முள்றியின் டைரி – 74 : இமைக்கா நொடிகள்.

உங்களுக்கு “மைக் பாண்டே”யைத் தெரியுமா ? ( ரங்கராஜ் பாண்டே இல்லை. மைக் பாண்டே). 

கென்யாவில் பிறந்து வளர்ந்த ஒரு இந்தியர். படித்தது இங்கிலாந்தில். நீண்ட காலம் பிபிசி யில் ஆவணப் பிரிவில் புகைப்படக் கலைஞராகவும், இயக்குனராகவும் பணி புரிந்தவர். 

1973 இல் அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி.இந்திராகாந்தி அவர்கள்  Project Tiger ஆரம்பித்தபோது, இவரிடம்தான் அதை ஆவணப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 

இதுவரை புலிகளை அதிக அளவில் ஆவணப்படம் எடுத்தது இவர்தான். தற்சமயம் இந்தியாவில் வந்து செட்டில் ஆகியிருக்கும் இவரை 2011 இல் கேனனும், நேஷனல் ஜியாக்ரஃபியும் இணைந்து நடத்திய ஒரு புகைப்படப் போட்டியில் ராஜஸ்தானில் உள்ள ராந்தம்பூர் நேஷனல் பார்க்கில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்தித்தது மட்டுமல்லாது அவர் கையாலேயே அந்த அவார்டும் வாங்கும் அதிர்ஷ்டமும் கிடைத்தது என் பாக்கியம் ( அப்பாடா…அவார்ட் வாங்கியதை சொல்லியாச்சு. ஹிஹிஹிஹிஹி).

அங்கு தங்கியிருந்த நாலாவது நாள் மாலையில் நானும் அவரும் சந்தித்து ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நான் (அப்போது) கென்யாவிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும், அவர் ரொம்பவே நெருக்கமாகி விட்டார். 

அப்போது நான் அவரிடம், “ உங்கள் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் இந்தக் கதை. இதை நான் அவர் இடத்திலிருந்தே சொல்ல விரும்புவதால்  “அவர்” என்பதற்குப் பதிலாக “நான்” என்றே சொல்கிறேன். அதற்காக அவர் அனுபவத்தை நான் சுட்டு விட்டேன் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். 

இது நடந்தது 1970 களின் இறுதியில். அப்போது நான் Project Tiger இல் இருந்ததால், இந்தியாவில் உள்ள புலிகளை ஆவணப்படுத்தும் பொறுப்பிற்காக அடிக்கடி இந்தியாவில் உள்ள அனைத்து காடுகளுக்கும் செல்வது வழக்கம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் தம்பி ராம்குமார் பாண்டேயும்  என்னுடன் வருவது வழக்கம்.

ராம் ஒரு கால் நடை மருத்துவர். கொஞ்சம் புகைப்படக் கலையிலும் ஆர்வம் உள்ளவர். எல்லாவற்றிற்கும் மேலாக வன விலங்குகளின் நடவடிக்கைகளை ஆராய்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவர். 

ஒரு முறை நானும், ராமும் “டடோபா நேஷனல் பார்க்” சென்றிருந்தோம். அது ஒரு அதிகாலை நேரம். அங்கு ஒரு பெண் புலி, குட்டிகள் ஈன்றிருப்பதாக தகவலறிந்து அதைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம். பொதுவாக ராம் என்னுடன் வந்தால், ராம்தான் வண்டியை ஓட்டுவான் நான் படங்கள் எடுப்பேன். டிரைவர் வைத்துக் கொள்ள மாட்டோம். நான் தனியாகச் சென்றால் மட்டுமே டிரைவர்.

அப்போது பெரிய புதர் ஒன்றைப் பார்த்தோம். “ ராம் மெதுவாக ஓட்டு” என்று சொல்லி விட்டு, கண் , காது என்று என் ஐம்புலன்களையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு அந்தப் புதரை நெருங்கினோம். 

அப்போதுதான் வலி தாங்காமல் வெளியிடும் அந்த ஈன முனகல் சத்தத்தை கேட்டேன். மிகவும் மெலிதான ஒலி. ராம்காரை ஓட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால், அவன் அந்தச் சத்தத்தைக் கேட்கவில்லை. நான் ஏறத்தாழ ஒரு காட்டு வாசியாகவே மாறியிருந்ததால், எந்த ஒரு சத்தமும், எந்தவொரு காட்சியும் என்னைக் கடந்து போகாது.

புதரைச் சுற்றி பின்புறம் வருகையில் அந்த சிறிய புலிக்குட்டியைப் பார்த்தோம். பிறந்து ஒரு மாதத்திற்குள்தான் இருக்கும். தரையை ஒட்டி வளர்ந்திருந்த ஒரு முள் செடியில் வகையாக மாட்டிக் கொண்டிருந்தது. சுற்றி முற்றி அதன் தாயை எங்கும் காணவில்லை.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போதெல்லாம், இப்போது இருப்பது போல் ரேடியோ வசதி கிடையாது. எனவே வன அதிகாரிகளை உடனே தொடர்பு கொள்ள முடியவில்லை.

குட்டியை அங்கேயே விட்டு விட்டு, அதன் தாயை தேடத் தொடங்கினோம். கிட்டத்தட்ட 1 மணி நேரத் தேடல். எங்கு தேடியும் அதன் தாயைக் கண்டு பிடிக்க முடியவில்லை. திரும்ப அந்தக் குட்டி இருந்த இடத்திற்கே வந்தோம். முன்னை விட அந்த முனகல் சத்தம் இன்னும் மெலிதாகி தேய்ந்திருந்தது. ரொம்பவே இக்கட்டான சூழ்நிலை. விட்டு விட்டு போகவும் முடியாமல், கீழே இறங்கி ஏதாவது முதலுதவியும் செய்ய முடியாமல் ஒரு கையறு நிலை. 

புலிகள் இனத்தை காப்பதற்காக உருவாக்கப்பட்ட ப்ராஜக்ட்டில் வேறு இருக்கிறோம். இன்றிருக்கும் நிலையில் ஒவ்வொரு புலியும் காக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம். அது தவிர, வனத்தைப் பொறுத்த வரையில் அரசு எனக்கு அனைத்து உரிமைகளையும் தந்திருந்தது.

வருவது வரட்டும் என்று காரை விட்டு இறங்கி அருகில் சென்று பார்த்தோம். எப்படி ஆனது என்று தெரியவில்லை. ஒரு தடிமனான முள், ஒரு விரல் நீளத்திற்கு அதன் வயிற்றில் பாய்ந்திருந்தது. 

அதை வெளியில் எடுத்தால் ரத்தம் வெளியேறி அந்தக் குட்டி விரைவில் இறந்து விடவும் வாய்ப்புள்ளது. அல்லது அந்த ரத்தத்தை மோப்பம் பிடித்து மற்ற விலங்குகள் வந்து அதை கொன்று விடலாம். ரொம்பவே குழப்பமான சூழ்நிலை. 

என்ன ஆனாலும் சரி, அந்தக் குட்டியை காப்பாற்றுவோம் என்று முடிவு செய்து விட்டு, அதை நெருங்கி அந்த முள்ளை உருவாமல், வெளியிலேயே உடைத்து விட்டு, அந்த முள் முழுவதுமாக உடலில் இருக்குமாறு பார்த்துக் கொண்டு அந்தக் குட்டியைத் தூக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு விரைவாக வெளியேறினோம்.

வெளியில் வந்து வன அதிகாரிகளிடம் விபரத்தை விளக்கி விட்டு, குட்டியைத்  தூக்கிக் கொண்டு என் தம்பி வீட்டிற்கு விரைந்தோம். வீட்டை நெருங்கும்போதே, குட்டி மிகவும் சோர்ந்து போயிருந்தது. முகமும் வெளிறிப் போயிருந்தது. 

உடனே, அங்குள்ள என் தம்பியின் மருத்துவ அறைக்குள் சென்று முள்ளை மெதுவாக உருவி வெளியில் எடுத்து, ரத்தப் போக்கையும் நிறுத்தி, கட்டுப் போட்டு ஒரு ஊசியையும் போட்டு அதைத் தூங்க வைத்தோம். 

நேரம் ஆக ஆக, அதற்கு குளிர் ஜூரம் வந்து உடல் தூக்கி தூக்கிப் போட்டது. அப்போதுதான் ராம் மெதுவாக, “இது இனி உயிர் பிழைப்பது சிரமம்” என்றான். மிகவும் வேதனையாக இருந்தது. அந்த வீடே சோக மயமானது. 

அதற்குள் இரவும் நெருங்க. அதை பெட்டில் என் அருகிலேயே போட்டு தூங்க முயற்சித்தேன். ஒரு 12 மணி இருக்கும். அதற்கு ரொம்பவே குளிர் ஜூரம் அதிகரித்திருந்தது. ராமை எழுப்பி விபரத்தைச் சொன்னேன். அவன் வேறு ஏதோ மருந்தொன்று கொடுத்து விட்டு, இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்று கையை விரித்து விட்டான். 

நான் மிகவும் சோகத்துடன், அதை என் நெஞ்சில் கிடத்தி ஒரு போர்வை வைத்து அதையும் என்னையும் போர்த்தி அங்கிருந்த சோஃபாவில் படுத்தேன். எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை. என் முகத்தில் ஏதோ ஈரம் படவே சட்டென்று எழுந்தேன். மணி காலை ஏழாயிருந்தது. அந்தக் குட்டிக்கு ஜூரம் முழுவதுமாக விட்டுப் போய், அது தன் நாக்கால் என் முகத்தை நக்கிக் கொண்டிருந்தது.

எனக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. ராம் ராம் என்று கத்தினேன். அவன் என்னவோ ஏதோவென்று ஓடி வந்தான். குட்டியைப் பார்த்ததும் என் சந்தோஷம் அவனுக்கும் தொற்றிக் கொண்டது. குட்டியைக் கொண்டு போய் பரிசோதனை செய்ய, அதன் முன்னேற்றம் எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

வலிக்கு மட்டும் மருந்து கொடுத்து அதை அப்சர்வ் செய்ய ஆரம்பித்தோம். ஒரு மூன்று நான்கு நாட்களில் அது எங்கள் வீட்டில் ஓடியாடி விளையாட ஆரம்பித்து விட்டது. அதன் புண்ணும் நன்றாகவே ஆறியிருந்தது. காட்டில் போய் எடுத்த இடத்திலேயே விட்டு விட முடிவு செய்தோம் – காத்திருக்கும் அபாயம் புரியாமலேயே.  

பொதுவாக எந்தவொரு விலங்கும் தங்கள் குட்டிகளின் மீது மனித வாடையோ அல்லது வனமல்லாத வெளியிடத்து வாடையோ அடித்தால், அந்தக் குட்டிகளை தங்களோடு மறுபடியும் இணைத்துக் கொள்ளாது. சில சமயம் கொன்று விடவும் கூடும். அதனால், அந்தக் குட்டியின் மீது சேற்றை பூசி மெழுகி, அதை புழுதியில் போட்டு உருட்டி அதன் மீது நகரத்தின் வாசம் எதுவும் வராமல் பார்த்துக் கொண்டோம். 

கொஞ்சமும் தாமதிக்காமல், காட்டிற்குள் சென்று அந்தப் புதரை அடைந்தோம். ராமிடம் என் வீடியோ (ஃபிலிம்) கேமராவைக் கொடுத்து படம் எடுக்கச் சொல்லி விட்டு, நன்றாக அந்த இடத்தை ஆராய்ந்து விட்டு, அதன் தாய் அங்கு இல்லை என்பதை 100 சதவிகிதம் உறுதி செய்து கொண்டு, குட்டியைத் தூக்கிக் கொண்டு நான் மட்டும் காரை விட்டு இறங்கி மெதுவாக நடந்து போய் அந்தக் குட்டியை இறக்கி விட்டு நிமிர, என் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. 

அந்தப் புதருக்கு அருகில் ஒரு 20 அல்லது 30 அடி தூரத்தில் இருந்த இன்னொரு புதரில் இருந்து அந்தத் தாய் ஒரு சிறிய உறுமலுடன் வெளிப்பட்டது. எப்படி அதை கவனிக்க மறந்தேன் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு நொடியில் எனக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. அதற்கு மறு திசையில் ஒரு 30 அல்லது 40 அடி தூரத்தில் எங்கள் கார். நான் வாழ்விற்கும் சாவிற்கும் மிகச் சரியாக நடுவில் நின்று கொண்டிருந்தேன். ராம் முதலில் அதைக் கவனிக்காமல் என்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். 

என் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்து விட்டு நிமிர்ந்து பார்க்க அவனுக்கும் அந்தத் தாய்ப் புலி கண்ணில் பட்டது. , “ஓடி வந்து விடு” என்று முதலில் மிகவும் ரகசியமாகவும், பின்பு சத்தமாகவும் கத்த ஆரம்பித்து விட்டான்.

“நான் ஓடக் கூடாது. ஓடினால் குதறி விடும். மெதுவாக நடந்து வருகிறேன். என்ன ஆனாலும் சரி, படம் எடுப்பதை மட்டும் நிறுத்தாதே” என்றேன் ஈன ஸ்வரத்தில். சொல்லி விட்டு ஒரு இரண்டு அடிதான் எடுத்து வைத்திருப்பேன், ஒரு பெரிய உறுமலுடன் அந்தத் தாய் அதன் குட்டியை நெருங்கியது. வருவது வரட்டும் என்று என் பதட்டத்தை வெளிக் காண்பிக்காமல், மெதுவாகத் திரும்பினேன்

இப்போது எனக்கும் புலிக்கும் மிகச்சரியாக நடுவில் இருந்தது குட்டி. புலி முதலில் என்னைத் தாக்கி விட்டு தன் குட்டியிடம் போகுமா இல்லை குட்டியிடம் போய் விட்டு என்னைத் தாக்குமா என்பதறியாமல் நான் மிகவும் மெதுவாக ரிவர்ஸில் காரை நோக்கி ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். 

என்னைவிட ராம்தான் தன் வசமிழந்திருந்தான் என்பது அவனுடைய பதட்டமான விசும்பலில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. 

இதற்குள் புலி தன் குட்டியை நெருங்கியிருந்தது. சிறிது நேரம் அதை முகர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தது. ஓரிரு நிமிடங்கள் கழித்து, படத்தில் உள்ளது போல அங்கேயே முன்னங்கால்களை நீட்டி உட்கார்ந்து என்னையே பார்த்தது. 

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதன் கண்ணில் தெரிந்தது கருணையா, நன்றியுணர்ச்சியா என்று சொல்ல முடியவில்லை. ஆனால், துளியும் ஆக்ரோஷம் இல்லை. நான் சற்றும் தாமதிக்காமல், நின்ற இடத்தில் இருந்து கொண்டே “ ராம், புலியின் முகத்தை க்ளோசப்பில் வைத்து எடு” என்றேன். 

அந்தத் தாய் ஒரு ஐந்து நிமிடம் அந்த இடத்தில் இருந்து விட்டு, எழுந்து புதரை நோக்கி நடக்க ஆரம்பித்தது. அதன் குட்டியும் குடுகுடுவென்று அதன் பின்னாலேயே ஓடி புதருக்குள் மறைந்தது. 

நான் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஓடிப் போய் காருக்குள் ஏறிக்கொண்டேன். என் மொத்த உடலும் பயத்தால் தொப்பலாக நனைந்திருந்தது. ராம் என்னைக் கட்டிக் கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான். எனக்கே அழ வேண்டும் போல்தான் இருந்தது. 

என்னதான் ஒரு குட்டியை காப்பாற்றிய சந்தோஷம் இருந்தாலும், அதற்காக என் உயிரையே பணயம் வைத்தது ரொம்பவே டூ மச் என்று உணர்ந்தேன்.

வீட்டிற்கு வந்து எடுத்த படத்தை ப்ராசஸ் பண்ணி ஓட்டிப் பார்த்ததில், ராம் மிக நன்றாக எடுத்திருந்தது தெரிந்தது.

இதைப் பார்த்து விட்டு வேறு யாரும் இது போல சாகசம் பண்ணி விடக் கூடாது என்ற எண்ணத்தில், பிபிசி ஒரு பெரிய தொகை கொடுத்து எங்கள் படச் சுருளை வாங்கி அதை வெளியிடாமல், தங்கள் ஆர்க்காய்வில் வைத்துக் கொண்டது. 

இப்போது தொழில் நுட்பம் ஏகத்துக்கும் வளர்ந்து விட்டதால், இன்று இதுபோல் நடந்தால் இதுபோன்ற மடத்தனமான ரிஸ்க் எதுவும் எடுக்காமல் குட்டியைக் காப்பாற்ற முடியும். ஆனால், அன்றைய நிலைமைக்கு எங்களுக்கு வேறு வழியில்லை.

மைக் பாண்டே அவர்கள் இந்தக் கதையைச் சொல்லி முடிக்கும்போது எனக்கே பயங்கரமாக வியர்த்திருந்தது. 

வெ.பாலமுரளி

நன்றி: திரு மைக் பாண்டே அவர்கள் 

படங்கள் உதவி : கூகுள்