நான் இந்த முறை ( நவம்பர் 2021) மசை மாரா சென்றது மிக மிக வித்தியாசமான அனுபவம்.
மாராவிற்கு இதற்கு முன்னர் ஏராளமான முறை சென்று விட்டதால், இந்த முறை பெரிய அளவில் எந்தவொரு எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளவில்லை.
இந்த முறை ஜாக் என்னும் இளைஞன் என்னுடைய முழு நேர டிரைவர்.
நானே, “ இன்று போதும். வா விடுதிக்குத் திரும்புவோம்” என்றாலும் கூட விடாப் பிடியாக தான் நினைத்ததைக் காட்டிவிட்டுத்தான் விடுதிக்குத் திரும்பும் கோஷ்டி.
நான் எப்போதும், மாராவில் காலடி எடுத்து வைத்ததுமே டிரைவரிடம் என்னுடைய எதிர்பார்ப்பு முழுவதையும் விளக்கி விடுவேன். அதேபோல், நீ மட்டும் முழுமையாக ஒத்துழைத்தால், என்னிடம் பெரிய அளவில் டிப்சை எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லி விடுவேன். அப்போதுதான் அவர்களும் ஃப்ரீ மைண்டுடன் நம்முடன் சுற்றுவார்கள்.
இந்தமுறை, நான் பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே, ஜாக்கே கேட்டு விட்டான், என்னுடைய ப்ளான் என்னவென்று.
சும்மா சும்மா சிங்கம், சிறுத்தை, சீட்டா என்று பார்க்கும்போதெல்லாம் வண்டியை நிறுத்தாதே (ம்க்கும்….அப்படிக் கெடக்கு ).
நல்ல சில்யூட் கிடைத்தாலோ, சேஸிங் கிடைத்தாலோ மகிழ்ச்சி. கிடைக்காவிட்டாலும் நான் வருத்தப்பட மாட்டேன் என்றேன். வெறும் ஆக்ஷன் மட்டுமே என் ஆர்வம் என்று அவனுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்து விட்டேன்.
போய் இறங்கியதுமே எங்களுக்கு இதைப் பார்க்க வேண்டும், அதைப் பார்க்க வேண்டும் என்று பெரிய லிஸ்ட்டை கொடுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கு மத்தியில், இதுதான் என் ஆர்வம். இதுதான் என் ஆசை. கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டாலும் வருத்தமில்லை என்று சொல்லும் ஒருவனை ஜாக் இப்போதுதான் முதல் முறையாக பார்த்திருக்க வேண்டும். ஏதோ ஏலியனைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தான் ( இதற்குப் பெயர்தான் போட்டு வாங்குவது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை).
நான் அங்கிருந்த 5 நாட்களும் மாராவின் முப்பரிமாணத்தையும் காட்டி விட்டான் ராசா ( எங்கோ புகையுதாம்….கருகுதாம்…..).
என்னுடைய சென்ற ட்ரிப்பில் வந்த சாமி சர்ப்ரைஸாக ஒவ்வொன்றும் காட்டுவான். ஆனால், ஜாக் அப்படியில்லை.
இன்று இதுதான் நமது டார்கெட் என்று சொல்லி அடித்தான்.
அது என்னை மனதளவிலும், டெக்னிகலாகவும் தயார் படுத்திக் கொள்ள பெரிதும் உதவியது.
முதல் நாள் “இதுதான் நமது டார்கெட்” என்று அவன் சொல்லும்போது நான் அவனை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், வனங்களில் அப்படியெல்லாம் நாம் டார்கெட் ஃபிக்ஸ் பண்ண முடியாது. இயற்கை ஒன்றும் நம்மிடம் வேலை பார்க்கும் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் கிடையாது – நாம் டார்கெட் ஃபிக்ஸ் பண்ணியதும் ஓடி ஓடி அதை அச்சீவ் பண்ணுவதற்கு. என் வழி தனி வழி என்று நம் சூப்பர் ஸ்டார் போக்கில் அது பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கும். பின்னே…இயற்கைகிட்ட போய் அரசியலுக்கு வா என்றால் வருமா ?
ஆனால், முதல் நாள் அவன் சொல்லி அடித்தவுடன், அடுத்தடுத்த நாட்களில் அவன் டார்கெட்டை ஃபிக்ஸ் பண்ணியதும் என் இதயத்துடிப்பு நம்ம டேஜஸ் ட்ரெயின் போல தடதடக்க ஆரம்பித்து விட்டது.
அப்படி அவன் என்னதான் ராசா டார்கெட் ஃபிக்ஸ் பண்ணினான் என்கிறீர்களா….? சொல்லுவோம்ல…..
மாராவில் போய் இறங்கும்போதே மணி மதியம் இரண்டாகி விட்டது. சாப்பிட்டு விட்டு அசதியாய் இருந்ததால் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, ஒரு நாலு மணிக்கு எழுந்து ஒரு டீ குடித்து விட்டுக் கிளம்பினோம்.
“என்ன ப்ளான்?” என்றேன் ஜாக்கிடம். “டோப்பி ப்ளேன் (சிங்கக்) குடும்பம் 14 குட்டிகளுடன் விளையாடுவதை முதலில் பார்த்து விட்டு , யானை அல்லது ஒட்டகச் சிவிங்கியின் சில்யூட்டை முயற்சிப்போம்” என்றான் ஜாக்.
சரி என்று கிளம்பினோம்.
ரேடியோ மூலம் விசாரித்ததில், டோப்பி ப்ளேன் குடும்பம், கரடு முரடான பாறைகள் நிறைந்த சரியான ஒரு குன்றின் மேல் போய் குடி கொண்டிருக்கின்றது. மேலே செல்வது உசிதமல்ல என்ற செய்தி வந்தது.
நான் ரோட்டை விட்டு புதருக்குள் செல்வதற்கான ஸ்பெஷல் பெரிமிட்டை வாங்கியிருந்தேன். அப்படி வாங்காவிட்டால்,ரோட்டை விட்டு நம்மால் விலக முடியாது. வனத்தின் செக்யூரிட்டி மக்கள் சுற்றிக் கொண்டேயிருப்பார்கள். பிடித்தால் கன்னா பின்னாவென்று ஃபைன் தீட்டி விடுவார்கள் ( இந்திய மதிப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் ஃபைன்).
“ ஜாக், ரிஸ்க் என்றால் இன்று விட்டு விடலாம். அவை கீழே இறங்கி வந்ததும், நாளையோ அல்லது நாளை மறு நாளோ பார்த்துக் கொள்ளலாம்” என்றேன்.
அவன் நம்ம கேப்டன் மாதிரி, “என்னுடைய அகராதியில் ரிஸ்க் என்ற சொல்லுக்கே இடமில்லை” என்று சொல்லி விட்டு முழு வேகத்துடன் அந்த இடத்தை நோக்கி தன் வாகனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டான்.
நானும், “ ஷூகர் கேன் சாப்பிட ஃபீஸா “ என்று சும்மா இருந்து விட்டேன்.
தூரத்திலிருந்தே அந்தக் குன்றைச் சுற்றி ஏராளமான வாகனங்கள், அடிவாரத்தில் காத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முயன்றது.
யாருக்கும் மேலே செல்ல துணிவில்லை. அவ்வளவு பாறைகள் – சிறிதும் பெரிதுமாக.
தலைவன் முன்பே அந்தக் குன்றிற்கு சென்றிருப்பான் போல. நேரே குன்றிற்குப் பின்புறம் போய், ஒத்தையடிப் பாதை மாதிரி இருந்த ஒரு சின்னப் பாதையில் தட தடவென்று ஏறி விட்டான். நாங்கள் மேலே சென்று விடுவோம் என்று எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. ஆனால், ஜாக் கொஞ்சமும் தயங்காமல் டம் டும்மென்று பாறைகளில் இடித்து குன்றின் மேற்பகுதிக்கு சென்றதை என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை.
நாங்கள் மேலே சென்ற பிறகும் கூட, எங்களைப் பின்தொடர்ந்து மேலே ஏறி வருவதற்கு யாரும் துணிவு வரவில்லை. எனவே குன்றின் மேலே நாங்களும், டோப்பி ப்ளேன் குடும்பமும் மட்டுமே….ஏகாந்தமாய்.
டோப்பி ப்ளேன் குடும்பம் மிகப் பெரிய குடும்பம். இரண்டு ஆண்களும், நிறைய லேடிஸூமாக கூட்டுக் குடும்பமாய் வாழ்கின்றன.
நண்டும், சிண்டுமாய் 14 குட்டிகள். அவையனைத்தும் இரண்டு தாய்மார்களின் குட்டிகள். வெவ்வேறு டயத்தில் ஈன்றதால் இரண்டு சைஸ் குட்டிகளை அடையாளம் காண முடிந்தது.
அதில் பெரிய சைஸில் இருந்தவை கொஞ்சம் மெச்சூர்டாக விளையாடிக் கொண்டிருக்க, சிறுசுகளோ செம ஏழரைகளாக இருந்தன.
மற்ற குட்டிகளின் வாலைக் கடிப்பது , கட்டிப் புரள்வது. ஒரு குட்டியின் மீது நாலைந்து குட்டிகள் மேலே விழுந்து அமுக்குவது என்று ஏக ரகளை.
அதிலும் ஒரு குட்டி அவ்வப்போது தன் தலையைத் தூக்கி, Who is that bloody fellow taking me photos ? என்று என்னைப் பார்த்து ஒரு லுக் விட்டு விட்டு மறுபடியும் தன் சேட்டைத் தொடரும்.
இவ்வளவு ரகளையிலும் இரண்டே இரண்டு குட்டிகள் மட்டும் ரொம்ப சமர்த்தாக, ஒன்று மற்றொன்றின் தொப்பையில் ஒரு காலைப் போட்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தது அழகோ அழகு.
காரை விட்டு கீழே இறங்கி அவற்றைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது. ஆனால், நாம் அவற்றைக் கொஞ்சினால், அதன் மொத்தக் குடும்பமும் நம்மை தூக்கி வைத்துக் கொஞ்சி விடும் எனத் தோன்றியதால், அந்த எண்ணத்தைக் கை விட்டேன். அதற்காக நான் சிங்கத்துக்கு பயந்து விட்டேன் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். காட்டின் விதிமுறைகளைப் பின்பற்றுபவன் நான் ( ஹிஹிஹிஹிஹிஹிஹி…).
எவ்வளவு நேரம் படங்கள் எடுத்திருப்பேன் என்றே தெரியவில்லை. ஆசை தீர எடுத்து விட்டு, அந்தக் குடும்பம் கீழே இறங்க ஆரம்பித்ததும், நாங்களும் கீழே இறங்கினோம். முதல் நாளே அமர்க்களமான அனுபவம்.
சூரியன் மறையத் தொடங்கியதால், வழக்கம்போல் சில்யூட்டிற்கு ஏதாவது சப்ஜெக்ட் கிடைக்குமா என்று தேடத் தொடங்கினோம்.
அது ஒரு அவஸ்தையான அனுபவம். சூரியன் மறையத் தொடங்கும்போது, வெகு வேகமாகக் கீழே இறங்கும். பார்க்கவும் மிகவும் ரம்மியமாக, அழகான பெயிண்டிங் போல இருக்கும். ஆனால், அதை நின்று ரசிக்க முடியாது. அது மறைவதற்குள் ஏதேனும் ஒரு சப்ஜெக்ட்டைத் தேடி சூரியன் முன்னால் நிறுத்துவதே நமது முதன்மையான குறிக்கோள் என்பதால், மரண ஸ்பீடில் காரை கனா பின்னாவென்று அங்கும் இங்கும், மேடு பள்ளம் பார்க்காமல் ஓட்டிக் கொண்டே தேட வேண்டும்.
ஏதேனும் கிடைத்தால் லாபம். ஒன்றும் கிடைக்காவிட்டால் ( சூரிய) வடையும் போச்சே ஃபீலிங்குதான்.
எங்கள் அதிர்ஷ்டத்திற்கு, தூரத்தில் ஒரு மேட்டுப் பகுதியில் ஒரு தாய் யானையும், அதன் இரண்டு குட்டிகளும் ஏதோ ஊராட்சித் தேர்தலில் வோட்டு போடப் போவது போல வேக வேகமாய் போய்க் கொண்டிருந்தன.
வோட்டு போட்டாலும் ஒரு புண்ணாக்கும் நடக்கப் போவதில்லைன்னு நாம எப்படி சொல்றது. சொன்னா, நம்மை ஜனநாயக விரோதின்னு முத்திரை வேறு குத்திருவாய்ங்கெ ( இங்கெ என்னமோ ஜனநாயகம் ஆறாய் ஓடுறாப்ல ).
அதனால், பேசாமா ……..க்கிட்டு, ஃபோட்டோவாவது எடுப்போம்னு அசுர கதியில் ஓடினோம். சூரியன் இறங்கும் வேகத்தைப் பார்த்ததும், ஏதாவது ஒரு பள்ளத்தாக்கில் நிறுத்து ராசா என்று சொல்லி விட்டு, “ஆதவன்” படத்தில் ஆனந்த் பாபு சொல்வது போல் ஜூஊஊஊம் லென்சைப் போட்டு க்ளிக்க ஆரம்பித்தேன்.
நான் நினைத்தாற்போல், யானைக்கு நேர் பின்னால் சூரியனைக் கொண்டு வந்து நிறுத்த இயலவில்லை ( வீட்டிலேயே நம்ம பேச்சை கேக்க மாட்டேன்றாய்ங்கெ. சூரியனா கேக்கும்).
SOMETHING IS BETTER THAN NOTHING என்று என்னை நானே தேற்றிக் கொண்டு விடுதிக்குத் திரும்பும்போது மணி மாலை 7.30.
சென்ற முறை சென்றிருந்த போது முதுகுத் தண்டில் இரண்டு வட்டுகள் ( அதாங்க இரண்டு டிஸ்க்குகள்) பிரச்சினை பண்ணியதால், இந்த முறை பெரிய பெல்ட்டு ஒன்றைப் போட்டு பயணித்ததால், வலி ஒன்றும் இல்லை.
ஒரு குளியல் போட்டு, அரை குறையாக ஏதோ ஒன்றை சாப்பிட்டு விட்டு, லேப்டாப்பில், எடுத்த படங்களைப் போட்டுப் பார்க்க, நான் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நன்றாக வந்திருந்தன. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
Not a bad day.
வெ.பாலமுரளி.










