மாரா ஓர் மந்திரலோகம் – 7
இன்று மாராவில் ஏழாவது நாள்.
நான் முன்பே சொன்னது போல், மொத்தம் மூன்று ஹோட்டல்களில், மூன்று மூன்று நாட்கள் தங்குவதாக ப்ளான். அதன்படி, இன்று நான் “ மாரா ஈடனை” காலி பண்ணி விட்டு “ கீச்வா டெம்போ” என்னும் ஹோட்டல் செல்ல வேண்டிய நாள்.
கீச்வா டெம்போ மாராவின் மறுபக்கத்தில் உள்ள ஒரு அட்டகாசமான நட்சத்திர விடுதி. ஆனால், மாரா ஈடனிலிருந்து ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரம்.
காலையில் இங்கிருந்து நேரே அங்கு சென்று செக் இன் பண்ண நினைத்தால், காலைப் பொழுதும் போய் விடும் நல்ல லைட்டிங்கும் போய் விடும். எனவே, காலை சிற்றுண்டியை முடித்து விட்டு “மாரா ஈடனில்” ரூமை காலி பண்ணி விட்டு,லக்கேஜை காரில் போட்டு விட்டு, மார்னிங் சஃபாரியை முடித்துக் கொண்டு மதிய லஞ்ச் டயத்தில் “கீச்வா டெம்போ” சென்று செக் இன் பண்ணிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.
என்னவோ நீண்ட நாள் பழகிய நண்பர்கள் போல், அங்குள்ள பணியாளர்களும், மேலாளர்களும், “ We miss you Bala. We miss you Bala” என்று ஒவ்வொருத்தராக வந்து சொல்லி விட்டுச் சென்றார்கள். இது அங்கு ஒரு வழக்கம். அவர்கள் அப்படிச் சொல்லும்போது, அதை ஒரு ஃபார்மாலிட்டிக்காகச் சொல்லாமல், உள்ளார்த்தமாக சொல்வார்கள். முகத்திலேயே அந்த வருத்தம் தெரியும்.
நானும் அதே வருத்தத்துடன் மாரா ஆற்றின் மீதிருந்த என்னுடைய டெண்ட்டையும், மாரா ஈடனையும் விட்டு கிளம்பினேன்.
முதுகு வலி மிகவும் தீவிரமடைந்து விட்டதால், காலை லேட்டாகத்தான் எழுந்தேன். கிளம்பும்போதே மணி ஏழரை ஆகி விட்டது.
ஒரு எட்டு மணி வாக்கில், அந்த ஒற்றை ஆண் சிங்கத்தைப் பார்த்தோம். ஒரு புல்வெளியில் தனியாக சென்று கொண்டிருந்தது. அது சென்ற திசையில் ஒரு மண் மேடு இருந்தது. வழக்கம்போல், நான் கனவு காண ஆரம்பித்து விட்டேன், அது அந்த மண்மேட்டில் போய் உட்கார்ந்து கொண்டு எனக்கு போஸ் கொடுப்பதைப் போல்.
பொதுவாக சிங்கிப் புலி (சீட்டா) தான் அந்த மாதிரி மண் மேட்டில் போய் உட்காரும். “ பாவம், இவன் முதுகு வலியோடு நம்மை ஃபோட்டோ எடுக்க வந்திருக்கிறான்” என்று நினைத்ததோ இல்லை “இவனே இன்னும் இரண்டு நாட்களில் நைரோபி போகப் போகிறான். கொஞ்சம் கோவாப்பரேட் பண்ணுவோம்” என்று நினைத்ததோ தெரியவில்லை.
மிகவும் அழகாக சூரியனைப் பார்த்தாற்போல், அந்த மண் மேட்டின் மீது போய் உட்கார்ந்து கொண்டு “ கமான் பாலா கமான்” என்றது.
நல்ல நேரம் வரும்போது எல்லாம் கூடி வரும் என்பது போல, அந்த இடத்தில் வன அதிகாரிகள் அனுமதிக்கும் “ட்ராக்” ஒன்றும் இருந்தது என் அதிர்ஷ்டம்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்தச் சிங்கத்தை வளைத்து வளைத்து எடுத்தேன். அது நின்றது, கொட்டாவி விட்டது,உட்கார்ந்தது, திரும்பவும் எழுந்து நெளிப்பு விட்டது என்று ஒன்றையும் விடவில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக,நாங்கள் அங்கிருந்த ஒரு மணி நேரமும் வேறு எந்தவொரு காரும் அங்கு வரவில்லை.
ஒரு டயத்தில், போதும் என்று தோன்ற, அங்கிருந்து கிளம்பினோம்.
கிளம்பி சிறிது தூரத்திலேயே “டோப்பி ப்ளேன்” குடும்பத்தைப் பார்த்து காரை நிறுத்தினோம்.
அப்போதுதான், அவை ஒரு வரிக்குதிரையை வேட்டையாடி, கபளீகரம் செய்து கொண்டிருந்தன. அதன் ஆறு குட்டிகளும் அதைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு குட்டி அவ்வப்போது வந்து அந்த வரிக் குதிரையை நக்கி விட்டு சென்றது, அதை அதன் தாய் விரும்பாதது போல் அந்தக் குட்டியை தள்ளி விட்டது ஒரு கவிதை. பால் குடிக்கும் குட்டிகள் இறைச்சியை தின்றாலோ, ரத்தத்தைச் சுவைத்தாலோ ஜீரணப் பிரச்சினை வரும் என்பது அந்தத் தாய்க்குத் தெரிந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.
இது போன்ற நிகழ்ச்சிகள் நிறைய நான் காடுகளில் பார்த்திருக்கிறேன். எப்படி உணவை உண்பது, எப்படி வேட்டையாடுவது, வேட்டையாடுதலை எப்படி திட்டமிடுவது, எப்படி ஓடி ஒளிந்து கொள்வது, எப்படி இரையை மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது என்று குட்டிகளுக்கு ட்ரெயினிங் எடுக்கும். ஆச்சரியமாக இருக்கும். மனிதன் எப்படி இவற்றிற்கு ஐந்தறிவுதான் என்று வரையறுத்திருப்பான் ?
அப்படியென்றால், பெற்ற குழந்தைகளை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு ஓடும் பெண்களுக்கு, பெண் குழந்தைகளை கள்ளிப் பால் வைத்துக் கொல்லும் மக்களுக்கு, காரணமேயில்லாமல் லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்து வைக்கும் பதர்களுக்கு எத்தனை அறிவு ?
சரி…விஷயத்திற்கு வருவோம். அந்தக் குடும்பத்தில் இரு பெண் சிங்கங்கள் ( சகோதரிகள் என்று நினைக்கிறேன்) அவ்வப்போது வந்து ஒன்றையொன்று நக்கிக் கொண்டும், கொஞ்சிக் கொண்டும் இருந்தது அவ்வளவு அழகாக இருந்தது. அதை ஒரு க்ளோசப் ஷாட் எடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில் அவற்றிற்கு தண்ணீர் தவிக்க, மொத்த குடும்பமும் அருகிலுள்ள ஒரு குட்டைக்குச் சென்று தண்ணீர் அருந்தத் தொடங்கின. அம்மா என்ன செய்தாலும் குட்டிகளும் அதை அப்படியே பின்பற்றும். அப்படி அம்மா பின்னால் சென்ற குட்டிகளில் ஒன்று மட்டும் அங்கிருந்த சேற்றில் வகையாக மாட்டிக் கொண்டது.
முதலில் அதை அம்மா பார்க்கவில்லை. தண்ணீர் குடித்து முடித்து விட்டு அருகில் இருந்த ஒரு மர நிழலை நோக்கி மொத்தக் குடும்பமும் நடக்க ஆரம்பித்தன.
சேற்றில் மாட்டிக் கொண்ட குட்டிக்கோ செம டென்ஷன். முகத்தை கர்ண கடூரமாக வைத்துக் கொண்டு கர்ஜிக்க நினைத்து ஒரு சவுண்ட்டு விட்டது. ஆனால், வெளியில் வந்ததோ “மியாவ்” என்ற சத்தம்தான். அந்த சத்தம் அம்மாவிற்குக் கேட்காதலால் திரும்பத் திரும்ப “மியாவ், மியாவ்” என்று கத்தத் தொடங்கியது. பார்ப்பதற்குக் கொள்ளை அழகாக இருந்தது. அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்ததில், அதை ஃபோட்டோ எடுக்கத் தவறி விட்டேன்.
நான் கேமராவை எடுத்து செட்டிங் செக் பண்ணுவதற்குள் அம்மா சிங்கம் வந்து தன் வாயால், அந்தக் குட்டியைக் கவ்வி,அந்த சேற்றிலிருந்து வெளியில் எடுத்து, வாயில் கவ்விக் கொண்டே அந்த மர நிழலுக்குச் சென்று விட்டது. இது அனைத்தும் கண் மூடி கண் திறக்கும் நேரத்துக்குள் நடந்து விட்டது. இவையனைத்தும் நானிருந்த திசைக்கு எதிர்த் திசையில் நடந்ததால், நான் நினைத்த அளவுக்கு ஃபோட்டோ எடுக்க இயலவில்லை. லைட்டிங்கும் ரொம்பவும் ஹார்ஷாக மாறி விட்டது.
Something is better than nothing என்று என் மனசை தேற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி “கீச்வா டெம்போ” ஹோட்டலை நோக்கிப் பயணித்தோம். கீச்வா டெம்போ மாரா ஆற்றின் மறு புறம், தான்சானியா பார்டரை ஒட்டி உள்ள ஒரு அமர்க்களமான ஹோட்டல். நாங்கள் இருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பயணித்தோம் அங்கு செல்வதற்கு.
மாராவில் உள்ள அதி அற்புதமான ஹோட்டல்களில் கீச்வா டெம்போவும் ஒன்று. அங்கு எடுத்த சில ஃபோட்டோக்களை இங்கு பதிவிட்டுள்ளேன். ஹோட்டலை விட அவர்களின் விருந்தோம்பல் அசத்தல். நாங்கள் சரியாக லஞ்ச் டயத்திற்கு அங்கு சென்றோம். போவதற்கு முன்னாலேயே, மதிய உணவிற்கு என்ன வேண்டும் என்று சொல்லி விட்டதால், போய் உட்கார்ந்தவுடனேயே அனைத்தும் வந்து விட்டது.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, அங்குள்ள எக்ஸிக்யூட்டிவ் செஃப் வந்து, சாப்பாடு எப்படியுள்ளது, ஸ்பெஷலாக ஏதாவது செய்து தரட்டுமா என்று கேட்டார். இது அங்குள்ள அனைத்து ஹோட்டல்களிலும் உள்ள வழக்கம். நான் ஃபர்மாலிட்டிக்குத்தானே கேட்கிறார் என்ற எண்ணத்தில் “ நோ தாங்க்ஸ்” என்றேன். அவர் விடாப்பிடியாக “ஏதாவது கேளுங்கள் செய்து தருகிறேன்” என்று அன்புடன் வற்புறுத்த, நான் கிண்டலாக “ சாம்பார் செய்து தர இயலுமா ?” என்றேன். அவர் சற்றும் யோசிக்காமல், “ கண்டிப்பாக. இன்று இரவு டின்னர் உங்களுக்கு சாம்பார்தான்” என்றார் கண்ணடித்துக் கொண்டே.
நான் சற்றே நிமிர்ந்து,” சாம்பார், செய்யத் தெரியுமா ? முன்பே செய்திருக்கிறீர்களா ?” என்றேன் ஆச்சரியமாக. “ Not really. But I do have youtube” என்று சொல்லி சிரித்து விட்டுப் போய் விட்டார். நான்கூட அவர் ஏதோ ஜோக் அடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டு எழுந்து ரூமிற்குச் சென்று விட்டேன். அதை சுத்தமாக மறந்தும் விட்டேன்.
கொஞ்ச நேரம் ரூமில் ரெஸ்ட் எடுத்து விட்டு, ஒரு நாலு மணி வாக்கில் எழுந்து ஒரு டீ குடித்து விட்டு ஈவினிங் சஃஃபாரி கிளம்பினோம்.
மாரா ஆற்றின் இந்தக் கரையிலிருந்து மைக்ரேஷனைப் பார்ப்பது கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திராத பிரமாண்டமான அனுபவம்.
எங்கள் ஹோட்டலிலிருந்து ஒரு 15 நிமிட டிரைவில் மாரா ஆற்றின் ஒரு கரைக்கு வந்து விட்டோம். நாங்கள் அங்கு போகும்போதே ஏராளமான வரிக்குதிரைகளும், வில்டபீஸ்ட்டுகளும் எனக்காகக் (?????) காத்துக் கொண்டிருந்தன. வெறும் நாலைந்து கார்கள் மட்டுமே அங்கு இருந்ததால், நாங்களும் அழகான ஒரு இடத்தைத் தேர்வு செய்து காத்திருக்க ஆரம்பித்தோம் (மைக்ரேஷன் டயத்தில் நல்ல பொசிஷனில் காரை பார்க் செய்ய இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு).
சிறிது நேரத்தில் எங்கிருந்து வந்தன என்றே தெரியவில்லை, கொய் மொய் கொய் மொய்யென்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள், முக்கியமாக வரிக்குதிரையும், வில்டபீஸ்ட்டும் வந்து சேர்ந்து கொண்டன. எனக்கா, வழக்கம்போல் ஹார்ட் பீட் எகிறத் தொடங்கியது.
அவை மெதுவாக ஆற்றில் இறங்கி தண்ணீர் குடிப்பது போல் நோட்டம் விட ஆரம்பித்தன. அது தெரியாமல், இரண்டு முதலைகள் வெகு வேகமாக அவற்றை நோக்கி நீந்தி வர, அனைத்து விலங்குகளும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று திரும்பி ஓட ஆரம்பித்தன. புழுதி பறக்க அவை ஓடுவதை “ வட போச்சே” ஃபீலிங்கோடு சில படங்கள் எடுத்தேன்.
“அடுத்து என்ன செய்வது?” என்றேன் சாமியிடம். “காத்திருப்போம்” என்றான் சாமி. நாங்கள் ரொம்ப நேரமெல்லாம் காத்திருக்கவில்லை. ஒரு பத்து நிமிடத்திலேயே அவை திரும்பி வந்தன. வந்து சிறிது நேரத்திலேயே நோட்டம் விடுவது போல கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் முன்னேற ஆரம்பித்தன. முதலைகள் ஒன்றும் நெருங்காதலால், திடீரென்று அசுர வேகத்தில் ஆற்றைக் கடக்க நீந்த ஆரம்பித்தன.
பொதுவாக, ஒரு செட் விலங்குகள் தண்ணீருக்குள் இறங்கி நீந்த ஆரம்பித்து விட்டால், மற்றவை அனைத்தும் கண்ணை மூடிக் கொண்டு அவற்றை பின்பற்றத் தொடங்கி விடும். அதனால்தான், முதலைகள் சிறிது நேரம் கழித்தே தங்களுடைய மெயின் விளையாட்டை ஆரம்பிக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.
முதலில் ஒரு நூறு க்ராஸ் பண்ணும் வரை சிறிது தூரத்தில் காத்திருந்து விட்டு , ஒன்றன் பின் ஒன்றாக அவை படையெடுக்க ஆரம்பித்தன.
இந்த முறை ஓரளவிற்கு பெரும்பாலான விலங்குகள் தப்பித்துக் கொண்டாலும், ஒரு வரிக் குதிரைக் குட்டியும், ஒரு வில்ட பீஸ்ட் குட்டியும் வசமாக மாட்டிக் கொண்டு தங்கள் உயிரை ஈத்தன.
அதிலும் அந்த வரிக்குதிரை குட்டி போராடியதை வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாது. சில ஃபோட்டோக்களும், வீடியோக்களும் எடுத்து விட்டு கனத்த இதயத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றோம்.
இதற்குள் வெளிச்சம் குறையத் தொடங்கியிருந்தது.
ஏனோ நாங்கள் இருந்த பகுதியில் நிறைய விலங்கள் தென்படாமல் ஒரு மாதிரி ட்ரையாக இருந்தது.
சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல், சுற்றிக் கொண்டேயிருந்தோம்.
அந்த சமயத்தில் ஒரு யானைக் குடும்பமும், ஒரு ஒற்றை ஒட்டகச் சிவிங்கியும், Wattled Plover என்னும் பறவை ஒன்றும் வந்து எனக்கு போஸ் கொடுக்க, படங்களை அள்ளி விட்டேன். அதிலும் அந்த ஒற்றை ஒட்டகச் சிவிங்கியும், ப்லோவர் பறவையும் செமத்திக்கு போஸ் கொடுத்தன.
சந்தோஷமாக ஹோட்டலுக்குத் திரும்பினேன்.
போய் ஒரு குளியலைப் போட்டு விட்டு, இரவு உணவு எடுக்க டைனிங் ஹாலுக்குப் போனால், எனக்கு ஒரு மெசேஜ் காத்திருந்தது “ Please wait – Executive Cheff “ என்று. அப்போதுதான் அந்த சாம்பார் மேட்டர் ஞாபகம் வந்து வயிற்றில் லேசாகப் புளியைக் கரைத்தது. ஆஹா…தப்புப் பண்ணிட்டியேடா பாலா என்று என் உள் மனசு சொல்ல, ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் ஒரு உணர்வு.
நம்ம வைரமுத்து சொன்னது போல “ வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் உருவமில்லாத உருண்டை ஒன்று உருள” ஆரம்பித்தது. “எனக்கு முதுகு வலிக்கிறது, இருப்பதை சாப்பிட்டு விட்டு போகிறேன், செஃபிடம் சொல்லி விடுங்கள்” என்று “ சாம்பார் “விடு”ம் தூது” ஒன்று அனுப்பினேன்.
“அதெல்லாம் வேண்டாம் , இதோ வந்து விட்டேன் என்று போய் சொல்லு” என்று அவர் பதில் தூது விட, “இவெய்ங்கெ நம்ம மதுரைக்காரெய்ங்கெள விட பாசக்காரப் பயலுகளா இருக்காய்ங்கெளே” என்று நொந்து போய் உட்கார்ந்திருந்தேன்.
அந்த செஃப் நம்ம எஸ்.வி.ரங்காராவ் போல ஆஜானுபாகுவான தோற்றம். அந்த உருவத்துடன் கையில் ஒரு கண்ணாடி பௌலில் சாம்பாரைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டார். அத்துடன் எனக்காக ஸ்பெஷலாக வெண்டைக்காய் மசாலாவும் ( இந்த பிண்டி மசாலா அங்கு ஹோட்டலில் வேலை செய்யும் ஆப்பிரிக்கர்கள் நிறைய பேருக்கு நன்றாகவே செய்யத் தெரியும்), நம்ம ஊர் ஸ்டைலில் உருளைக்கிழங்கு பொறியலும் செய்து கொண்டு வர நான் அசந்து விட்டேன்.
சும்மா சொல்லக் கூடாது. சாம்பார் செம டேஸ்ட். என்னையறியாமல் என் கண்ணில் நீர் வழிய, மனுஷன் பதறி விட்டார் பதறி. “என்னாச்சு, காரம் கூடவா?” என்றார். “இல்லை இல்லை இது, Joyful Tear” என்றவுடன்தான் அவருக்கு மூச்சே வந்தது.
இப்படித்தான் கென்யர்கள், அதுவும் ஹோட்டலில் நம்மை சந்தோஷப்படுத்த என்ன கேட்டாலும் அவர்களுக்கு தெரிந்த வரையில் செய்து அசத்துவார்கள். சாம்பார் சாதத்தை ஒரு புடி புடித்து விட்டு ரூமிற்கு வந்தால் இன்னொரு ஆச்சரியம்.
ஒரு 30 வயது தக்க இளைஞன், “நான் Dr. தாமஸ், Ortho Specialist. உங்களுக்கு முதுகு வலி என்று கேள்விப்பட்டேன். With your permission, கொஞ்சம் ஃபிஸியோதெரப்பி செய்து விடவா” என்று கேட்க எனக்கு சந்தோஷத்தில் மயக்கமே வந்து விட்டது. நான் முன்பு தங்கியிருந்த மாரா ஈடன் ஹோட்டல் மேனேஜர் இந்த ஹோட்டலுக்கு முன்பே தகவல் சொல்லி ஒரு டாக்டரை அரேஞ்ச் பண்ணியிருந்த விபரம் அறிந்து நெகிழ்ந்து விட்டேன்.
அவர் செய்த ஒரு மணி நேர ஃபிஸியோ தெரப்பியில், எனக்கு செம ரிலீஃப். அன்று எடுத்த ஃபோட்டோக்களில் சிலவற்றை மட்டும் எடிட் செய்து விட்டு, கேமரா, லென்ஸ் அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு, ஃபோட்டோ, வீடியோ அனைத்தையும் பேக்அப் எடுத்து விட்டு, ஒரு டம்ளர் பாலை அருந்தி விட்டு தூங்கச் சென்றேன்.
நல்ல அசந்த தூக்கம்.
வெ.பாலமுரளி.