முள்றியின் டைரி – 73 : மாரா ஓர் மந்திரலோகம் – 8

மாரா வந்து இன்றோடு எட்டு நாள் ஆகிறது. கீச்வா டெம்போவில் இரண்டாம் நாள். 

காலையில் கிளம்பும்போதே, தான்சானியா பார்டரில் “ தான்சானியா பாய்ஸ்” என்றழைக்கப்படும் இரண்டு சிவிங்கிப் புலி (சீட்டாக்)கள் இருப்பதறிந்து அந்தத் திசை நோக்கிப் பயணித்தோம். 

தான்சானியா பாய்ஸ் இருவரும் அண்ணன் தம்பிகள். ரொம்ப ஒற்றுமையான சகோதரர்கள். எங்கே போனாலும் ஒன்றாகத்தான் போவார்கள், ஒன்றாகத்தான் வருவார்கள். மாராவில் கென்யா, தான்சானியா பார்டருக்கு வேலி ஒன்றும் கிடையாது என்பதால், அந்தச் சகோதரர்கள் இருவரும் விசா ஏதும் இல்லாமல் கென்யாவுக்கும், தான்சானியாவுக்கும் ஷண்டிங் அடிப்பது வழக்கம். 

இன்று அதிர்ஷ்டவசமாக அவர்கள் கென்யன் சைடுக்கு வந்திருந்தார்கள். அதேபோல், எங்களை ரொம்ப அலைய வைக்காமல், உடனே தரிசனம் தந்தார்கள். 

ஒரு மரத்துக்கு அடியில் உட்கார்ந்து கொண்டு டிசைன் டிசைனாக போஸ் கொடுத்தார்கள். 

ஏனோ தெரியவில்லை, இன்று காலையிலேயே முதுகு வலி ஆரம்பித்திருந்தது.  சோர்வாக இருந்தது. அப்போது வாக்கி டாக்கியில் இரண்டு ஆண் சிங்கங்கள் ஒரு பெரிய காட்டெருமைக் குடும்பத்தைக் குறி வைத்து Stalking  செய்து கொண்டிருப்பதாக தகவல் வர, அவசர அவசரமாக தான்சானியா பாய்ஸூக்கு பை பை சொல்லி விட்டு, அந்தச் சிங்கங்களை நோக்கி விரைந்தோம்.

நாங்கள் அந்த இடத்தை அடையும்போதே சேஸிங் தொடங்கியிருந்தது. இரண்டு சிங்கங்களும் வெவ்வேறு திசையிலிருந்து தங்கள் அட்டாக்கை தொடுத்திருக்க, எங்களால் ஒரு சிங்கத்தை மட்டுமே காண முடிந்தது. ஆனால்,அந்த மற்றொரு சிங்கம்தான் காட்டெருமைகளை மிகவும் க்ளோசாக சேஸ் பண்ணிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. 

சரி…இவரை விட்டு விட்டு அவரைத் தொடர்வோம் என்று காரை விரட்ட, அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. கார் எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய குழியைக் கடக்க, வண்டி தன் நிலை இழந்தது. நான் என்னுடைய 500 மிமீ லென்ஸுடன் கூடிய 1DX Mark II வை கையில் வைத்திருந்தேன். ஒரு நிமிடம் நெஞ்சடைக்க, கேமராவை தூக்கிப் பிடித்துக் கொண்டே மல்லாக்க விழுந்தேன் – சரியாக இரண்டு சீட்டுகளுக்கும் நடுவில்.

நல்லவேளை கேமராவுக்கு ஒன்றும் ஆகவில்லை. அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது. சரி எழுந்திருக்கலாம் என்று முயற்சி செய்ய, பட்ட இடுப்பிலேயே படும் என்பது போல, எங்கு எனக்கு தினம் தினம் மரண வலி வந்து கொண்டிருந்ததோ, அதே இடத்தில் அடி விழுந்திருக்கிறது. 

போதாக்குறைக்கு வண்டியிலும் ஏதோ பிரச்சினை. குபுகுபுவென்று புகை மண்டலம். இதயத்தைத் திருடாதே படத்தில் வரும் “ஓ பாப்பா லாலி” பாடல் காட்சி போல ஒரே வெண்புகை. 

ஆனால் சும்மா சொல்லக் கூடாது, சாமி வண்டியை விட்டு விட்டு, வண்டிக்குள் வந்து என்னைத் தூக்கி விட மிகுந்த சிரமத்துடன் சீட்டில் அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் வண்டியையும் சரி பண்ணி விட்டு, அடுத்து என்றான் சாமி. நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், “ ஹோட்டல்” என்றேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த சிங்கச் சகோதரர்கள் இருவரும் பிரிந்திருந்தார்கள். ஒரே எமோஷனல் பீலிங்கு.

காலை 10 மணிக்கே யாரும் திரும்ப மாட்டார்கள் என்பதால், ஹோட்டலே வெறிச்சோடியிருந்தது. ரூமுக்குப் போய் முதல் நாள் டாக்டர் தாமஸ் சொல்லிக் கொடுத்த ஃபிஸியோதெரப்பி பயிற்சிகள் சில செய்து விட்டு படுத்து விட்டேன். கொஞ்சம் வலி தேவலாம் போலிருந்தது. ஒரு மணி வாக்கில் போய் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்து ஒரு தூக்கம் போட்டேன். போன எனர்ஜி கொஞ்சம் (மட்டும்) திரும்பி வந்தது போல் இருந்தது. 

நாலு மணிக்கு வழக்கம்போல் நாலு பிஸ்கோத்துகளை கொறித்து விட்டு ஒரு டீயையும் உறிஞ்சி விட்டு கிளம்பினோம். சாமியிடம் சொல்லி விட்டேன், “அதிக தூரம் போக வேண்டாம்” என்று. 

வெயில் சுள்ளென்று அடித்தாலும், ஒரு ஒட்டகச் சிவிங்கி ஒரு சில்யூட் போஸ் கொடுத்தது. கலர் இல்லையென்பதால் அதை ப்ளாக் & வொயிட்டில் ஓரிரு ஃபோட்டோக்கள் எடுத்து விட்டு நகன்றோம். 

அந்த இடத்திலிருந்து ஒரு 200 அடி தூரத்தில் Bateleur Eagle   என்னும் பறவை ஒரு மரக் கிளையில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்க,  தடதடவென்று சில ஃபோட்டோக்கள் எடுக்க, அதே இடத்தில் இருந்த ஒரு மண் புற்றில் மங்கூஸின் ஒரு குடும்பமே உட்கார்ந்திருந்தது.

வழக்கம் போல், அதன் ஒவ்வொரு குழியிலிருந்தும் ஒவ்வொரு மங்கூஸ் ஒரே நேரத்தில் எட்டிப்பார்த்தால் எப்படியிருக்கும் என்று என் கற்பனைக் குதிரையை ஓட்ட, அதைப் புரிந்து கொண்ட சாமி வண்டியின் எஞ்சினை ஆஃப் பண்ண, காத்திருக்க ஆரம்பித்தோம். ஒரு மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின்னர், இரண்டே இரண்டு மங்கூஸ் மட்டும் வெளியில் வர அதைப் படம் பிடித்து விட்டு நகன்றோம்.

அப்போது, முதல் நாள் பார்த்த “வாட்டில்ட் ப்லோவர்” தன்னுடைய காதலியுடன் வந்து என்னை ஓரக் கண்ணால் பார்க்க, அதையும் ஷூட் பண்ணி விட்டு, ஹோட்டலுக்குத் திரும்புவோம் என்று வண்டியைத் திருப்பினால், ஒரு ஒற்றை யானை ,” பாலா…ப்ளீஸ் ப்ளீஸ் என்னையும் கொஞ்சம் ஃபோட்டோ எடேன்” என்றது. எனக்கு அதை உதாசீனப்படுத்த விருப்பமில்லை. 

அதையும் எடுத்து விட்டுத் திரும்பும்போது, சன் செட் ஆகத் தொடங்கியிருந்தது. அப்போது முன்னால் எடுத்த ஒட்டகச் சிவிங்கி, பேட்லியூர் ஈகிள், ஒற்றை யானை எல்லாம் கண்ணில் தட்டுப்பட, அவற்றையும் கொஞ்சம் சில்யூட் எடுத்து விட்டு திருப்தியுடன் திரும்பினோம்.

முன்னாலேயே சொல்லி வைத்திருந்ததால், ஹோட்டலில் அன்று இரவு உணவிற்கு செட்டி நாடு சிக்கனும், சன்னா மசாலாவும் காத்திருந்தன. பார்லி ஜூஸூக்கும், அதுக்கும் செமையாக இருந்தது.

முதல் நாள் போலவே இன்றும் டாக்டர் தாமஸ் வந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் தெய்வத்தைப் பார்த்தது போல் இருந்தது. இன்று நடந்ததைச் சொன்னேன். அவர் பொறுமையாகக் கேட்டு விட்டு, நீ எப்போது திரும்ப நைரோபி செல்கிறாய் என்றார். “நாளை மறு நாள்” என்றேன். ஒன்றும் சொல்லாமல், “ வெரி குட்” என்று மட்டும் சொல்லி விட்டு ஃபிஸியோதெரப்பி செய்யத் தொடங்கினார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தொட்டவுடன் நான் ஐயோ அம்மா என்று அலற, அவர் கொஞ்சம் கவலை தோய்ந்த குரலில், “ Something is serious” என்றார். சொல்லி விட்டு, “நாளை ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம். ரொம்ப அலைவது பிரச்சினையை இன்னும் பெரிதாக்கும். குட் நைட்” என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

ஆனால், அடுத்த நாள் இந்த ட்ரிப்பிலேயே மிகவும் கடுமையான நாளாக இருக்கப் போவது தெரியாமலேயே தூங்கச் சென்றேன்.

மறு நாள், எழுந்தவுடனேயே, டாக்டர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு, காலையில் ஓரிரு மணி நேரம் மட்டும் போய் படம் எடுத்து விட்டு, திரும்பி விடுவோம். மறுபடியும் மாலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதை சாமியிடம் சொன்னேன்.அவனும் அதற்கு ஒத்துக் கொண்டதால், மதிய உணவை எடுத்துக் கொள்ளாமல், காலை உணவை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு அதிகாலை 6 மணி வாக்கில் கிளம்பினோம்.

நாங்கள் ஆற்றை நெருங்கையிலேயே அந்த புழுதிப் படலத்தைப் பார்த்து, காரின் வேகத்தை அதிகரித்தோம். கிட்டத்தட்ட 100 இருக்கும். டோப்பி என்ற மானினமும், வரிக்குதிரைகளும் மட்டும். ஆனால், அதி வேகத்தில் வந்து, நாங்களும், அங்கிருந்த முதலைகளும் சுதாரிப்பதற்குள், “ எங்கள் வழி தனீ வழி” என்று ஆற்றைக் கடக்க ஆரம்பித்தன. 

நான் அந்தப் புழுதிப் படலத்தைப் பார்த்தவுடனேயே, என் கேமராவை எடுத்து செட்டிங் எல்லாம் மாற்றி தயார் நிலையில்வைத்திருந்ததால், காரை பார்க் பண்ணுவதற்கு முன்னரே தடதடவென்று க்ளிக்க ஆரம்பித்து விட்டேன். அந்த அதிகாலையில், புழுதிப் படலத்துக்குள் அவை ஓடி வரும் காட்சி பழைய “ மெக்கெனஸ் கோல்ட்” படத்தின் க்ளைமேக்ஸை நினைவுபடுத்த, நான் நினைத்தபடியே சில படங்கள் வந்திருந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இது அனைத்தும் ஓரிரு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டன. அனைத்து உயிர்களும் பாதுகாப்பாக ஆற்றைக் கடந்து, மறுகரைக்கு ஓடி விட்டன. 

இதற்கிடையில் ஒரு நாலைந்து கிலோமீட்டரில், ஆற்றின் ஒரு கரையில் ஏராளமான விலங்குகள் ஆற்றைக் கடக்க இருக்கின்றன என்னும் தகவல் வர, அந்த இடத்தை நோக்கி விரைந்தோம். 

அதிகாலை என்பதால், நிறைய கார்கள் வந்திருக்கவில்லை. Animal Planet இன் Scouting Car ஒன்றுக்கு அருகில் வசதியாக காரை நிப்பாட்டி விட்டு, காத்திருக்க ஆரம்பித்தோம். நூற்றுக் கணக்கில் இருந்த விலங்குகள் , ஆயிரக்கணக்காக மாற ஆரம்பித்தன. நான் என் இரண்டு கேமராக்கள், மற்றும் ஃபோன் என்றும் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தேன். 

இதற்கிடையில் எங்களுக்கு வலது கைப் பக்கம் இரண்டு நீர் யானைகள், தண்ணீருக்குள் சண்டை போட ஆரம்பித்தன. நான் அவற்றை படம் எடுக்க ஆரம்பித்தேன். முதலில் விளையாட்டு சண்டையாகத் தொடங்கிய ஃபைட், நேரம் செல்லச் செல்ல சீரியஸாக அடித்துக் கொள்ளத் தொடங்கின. பார்த்தால், அம்பையர் போல ஒரு பெண் நீர்யானை அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அந்தச் சண்டையில் , புஷ்டியாக இருந்த ஒரு நீர் யானை ஜெயித்து, அதைக் கொண்டாடும் விதமாக, சற்றும் தாமதிக்காமல் அந்தப் பெண் நீர் யானையை “கூட” ஆரம்பித்தது. அனைத்தையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டே, அவ்வப்போது ரிவர் க்ராஸிங்கையும் கவனித்துக் கொண்டேயிருந்தேன்.

நேரம் போய்க் கொண்டேயிருந்ததே தவிர அவை க்ராஸ் பண்ணுவது போல் தெரியவில்லை. ஆனால், எண்ணிக்கை மட்டும் கன்னா பின்னாவென்று அதிகரித்துக் கொண்டே போயிற்று. எனக்கோ, முதுவலி பின்னத் தொடங்கிற்று. அவ்வப்போது காருக்குளேயே படுத்துப் படுத்து எந்திரித்தேன்.

அங்கே காத்திருக்கவும் முடியவில்லை. திரும்பிச் செல்லவும் மனமில்லை. ஒவ்வொரு முறை திரும்புவோம் என்று முடிவு செய்யும்போதும், ஏதாவது ஒரு சலசலப்புத் தோன்றி என் முடிவை மாற்ற வைத்தது. ஆனால், க்ராஸிங் நடக்கவில்லை. இதற்குள் மணி இரண்டாகி விட்டது. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. 

சாமி அருகில் இருந்த வண்டி டிரைவரிடம் மசாய் மொழியில் ஏதோ சொல்ல, அந்த வண்டியிலிருந்து சாண்ட்விச், பார்பெக்யூ சிக்கன், பழம், கூல்ட்ரிங்ஸ் எல்லாம் நொடியில் வந்தது. ஆம். இதுவும் அங்கு ஒரு வழக்கம். நீண்ட நேரம் காத்திருக்கும்போது ஒவ்வொரு வண்டியில் உள்ளவர்களும், உணவு கொண்டு வராதவர்களுக்கு தங்களிடம் உள்ளதைக் கொடுத்து ஷேர் செய்து கொள்வார்கள். 

எனக்கிருந்த பசிக்கு, ஃபார்மாலிட்டிக்குக் கூட “வேண்டாம்” என்று சொல்லத் தோன்றவில்லை. வாங்கிய அனைத்தும் உள்ளே சென்றவுடன்தான் உயிரே வந்தது. சாப்பிட்டு விட்டு வண்டிக்குளேயே ஒரு தூக்கம் போட்டேன். ஒரு நாலு மணி இருக்கும். பெரிய அளவில் சலசலப்புத் தெரிந்தது.

மிகச் சரியாக 9 மணி நேரம் காத்திருத்தலுக்குப் பிறகு அவை, க்ராஸ் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தன. என்னுடைய 25 வருட கானக அனுபவத்தில் இதுவே அதிக நேரம் காத்திருந்த அனுபவம். எங்களை விட அங்கிருந்த முதலைகள் ரெஸ்ட்லெஸ் ஆகியிருந்தன. 

துரதிர்ஷ்டவசமாக லைட்டிங் போயிருந்தது. அவை க்ராஸ் பண்ணப் போகுமிடத்தில் Backlighting தான் இருந்தது. 9 மணி நேரம் காத்திருந்தும், லைட்டிங் காலை வாரி விட்டது மனதிற்குக் கஷ்டமாக இருந்தாலும், இருப்பதை வைத்து எடுப்போம் என்று எடுக்கத் தொடங்கினேன். 

முதலில் மெதுவாக ஆரம்பித்த க்ராஸிங் , நேரம் ஆக ஆக அசுரவேகத்தில் க்ராஸ் பண்ணத் தொடங்கியது. 4 மணிக்குத் தொடங்கிய க்ராஸிங், முடியும்போது நெருக்கி ஐந்தரை மணியாகி இருந்தது. ஒன்றரை மணி நேரம் தொடர்ச்சியான க்ராஸிங். கண்டிப்பாக அந்த வருடத்தின் மிகப்பெரிய க்ராஸிங் அதுதான் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்.

அந்த ஒன்றரை மணி  நேரத்தில்தான் எத்தனை எத்தனை கண்ணீர்க் கதைகள். எத்தனை எத்தனை ஆணவக் களியாட்டங்கள். 

ஒரு வரிக் குதிரைத் தாய், அதனைத் தொடர்ந்த அதன் குட்டி. மெதுவாகவே க்ராஸ் பண்ணியது. அதனை ஒரு படம் எடுத்தேன். எங்கிருந்தோ ஒரு முதலை படு வேகமாக அந்தக் குட்டியை நெருங்க, அந்தத் தாய் அதை விட வேகமாக, தன்னுடைய குட்டியை முன்னுக்குத் தள்ளி விட்டு பின்னால் செல்லத் தொடங்கியது. அது நினைத்தாற் போலவே, குட்டி தப்பித்துக் கொள்ள, அதன் கண் முன்னாலேயே அந்தத் தாய் இரையானது. 

இது நடந்து சிறிது நேரத்திலேயே, கும்பலாக சில வரிக்குதிரைகளும், வில்ட பீஸ்ட்களும் க்ராஸ் பண்ணி வெற்றிகரமாக மறு கரையை எட்ட, கடைசி நேரத்தில்தான் அந்த வரிக்குதிரைத் தாய் தன் குட்டியைக் காணவில்லை என்பதைக் கண்டறிந்தது. கொஞ்சம் கூட பயப்படாமல், நாலைந்து முதலைகள் அந்தக் குட்டியை குதறிக் கொண்டிருந்த இடத்திற்கே திரும்பச் சென்று தன் குட்டியைக் காப்பாற்ற முயற்சித்ததை வாழ்க்கையிலும் மறக்க இயலாது. வருத்தத்துடன் அதனையும் படம் எடுத்தேன்.

நிறைய வில்ட பீஸ்ட்களும் ஒன்றன்பின் ஒன்றாக உயிரை விட்டன. அதிலும் ஒரு வில்ட பீஸ்ட், ஒரு முதலையிடம் பிடி பட்ட பின், மரணம் உறுதி என்று புரிந்தவுடன், அதன் கண்களில் தெரிந்த மரண பீதியை வாழ்க்கையிலும் மறக்க முடியாது. லைட்டிங் குறைவாக இருந்தாலும், எடுத்து வைப்போமே என்று அதையும் படம் எடுத்தேன்.

இன்னொரு இடத்தில், பிறந்து ஒரு மாதமேயான ஒரு வரிக்குதிரை குட்டி, ஒரு பெரிய முதலையோடு கடும் சண்டையிட்ட வீர காவியத்தையும் காண நேர்ந்தது. என்னால் அதை நம்பவே முடியவில்லை. கடைசியில் அதுவும் அந்த முதலைக்கு இரையானது. 

முதலைகளுக்கு நாக்கின் அசைவுகள் மிகவும் குறைவு. அவற்றால் மற்ற விலங்குகள் போல நாக்கை வைத்து இஷ்டத்துக்கு வளைக்கவோ, இரையை குதறவோ முடியாது. அதனால், இன்னொரு முதலையோடு சேர்ந்து செமத்திக்கு டீம் வொர்க் பண்ணும். ஒரு முதலை இரைய நன்றாக கவ்விக் கொண்டு ஒரே இடத்தில் இருக்கும். இன்னொரு முதலை இரையின் மறு பக்கத்தை ஸ்ட்ராங்காகக் கடித்துக் கொண்டு , தன் ஒட்டு மொத்த உடலையும் கன்னா பின்னாவென்று சுழற்றும். அப்போது அந்த இடமே ஒரு போர்க்களம் போல் இருக்கும். அந்த அழுத்தம் தாங்காமல் இரை சுக்கல் சுக்கலாக கிழிந்து தொங்க ஒவ்வொன்றும் தன் பங்கு இரையை முழுங்குகின்றன. 

வேட்டையாடும்போது சிங்கம் , சிவிங்கிப் புலி போன்றவை பயங்கரமாக டீம் வொர்க் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இரையை உண்ணும்போது First Come, first served basis தான். அவைகளுக்குள்ளாகவே டம் டும்மென்று அடித்துக் கொள்ளும்.

ஆனால், முதலைகள் இரை உண்ணும்போது டீம் வொர்க் செய்வது ஆச்சரியமாக இருந்தது. கன்னா பின்னாவென்று ஷூட்டித் தள்ளி விட்டேன். 

இதற்குள் மணி ஆறை நெருங்க, அந்த இடத்தை விட்டுக் கிளம்பினோம். ஹோட்டலுக்குப் போய் நன்றாக ஒரு குளியல் போட்டு விட்டு, செஃபிடம் சொல்லி  மிளகு ரசமும், முட்டைப் பொறியலும் செய்து தொட்டுக்கொள்ள சிக்கன் மசாலாவுடன் செம சாப்பாடு.

மறு நாள் காலை நைரோபி கிளம்புவதற்கு முன்னர் ஒரு மார்னிங் டிரைவ் போவோமா என்று சாமி கேட்க, நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் “ போதும் சாமி” என்றேன் கையெடுத்து கும்பிட்டு – அவ்வளவு சோர்வு. அது மட்டுமல்லாது அந்த ஹோட்டலிலிருந்து நைரோபி 7 மணி நேர டிரைவ். போதும் போதும் என்றாகி விட்டது.

நைரோபி சென்ற மறு நாள் நைரோபி ஹாஸ்பிட்டல் சென்று MRI எடுத்துப் பார்க்க, L4 மற்றும் L5 டிஸ்க்குகள் எக்குத்தப்பாக வீங்கி தங்கள் இடத்தை விட்டு நகர்ந்து அருகில் உள்ள இரண்டு நரம்புகளை தொட்டுக் கொண்டிருந்தன. அன்றே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி 10 நாட்கள் இருந்து ட்ரீட்மெண்ட் எடுத்து வீடு திரும்பினேன்.

வீட்டிற்கு வந்தபின்னர் எடுத்த படங்களையும், வீடியோக்களையும் பார்க்கும் போது பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பறந்து விட்டன. 

இனி அடுத்த ட்ரிப் மாரா செல்லும்வரை, இந்த மாரா ஓர் மந்திரலோகம் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வருகிறது.

இதுவரை இந்தத் தொடரை வாசித்து, ரசித்து என்னை ஊக்குவித்த  நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

விரைவில் அடுத்த தொடரில் சந்திக்கிறேன்.

நன்றி. வணக்கம்.

வெ.பாலமுரளி 

பி.கு: தவறாமல் இங்குள்ள அனைத்துப் படங்களையும் பாருங்கள். இந்த டைரி தெளிவாகப் புரியும்.