நீங்கள் விரும்பும் ஒரு விஷயத்தைச் செய்து முடிக்க எந்த எல்லை வரை நீங்கள் செல்வீர்கள்? ( ‘வாகா எல்லை’ வரை செல்வோம் என்ற மொக்ஸ் வேண்டாம்)
நான் நல்ல படம் எடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு முறை உயிரையே பந்தயம் வைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது , உடல் லேசாக நடுங்குகிறது. உயிரையே பந்தயம் வைக்கும் அளவிற்கு படம் எடுப்பது வொர்த்தா என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக வொர்த் இல்லை. ஆனால், விஷயம் என்னவென்றால், ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில், மற்ற செக்யூரிட்டி விஷயங்கள் எதுவும் கொஞ்சம் கூட கண்ணுக்குத் தெரியவில்லை என்பதுதான் பிரச்சினையே.
முதல் முறை 1995 – இல் . கென்யாவில் “14 அருவிகள்” என்று ஒரு இடம் உள்ளது. 14 அருவிகள் என்றதும் , நீங்கள் நயாகரா ஃபால்ஸ் போல, விக்டோரியா அருவி போல 14 பிரமாண்டமான அருவிகள் என்று நினைத்து விட வேண்டாம். இது சும்மா “லுல்லுல்லாயி ஃபால்ஸ்”. 14 வெவ்வேறு இடங்களில் இருந்து பாசனத்திற்காக உள்ள தண்ணீர் ஒரே இடத்தில் வந்து விழும்.
பிரச்சினை அந்த அருவிகள் அல்ல. அதைச் சுற்றியிருக்கும் பாறைகள். அதில் இரண்டு பாறைகள் மட்டும் கொஞ்சம் எசக்கு பிசக்காக இருக்கும். ஆனால், அவற்றில் இருந்துதான் ஃபோட்டோ எடுக்க நல்ல “வ்யூ “ கிடைக்கும் (ஹி ஹிஹிஹி ).
அந்தப் பாறைகளில் ஒன்றில் இருந்து இன்னொன்றிற்குத் தாவ முயற்சிக்கையில் ( யெஸ்…உங்கள் மனதில் ஓடும் “அதை”ப் போலத்தான்), வழுக்கி விழுந்து காலை (மட்டும்) உடைத்துக் கொண்டது முதல் அனுபவம் ( அனால், அப்படி விழும் போதும், என்னுடைய கேமராவை உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டேன். கேமராவிற்கு ஒரு கீறல் கூட விழவில்லை. நாங்கல்லாம் யாரு ……)
ஆனால், இந்தக் கட்டுரை என்னுடைய இரண்டாவது அனுபவம் பற்றி.
எனக்கும் இந்த துருக்கி நாட்டுக்கும் ஏதோ ஒரு முன் ஜென்மப் பகை இருக்கு என்று நினைக்கிறேன். இரண்டு முறை சென்றிருக்கிறேன். இரண்டு முறையும் ஒரு துப்பாக்கியால்தான் பிரச்சினையே.
முதல் முறை “ ஆண்டிக்” துப்பாக்கி ஒன்றை வாங்கிக் கொண்டு இஸ்தான்புல் ஏர்போர்ட்டிற்குள் நுழையும்போது, என்னைப் பிடித்து தீவிரவாதியைப் போல் விசாரணை நடத்தி , கடைசியில் “ டம்மி பீஸ்” என்று நிரூபணம் ஆனதும் விடுவித்தார்கள்.
இரண்டாவது முறை…..கொஞ்சம் சீரியஸ் அனுபவம்.
2017 – மார்ச்சில் இஸ்தான் புல்லில் Dairy Processing Machines சம்பந்தமான ஒரு “ Trade Fair “. நான் கூகுள் இமேஜில் இஸ்தான் புல்லின் அற்புதமான புகைப்படம் ஒன்றை பார்த்து விட்டு , அடுத்து இஸ்தான் புல் செல்ல எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தேன்.
கிடைத்தவுடன் சல்லென்று கிளம்பி விட்டேன். கிளம்புவதற்கு முன், அந்தப் படத்தைப் பற்றி ஏதேனும் தகவல்கள் சேகரிக்க முடியுமா என்று தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ( கிடைத்திருந்தால் நிலைமை மாறியிருக்கும்).
சரி அங்கு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். முதல் தடவை போனபோது “போட் க்ரூஸ்” போய் முழு இஸ்தான் புல்லின் அழகையும் தரிசித்து விட்டதால், இந்த முறை நான் கூகுளில் பார்த்த இடத்தைக் கண்டு பிடித்து , நான் பார்த்ததை விட மேலும் அழகான ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நம்ம “ டோம் க்ரூஸ்” போல “ Mission Impossible” என்ற ஒரே ப்ராஜக்ட்டுதான் மனசில் ஓடிக் கொண்டிருந்தது. No “Boat Cruise” this time. Only like “Tom Cruise”.
நான் அங்கு இறங்கி ஹோட்டலில் செக் இன் பண்ணும்போது மதியம் 3 மணி. ஆர்வம் தாங்காதலால், சென்ற உடனேயே ஒரு குளியல் மட்டும் போட்டு விட்டு “Down Town“ என்னும் நகரின் மையப் பகுதிக்கு சென்று விட்டேன் ( நடக்கப் போவது தெரிந்திருந்தால் முதல் நாள் நல்ல ரெஸ்ட் எடுத்து விட்டு மறு நாள் போயிருப்பேன். விதி யாரை விட்டது ).
நான் முன்பே வளைத்து வளைத்து எடுத்திருந்ததால், “சோஃபியா மாஸ்க்கைக்” கண்டு கொள்ளாமல், நான் கூகுளில் எடுத்து வைத்திருந்த படத்தை அங்கு இருப்பவர்களிடம் காண்பித்து இந்த இடத்திற்கு எப்படிச் செல்வது என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் கேட்டுக் கொண்டிருந்தேன். துருக்கியர்களுக்கு எப்படியிருந்தாலும் ஆங்கிலம் புரியப்போவதில்லை. அப்புறம் ஆங்கிலத்தில் கேட்டால் என்ன தமிழில் கேட்டால் என்ன என்பது என்னுடைய லாஜிக். ஆனால், அது வேறு மாதிரியாக வேலை செய்தது ( எல்லாம் என் கிரகம்).
நான் Illegal Immigrant போலிருக்கு. Decent ஆக பிச்சை கேட்கிறேன் என்று நினைத்து விட்டார்கள். நான் விசாரித்ததில் நிறையப் பேர் தங்கள் பையைத் தொட்டுக் காட்டி “ சேஞ்ச் இல்லை” என்னும் அர்த்தத்தில் ஏதோ சொல்லி விட்டுப் போனார்கள். முதலில் அவர்கள் சொன்னது புரியவில்லை. புரிந்த போது புரியாமலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்து வெறுத்து விட்டேன்.
அப்போதுதான் அவனை முதன் முதலில் பார்த்தேன். அங்கிருந்த கோட்டையின் வாசலில் நின்று தம் அடித்துக் கொண்டிருந்தான். ஒரு நாற்பது வயது இருக்கும். ரொம்ப டீசண்டா (என்னை மாதிரியே) டிரெஸ் பண்ணியிருந்தான். ஃபோனை காண்பித்துக் கேட்டால், பையைத் தொட்டுக் காட்டி சேஞ்ச் இல்லைம்பாய்ங்கெ, இல்லாட்டி ஒரு 50 செண்டோ ஒரு ஈரோ போட்டு விடுவார்கள் என்று பயந்ததால், மிகவும் ஜாக்கிரதையாக ஃபோனில் உள்ள படத்தைக் காண்பிக்காமல் “ Excuse me. Do you speak English ?” என்றேன். அவன் உடனே “ Yes Of course” என்றான். எனக்கு அப்போதுதான் உயிர் வந்தது.
இனி ஃபோனில் உள்ள படத்தைக் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணி, இந்த இடத்திற்கு எப்படிப் போவது என்று கேட்டேன். அவன், “ எனக்குத் தெரியும் இது டவுனின் மறு புறத்தில் உள்ளது. நான் அந்த சைடில்தான் போகிறேன். வருகிறாயா சேர்ந்து நடப்போம். ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்” என்றான்.
தெரியாதவனோடு போகலாமா என்று சந்தேகமாக இருந்தாலும், நடந்துதானே போகிறோம். ஏதாவது ஒண்ணு என்றால், தமிழ் , மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் கத்தி கூப்பாடு போடலாம் என்று முடிவு செய்து கொண்டு “தைரியமாக” ( ???) “ ஓ….நோ ப்ராப்ளம்” என்றேன்.
தன் பெயர் முகமது என்றும், தான் ஒரு ஹார்ட்வேர் டெக்னீஷியன் என்றும் தன்னைப் பற்றியும், தன்னுடைய படிப்பு , வேலை பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தான். சில இடங்களில் நின்று இந்த இடத்தை, இந்த ஆங்கிளில் படம் எடு என்று சில டிப்ஸூம் கொடுக்க, நான் புல்லரித்து விட்டேன்.
நான் படம் எடுக்க நின்றபோதெல்லாம், அவன் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு எனக்காக் காத்துக் கொண்டிருந்தான். சில சமயங்களில் யாருக்கோ ஃபோன் பண்ணி பேசினான்.
நடக்க நடக்க வெளிச்சம் போய்க் கொண்டிருக்கிறதே என்று எனக்கு டென்ஷன் வேறு.
“ முகமது, வா டாக்ஸியில் போவோம், நான் Pay பண்ணுகிறேன்” என்றேன். இல்லை நடந்து போவதுதான் வசதி. இன்னும் கொஞ்சம் தூரம்தான் என்றான். ( எதுக்கு வசதி என்று சொல்கிறான் என்று சிறிது நேரத்தில் புரிந்தது).
அங்கு ஏராளமான மக்கள் நடந்து கொண்டிருந்ததால் எனக்குக் கொஞ்சம் கூட சந்தேகமோ, பயமோ இல்லாமல், நேரம் ஆக ஆக கேமராவின் ISO – வை மட்டும் மாற்றிக் கொண்டே நடந்தேன் (ம்க்கும்…ரொம்ப முக்கியம்).
அப்போது ஒரு ஆள் நடமாட்டமில்லாத ஒரு சந்து குறுக்கிட, முகமது “இது குறுக்கு வழி, இந்த சந்தின் மறு புறம்தான் உள்ளது நீ கேட்ட இடம்” என்றான். அப்பாடா ( ????) என்று இருந்தது எனக்கு.
நாங்கள் அந்த சந்துக்குள் நுழையவும், படங்களில் வருவது போல வெவ்வேறு திசைகளில் இருந்து இன்னும் ஒரு மூன்று பேர் சேர்ந்து கொள்ளவும் , நான் அந்த முட்டுச் சந்தின் மூலைக்குத் தள்ளப் பட்டேன். நல்ல இருட்டான சந்து, ஆனால், அந்த மூன்று பேரின் கைகளிலும் இருந்த துப்பாக்கி மிகத் தெளிவாகத் தெரிந்தது.
எனக்கு கையில் இருந்த புத்தம் புதிய Canon 1DX Mark II கேமராவும், ஐ ஃபோனும் ஞாபகத்திற்கு வந்து ஹார்ட் பீட்டை உச்சத்திற்குக் கொண்டு சென்றது ( நான் போட்டு வைத்திருந்த அந்த பாழாய்ப் போன இன்ஷூரன்ஸ் விஷயம் மறந்தே போய் விட்டது).
இஸ்தான் புல்லின் குளிரிலும் எனக்கு வியர்த்து ஊற்றியது. ஆனால், கெட்ட நேரத்திலும் என் நல்ல நேரம் என்று நினைக்கிறேன், அவர்கள் அனைவருமே என்னை விட அதிகமான பதற்றத்தில் இருந்தனர் ( அப்ரசெண்டிகளோ???) . அதில் ஒருவன் என் பாண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து அதிலிருந்த US$ 1200/- ஐ மட்டும் எடுத்துக் கொண்டு, என் சட்டைப் பையையும், ஜாக்கெட்டிலிருந்த பைகளையும் செக் பண்ணி விட்டு, பர்சை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டு நகன்றார்கள். ஏனோ என்னுடைய கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், கேமரா எதையும் தொடவே இல்லை.
நான் பழகிய தோஷத்தில் (???) முகமதுவை பரிதாபமாகப் பார்த்தேன். அவன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, இங்கிருந்து நேரே சென்றால் ஒரு T ஜங்ஷன் வரும், அதில் வலது கைப் பக்கம் திரும்பினால், டாக்ஸி ஸ்டாண்ட் இருக்கும் என்று சொல்லி விட்டு கையில் அந்த ஊர் பணம் ஒரு 50 லிராவை என் கையில் திணித்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டார்கள்.
எனக்கா, பயங்கர சந்தோஷம் – என்னுடைய கேமராவை பிடுங்காமல் ஓடி விட்டார்களே என்று. அதிலும் அவன் நல்ல “திருடன் சார்” போலிருக்கு. ஓடும் அவசரத்திலும் 50 லிராவைக் கொடுத்து விட்டுப் போனானே என்று.
ச்சே…தெரியாத ஊரில் தெரியாத ஒருத்தனை நம்பி இப்படி மோசம் போய் விட்டோமே என்று மன உளைச்சலாக இருந்தது. அவன் சொன்ன திசையிலேயே சென்று ஒரு டாக்ஸியைப் பிடித்து ஹோட்டலுக்குப் போனேன்.
டாக்ஸி “சோஃபியா மாஸ்க்” வழியாகத்தான் சென்றது. சூரியன் மறைந்து வழக்கம் போல் வானத்தில் வர்ண ஜாலம் நடந்து கொண்டிருக்க, டாக்ஸியை நிப்பாட்டி இந்தப் புகைப்படத்தை எடுத்து விட்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
நான் இதுவரை எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருந்தாலும், துருக்கியில் நடந்தது போல எனக்கு வேறு எங்கும் நடந்ததில்லை.
இதுவும் ஒரு அனுபவம்தானே என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.
வெ.பாலமுரளி
பி.கு: இந்த விஷயம் என் மனைவிக்கே இந்த டைரியைப் பார்த்த பிறகுதான் தெரியும்.