முள்றியின் டைரி – 92 : மாராவில் ஒரு திக் திக் அனுபவம்….

மாராவில் ஒரு திக் திக் அனுபவம்….

ஒவ்வொரு முறை மாரா செல்லும் போதும் ஒரு புல்லரிக்கும் சம்பவம் நடக்கும். ஆனால், இந்த முறை ( ஜூன் 2025) பயத்தால் உடல் “ஃபுல்லா அரித்த” சம்பவம் நடந்தது ( ரைமிங் சரியாக செட் ஆகவில்லையோ ?).

பெரும்பாலான ஆப்பிரிக்க காடுகளில் ஒவ்வொரு சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும், சிவிங்கிப் புலிக்கும் ஒரு பெயர் வைத்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் நிறைய மெம்பர்கள் இருந்தால், அந்தப் பெயரிலேயே அந்தக் குடும்பத்தையும் அழைத்து விடுவார்கள். 

உதாரணத்திற்கு, மசை மாராவில் உயிர் வாழ்ந்த மலாய்க்கா என்ற பெண் சிவிங்கிப் புலியின் குடும்பத்திற்கு மலாய்க்கா ஃபேமிலி என்றும், கருப்புப் பாறைகள் சூழ்ந்த ஒரு இடத்தில் வாழும் சிங்கக் குடும்பத்திற்கு Black Rock Prideஎன்றும், Topi என்னும் ஒரு வகை மான்கள் கூட்டம் கூட்டமாய் திரியும் ஒரு இடத்தில் மையம் கொண்டிருக்கும் ஒரு பெரிய சிங்கக் குடும்பத்திற்கு Topi Pride என்றும், அண்டைய நாடான தான்சானியாவின் எல்லையில் திரியும் இரண்டு சிவிங்கிப் புலி சகோதரர்களுக்கு Tanzania Boys என்றும் பெயர். 

சில சமயம், யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி ஒதுங்கி திரியும் சிறுத்தைகளுக்கு அதை முதல் முதலில் பார்க்கும் சஃபாரி டிரைவர்களே ஒரு நாம கரணத்தை சூட்டி அதை பிரபலபடுத்தியும் விடுவார்கள். அப்படி புகழ்பெற்ற ஒரு சிறுத்தைதான் “லுலுக்கா”. அதற்கு அந்தப் பெயர் சூட்டியது சாமி என்னும் ஒரு டிரைவர்தான். 

இதுபோலத்தான் நஷிப்பாய், ரெக்கேரோ ப்ரைட், ஸ்கார் ஃபேஸ்,, கனாங்கா ப்ரைட், ம்வனிக்கொ, அமானி, ஃபிக் ட்ரீ என்று விதம் விதமான பெயர்களுடன் விலங்குகள் வலம் வரும். 

உள்ளே சுற்றிக் கொண்டே இருக்கும் சஃபாரி டிரைவர்கள், தாங்கள் பார்த்தவற்றை தங்கள் நண்பர்களுக்கும், மற்ற டிரைவர்களுக்கும் சொல்லி அவர்களை வரவழைப்பதற்கும், ஒருவேளை ஏதேனும் ஒரு விலங்கு அடிபட்டிருந்தாலோஅல்லது குட்டி போட்டிருந்தாலோ அல்லது  இறந்து விட்டிருந்தாலோ அதை ரேஞ்சர்களுக்கு தெரியப்படுத்தவும் இந்தப் பெயர்கள் பெரிதும் பயன்படும். 

அதிலும் குட்டி போட்டிருக்கும் செய்திகள் ரொம்பவே சென்சிட்டிவ். டூரிஸ்ட்டுகள் அந்த இடத்திற்குப் படையெடுப்பதற்கு முன்னர், ரேஞ்சர்ஸ் அங்கு போய், அந்த இடத்தை ப்ளாக் பண்ணி விடுவார்கள். ப்ளாக் பண்ணியதுடன் நின்று விடாமல் அந்தச் செய்தியை “ நஷிப்பாய் சிங்கிப் புலி மூன்று குட்டிகளை ஈன்றிருக்கிறது. எனவே, அந்த ஏரியா ஒரு மாதத்திற்கு மூடப்படுகிறது.யாருக்கும் அனுமதி கிடையாது “ என்று எல்லோருக்கும் பரப்பி விடுவார்கள். 

இது போல இந்தப் பெயர்கள் நிறைய நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதை வைத்து, நம் இந்தியாவிலிருந்து செல்லும் “சில” டூர் ஆப்பரேட்டர்கள் செய்யும் அலப்பறைகள்தான் கொஞ்சம் டூ மச்சாக இருக்கும்.

தாங்கள் கூட்டிச் செல்லும் கஸ்ட்டமர்களை இம்ப்ரஸ் பண்ண வேண்டும் என்பதற்காக, தங்கள் டிரைவர்களிடம் பேசும்போது மேற்சொன்ன பெயர்களை குறிப்பிட்டு சும்மா சும்மா ஏதேனும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். 

அந்த டிரைவர்களும் ஏதேனும் பேச வேண்டுமென்பதற்காக ஏதாவது கதையை அடித்து விடுவார்கள். குறிப்பாக நைரோபியிலிருந்து செல்லும் டிரைவர்கள்தான் அந்த வேலையை செய்வார்கள். மாராவில் இருக்கும் மசாய் டிரைவர்கள் அது போன்ற கதைகளை அடிப்பதில்லை. 

அதுபோல ஒரு டிரைவர்  ஒரு ஃபோட்டோகிராஃபரிடம் அடித்து விட்ட கதை, சம்பந்தமேயில்லாமல் என்னை ஒரு பெரிய வம்பில் மாட்டி விட்ட கதைதான் இந்த டைரி ( அப்பாடா …மேட்டருக்கு வந்துட்டான்). 

அந்த நபரின் பெயர் டாக்டர். கமலக்கண்ணன் என்று நினைக்கிறேன். கடந்த 6 வருடங்களாக, வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ ஐந்தாறு நாட்கள் மசை மாராவிற்கு செல்வாராம். அவருக்கு மாராவைப் பற்றியும் அங்குள்ள விலங்குகளைப் பற்றியும் எல்லாமே தெரியுமாம்.

அவர் சென்ற முறை பார்த்த ஒரு சிங்கக் குடும்பத்தை ( அதன் பெயரைக் குறிப்பிட்டு) இந்த முறை பார்க்கவில்லையாம். விசாரித்ததில் அந்த சிங்கக் குடும்பத்தை அங்குள்ள மசாய் மாடு மேய்ப்பவர்கள் கொன்று விட்டார்களாம் ( எதே….ஒட்டு மொத்தக் குடும்பத்தையுமா ? என்னங்கடா கதைனாலும் ஒரு நியாயம் வேணாமாடா ? ) . இதற்கு அங்குள்ள ரேஞ்சர்களும் உடந்தை என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மிக நீளமாக ஒரு பதிவு போட்டு, இந்த விஷயத்தை வெளி உலகிற்குக் கொண்டு வந்து சம்பந்தப்பட்டவர்களை கம்பி எண்ண வைக்க வேண்டும் என்று போட்டிருக்கிறார் ( வருடத்திற்கு ஒரு முறை 6 நாட்கள் போகும்போது இதை எல்லாம் பண்ணி விடுவாராம் ). காருண்ய கோஷ்டி ( நீயா நானாவில் இதை வைத்து ஒரு விவாதம் பண்ணலாம்).

இது அனைத்தும் நான் அங்கிருக்கும்போது நடந்தவை. அந்தப் பதிவை ஒரு ரேஞ்சர் பார்த்து விட்டார். அந்தக் கமலக் கண்ணன் என்பவர் இன்ஸ்டாவில் ஒரு புனைப் பெயரில் இருப்பதால் அவருடைய ஒரிஜினல் பெயரை அவர்களால் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனால், அவருடைய டி.பி.யில் அவர் ஒரு பெரிய கேமராவை வைத்துக் கொண்டு, காரின் உள்ளே தரையில் படுத்தவாறு இருப்பது போல ஒரு படத்தைப் போட்டுள்ளார். அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மாராவில் உள்ள அனைத்து கேட்களிலும் உள்ள அனைத்து ரேஞ்சர்களுக்கும் அனுப்பி, இவரை கண்டவுடன் பிடித்து விடவும் என்று மெசேஜூம் அனுப்பி விட்டார்கள். 

அது ஒரு வியாழக் கிழமை மாலைப் பொழுது. பொதுவாக ஆப்பிரிக்காவில் இதுதான் ட்ரெண்ட். சந்தேகப்படும் நபர்களை ஒரு வெள்ளிக் கிழமை மதியம் வாக்கில் அரெஸ்ட் பண்ணுவார்கள். மொபைல் ஃபோனையும் பறித்து வைத்துக் கொள்வார்கள். அப்பதான் , அந்த நபரால் கோர்ட்டிற்கு சென்று ஜாமின் எதுவும் வாங்க இயலாது. கிரிமினல் அல்லாத ஒரு நல்ல நபர் இரண்டு நாட்கள் அங்குள்ள லாக்கப்பிலோ, ஜெயிலிலோ கழிக்க நேர்ந்தால், வெளியில் வந்த மறு நாளே தற்கொலை செய்து கொள்வார். அங்கு நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கும். ஒரு பத்துக்கு பத்து அறையில் 20 அல்லது முப்பது நபர்களை காலில் ஒரு ஷூவுடன் மட்டும் அடைத்து விடுவார்கள். அதில் மொள்ளமாரி, முடிச்சவிக்கி, பிக்பாக்கெட் என்று சமூகத்தின் அனைத்து நல்லவர்களும் இருப்பார்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

மேற்சொன்ன மெசேஜ் கிட்டத்தட்ட மாராவில் உள்ள அனைத்து ரேஞ்சர்கள், செக்யூரிட்டி ஆஃபிஸர்ஸ்களுக்கும் போய் விட்டது. 

அதில் ஒரே ஒரு ரேஞ்சர் மட்டும் “ Yes…I have seen him very often & I think I know him and his driver” என்று அவர்கள் வாட்சப் க்ரூப்பில் பதில் அனுப்ப, ஒட்டு மொத்த மாராவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திருக்கிறது. உடனே ஸ்கெட்ச்சும் போட்டு விட்டார்கள். 

வழக்கமாக “ தாலெக் கேட்”டின் வழியாகத்தான் அவன் உள்ளே செல்வான். நாளை (வெள்ளிக் கிழமை) காலை , தாலெக்கில் வைத்துப் பிடித்து என்கொயரி என்று அருகில் உள்ள போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வோம், மதியம் இரண்டு மணிக்கு மேல் அரெஸ்ட் செய்து நரோக் என்னும் ஊரில் உள்ள லாக்கப்பில் அடைத்து வைத்து பாடம் கற்பிப்போம் என்று சபதம் எடுத்துக் கொண்டார்கள் போலிருக்கு. 

அந்த ரேஞ்சர் நாதாரி “ I know him”   என்று சொன்னது என்னையாம். நான் மாராவுக்குள்ளே ஒரு முறை என்னுடைய 500 மிமீ லென்ஸை வைத்து காரின் தரைப் பகுதியில் படுத்துக் கொண்டே படம் எடுப்பதை அந்த மூதேவி பார்த்ததாம் ( ஏண்டா..ஒரு பெரிய லென்ஸை வைத்து தரையில் படுத்துக் கொண்டே படம் எடுத்தது ஒரு குத்தமாடா ? ) 

அன்று (வியாழக் கிழமை) இரவே என்னுடைய டிரைவரை அழைத்து விசாரிக்க, அவன் பதறிப் போயிருக்கிறான். என்னுடைய க்ளையண்ட் இந்த நாட்டில் 25 வருடங்களுக்கும் மேலாக வசித்தவர், நீங்கள் சொல்லும் நபர் இவராக இருக்க வாய்ப்பில்லை என்று வாதிட, “ அதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். நீ அவரிடம் ஒன்றும் சொல்லாமல் நாளை காலையில் தாலெக் கேட்டிற்கு கூட்டி வந்து விட வேண்டும். இதில் ஏதாவது குளறுபடி நடந்தால், உன்மேல் ஆக்‌ஷன் எடுக்க வேண்டி வரும்” என்று எச்சரித்திருக்கிறார்கள். 

இது எதுவும் தெரியாமல், நான் வழக்கம்போல் ஒரு பார்லி ஜூஸை ( அதுதான்…அதேதான்) குடித்து விட்டு கேமரா மற்றும் லென்ஸை சுத்தப்படுத்தி விட்டு உறங்கச் சென்று விட்டேன்.

மறு நாள் ( வெள்ளிக் கிழமை) காலை எழுந்து காருக்குச் செல்ல என் டிரைவர் ஆல்ஃபிரெட் பயங்கர டென்ஷனோடு என் வரவிற்காகக் காத்திருந்தான். அவன் படபடப்புடன் விஷயத்தைச் சொல்லி முடிக்க எனக்கு அந்தக் குளிரிலும் வியர்க்கத் தொடங்கியது. 

இதற்குள் அவன் நண்பர்கள் மூலமாக அந்த டாக்டர் கண்ணனின் புகைப்படமும், அந்த ஆளின் இன்ஸ்டா பக்கமும் கிடைக்க என் குழப்பம் இன்னும் அதிகரித்தது. ஒரு சாயலுக்கு அந்த ஆள் என்னைப் போல இருந்தாலும், ஆப்பிரிக்கர்களுக்கு விளக்கும் அளவுக்கு வித்தியாசம் இல்லை. அந்த ஆளின் விவரங்களைத் தோண்ட அவரின் உண்மையான பெயர் கிடைத்தது. அது மட்டுமல்லாது, அந்த ஆளின் கேமரா நிக்கான் என்பது அவருடைய ஒரு படத்தில் மிகவும் தெளிவாக இருந்தது. என்னுடைய எல்லா கேமராக்களும் கெனான் என்பதால் எனக்கு அப்போதுதான் மெதுவாக மூச்சு வர ஆரம்பித்தது. 

சரி…கிளம்பலாம் என்று போருக்கு ஆயத்தமானோம்.  

தாலெக் கேட்டை அடைந்தோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். நகரம் என்னும் படத்தில் வடிவேலு தன்னுடைய நூறாவது திருட்டை நிகழ்த்த ஒரு வீட்டைத் திறக்க, அங்கு ஒரு போலிஸ் பட்டாளமே துப்பாக்கியை வைத்துக் கொண்டு காத்திருக்குமே, அதே காட்சி இங்கும்.

டேய் ..டேய்…. எனக்கெல்லாம் இந்த சீன் டூ மச்டா என்று என்னை நானே நொந்து கொண்டே என் காரை விட்டு இறங்க முயற்சித்தேன். அதற்குள் ஒரு சீனியர் ஆஃபிஸர் என்னைப் பார்த்து ஸ்ட்ரிக்ட் டோனில் “ டோண்ட் மூவ் ஔட் “ என்றார் அதிகாரத் தோரனையில். 

நான் அந்த இடத்திற்கு வரும் முன்னரே, வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி, அந்தக் கமலக் கண்ணனின் உண்மையான பெயர் விவரங்கள், இன்ஸ்டா ப்ரொஃபைல், ஃபேஸ் புக் ப்ரொஃபைல், அந்த ஆளின் நிக்கான் கேமரா லென்ஸ் டீட்டெயில்ஸ் என அனைத்து டேட்டாவையும் கலெக்ட் பண்ணி ஸ்க்ரீன் ஷாட்ஸ் எடுத்து வைத்துக் கொண்டேன். 

அந்த ஆஃபிஸர் என் பாஸ்போர்ட்டை மட்டும் கேட்க, நான் என் பாஸ்போர்ட்டுடன் என் கென்யா நேஷனல் ஐ.டி, நான் வேலை பார்த்த கம்பெனியின் பிஸினஸ் கார்ட் என்று அவர்கள் கேட்காதவற்றையும் கொடுத்து விட்டு நான் சேகரித்த மேற்படியானின் அனைத்து தகவல்களையும் கொடுத்தேன். 

இதற்கிடையில் அங்கிருந்த ஒட்டு மொத்த ரேஞ்சர் பட்டாளமும் எங்கள் காரை சுற்றி வளைத்துக் கொண்டனர். எனக்கு இரண்டு முறை துருக்கியில் நடந்த சம்பவங்கள் ஏனோ நினைவிற்கு வந்து ஒரு கலவரத்தை உண்டு பண்ணின. 

நான் கொடுத்த அனைத்து ஆவணங்களையும் பொறுமையாக ஆராய்ந்த அந்த “ஆப்பிசர்” அந்த நிக்கான் கேமராவைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து விட்டார் ( என்னை கையும் களவுமாக பிடித்து விட்டாராம் ). “எங்கே உன் கேமராவை காண்பி” என்றார். நான் என்னுடைய கெனான் கேமரா மற்றும் லென்ஸ்களை காண்பிக்க, அவர் குழம்பி விட்டார். 

என்னை காரில் இருக்கச் சொல்லி விட்டு, அந்த ஒட்டு மொத்த பட்டாளமும் அவர்கள் அறைக்குள் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் “ ச்சே..வடை போச்சே” என்ற பாவனையுடன் அந்த ஆஃபிசர் மட்டும் திரும்பி வந்து தன்னுடைய இரண்டு கைகளாலும் தான் வாங்கி சென்ற அனைத்து ஆவனங்களையும் என்னிடம் திரும்பிக் கொடுத்தார் ( ஆப்பிரிக்கர்கள் இப்படித்தான், தாங்கள் ஒருவருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்றாலோ அல்லது மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நினைத்தாலோ, தங்கள் இரண்டு கைகளாலும் அந்தப் பொருளைக் கொடுப்பார்கள்). 

அத்துடன் தன் முதுகை முழுவதுமாக வளைத்து Please accept my apology சொல்லி விட்டு என்னை பார்க்குக்கு உள்ளே செல்ல அனுமதித்தார். 

ஆக மொத்தம், நான் செய்த புண்ணியமோ ( ம்க்கும் ) , என் முன்னோர் செய்த புண்ணியமோ என்னைக் காப்பாற்றவில்லை.

நான் பயன்படுத்தும் கெனான் கேமராதான் என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றியது. 

வெ.பாலமுரளி

பி.கு: கென்யா செல்லும் நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். தங்கள் டிரைவர் சொல்லும் அனைத்து விஷயங்களையும் உண்மையென்று நம்பி சோஷியல் மீடியாவில் எதையாவது எழுதாதீர்கள். அதை கென்யர்கள் ரசிப்பதில்லை.