்ளே விடக் கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

அன்றும் சரி இன்றும் சரி இவர் போன்ற தலைமை ஆசிரியர்கள் ஒரு தனி உலகத்தில்தான் வாழ்கிறார்கள்.

ஸ்டாப் 3 : ரவி வெங்கடேசன்

ரவி வெங்கடேசன் (படத்தில் நடுவில் இருப்பவன்).  

என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நண்பன். 

சில பேர் இரவு, பகலாக , ஊண் உறக்கமின்றி வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், படித்து நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். சில பேர் அசால்ட்டாக படித்து விட்டு , பரிட்சைக்கு முதல் நாள் இரவு ஒரு செகண்ட் ஷோ படமும் பார்த்து விட்டு, மறு நாள் பரிட்சை எழுதி மதிப்பெண்களைக் குவித்து விடுவார்கள். 

இதில் நான் முதல் ரகமென்றால், ரவி வெங்கடேசன் இரண்டாவது ரகம். 

+2 வில் அவன்தான் பள்ளியில் முதல் மாணவனாக வருவான் என்று அனைவருமே எதிர்பார்த்திருக்கையில், கொஞ்சம் கூட யாரும் எதிர்பாராத வகையில், வெறும் 15 மதிப்பெண்களில் அவன் என்னிடம் முதலிடத்தை கோட்டை விட்டு விட்டான். 

ஆனால், இருவருக்குமே OC ( Open Competition) கோட்டாவில் காரைக்குடி  அழகப்பச் செட்டியார் பொறியற் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்து படிக்க ஆரம்பித்தோம். 

என்ன நடந்தது என்று இதுவரை யாருக்குமே தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. கல்லூரியில் சேர்ந்து ஒரு ஆறு மாதத்தில் அவனுக்கு புத்தி பேதலித்து விட்டது. கல்லூரிக்கு வருவதையும் நிறுத்தி விட்டான். வீட்டில் போய் கேட்டதற்கு, “அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இனி அவன் கல்லூரிக்கெல்லாம் வர மாட்டான்” என்று அவன் பெற்றோர் விட்டேத்தியாகச் சொன்னதை இன்று வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

இந்த முறை தேவகோட்டையில் அவனைச் சந்திக்க நேர்ந்தது. அவன் பெற்றோர் இறந்த பிறகு, அவனுடைய சகோதரர்கள் அவனை நிராதரவாக தேவகோட்டையிலேயே விட்டு விட்டு சென்னையில் செட்டில் ஆகி விட்டார்கள் என்பதறிந்து மிகவும் வேதனையாக இருந்தது.

தற்சமயம் தெருத் தெருவாக சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனை அறிந்தவர்கள், உண்ண உணவும், உறங்க இடமும் கொடுத்து அவனை ஆதரித்து வருவது சிறிது ஆறுதலாக இருந்தது. அதற்கு நன்றி செலுத்தும் வகையில் அவனும் அவர்களுக்கு முடிந்த வரையில் சிறு சிறு எடுபுடி வேலைகள் செய்து கொடுக்கிறான்.

என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் கண்டு கொண்டு விட்டான். “டேய் பாலமுரளி…இன்னும் சோவியத் ருஷ்யாவில்தான் இருக்கிறாயா ?” என்றான். காலம் அவனை அந்த காலகட்டத்திலேயே நிறுத்தி வைத்திருப்பதறிந்து மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. 

சமீபத்தில், மதுரைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறி, என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், ஓடிக் கொண்டிருக்கும் பஸ்ஸில் இருந்து குதித்ததில் கை, கால், தலையெல்லாம் கன்னா பின்னாவென்று அடி பட்டு, கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் கிடந்திருக்கிறான்.

தற்சமயம் நன்றாக பேசுகிறான். தன்னால் இப்போதெல்லாம் வேலை எதுவும் செய்ய முடிவதில்லை. அரசு மருத்துவமனையில் ஒரே தூக்க மாத்திரையாகக் கொடுக்கிறார்கள் என்றான் ஒரு சிறு வேதனையுடன். 

அவன் துணி மணிக்கெல்லாம் என்ன செய்கிறான் என்று அருகில் இருந்த ஒரு உள்ளூர் நண்பரிடம் கேட்டேன். அதற்கு ரவி வெங்கடேசனே “ என்னிடம் நாலைந்து வேட்டி சட்டையெல்லாம் இருக்கிறது. அதுவே போதும் என்றான்”. 

கையில் கொஞ்சம் பணம் கொடுக்க முயற்சித்தேன். “ பணமெல்லாம் வேண்டாம்டா. ரொம்ப தாங்க்ஸ்” என்றான் நிறைய தன்மானத்துடன். 

கண்கள் குளமாக, அங்கிருந்து கிளம்பினேன்.

ஸ்டாப் 4 : வீரபாண்டியபுரம் மேற்குத் தெரு

இங்குதான் ஏறத்தாழ 15 வருடங்கள் வசித்தோம்.

நாங்கள் வசித்த தெருவின் முக்கில் (முனையில்) காரை நிறுத்தி விட்டு குறுக்க மறுக்க மூன்று, நான்கு முறை நடந்தது ஒரு இனிய அனுபவம். ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஓடி, ஆடி விளையாடிய தெரு. நாங்கள் திருட்டுத்தனமாக ஏறிப் பறித்த தென்னை மரங்கள், மாமரங்களெல்லாம் இப்போது வீடுகளாக மாறியிருந்தன.

சிலம்பனி பிள்ளையார் கோயில், சிவன் கோயில் , வெள்ளையன் ஊருணி, ஆர்ச் கடைத்தெரு என்று 80 – களுக்கு சென்றது ஒரு அழகிய மலரும் நினைவுகள்.

நிறைய மரணச் செய்திகள் அதீத வருத்தத்தைக் கொடுத்தன. பக்கத்து வீட்டு நண்பனின் அப்பா, அம்மா, சாந்தி அக்கா, வீட்டில் வேலை செய்த கமலா அக்கா, என் நண்பன் மனோகரின் அம்மா வனஜா டீச்சர், என் நண்பன் முத்துராமனின் அப்பா வெள்ளைச்சாமி செட்டியார் என்று நிறைய. 

பள்ளிக் காலத்தில் அடைக்கலம், எங்களது ஃபுட்பால் ஸ்டார். நேஷனல் லெவலுக்கு ஆடியிருக்கிறான். பீ.டி. க்ளாசில் விளையாடும்போது, பீ.டி. மாஸ்டர் அடைக்கலத்தைத்தான் ப்ளேயர்ஸை தேர்ந்தெடுக்கச் சொல்லுவார். நாங்களெல்லாம் வரிசையில் நின்று டேய் டேய் என்னை எடுடா என்னை எடுடா என்று கெஞ்சுவோம். அவனுடைய மூடுக்குத் தகுந்தாற்போல், தனக்குப் பிடித்தவர்களையும், யாரை எடுத்தால் ஜெயிப்போம் என்று உறுதியாகத் தெரிகிறதோ அவர்களை மட்டும் எடுப்பான் ( தோனி, டெண்டுல்கர் போன்றோர் இருக்கும்போது (என்னைப் போன்ற ) தெரு ப்ளேயர்ஸை எடுக்க அவனுக்கு என்ன கோட்டியா புடிச்சிருக்கு). 

எப்போதாவது என்னை எடுத்தால், ஏதோ ஃபிளைட்டில் பறப்பது போல ஜிவ்வென்று இருக்கும்.

அவனுடைய குடும்பச் சூழல் காரணமாக ஃபுட்பாலில் ஜொலிக்க முடியாமல் ஐ.டி.ஐ படித்து விட்டு அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனைப் போய் பார்த்தோம். அவனுக்கு என்னை கொஞ்சம் கூட ஞாபகம் இருக்கவில்லை. என்னாலோ அந்த ஹீரோவை கொஞ்சம் கூட மறக்க முடியவில்லை. மெக்கானிக் ட்ரெஸ்ஸில் அவனைப் பார்த்தவுடன் ஒரு நொடி ஆடிப் போய் விட்டேன். 

காலத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களில் அடைக்கலமும் ஒருவன். 

ஆனால், எங்களைப் பார்த்து பரவசமாகி, தட புடலாக சாப்பாடு வாங்கிக் கொடுத்து எங்களை அன்பு மழையில் நனைய வைத்து விட்டான்.

கஷ்டப்பட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.     

மிகவும் மகிழ்ச்சியாக தொடங்கிய ட்ரிப். ரவி வெங்கடேசன், அடைக்கலம் போன்றோரின் இன்றைய நிலை, நெருங்கிய பல நல்ல உள்ளங்களின் மறைவு என்று இதயம் கனக்க தேவகோட்டையை விட்டு கிளம்பினேன். 

ஏனோ….

கண்ணதாசனின், மயக்கமா கலக்கமா……உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு பாடல் ஞாபகத்திற்கு வந்தது. 

காலம் ஏன் சிலரை மட்டும் காரணமேயில்லாமல் வஞ்சித்து விடுகிறது ?

வெ.பாலமுரளி