முள்றியின் டைரி : 81 – மாரா ஒரு மந்திரலோகம் – 12

அந்த ( நவம்பர் 2021) ட்ரிப்பில் மாராவில் கடைசி நாள்.

கடந்த 3 நாட்களில் மூன்று சேஸிங், அழகான லட்டு (சிங்கக்) குட்டிகளின் விளையாட்டு, நிறைய சில்யூட் என்று மனதிற்கு திருப்தியாக நிறைய பார்த்து ரசித்து விட்டதால், இன்று சும்மா ரவுண்ட் அடிக்கலாம் என்று அதிகாலையில் கிளம்பி விட்டோம். 

யாரிடமும் ரேடியோவில் எதுவும் கேட்க வேண்டாம். சும்மா சுற்றுவோம். சுவாரஸ்யமாக ஏதாவது பார்த்தால் எடுப்போம்,இல்லையா, ஒரு 10 மணி வாக்கில் விடுதிக்கு திரும்பி விடுவோம் என்று ஜாக்கிடம் தெளிவாக சொல்லி விட்டேன். 

அவனும் சரி என்று சொல்ல, ஜாலியாகக் கிளம்பினோம்.

பொதுவாக மாலை நேரத்தில் கிடைக்கும் சில்யூட் அன்று அதிகாலையிலேயே, அதுவும் நாங்கள் தேடாமலேயே கிடைத்தது.

சூரியனின் எழுச்சிக்கு முன்னர் உதவியாளர் பறவை என்னும் Secretary Bird   அழகாக பறந்து வந்து ஒரு சிறிய மரத்தின் உச்சியில் உட்கார, நல்ல சில்யூட் ஒன்று கிடைத்தது (“உதவியாளர் பறவை” என்று சும்மா நானே அடிச்சு விட்டேன். இதன் உண்மையான தமிழ்ப் பெயர் தெரியாது.ஹி…ஹி…ஹி…).

எனக்கு காலையில் முதலில் நல்ல ஒரு சைட்டிங் கிடைத்தால், அன்று முழுவதும் நன்றாயிருக்கும் என்பது போன்ற 

சென்டிமெண்ட்ஸெல்லாம் கிடையாது. ஆனாலும், அன்று அப்படி ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியதை என்னால் தவிர்க்க முடியவில்லை. 

அந்த செக்ரட்டரி பறவையை சில படங்கள் எடுத்து விட்டு, சித்தன் போக்கு சிவன் போக்கு என்று “டயர்” போன போக்கில் சுற்ற ஆரம்பித்தோம்.

கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். அழகான இளவெயில் வெளிச்சத்தில் ஃபிக் ட்ரீ என்றழைக்கப்படும் சிங்கக் குடும்பத்தைப் பார்த்தோம். 

அதில் சில பெண் சிங்கங்கள் நடந்து போவதை சில வைட் ஆங்கிள் ஷாட்ஸ் எடுத்து விட்டு, அங்கும் இங்கும் எங்கள் பார்வையை அலைய விட்டோம். 

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மட்டும் தனியே ஒதுங்கியிருந்தார்கள்.

என்ன காரணமோ தெரியவில்லை. அந்த ஆண், “காதலில்” அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் அந்தப் பெண் சிங்கம் விடுவதாக இல்லை. “சுத்தி சுத்தி வந்தீக, சுட்டு விரலால் சுட்டீகன்னு” சுற்றிச் சுற்றி வருவதும், ஆண் சிங்கத்தின் விரையை கவ்வி இழுப்பதுமாக என்னென்னவோ செய்து பார்த்தது. ஆனாலும், நம்ம ஆளு கொஞ்சம் கூட மசியவில்லை. “சாரி” என்று சொல்லி விட்டார் ( ஒரு வேளை “பாய்ஸை” மட்டுமே பிடிக்கும் “அவனா இவன்” என்றும் தெரியவில்லை). அந்த ஒன் சைட் ரொமான்ஸை நிறைய ஃபோட்டோக்கள் எடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம். 

கோல்டன் வெளிச்சத்தில் Tawney Eagle    என்னும் பறவை ஒரு மரத்தில் உட்கார்ந்திருக்க, அதையும் ஒரு க்ளிக் க்ளிக்கி விட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

“நம்ம ஓவியா” சொல்வது போல, லேசா பசிக்குற மாதிரி இருக்க, வண்டியை ஓரம் கட்டி விட்டு ஒரு மரத்தடியில் வைத்து காலை சிற்றுண்டியை ஒரு பிடி பிடித்தோம். பேருதான், சிற்றுண்டி. ஆனால், பிரெட், ஆம்லெட், சாஸேஜ், ஜூஸ்,பேக்கன், பழ வகைகள், யோகர்ட், ப்ளாக் காஃபி என்று பேருண்டியாக இருந்தது அந்தக் காலை உணவு. மாராவில், விலங்குகளைப் பார்ப்பதை விடவும், ஃபோட்டோக்கள் எடுப்பதை விடவும், ஓப்பன் ஏரியாவில் வைத்து  இது போல சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுவது பேரானந்தம் ( பின்ன…..? பசிக்கும்ல. ஹி…ஹி…ஹி… ).

அந்த இடத்தை சுத்தப்படுத்தி விட்டு, வெயில் தலைக்கு ஏறுமுன்னர் வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று சுற்ற ஆரம்பித்தோம். 

அன்று அதிர்ஷ்ட தேவதை எங்கள் பக்கம் இருந்தாள். “கிஸாரு” என்னும் சிவிங்கிப் புலி (சீட்டா), தன்னுடைய இரண்டு குட்டிகளுடன், ஒரு மண் மேட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க, தலைவன் குஷியாகி விட்டான். 

பொதுவாக, அனைத்து கானுயிர் புகைப்படக் கலைஞர்களுக்கும் சிவிங்கிப்புலி, மண் மேட்டில் உட்காருவதும்,நிற்பதும் ட்ரீம் பொசிஷன். ஷூட்டித் தள்ளி விடுவோம். அன்றும் அப்படித்தான். என்னுடைய 1DX கேமரா  பாலா, போதும்…ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சும் வரை அடித்துப் பொலித்துத் தள்ளி விட்டேன். 

அதிலும் அந்தக் குட்டிகள் இரண்டும் அழகோ அழகு. அவையும் தனித்தனியே எனக்கு போஸ் கொடுத்தன. அதையும் எடுத்துத் தள்ளிட்டோம்ல.

சிறிது நேரத்தில் கிஸாரு மட்டும் இன்னொரு மண் மேட்டில் ஏறி, கழுதைப்புலி, சிங்கம், சிறுத்தை என்று ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்று ஸ்கௌட்டிங் செய்தது அந்த காலை வெளிச்சத்தில் அற்புதமாக இருந்தது.

அதற்குள் வெயிலார் லேசாக தனது உக்கிரத்தைக் காண்பிக்கத் தொடங்க, “ஓடுறா கைப்புள்ள” என்று சல்லென்று விடுதிக்குப் பறந்து விட்டோம். 

வழக்கம்போல் ஒரு பார்லி ஜூஸை குடித்து விட்டு, மதிய உணவையும் முடித்துக் கொண்டு ஒரு தூக்கம் போட்டேன்.

பார்லி ஜூஸினாலா, இல்லை அசதியினாலா என்று தெரியவில்லை. முழிப்பு வரும்போது மணி மாலை 4.30 ஆகி விட்டது. எல்லாம்தான் பார்த்து விட்டோமே, என்று மெதுவாக ஒரு டீயைக் குடித்து சாவகாசமாக மாலை சஃபாரி கிளம்பினோம்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதலால், டென்ஷன் ஏதுமில்லாமல் ஒரு டிரைவ் போய்க் கொண்டிருந்தோம். ஒரு சில லேன்ட்ஸ்கேப் படங்கள் எடுத்தேன். 

கொஞ்ச தூரத்தில் ஒரு சில வாகனங்கள் நின்று கொண்டிருக்க, சரி என்னவென்று போய்ப் பார்ப்போம் என்று வண்டியை அந்த இடத்திற்கு செலுத்தினோம்.

‘அமானி’ சிவிங்கிப் புலியின் (சீட்டா) குடும்பம், பேக் லைட்டிங்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

அதில் தாய் அமானி எனக்கு சூப்பராய் போஸ் ஒன்று கொடுக்க, ஆற அமர அதை ரசித்துக் கொண்டும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் இருந்தேன். 

அப்போது அமானியின் பசங்களில் ஒருவன், மங்கூஸ் ( கீரிப்பிள்ளை இனம்) ஒன்றைப் பார்த்து விரட்டத் தொடங்கினான். 

சீட்டா மங்கூஸை சாப்பிடும் என்பது எனக்கு புதிதான விஷயமாய் இருந்தது. “மங்கூஸ் உடலில் இருந்து ஒரு துர் நாற்றம் வருவதால் அதை சீட்டா சாப்பிடாது. ஆனால், பிடித்து விளையாடும் “ என்றான் ஜாக். இந்த செய்தி எனக்கு இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குட்டியூண்டாக இருந்த அந்த மங்கூஸ் அந்த சீட்டாவிற்கு செமையாக தண்ணி காண்பித்தது. அந்த மொத்த சேஸிங்கையும் தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அங்கு ஓடி இங்கு ஓடி, கடைசியில் எங்களுக்கு அருகில் இருந்த ஒரு வாகனத்தின் அடி பாகத்தில் போய் ஒண்டிக் கொண்டது அந்த மங்கூஸ். சீட்டாவும் விடவில்லை. குனிந்து குனிந்து தேட, இப்போது அந்த டிரைவருக்கு ப்ரஷர் ஏறி விட்டது.

காரணம், இது போன்ற சமயங்களில், அங்கு வன அதிகாரிகள் வந்தால் டிரைவருக்கு செமத்திக்கு ஃபைன் தீட்டி விடுவார்கள். நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் விலங்குகளுக்கு , அவற்றின் இயல்பு வாழ்க்கைக்கு தொந்தரவு கொடுத்து விடக் கூடாது என்பது கென்ய வனங்களில் பொதுவான ஒரு கண்டிஷன்.

யாரும் எதிர்பாராத சமயத்தில் அந்த டிரைவர் தனது வண்டியை கிளப்ப, எங்கள் அனைவருக்கும் ஹார்ட் பீட் தட தடவென்று எகிற ஆரம்பித்தது.. 

ஒன்று அந்த மங்கூஸ், வண்டி டயரில் மாட்டிக் கொள்ளும். அல்லது, வெளியில் காத்துக் கொண்டிருக்கும் சீட்டாவிடம் மாட்டிக் கொள்ளும். மூன்றாவது ஆப்ஷன் எதுவும் இருக்கவில்லை என்பது எங்கள் அனைவரின் கணிப்பு.

ஆனால், வழக்கம்போல் இயற்கை, “You are all wrong, guys…” என் வழி தன் வழி என்று நிரூபித்தது.  

ஆமாம். அந்த மங்கூஸ் டயரிலும் அடி படவில்லை. சீட்டாவிடமும் மாட்டிக் கொள்ளவில்லை. ஆனால், அது எங்கே என்றுதான் தெரியவில்லை. எங்களை விட அந்தச் சீட்டாதான் ரொம்பவே குழம்பி தத்தளித்தது.

அந்த வாகனத்தில் அடியில் ஏதோ ஒரு பாகத்தில் தொத்திக் கொண்டு, அது சுகமாக அந்த வண்டியுடன் பயணித்து, ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கீழே குதித்துத் தப்பியோடி விட்டது.

இந்த் ஆண்ட்டி க்ளைமேக்ஸை அந்த சீட்டா உட்பட நாங்கள் யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. நாங்கள் யாவரும் அந்த ட்விஸ்ட்டை நினைத்து வாய்விட்டு சிரிக்க , அந்த சீட்டா எங்கள் அனைவரையும் கோபத்தில் ஒரு லுக் விட்டு விட்டு தன் தாயிடம் போய் விட்டது. 

அந்த மொத்த டிராமாவும் பார்ப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. 

அந்த ஒட்டு மொத்த ட்ரிப்பும் மிகவும் திருப்தியாக அமைந்ததில் மகிழ்ச்சியுடன் விடுதிக்கு திரும்பினோம்.

இத்துடன் இந்த மாரா ஒரு மந்திரலோகம் தொடர் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வருகிறது.

இந்த (2022) வருடம் அக்டோபரில் திரும்ப கென்யா செல்கிறேன் – சும்மா ஒரு 15 நாள் பயணம். அப்போது மாராவிற்கும் செல்ல திட்டம் உள்ளது.

அன்னை மீனாட்சி உதவியால் அந்த ட்ரிப்பும் நல்லபடியாக அமைந்தால், “மாரா ஒரு மந்திரலோகம்” …….. தொடரும்.

வெ.பாலமுரளி.