முள்றியின் டைரி – 91:  ரகு தாத்தா

ரகு தாத்தா

நான் அப்போது தேவகோட்டையில் நாலாப்பு படித்துக் கொண்டிருந்தேன். 

நான் படித்த அந்தப் பள்ளியின் பெயர் 16 வது வார்டு நடு நிலைப் பள்ளி. ஆனால் தேவகோட்டையில் எல்லோரும் அதை  குட்டக்கரை என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். காரணம், தொடக்க காலத்தில் அந்தப் பள்ளி ஒரு கூரைக் கொட்டகையில்தான் நடந்தது. ஒரு சின்ன மழை வந்தால் கூட தண்ணீர் தேங்கி ஒரு குட்டை போல் ஆகி விடும். 

ஆனால் நான் ரெண்டாப்பு படிக்கும்போதே பள்ளிக் கூடத்தை ஒரு செங்கல் கட்டிடத்திற்கு மாற்றி விட்டார்கள். ஆனாலும், ஏனோ “குட்டக்கரை” என்ற பெயர் மட்டும் மாறாமல் நிலைத்து விட்டது. 

நிற்க. இந்த டைரி குட்டக்கரையைப் பற்றியதல்ல. ஹிந்தி மீது எனக்கு ஏற்பட்ட தீராத காதலின் பயணத்தைப் பற்றியது (ம்க்கும்…). 

அப்போது எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் வக்கீல் கோவிந்தையர் என்பவர் வசித்து வந்தார். அவரின் பேரன்கள் என்னுடைய விளையாட்டு தோழன்கள். ஶ்ரீதர், ஶ்ரீகாந்த். அவர்கள் இருவரும் ஒரு ஆங்கில மீடியா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு குட்டக்கரை என்றால் ரொம்பவே ஒரு இளக்காரம். 

அந்தக் காலத்தில் ஹிந்தி பிரச்சார சபா, மாண்டிசோரி என்னும் பள்ளியில் ஹிந்தி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தது. மாதம் 3 ரூபாய் கட்டணம். ஶ்ரீதரும், ஶ்ரீகாந்தும் அந்த வகுப்பிலும் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். 

மாலையில் விளையாடும்போது அவர்கள் என்னை வெறுப்பேற்றுவது போல ஹிந்தியில் ஏதாவது சொல்வார்கள். நானும் வீரபாண்டிய கட்டபொம்மன் போல பொங்கி விடுவேன். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 

கொஞ்ச நாட்கள் அவர்களை என்னால் டீல் செய்யவே முடியவில்லை. ரொம்ப யோசித்து நானும் அவர்களைப் போல் ஹிந்தி க்ளாசில் சேர்ந்து விடுவது என்று முடிவு செய்தேன். ஆனால், எப்படி சேர்வது என்பதை அவர்கள் எனக்கு சொல்ல மறுத்து விட்டார்கள். நானும் விடாமல் ஒரு நாள் அவர்கள் பின்னாலேயே போய் அந்த இடத்தையும் , அந்த ஆசிரியரையும் கண்டு பிடித்து விட்டேன் ( அறிவுப் பசி…அறிவுப் பசி). 

அந்த ஆசிரியர் என்னை மேலும் கீழுமாக என்னைப் பார்த்து விட்டு, சந்தேகமாக “நீ (யெல்லாம்) ஹிந்தி படித்து விடுவாயா ?” என்றார் ( எனக்கே அந்த சந்தேகம் இருந்தது). கண்டிப்பாக சார் என்றேன். சரி அடுத்த வாரத்தில் இருந்து வா என்று அனுமதித்தார். மறக்காமல் 3 ரூபாயும் கொண்டு வந்து விடு என்று காரியத்தில் கண்ணாய் ஞாபகப்படுத்தினார். அப்போதுதான் எனக்கு அவ்வ்வ்வ்வளவு பெரிய தொகையை என் அப்பாவிடம் எப்படி கேட்பது என்ற பயம் வயிற்றில் இம்லியை கரைத்தது ( ஹிந்தியில் இம்லி என்றால் புளி….ஹி…ஹி…ஹி..ஹிந்தி ஹிந்தி ).  

வழக்கம்போல் வீட்டில் போய் தரையில் உருண்டு பிரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஹிந்தி க்ளாசில் சேர அனுமதியும், 3 ரூபாயும் வாங்கி விட்டேன். அப்போதே என் அப்பாவின் முகத்தில் ஒரு கவலை ரேகை ஓடியது ( இவனை நம்பி இவ்வ்வ்வ்வளவு பெரிய தொகையை இன்வெஸ்ட் பண்ணுகிறோமே என்று நினைத்திருக்கக் கூடும்). 

ஜோராக ஹிந்தி க்ளாஸ் தொடங்கியது. ஏ க்யா ஹை, ஏ தவாத் ஹை, மேஜ் பர் க்யா ஹை, ஏ லடுக்கா ஹை, ஏ லடுக்கி ஹை என்று பட்டையை கிளப்பத் தொடங்கினேன். 

பத்தாக்குறைக்கு வீட்டிலும் “மன் கி பாத்” மாதிரி ஒரே ஹிந்தி “பாத்” தான். “ஏ சப்ஜி அச்சா நஹி ஹை”, “சப்பாத்தி கஹாங் ஹை ?” என்றெல்லாம் பேசத் தொடங்க, என் அம்மா நிஜமாகவே பயந்து விட்டார். ஒரு வேளை இவனை ஏர்வாடி தர்ஹாவிற்கு கூட்டிப் போக நேர்ந்து விடுமோ என்றுகூட  யோசிக்கத் தொடங்கி விட்டார் ( சேது படத்தில் விக்ரமை கட்டி வைத்திருக்கும் இடம்தான் ஏர்வாடி தர்ஹா). 

நான் ரொம்பவே  உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். என்னுடைய வேகத்தைப் பார்த்து என் அப்பாவும் பயந்து விட்டார். அந்த வருடம் நடக்கப் போகும் ஐ.ஏ.எஸ் தேர்வில் இவன் கண்டிப்பாக ஃபெயிலாகி விடுவானோ என்பது போல, இவன் படிப்பை விட்டு விட்டு ஹிந்தி ஹிந்தி என்று அலைகிறானே என்று கவலைப்படத் தொடங்கி விட்டார். 

இம்புட்டுக்கும் நான் நாலாப்பு, அஞ்சாப்புலேயெல்லாம் க்ளாஸ் ஃபர்ஸ்ட். ஹிந்தி வந்ததால் அந்த இண்டர்னேஷனல் ஸ்கூலில் ( ம்க்கும்), என்னுடைய ரேங்க் குறைந்து விடும் என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் கொஞ்சம் கூட மசியாமல் சாரி..கொஞ்சம் கூட மதிக்காமல் என்னுடைய ஹிந்திப் பயணத்தை இரண்டே மாத்தில் முடித்து விட்டார். நான் ரொம்பவே சேடாகி விட்டேன். 

இருந்தாலும் என் ஹிந்தி தாகம் மட்டும் அடங்கவேயில்லை. ரஷ்யா போனவுடன், அந்த எரிமலை மறுபடியும் குமுற ஆரம்பித்தது. கூட படித்தவர்களில் நிறைய பேர் வடக்கன்ஸ். என்னுடன் வந்த தமிழ்ப் பசங்களில் நிறைய பேருக்கு ஹிந்தி தெரிந்திருந்தது. ஆனால், அவர்கள், நாலாப்பில் நான் பார்த்த ஶ்ரீதர், ஶ்ரீகாந்த் போலவே ரொம்பவே அலட்டினார்கள். 

அப்போது உ.பி. யைச் சேர்ந்த ( உத்தர பிரதேசுங்க…உடன் பிறப்பு அல்ல) அஜய் என்பவன் ஆபத்பாந்தவனாக எனக்கு ஹிந்தி சொல்லிக் கொடுக்க முன் வந்தான். அதைப் பார்த்து மற்ற வடக்கன்ஸூம், என்னுடன் இருந்த ஹிந்தி தெரிந்த தமிழ் நண்பர்களும் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். அதன் அர்த்தம் அப்போது எனக்கு விளங்கவில்லை. ஆனால், ஒரு வாரத்திலேயே அதன் அர்த்தம் எனக்குப் புரிந்து விட்டது. 

ஒரு நாள், “ ஹிந்தி மே தீன் “ச” ஹை” என்றான். “ஓ க்யா ஹை?” என்றேன். 

“ச….ச….ச….” என்றான். சத்தியமாக எனக்கு அந்த மூன்று “ச” வுக்கும் உள்ள வித்தியாசம் புரியவில்லை. திரும்பச் சொல் என்றேன். திரும்பவும் அவன் “ ச…ச…ச “ என்றான். என்னடா வித்தியாசம் என்றேன். உடனே அவன் எரிச்சல் பட்டு அதே “ச..ச..ச “ வை கொஞ்சம் சத்தம் போட்டு சொல்ல, எனக்கு மண்டை காய்ந்து விட்டது. திரும்பவும் புரியவில்லை என்று சொல்ல “ இந்த மதராசிக்கு ஹிந்தி எப்போதும் மண்டையில் ஏறாது “ என்று சத்தம் போட்டு திட்டி விட்டு போய் விட்டான் ( தீர்க்கதரிசி). 

அப்புறம்தான் அவனுடைய ஹிந்தி லட்சணத்தை மற்றவர்கள் எனக்கு விளக்கினார்கள். ஃப, ஹ, ஷ, ஸ போன்ற எந்தவொரு எழுத்தும் ராசாவுக்கு நாக்குல வராதாம் ( பைவ் ருப்பி, ஜங்ஜன், எக்ஜாம்….).

நான் திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல் உணர்ந்தேன். அப்போது பனிக்ராஹி என்னும்  ஒடிசா கிராக்கி ஒருவன் உனக்கு நான் கற்றுத் தருகிறேன் என்று வந்தான். ஒரு படத்துல சங்கிலி முருகன் வடிவேலுவை பஞ்சாயத்துல வைத்து விசாரணை செய்வார். அப்போது நொடிக்கொரு தடவை “ நான் சரியாகத்தான் பேசுகிறேனா” என மற்றவர்களை கேட்டுக் கொண்டே இருப்பார். அதுபோல் பனிக்ராஹி மற்ற வடக்கன்ஸிடம் நான் சரியாகத்தான் சொல்லிக் கொடுக்கிறேனா என்று அடிக்கடி கன்ஃபர்ம் பண்ணிக் கொண்டே இருந்தான். அப்போதுதான் தெரிந்தது,தலைவனும் அப்போதுதான் ஹிந்தி கற்றுக் கொள்கிறான் என்று. அவனுக்கு உ.பி. அஜய்யே தேவலை என்பது புரிந்தது

இவனிடம் இன்னும் கொஞ்ச நாள் படித்தால், நான் நாலாப்புல படித்த ஹிந்தியும் மறந்து விடும் என்பதால், அவனுக்கு நானே நோ சொல்லி விட்டேன். 

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் ரஷ்ய மொழியில் நன்றாகவே பேசத் தொடங்கி விட்டதால், எனக்கு ஹிந்தி யின் அவசியம் தேவைப்படவில்லை. 

ரஷ்யாவில் படிப்பு முடிந்து இந்தியா வந்ததும், பாம்பேயில் சில மாதங்கள் வேலை செய்ய நேர்ந்தது. 

பாம்பே வந்து சில நாட்களிலேயே யாருமே சொல்லிக் கொடுக்காமல், ஓரளவு சரளமாகவே ஹிந்தியில் பேசத் தொடங்கி விட்டேன்.

அப்போதெல்லாம் வேலை விஷயமாக தமிழ் மக்கள் வசிக்கும் தாராவி, மாட்டுங்கா, செம்பூர் போன்ற ஏரியாக்களுக்கு அடிக்கடி செல்ல நேரிடும்.

அங்குள்ள தமிழ் மக்கள் யாரும் பெரிய அளவில் படித்திருக்க மாட்டார்கள். அதிகபட்சம் 10 வதுதான் படித்திருப்பார்கள். ஆனால், ஹிந்தி மட்டுமல்லாது மராட்டியிலும் பொளந்து கட்டுவார்கள். 

அதனால் மும்மொழிக் கொள்கை, ஏழை மாணவர்களுக்கு ஹிந்தி படிக்க வாய்ப்பில்லை என்பதெல்லாம் ஏமாற்று வேலை. தமிழை அழித்து ஹிந்தியை திணிக்க மட்டுமே இந்த புண்ணாக்கு கொள்கை உதவும். 

பள்ளியில் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக படிப்பவர்களில் எத்தனை பேரால் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடிகிறது ?  இரண்டாவது மொழியை விடுங்கள். முதலாவது மொழியாக தமிழை எடுத்துப் படிப்பவர்களில் எத்தனை பேர் எழுத்துப் பிழையோ, இலக்கணப் பிழையோ இல்லாமல் தமிழில் எழுதுகிறார்கள் ? 

ஆனால்  அவர்களே, தேவை என்று வரும்போது ஆங்கிலத்திலும், தமிழிலும் பட்டையை கிளப்புவார்கள்.

மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி இருக்கும் கடைக்காரர்கள், ரிக்‌ஷாக்காரர்கள், பிச்சைக்காரர்கள் என்று கிட்டத்தட்ட அனைவருமே ஆங்கிலம், ஹிந்தி , தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிப் புலமையில் புகுந்து விளையாடுவார்கள். அவர்களுக்கு எந்த மும்மொழிக் கொள்கை தெரியும் ? 

இன்று உலகத்தை கட்டி ஆண்டு கொண்டிருக்கும் கூகுளையே கட்டி ஆளும் சுந்தர் பிச்சை தனக்கு ஹிந்தி தெரியாது என்றுதான் சொல்கிறார். அவருக்கு மேலேயா நாமெல்லாம் அச்சீவ் பண்ணப் போகிறோம். 

எனவே, மொழியை வைத்து அரசியல் செய்யாமல், ஒழுங்கா புள்ளை , குட்டியை படிக்க வைக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. 

வெ.பாலமுரளி