முள்றியின் டைரி – 94. மாரா ஒரு மந்திரலோகம் – 20 

முள்றியின் டைரி – 94

மாரா ஒரு மந்திரலோகம் – 20 

கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற பழமொழி போல்தான் என்னுடைய கடந்த (ஜூன் 2025) மாரா ட்ரிப்பும் அமைந்து விட்டது.

இந்த முறை 6 இரவுகள் மாராவில் தங்கியிருந்தேன். 6 நாட்களும் , மழையும், மப்பும், மந்தாரமுமாகவே இருந்தது. லைட்டிங் படு மோசம். அவ்வப்போது லேசாக வெளிச்சம் வந்து படம் காட்டி விட்டு உடனே மறைந்து போகும். ஆனால், கன்னா பின்னாவென்று சைட்டிங்ஸ். பத்துக்கும் மேற்பட்ட ஹண்ட்டிங், மேட்டிங் , சேஸிங் என்று அமர்க்களமான ட்ரிப்  ( அது சரி….இந்த “கல்லைக் கண்டால் நாயைக் காணோம்..” பழமொழியின் உண்மை அர்த்தம் தெரியுமா ? பிறிதொரு சமயம் எழுதுகிறேன்). 

என்னுடைய இந்த 30 வருட கானக அனுபவத்தில், நான் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம், “ நினைத்தது கிடைக்காவிட்டால், கிடைத்ததை எடுக்க வேண்டும்” என்பதுதான். 

அதன்படி, இந்தப் பயணத்தில், சில காட்சிகள் தவிர கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே லோ லைட்டிங் கண்டிஷன்ஸில் எடுத்தவைதான் (படம் அனைத்தும் கேவலமா இருக்குன்னு சொல்லாம, என்ன மாதிரி கம்பி கட்ற கதையெல்லாம் விடுறான் பாருங்க) .

நான் நினைத்தபடி அவை வராவிட்டாலும் கூட, இதை இதையெல்லாம் பார்த்தோம் என்று பின்னாளில் ஞாபகப்படுத்தி மகிழ்ச்சி கொள்ள உதவியாக இருக்கும்( ம்க்கும்….அப்படித்தான் சொல்லிக் கொள்ள வேண்டும்). 

நாள் 1 : 

வழக்கம் போல் மதியம் 1 மணி வாக்கில் சென்றடைந்தேன். நண்பர் மகேஷ் சுப்பிரமணியன் உதவியால் இந்த முறை முதல் தடவையாக மாராவுக்கு வெளியில் உள்ள மாரா டூமா என்னும் டெண்டெட் விடுதியில் தங்கினேன். தாலெக் கேட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் உள்ளது மாரா டூமா. அருமையான அனுபவம். நான் வெஜ் செய்ய ஆப்பிரிக்கர்களும், வெஜ் செய்ய ஒரு குஜராத் பெண்மணியும் உள்ளனர். சாப்பாடு பட்டையை கிளப்பி விட்டனர். சர்வீஸ் லெவல் அற்புதம். நன்றி மகேஷ்.

சாப்பிட்டு விட்டு ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று டெண்ட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே மழை தூறத் தொடங்கி விட்டது.

முதல் சஃபாரியிலேயே மழையா என்று கொஞ்சம் சோர்ந்து விட்டதென்னவோ உண்மை. இருந்தாலும், மனம் தளராத விக்கிரமாதித்யன் போல, ஒரு டீயை பருகி விட்டு என்னுடைய கேமரா பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். 

இந்த முறை என்னுடைய டிரைவர் ஆல்ஃபிரெட் என்னும் ஒரு இளைஞன். முதல் முறை என்னுடன் வருவதால் எனக்கு என்ன வேண்டும், எப்படி வேண்டும் என்பதை விளக்கினேன். மேலே இருந்து கவனித்துக் கொண்டிருந்த மீனாட்சி குண்டம்மாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை. ப்ளான் போடுறியா ப்ளான்…போடு ராசா போடு. நான் உனக்கு ஒரு ப்ளான் வைத்திருக்கிறேன் என்று அவள் முணு முணுத்திருக்க வேண்டும்.

நான் ரொம்பவே பாசிட்டிவ் கேரக்டர். எப்போது ஒரு பிரச்சினை என்றாலும், “ இதுவும் கடந்து போகும்” என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லி என்னைத் தேற்றிக் கொள்வேன்.

அன்றும் அப்படித்தான். “ இதுவும் கடந்து போகும்” என்று சொல்லிக் கொண்டேன். ஆனால், அங்கிருக்கும் 6 நாட்களும் அப்படித்தான் கடக்கப் போகிறது என்பதை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. 

நான் செல்வதற்கு ஒரு வாரம் முன்பும் அங்கு நல்ல மழை பெய்திருக்கிறது. அங்கு உள்ளே இருக்கும் சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மிகவும் ஏமாற்றத்தை தருவதாக இருந்தன. பற்றாக்குறைக்கு நான் உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே நல்ல மழை பிடித்துக் கொண்டது. நம்ம வடிவேலு பாஷையில் சொல்வதானால் “ நான் சொங்கிப் போன மங்கியாகி விட்டேன்”. 

நான் ரொம்ப டல்லாகி விட்டதை கவனித்த ஆல்ஃபிரெட், அதோ பாரு சிங்கம், அங்கே பாரு யானை என்று ஏதேதோ காண்பித்து உற்சாகமூட்ட முயற்சித்துக் கொண்டிருந்தான். 

நான் பையிலிருந்து கேமராவை வெளியில் எடுக்க மனமேயில்லாமல், ஊம் கொட்டிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் மழை விட, ஒரு யானை குடும்பம் எங்கள் வாகனத்தை சுற்றிக் கொண்டு எங்களுக்கு போஸ் கொடுக்கத் தொடங்கின. 

அதிலும் ஒரு குட்டி, இரண்டு வயது இருக்கும், தன்னுடைய இரண்டு காதுகளையும் விரித்து வைத்துக் கொண்டு எனக்கு மிகவும் அருகில் வந்து என்னை பயமுறுத்தியது கொள்ளை அழகு. என்னுடைய மொபைல் ஃபோனில் சில வீடியோக்களும், சில படங்களும் எடுத்து விட்டு, கார் இன்ஜினை அணைத்து விட்டு அங்கேயே இருந்து அவை செய்யும் அட்டூழியங்களை ரசிக்க ஆரம்பித்தேன். 

மறுபடியும் மழை தொடங்க, வானமும் நன்றாக இருட்டத் தொடங்கியது. சரி, மழை பெரிதாக ஆரம்பிப்பதற்குள் ஹோட்டலுக்கு சென்று விடலாம் என்று கிளம்பினோம். 

மழை தூறலாகவும் இல்லாமல், அடித்தும் பெய்யாமல் ஒரு மாதிரி நச நசவென்று பெய்து கொண்டிருக்க, மிகவும் குறைவான வெளிச்சத்தில்தான் தூரத்தில் அந்தக் காட்சியைப் பார்த்தோம். 

ஒரு சிவிங்கிப் புலி ( சீட்டா ),   தாம்சன் கெஸல் ஒன்றை விரட்டிக் கொண்டிருந்தது. 30 வினாடிக்குள்ளாகவே, அதைப் பிடித்தும் விட்டது. அந்த சேஸிங்கை அந்த இடத்தை நோக்கி காரில் சென்று கொண்டே பார்த்தோம். 

நாங்கள் அந்த இடத்தை சென்றடையும்போது, சிவிங்கிப் புலி தாம்சன் கெஸலின் குரல்வளையைக் கவ்வியிருந்தது – ஆனால் தரையோடு தரையாக படுத்திருந்ததால், என்னால் படம் ஒன்றும் எடுக்க இயலவில்லை. அந்த மங்கிய வெளிச்சத்தில் எடுத்திருந்தாலும் நன்றாக வந்திருக்காது. 

அந்த கெஸல் தன் இன்னுயிரை விடுவதற்கும், அங்கு ஒரு கழுதைப் புலி வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. உடனே, அந்தச் சிவிங்கிப் புலி எழுந்து லேசாக உறுமி அந்தக் கழுதைப் புலியைப் பயமுறுத்த முயற்சித்தது. ஆனால், அது அந்த உறுமலை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவேயில்லை. அது பாட்டுக்கு, அந்த கெஸலை குதறுவதிலேயே குறியாக இருக்க, வழக்கம் போல்,” ஆஹா…வடை போச்சே “ என்ற பீலிங்குடன் அந்த சிவிங்கிப் புலி சோகமாக அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தது. 

Noise  வந்தாலும் பரவாயில்லை என்று தட தடவென்று க்ளிக்கித் தள்ளி விட்டேன் (குறைவான வெளிச்சத்தில் எடுக்கும்போது படத்தில் கன்னாபின்னாவென்று தோன்றும் புள்ளிகளுக்கு Noise என்று பெயர்). 

இதற்கிடையில் ஒரு குள்ள நரியும் ( Silver Backed Jackel ) இரையை பங்கு போட அங்கு வந்து சேர, கழுதைப் புலி அதையும் விரட்டி அடிக்க முயற்சிக்க, அந்த நரியும் விடாமல் சுற்றி சுற்றி வர, அந்தக் காட்சியை சிறிது தூரத்தில் சிவிங்கிப் புலி படுத்துக் கொண்டே மிகவும் சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. நேஷனல் ஜியாக்ரஃபி டாக்குமெண்ட்ரி ஒன்று என் கண் முன்னே நடந்து கொண்டிருந்தது. 

அந்த இடம் முற்றிலுமாக இருட்டும் வரை இருந்து விட்டு, அந்தச் சிவிங்கிப் புலி போலவே சோகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். கிளம்பும் நேரம், சில வினாடிகள் மட்டும் ஒரு மஞ்சள் வெளிச்சம் தோன்றி மறைந்தது. அந்தக் குறைவான நேரத்தில் அந்தக் கழுதைப் புலியின் உடலைச் சுற்றி ஒரு ரிம் லைட் தோன்றி மறைந்தது. கண்ணிமைக்கும் நேரத்துல அதை எடுத்துட்டோம்ல. 

அடுத்தடுத்து வரும் நாட்கள் மழை இல்லாமல் நன்றாக வெயில் அடித்து, எனக்கு நல்ல நல்ல படங்கள் கிடைக்கப் போகிறது என்று எனக்கு நானே பாசிட்டிவ் வைபை ஏற்படுத்திக் கொண்டேன். 

அப்போது மீனாட்சி குந்தாணி வாய் விட்டு சிரித்தது, வண்டி சத்தத்தில் எனக்கு சுத்தமாக கேட்கவில்லை. 

வெ.பாலமுரளி