முள்றியின் டைரி : 66 ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர்களில் இரண்டு வகை உண்டு.

முதல் வகை:

நான் தேவகோட்டையில் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, காலாண்டு தேர்வில் , தமிழில் 35 மதிப்பெண்கள். நான்தான் வகுப்பில் கடைசி. எங்கள் தமிழாசிரியர் உயர்திரு அப்பாத்துரை , புளிய விளாரால் விளாசித்தள்ளி விட்டார். சட்டையெல்லாம் கிழிந்து தொங்கி விட்டது. அந்த காலத்திலெல்லாம் பள்ளியில் அடி வாங்கினால் வீட்டில் போய்ச் சொல்ல மாட்டோம். சொன்னால், அவர்களும் போட்டு அடியோ அடி என்று அடித்துத் தள்ளி விடுவார்கள்.

திரு அப்பாத்துரை ஐயாவிற்கு ரொம்ப கோபம் வந்தாலும் சரி, ரொம்ப சந்தோஷம் என்றாலும் சரி “ பிஸ்கோத்து” என்ற வார்த்தையை அதிகம் உபயோகிப்பார்.

அன்று அவர் சந்தோஷமாக இருந்திருக்க வாய்ப்பிலை. மூச்சுக்கு முந்நூறு “ பிஸ்கோத்து” போட்டு விட்டார். பிஸ்கோத்து நாயே, 35 மார்க்கு வாங்கியிருக்கிறாயே, அசிங்கமாயில்லை? பொறம்போக்கு பிஸ்கோத்து…இன்னும் என்னென்ன பிஸ்கோத்தோ.

அண்ணாமலை படத்தில் வரும் சூப்பர்ஸ்டார் போல ரோஷம் வந்து, படியோ படியென்று படித்து அந்தாண்டு பொதுத்தேர்வில் 88 மதிப்பெண்கள் வாங்கி பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறி விட்டேன். தே பிரித்தோ பள்ளியில் முதல் மாணவன் என்றால் செம கெத்து. காரணம் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 450 ஐ தாண்டும். அது மட்டுமல்லாமல், எண்பதுகளில் தமிழில் 88 என்பது சிறிது கடினம். சந்தோஷம் பொங்க, நான் போய் நின்ற இடம் திரு அப்பாத்துரையின் அறை. “ ஐயா, என்னை ஞாபகம் உள்ளதா? 35 மார்க் வாங்கி விட்டேன் என்று அடியோ அடி என்று அடித்தீர்களே , இன்று நான்தான் பள்ளியிலேயே முதல் மாணவன் என்றேன் கர்வம் பொங்க” (ஆமாம்….அப்பவே கொஞ்சம் Attitude Problem உண்டு ).

அவர் கண்ணெல்லாம் கலங்கி, நீ நல்லா படிப்பாயென்று எனக்குத் தெரியும்டா பிஸ்கோத்து. அதனால்தான் உன்னை அன்று உரிமையோடு அடித்தேன் என்று சொல்லி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.. என்ன உரிமையோ ….அன்னிக்கு அடித்த அடியில் தோலெல்லாம் பிய்ந்து விட்டது என்று முணு முணுத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

இரண்டாவது வகை :

நாம் ஒரு இக்கட்டில் இருக்கும்போது, முடிந்தும் உதவாத உறவினர்கள், தெரிந்தே நம்பிக்கை துரோகம் செய்யும் சில “ நண்பேண்டா” நண்பர்கள், நாம் பிரச்சினையில் இருக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு நம்மைக் கடந்து போகும் சில “நட்பூக்கள்”, இவன் எப்படா அசருவான் இவனைப் போட்டுத் தள்ளி விட்டுமுன்னேறுவோம் என்று முன்னேறத் துடிக்கும் சக ஊழியர்கள், நம் உடலில் தெம்பு இருக்கும்போது சக்கையாக பிழிந்தெடுத்து விட்டு, கொஞ்சம் உடல் நலம் சரியில்லையென்றதும்Replacement தேடும் முதலாளிகள் என்று இந்த இரண்டாவது வகை ஆசிரியர்கள் நம் வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணப்படுவார்கள்.

திரு அப்பாத்துரை போன்ற முதல் வகை ஆசிரியர்கள், கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும், அன்பையும் கற்றுத் தருவார்கள்.

ஆனால் , இந்த இரண்டாவது வகை ஆசிரியர்கள்தான் நமக்கு வாழ்க்கையையும், வைராக்கியத்தையும் கற்றுத் தருவார்கள்.

இந்த இரண்டு வகை ஆசிரியர்களும் இல்லாவிட்டால் , நம் வாழ்க்கை முழுமை பெறாது.

எனவே, எனக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும், அன்பையும், வாழ்க்கையையும் கற்றுத் தந்த அனைத்து ஆசான்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

உங்கள் அனைவருக்கும் நான் வாழ் நாள் முழுவதும் கடன்பட்டிருக்கிறேன்.

வெ.பாலமுரளி.