முள்றியின் டைரி – 93 ஆசிரியர் தின வாழ்த்துக்கள்….

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்….

தொடக்கப்பள்ளியில் தொடங்கி, மேல்நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என்று எனக்கு கற்பித்த எந்த ஆசிரியரையும் என்னால் மறக்க இயலாது ( அம்புட்டு அடி ). 

என்னுடைய கற்கும் பயணம் ( ஆரம்பிச்சுட்டான்யா ) , 1 ம் வகுப்பில் கோவிந்த் ஐயரிடம் இருந்து தொடங்கி லதா, தில்லை நடராஜன், கிறிஸ்டின், மாயழகு, பர்வதம், சாந்தாபாய், அருள்ராஜ், மைக்கேல்ராஜ் , அமல்ராஜ், ஜிபி.ஃபாதர் என்னும் இருதயராஜ், நடராஜன், கனேசன். தாமரைச் செல்வி, சேக்கிழார், பழனியப்பன், இளங்கோ, நிலவழகன்,கதிர்பாயேவ், ஷூல்த்ஸ், அலிகூலாவ், ஸ்மித்தான்கின் என்று மிகவும் நீண்டது. 

இந்தப் பெருந்தகைகளை ஆசிரியர் தினத்தன்று மட்டுமல்லாது, அவர்கள் கற்றுக் கொடுத்த பாடங்களை, நல்ல விழுமியங்களை  வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு தருணத்திலும் நினைவு கூர்ந்து மனதுக்குள்ளாகவே நன்றி சொல்லிக் கொள்வேன். 

நன்றி ஆசான்களே…

ஆனால், நம் வாழ்க்கையில் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி ஆசிரியர்கள்  மட்டும்தான் நமக்குக் கற்றுத் தருகிறார்களா ? யோசித்துப் பார்த்தால், அந்த ஆசிரியர்கள் மட்டுமன்றி , நல்லதும் கெட்டதுமாக நமக்கு எத்தனையோ பேர் தினம் தினம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் ( நாம்தான் எதுவுமே கற்றுக் கொள்வதில்லை. அது வேறு விஷயம்). 

உதாரணத்திற்கு, நான் இந்தியா வந்தவுடன் என்னுடைய வரலாறு மற்றும் தொல்லியல் தேடலை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஆபத்பாந்தவனாக திரு ராஜகுரு என் வாழ்க்கையில் வந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கன்னா பின்னாவென்று கற்றுக் கொடுத்து, ஓம் என்று பிள்ளையார் சுழி போட்டார். 

திடீரென பாறை ஓவியங்கள் மீது ஒரு ஈர்ப்பு வர, திரு. பாலா பாரதி அவர்கள் என் வாழ்வில் குறுக்கிட்டு என் கைகளை கெட்டியாக பிடித்துக் கொள் என்று இன்று வரை வழி காட்டி வருகிறார்.

பிராமணர்கள் மட்டும்தான் வந்தேறிகளா ? அப்படியென்றால் தமிழ் சமூகம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி ரொம்ப நாட்களாக என் மண்டையை குடைந்து கொண்டிருந்தது. உயர்திரு. தங்கவேலு அவர்கள் எழுதிய தமிழரைத் தேடி புத்தகத்தைப் படிக்கவும், ஓ…நாம் எல்லோருமே வந்தேறிகள்தான் போலிருக்கு என்ற ஒரு தெளிவு பிறந்தது. அதில் அவர் ஆதாரங்களுடன் கூறியிருக்கும் விஷயங்களைப் படித்து விட்டு, ஒரு நாள் இவரிடம் பேசி விட மாட்டோமா என ஏங்கிய நாட்கள் உண்டு. 

அப்படிப்பட்ட தங்கவேலு ஐயா அவர்களின் நட்பு கிடைத்ததும், நான் சிறுபிள்ளைத்தனமாக எழுதும் எழுத்துக்களைக் கூட படித்து விட்டு, அவராக என்னை அழைத்து விவாதிப்பதும் நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் ( நாம இந்த ஜென்மத்தில் செய்யும் புண்ணியம்தான் நமக்குத் தெரியுமே ). 

என் உடன்பிறவா சகோதரி டாக்டர். அகிலா. எங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய சுனாமி வந்தபோது, உடனே தானாக முன் வந்து தோளுக்கு தோள் கொடுத்து, உரிய ஆலோசனைகளை வழங்கி இன்றுவரை  எங்களுக்கு அரணாக நிற்கிறார்.  

இந்த ஆசான்களுக்கெல்லாம் நான் எப்படி நன்றி சொல்லி அன்னியமாக்க முடியும் ? 

நான் எப்போதும் “ நன்றி மறவாதவன்” என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஆசான்களே. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் அனைவரும் எனக்கு செய்ததை, இன்று வரை செய்து கொண்டிருப்பதை நான் மற்றவர்களுக்கும் செய்வேன் என்பதை மட்டும் உறுதியாக கூறிக் கொள்கிறேன்.

சரி….நல்ல மனிதர்களும், ஆசிரியர்களும் மட்டும்தான் நமக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்கின்றனரா ? 

தீய எண்ணம் கொண்ட “மேன் மக்கள்”, துரோகம் செய்யும் நண்பர்கள் என்று கிட்டத்தட்ட எல்லோருமே நமக்கு ஏதாவது ஒரு வகையில் தினம் தினம் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம்தான் அதைப் பாடங்களாக எடுத்துக் கொள்ளத் தவறி விடுகிறோம். 

நாம் எடுக்கும் சில (தவறான) முடிவுகளில் இருந்து நாம் ஏதேனும் கற்றுக் கொண்டால்  நமக்கு நாமேகூட ஆசான்கள்தான். 

எனவே , இந்த நன்னாளில் “அனைத்த்த்த்து “ ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

வெ. பாலமுரளி