முள்றியின் டைரி : 75 – (இனிய) பயணங்கள் முடிவதில்லை…

இன்று (02.09.2021) எங்களுக்கு 25 – வது திருமண நாள். சில்வர் ஜூப்ளி. 

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. காரணம் எனக்கும் என் மனைவிக்கும் அவ்வளவு குணாதிசய வேற்றுமைகள். 

எனக்கு முன்கோபம் ஜாஸ்தி. மதுவந்தி அக்கா ஸ்டைலில் சொல்வதானால் “ ரொம்பவே ஜாஸ்தி”. கோபம் வந்தால் கத்தித் தீர்த்து விடுவேன். ( அக்கா சொன்னது, “ எங்களவர்களுக்கு மூளை ரொம்பவே ஜாஸ்தி”). 

என் மனைவி, காந்தி ஜி போல. கோபம் வந்தால், எக்ஸ்ட்ரா அமைதி காத்து என்னை டென்ஷன் பண்ணி விடுவாள். ஆனால், பேசுவதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, நேரா நேரத்திற்கு சாப்பாடு, காபி, டீ , டிபன் எல்லாம் டாண் டாணென்று டேபிளுக்கு வந்து விடும் (பசிக்கும்ல).  

எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் கூட, மத நம்பிக்கை துளியும் கிடையாது. என் மனைவி எனக்கு அப்படியே நேர் எதிர். உட்கார்ந்து உட்கார்ந்து சம்ஸ்கிருத ஸ்லோகம் சொல்லும் கோஷ்டி. இந்து மதம் சொல்லும் அனைத்து புராண புருடா கதைகளையும் அப்படியே உண்மை என்று நம்புவாள்.  

நான் சுத்தமான அசைவ கோஷ்டி. மக்கள் சுத்தமான சைவம்.   

எனக்கு வீம்பு “ரொம்பவே ஜாஸ்தி”. என் மனைவி “ விட்டுக் கொடுப்பவர், கெட்டுப் போக மாட்டார்” என்று உறுதியாக நம்புகின்றவள். 

எனக்கு சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாடு கொஞ்சம் மிஸ்ஸிங். கொஞ்சம் என்ன கொஞ்சம், “ரொம்பவே மிஸ்ஸிங்”. இதிலும் என் மனைவி எனக்கு நேர் எதிர்.  

நான் முன்பே ஓரிரு முறை சொன்னது போல், எனக்கு எப்போதுமே நான் பெரிய Dal என்ற நினைப்பு “ரொம்பவே ஜாஸ்தி”. வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்க வேண்டும், எல்லா விஷயங்களிலும் ஆர்கனைஸ்டாக இருக்க வேண்டும் என்று ரொம்பவே அலட்டிக் கொள்வேன். அதனால், எப்போதுமே ஒரு வித டென்ஷனோடயே சுற்றுவேன் ( நாய்க்கு நிற்பதற்கும் நேரமில்லை. செய்வதற்கும் சோலியில்லை என்று பழமொழி இருக்கே. அதே கேஸ்தான் நானும்).  என் மனைவி, “ வீடு ஒன்றும் மியூசியமல்ல” என்னும் பாலிஸி கொண்டவள். ஸோ…ரொம்ப கேஷூவல். நோ டென்ஷன். 

எங்கள் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, பயணிப்பது. குறிப்பாக பழைய காலத்து கோவில்கள். 

அதிலும் கூட, நான் அங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என்று ஆராய்ந்து கொண்டிருப்பேன். என் மனைவியோ, மிகவும் பய பக்தியோடு, ஐயர் (அவருக்கு மட்டும் புரிகின்ற) சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரத்தை உள்வாங்கிக் கொண்டு, சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பாள்.  

இது போல, கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலுமே நாங்கள் இருவரும் எதிரும் புதிரும்தான். அதனால்தானோ என்னவோ, கடந்த 25 வருட வாழ்க்கைப் பயணம் மிகவும் இனிமையாகக் கழிந்து விட்டது. 

எனக்கு மறு ஜென்ம கதைகளில் நம்பிக்கையில்லை. ஒரு வேளை அடுத்த ஜென்மம் என்ற ஒன்று நிஜமாகவே இருக்குமேயானால், இவள் எனக்குத் தாயாக பிறக்க வேண்டும். மீனாட்சி குண்டம்மா அருள் புரிவாள்.  

வாழ்த்திய, வாழ்த்துகின்ற, வாழ்த்தப் போகும் அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  

வெ.பாலமுரளி.