முள்றியின் டைரி – 95 மாரா ஒரு மந்திரலோகம் – 21 

முள்றியின் டைரி – 95

மாரா ஒரு மந்திரலோகம் – 21 

இரண்டாம் நாள் :

முதல் நாள் நச நசவென்று மழை பெய்த காரணத்தால், நல்ல படங்கள் ஒன்றும் எடுக்க முடியவில்லையே என்ற விரக்தியில் விடுதிக்கு வந்து  பார்லி ஜூஸ் ஒன்றை குடித்து விட்டு, There is always tomorrow  என்று நம்பிக்கையுடன் உறங்கச் சென்றேன். ஆனால், அந்த tomorrow,   Yesterday யை விட கேவலமாக இருக்கப் போவதை அன்று இரவு பெய்த பெரிய மழை எனக்கு சொல்லாமல் சொல்லியது. 

அப்புறம் எங்கிட்டு தூங்குறது …..கொட்ட கொட்ட விழித்திருந்து விட்டு, வழக்கம்போல் காலை எழுந்து ஒரு குளியலைப் போட்டு விட்டு, கிளம்பினோம். உள்ளே சாலைகள் அனைத்தும் சேரும் சகதியுமாக இருந்தன. 

உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே, நஷிப்பாய் என்ற தாய் சீட்டாவும் அதன் வளர்ந்த பசங்க இரண்டு பேரும் நடந்து கொண்டிருப்பது தெரிந்து , அவை செல்லும் திசையில் அவற்றிற்கு முன்னராக சென்று காரை வெகு தொலைவில் நிறுத்தி விட்டு அவற்றின் வருகைக்காகக் காத்திருந்தோம்.

நாங்கள் நினைத்தபடியே அவை சாலையில் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. லைட்டிங் இதற்கு மேல் மோசமாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பது போல மிகவும் கேவலமாக இருந்தது. இருந்தாலும், கிடைத்ததை எடுப்போம்  என்று என்னுடைய ஃபோனை வைத்து லோ ஆங்கிளில் சில வீடியோக்களும், என் கேமராக்களை வைத்து சில புகைப்படங்களும் எடுத்து விட்டு, நல்ல வெளிச்சம் வரும் வரை காத்திருக்கலாம் என்று முடிவெடுத்து விட்டு, நடிகர் பிரபு குரலில் “ நம்பிக்கைதானே எல்லாம்” என்று எனக்கு நானே சொல்லி விட்டு அவை போகும் இடமெல்லாம் நாங்களும் செல்லத் தொடங்கினோம். 

அவை செல்லும் தோரணையில், அவை பசியோடு இருப்பதும், வேட்டைக்கு தயாராக இருப்பதும் தெளிவாகப் புரிந்தது. 

இதற்கிடையில் அவ்வப்போது, ஒரு கோல்டன் வெளிச்சம் வருவதும், வந்த வேகத்தில் மறைவதுமாக இருந்தது. நான் நயன்தாராவின் நினைவில் சாரி…. தயாரான நிலையில் இருந்ததால் எந்தவொரு வாய்ப்பையும் விட்டு விடாமல் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் தகதகவென்ற அந்த மஞ்சள் வெயில் வெளிச்சத்தில் அந்தத் தாய் சீட்டாவை ( நஷிப்பாய்) ஒரு படம் எடுத்தேன் (அதிர்ஷ்டம். வேறு ஒன்றுமில்லை).

அப்போது, டோப்பி என்னும் ஒரு வகை மான் கூட்டத்தை அவை பார்த்தன. 

சீட்டா என்னும் சிவிங்கிப் புலியும் சிங்கங்கள் போலவே பயங்கரமாய் Strategic Planning பண்ணும். குறிப்பாக அவை மூன்று அல்லது நான்காக ஒரு குழுவாக இருக்கும்போது நம்ம வடிவேலு சொல்வது போல எதைச் செய்தாலும் ப்ளான் பண்ணி செய்யும். 

ஒவ்வொன்றும் வெவ்வேறு திசையில் சென்று வளைக்கத் தொடங்கும். அப்போது ஒன்று துரத்தத் தொடங்கும். அந்தச் சமயத்தில் தங்கள் இரையின் குழுவில் உள்ளதிலேயே குட்டி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதைக் குறி வைத்து வேட்டையாடும். மற்றவை சுற்றி வளைத்திருப்பதால், அந்தக் குட்டி மாட்டிக் கொள்ளும்.

இதுதான் அவற்றின் பொதுவான Strategy. ஆனால், அவை எவ்வளவுதான் ப்ளான் பண்ணினாலும், அவற்றின் வெற்றி வாய்ப்புகள் என்னவோ 15 சதவிகிதம்தான். 

சில சமயம் பசியின் காரணமாக அவை வில்டபீஸ்ட் போன்ற தன்னைவிட பெரிய விலங்குகளையும் வேட்டையாட முயற்சிக்கும். அது போன்ற சமயங்களில் அதன் வெற்றி வாய்ப்பு என்னவோ ஓரிரு சதவிகிதம்தான். நிறைய நேரங்களில் அவை திருப்பித் தாக்க, நம்மாள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பின்னங்கால் பிடரியில் பட தெறித்து ஓடி விடும் காட்சிகளையும் நான் நேரில் பார்த்து படமும் பிடித்திருக்கிறேன். 

டோப்பி மான் இனமும் அது போலத்தான். சைஸில் கொஞ்சம் பெரியவை. அவற்றை குறி வைக்கும் போது, சீட்டாக்கள் அவசரம் காட்டாது. 

ஆனால், அன்று சீட்டாக்கள் பசியாக இருந்த காரணத்தாலோ அல்லது  அனுபவப் பற்றாக்குறையினாலோ அந்தக் குடும்பத்தின் இளவட்டங்கள் கொஞ்சம் அவசரமாக காரியத்தில் இறங்கி விட்டன.

நஷிப்பாய் (தாய்) சீட்டா, பதுங்கி பதுங்கி ஸ்டாக்கிங் செய்து கொண்டிருக்கையில் பையனான இளவட்ட சீட்டா ஒன்று What the hell are you doing ? Just see what I am doing என்று அவசர கதியில் துரத்த ஆரம்பிக்க, ஒரு இலக்கே இல்லாமல் மூன்று சீட்டாக்களும் அந்த டோப்பி கும்பலை வெவ்வேறு திசையில் துரத்த, ஒரு நேரத்தில் அவை செய்வது அவற்றிற்கே காமெடியாக இருந்திருக்க வேண்டும். ஒரு நேரத்தில் அவை துரத்துவதை நிறுத்தி விட்டன. இதுவரை லைட்டிங் மோசமாகத்தான் இருந்தது. 

ஆனால், அந்த டிராமா முடிவதற்கும், நல்ல லைட்டிங் வருவதற்கும் சரியாக இருந்தது. அந்த சீட்டாக்கள் மூன்றும் பசியோடு நடந்து சென்று ஒரு கற்குவியலில் உட்கார்ந்தும், ஸ்டாக்கிங் செய்தும் வித விதமாக போஸ் கொடுத்தன. ஆசைதீர எடுத்தேன். 

சிறிது நேரத்தில் அவை மூன்றும் ஒரு புதருக்குள் பதுங்க, நாங்களும் கிளம்பினோம். 

ஆங்காங்கே நிறுத்தி கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, லேசாக வானம் இருண்டு மழை தூற ஆரம்பிக்க, சரி எடுத்தது போதும் என்று விடுதிக்குத் திரும்பினோம். மணி காலை 11 தான் ஆகியிருந்தது. கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு சாப்பிட கிளம்பினேன்.

காலையில் கிளம்பும்போதே மதியம் லஞ்சுக்கு இந்தியன் ஸ்டைலில் சிக்கன் கறி, சப்பாத்தி, சோறு, சுக்குமா விக்கி என்னும் கீரைப் பொறியல், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றும் மிக்ஸ் பண்ணிய “கச்சும்பாரி” என்னும் சாலட், மற்றும் தயிர் எல்லாம் செய்யச் சொல்லி விட்டு சென்றிருந்தேன்.

ஃபோட்டோ எடுத்தால் என்ன எடுக்காவிட்டால் என்ன, சோறு முக்கியம் அமைச்சரே என்று சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு வழக்கம்போல் ஒரு குட்டித் தூக்கம் போட்டேன் ( சாப்பாட்டையும், தூக்கத்தையும் மட்டும் கரெக்டா பண்ணிருவான் போலிருக்கு என்று நீங்கள் நினைப்பது சரி ).  

நாலு மணிக்கு ஒரு காப்பியைக் குடித்து விட்டு, மாலை சஃபாரி கிளம்பினோம். நிறைய விலங்குகளையும்,  காட்சிகளையும் பார்த்தேனேயொழிய படம் எடுக்குமளவிற்கு லைட்டிங் பிரமாதமாய் இருக்கவில்லை. சில்யூட் எடுக்கும் நேரம் வரை சும்மா சுற்றிக் கொண்டிருந்தோம்.

சூரியன் மறையும் நேரத்தில் தூரத்தில் எங்கோ ஓரிடத்தில் கொஞ்சம் வெயிலடிப்பது போல் தெரிய, காரை வெறித்தனமாக ஓட்டி அந்த இடத்தை அடைவதற்கும் சூரியன் முற்றிலுமாய் மறைவதற்கும் சரியாக இருந்தது. ஆனால் அங்கே விலங்குகள் ஒன்றையும் காணோம். நான் நிறைய நேரங்களில் இப்படித்தான், சில்யூட் எடுக்கும் நேரங்களில் , ஒரு மேடான பகுதியையும், அங்கே ஏதேனும் விலங்குகளையும் தேடி நாய் பேயாக அலைந்திருக்கிறேன். அன்றும் அப்படித்தான்.

நல்வாய்ப்பாக, ஒரு மேடான பகுதியில் சில டோப்பி மான்களைக் கண்டதும் உற்சாகமாகி சகட்டு மேனிக்கு அடித்துத் தள்ளி விட்டு, Something is better than nothing என்று என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொண்டு, கிளம்பினேன்.

இப்படியாக இரண்டாவது நாளும் சுமாராக போனது. 100 கோடி, 200 கோடி என்று சம்பளம் வாங்கி விட்டு “ பணம் என்னங்க பணம் “ என்று விஜய்ணா சொல்வார்ல , அது போல, எத்தனையோ முறை மாரா போயாச்சு, ஒரு முறை சொதப்பினால் என்ன என்று எனக்கு நானே சத்தமாக சொல்லிக் கொண்டேன்.

தலைகுப்புற விழுந்தாலும் எங்களுக்கெல்லாம் மீசையில மண்ணே ஒட்டாது.

வெ.பாலமுரளி.