முள்றியின் டைரி : 64 .மாரா ஓர் மந்திரலோகம் – 5

முதுகு வலிப்பதால் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்பதால்தான், பலூன் சஃபாரி போகலாம் என்று முடிவெடுத்தேன்.

ஆனால், என்னுடைய போதாத காலம், அதிகாலை 5 மணிக்கே ஹோட்டலை விட்டு கிளம்ப வேண்டும், ரெடியாக இருக்கவும் என்று என் டிராவல் ஏஜெண்ட் மெசேஜ் அனுப்ப வெறுத்து விட்டேன்.

என் விதியை நொந்து கொண்டு மூன்றரை மணிக்கே எழுந்து குளித்து முடித்து ரெடியானேன். டாண் என்று ஐந்து மணிக்கு பலூன் சஃபாரிக்கு அழைத்துப் போகும் வாகனம் வந்து விட்டது. பலூனில் இடம் பற்றாக் குறை காரணமாக, ஒரே ஒரு கேமராவையும், இரண்டு லென்ஸ்களையும் மட்டும் எடுத்துக் கொண்டு, மற்ற உபகரணங்களை முதல் நாள் இரவே சாமியிடம் கொடுத்து, உள்ளே காட்டுக்கு கொண்டு வரச் சொல்லி விட்டேன்.

நான் பலூன் சஃபாரி என்றதும் ஏதோ ஒன்றிரண்டு பலூன்கள் மட்டும் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். நான் சென்ற இடத்தில் மட்டும் பத்து பலூன்கள். அது போல ஐந்தாறு கம்பெனிகள் அந்த பலூன் சஃபாரிகளை நடத்துகிறார்கள்.

காற்றின் வேகத்தை சமாளிப்பதற்காக அதிகாலை 6 மணிக்கே கிளம்பத் தயாராகி விட்டார்கள். ஒரு கூடை மாதிரி இருந்த பலூனின் அடிப்பகுதியை படுக்கை வசத்தில் கிடத்தி அதில் ஏறி நம்மை படுக்கச் சொல்லுகிறார்கள். பலூனில் ஹைட்ரஜன் கேஸை (Gas) நிரப்பி , அதை கேஸ் பர்னர் (Gas Burner) மூலம் சூடு பண்ணுகிறார்கள். கேஸ் சூடானதும், வெளியில் உள்ள குளிர் காற்றை விட லேசாகி விட அடியில் உள்ள கூடையும் இழுத்துக் கொண்டு பறந்து விடுகிறது.

பலூனில் உள்ள வெப்பமான வாயுவை சூடாக்குவதன் மூலம் மேலேயும், அந்த வாயுவை குளிர்ப்படுத்துவதன் மூலம் கீழேயும் செலுத்தி, பலூனை கண்ட்ரோல் பண்ணுகிறார்கள்.

அந்த அதிகாலையில் குளிர் வெடவெடவென்று ஆட்ட , 1000 அடிக்கு மேல் செல்லும்போது ஒரு அற்புதமான ஃபீலிங். சூரியன் உதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால், மெலிதான வெளிச்சம் வந்து விட அந்த வெளிச்சத்தில் மாராவைக் காண கண் கோடி வேண்டும். அந்த வெளிச்சத்தில் விலங்குகள் ஒன்றும் தெரியவில்லை.

லேசாக சூரியன் வெளிப்பட , நாம் சூரியனை விட கொஞ்சம் அதிகமான உயரத்தில் இருக்க, மிகவும் அருமையான சன் ரைஸ் படங்கள் கிடைத்தன. அதுவும் பலூனுடன் கூடிய சில்யூட் , சான்ஸே இல்லை. மிகவும் சந்தோஷத்துடன் அடித்துத் தள்ளி விட்டேன்.

வெளிச்சம் வர வர, மிகவும் ஹாயாக நடந்து போய்க் கொண்டிருந்த இரண்டு சிங்கங்கள் , நிறைய வில்ட பீஸ்ட்கள், வரிக்குதிரைகள், நீர்யானைகள் என்று மாராவின் முழுப் பரிணாமும் ஏரியல் வ்யூவில் அழகாகத் தெரிய ஆரம்பித்தன.

கிட்டத்தட்ட 50 பலூன்கள் அந்த இடத்தில் வானத்தில் அணி வகுப்பு நடத்த ஆரம்பித்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்ததால், அவை அனைத்தையும் ஒரு சேர படம் எடுக்க இயலவில்லை.

ஒவ்வொரு பலூனும் ஏற்படுத்திய அதீத சத்தம், மாராவிற்கு மிகவும் அன்னியமாக இருந்தது. அதிலும் சில பலூன் பைலட்டுகள் சுற்றுலாவாசிகளை திருப்திப்படுத்தும் எண்ணத்துடன் மிகவும் தாழப் பறந்து , பயத்துடன் தெறித்து ஓடும் விலங்குகளை பின்னணியாக வைத்து ஃபோட்டோக்கள் எடுத்து, அதை விற்று காசாக்குகிறார்கள். அவை அனைத்தையும் “ Man Vs Wild” என்னும் தலைப்பை மனதில் வைத்து சில படங்கள் எடுத்து அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பின்னர் அனுப்பி வைத்து, மாராவில் பலூன் சஃபாரியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிந்து ஒரு கடிதம் எழுதினேன். கண்டிப்பாக பரீசிலிக்கிறோம் என்ற பதிலும் வந்தது. ஆனால், மசை மாராவும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களும், அங்குள்ள மசாய் பழங்குடியினரும் அங்கு வரும் வெளி நாட்டு டூர்ஸ்ட்களை மட்டுமே நம்பி இருப்பதால் , அவர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்றான் சாமி.

என் படங்களை வெளிநாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில் இருக்கும் ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். இன்னும் யாரிடம் இருந்தும் பதில் இல்லை.

ஆரம்பத்தில் , சூரியனை ஆகாயத்தில் இருந்து படம் எடுக்கும் போது இருந்த மகிழ்ச்சி, கீழே தெறித்து ஓடிய விலங்குகளைப் பார்த்ததும் புஸ்ஸென்று வடிந்து விட்டது. இனிமேல் ஜென்மத்திற்கும் காட்டுக்குள் இருக்கும் பலூன் சஃபாரி போகக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

ஒரு ஏழரை மணி வாக்கில் கீழே இறக்கினார்கள். எங்களை அழைத்துப் போவதற்காக வந்த வாகனம் வழியில் பழுதாகி விட கிட்டத்தட்ட 9.30 மணி வரை அந்த அத்துவான காட்டில் காத்திருக்கும்படி ஆகி விட்டது. பசி சுருட்டி விட்டது.

9.30 மணிக்கு மேல் எங்களை அழைத்துப் போய் காட்டின் ஒரு பகுதியில் தட புடலாக காலை உணவை பறிமாறினர்கள். சாப்பிட்டவுடன்தான் போன உயிர் திரும்பி வந்தது.

நான் சாப்பிட்டு முடிக்கவும், என்னை அழைத்துப் போக சாமி வருவதற்கும் சரியாக இருந்தது. “அடுத்து” ? என்றான். “ஹோட்டல்” என்றேன் மணிரத்தினம் ஸ்டைலில். செம டயர்டாக இருந்ததால், ஹோட்டலுக்குப் போய், டெண்ட் வாசலில் அமர்ந்து மாரா ஆற்றையும் அங்கு வரும் பறவை மற்றும் ஹிப்போக்களையும் ரசிக்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச நேரத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு ஒரு நல்ல தூக்கம் போட்டேன். ஒரு மூணு மணி வாக்கில் எழுந்து ஒரு டீயைக் குடித்து விட்டு, மாலை சஃபாரிக்குக் கிளம்பினோம். நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு மிக அருகிலேயே, மாரா ஆற்றின் ஒரு பகுதியில் “ ரிவர் க்ராஸிங்” நடக்கப் போகிறது என்ற தகவல் வர, பஞ்சாய்ப் பறந்தோம்.

இது போன்ற தருணங்களில் ஒரு நல்ல வ்யூவ் கிடைக்கும் இடத்தில் வாகனத்தை பார்க் செய்ய இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு. எங்கள் அதிர்ஷ்டத்திற்கு , அவை க்ராஸ் செய்யப் போகும் இடத்திற்கு 90 டிகிரி கோணத்தில் மிகவும் அருமையான இடம் ஒன்று கிடைக்க, வாண்டியை நிறுத்தி விட்டு என் கேமராக்களை செட் பண்ண ஆரம்பித்தேன்.

நாங்கள் முதலில் பார்க்கும்போது சில வரைக் குதிரைகள் மட்டுமே ஆற்றின் ஓரத்தில் க்ராஸ் பண்ண காத்திருந்தன. அதில் சில வரிக்குதிரைகள் தண்ணீரில் இறங்கி தண்ணீர் குடிப்பது போல பாவனை செய்து, அங்கு ஏதேனும் முதலைகள் உள்ளனவா என்று வேவு பார்க்க ஆரம்பித்தன. எங்களுக்கு ஒரு நாலைந்து முதலைகள் கண்ணுக்குத் தெரிந்தன.

கண்டிப்பாக அந்த வரிக்குதிரைகளும் அந்த முதலைகளைப் பார்த்திருக்க வேண்டும். இருந்தாலும், திரும்பிப் போகாமல் சிறிது நேரம் எதையோ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தன. சொல்லி வைத்தாற்போல், ஏராளமான வில்டபீஸ்ட்களும் வந்து அந்த ஜோதியில் ஐக்கியமாக, வரிக்குதிரைகள் தைரியமாக நீந்த ஆரம்பித்தன.

எப்போதும் இப்படித்தான். ஒரு வரிக்குதிரையோ, ஒரு வில்டபீஸ்ட்டோ க்ராஸ் பண்ண ஆரம்பித்து விட்டால் போதும், கட கடவென்று மற்றவையும் க்ராஸ் பண்ண ஆரம்பித்து விடும். முதலில் தண்ணீரில் இறங்கி வேவு (ஸ்கௌட்டிங்) பார்த்த விலங்கின் மீது அவ்வளவு நம்பிக்கை.

நான் இதற்கு முன்னரே ரிவர் க்ராஸிங் நிறைய பார்த்திருந்தாலும், வரிக்குதிரையும், வில்டபீஸ்ட்டும் இணைந்து க்ராஸ் பண்ணுவதைப் பார்ப்பது இதுவே முறை. கண்கொள்ளா காட்சி.

என்னுடைய ஃபோனை எடுத்து , ஒரு Bean Bagஐ முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்து விட்டு வீடியோவை ஆன் பண்ணி விட்டு என்னுடைய மற்ற இரண்டு கேமராக்களிலும் இரண்டு வெவ்வேறு லென்ஸ்களை மாட்டி கன்னாபின்னாவென்று அடிச்சுப் பொலிக்க ஆரம்பித்து விட்டேன். செட்டிங்க்ஸ் எதுவுமே பார்க்கவில்லை. கம்போசிஷன் என்னும் ஃபிரேமிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி எடுத்திக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் காத்திருந்த முதலைகள், பெரும்பாலான விலங்குகள் தண்ணீருக்குள் வந்து விட்டதை உறுதிப் படுத்திக் கொண்டு, மிகவும் சாவகாசமாக நெருங்கின. அவை நெருங்க நெருங்க வரிக்குதிரைகள் + வில்டபீஸ்ட்டின் வேகமும் அதிகரிக்க, அதை விட என்னுடைய ஹார்ட் பீட்டின் வேகம் அதனுடைய உச்ச பட்ச அளவிற்கு அடிக்க ஆரம்பித்தது.

முதலைகளில் இந்தப் பக்கம் ஒன்றும், க்ராஸ் பண்ணும் விலங்குகளுக்கு மறு புறத்தில் ஒன்றுமாக வந்து வேட்டையாட ஆரம்பிக்க, முதலில் ஒரு வரிக் குதிரையும் , மறு புறத்தில் ஒரு வில்டபீஸ்ட்டுமாக முதலைகளின் வாயில் மாட்டிக் கொண்டு பரிதவித்தன.

இதற்கிடையில் இன்னும் சில வரிக்குதிரைகளும், வில்டபீஸ்ட்டுகளும் வந்து ரேஸில் கலந்து கொள்ள, முதலைகளுக்கு எதை விடுப்பது எதை தொடுப்பது என்று குழப்பம். ஒரு அரை மணி நேரத்தில் அந்த களேபரம் அனைத்தும் முடிய, வேட்டையாடப்பட்ட விலங்குகளை இழுத்துக் கொண்டு முதலைகள் எதிர்புறத்திற்குச் சென்று மறைந்து விட்டன.

அந்தக் கடைசி நேரத்தில் அந்த வரிக்குதிரையும், வில்ட பீஸ்ட்டும் தங்கள் உயிரைக் காப்பாற்ற பட்ட பாட்டை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. ஆனால் கானகத்தில் இதுதான் வாழ்க்கை. அதுவும் அவை ஒவ்வொரு வருடமும் இந்த பரிட்சையை எழுதி பாஸ் பண்ணினால் தான், அடுத்த வாழ்க்கை, இனப்பெருக்கம் என்று எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க முடியும்.

நாங்கள், இந்த இடத்தில் படம் எடுத்துக் கொண்டிருக்க சாமியின் தோழன் டொமினிக் இன்னொரு இடத்தில், இதை விடப் பெரிய Gathering நடந்து கொண்டிருக்கிறது, எந்த நேரம் வேண்டுமானாலும் அவை க்ராஸ் பண்ணலாம் என்ற செய்தியை அனுப்பினான். அதிலும் குறிப்பாக அங்கு நிறைய ஈலண்ட் (Eland) எனப்படும் மிகப் பெரிய மான் வகைகளும் Gathering ஆகின்றன என்ற அடிஷனல் செய்தியும் வந்தது.

ஈலண்டும், வட அமெரிக்காவில் வாழும் “மூஸ்” என்னும் மான் வகையும்தான் மான் இனத்திலேயே ரொம்ப பிரமாண்டவை என்று நினைக்கிறேன். ஒரு ஆண் ஈலண்ட் ஒரு டன் எடை வரை இருக்கும். சிலவை காட்டெருமையை விட பெரியதாக இருக்கும். அவை ரிவர் க்ராஸிங் செய்யும்போது, அந்த இடமே ஒரு போர்க்களம் போல் இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பார்த்ததில்லை.

அதை இன்று பார்க்கும் ஒரு வாய்ப்பு. அடித்துப் பிடித்து ஓடினோம். ஒரு பத்து நிடத்தில் அந்த இடத்திற்குப் போய் விட்டோம். நாங்கள் அந்த இடத்திற்குப் போய் வண்டியை நிறுத்துவதற்கும், அவை எதையோ பார்த்து பயந்து போய் ஆற்றை விட்டு திரும்ப ஓடிப் போவதற்கும் சரியாக இருந்தது.

எதற்கும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போல, காத்திருக்கத் தொடங்கினோம். ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் அவை மறுபடியும் கூட ஆரம்பித்தன. நிறைய ஈலண்ட்களும், வரிக்குதிரைகளும் சரியான நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தன. வழக்கம்போல் முதலில் ஒரு வரிக்குதிரைதான் “ வந்தால் வாழ்வு. போனால் உயிர்” என்று முடிவெடுத்து க்ராஸ் பண்ண ஆரம்பித்தது.

முதலில் ரிஸ்க் எடுத்ததென்னவோ வரிக்குதிரைதான். ஆனால், அடுத்த நிமிடம் ஈல்ண்ட்கள் குதித்து நீந்த ஆரம்பித்தன பாருங்கள், அருகில் இருந்த வரிக்குதிரைகள், முதலைகள் எல்லாம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விட்டன.

இருந்த ஈலண்ட்கள் க்ராஸ் பண்ணிய பிறகுதான் பெரிய க்ரூப்பாக நின்று கொண்டிருந்த வரிக்குதிரைகள் க்ராஸ் பண்ண ஆரம்பித்தன. இந்த முறையும் ஓரிரு வரிக்குதிரைகள் தங்கள் இன்னுயிரை நீத்தன.

அதிலும் ஒரு தாயும் , அதன் குட்டியும் கரையை கடந்து மறு கரைக்கு சென்ற பின்னர், எதையோ தொலைத்து விட்டு தேடுவது போல திரும்ப வந்து ஆற்றில் வந்து நீந்த ஆரம்பிக்க அதன் குட்டி ஒரு முதலையிடம் மாட்டிக் கொண்ட கொடுமையும் நடந்தது.

எதற்காக அந்த வரிக்குதிரை திரும்பி வந்தது ? குட்டியைப் பறி கொடுத்த அந்தத் தாயின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று எதைப் பற்றியுமே கவலைப் படாமல் மாரா ஆறு தன் பாட்டுக்கு அதன் போக்கில் போய்க் கொண்டிருந்தது.

கனத்த இதயத்துடன் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.

வெ.பாலமுரளி