முள்றியின் டைரி : 70 திரும்பிப் பார்க்கிறேன்….

இன்றுடன் (10.04.2021) எனக்க 29 வயது முடிந்து 30 தொடங்குகிறது. I am excited.

நான் சமீப காலமாக இந்தத் திரும்பிப் பார்க்கும் வேலையை செய்வதில்லை. ஏனென்றால், திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து ஒண்ணுமே சாதிக்காதது ரொம்பவே மனசை உறுத்துது.

எங்க ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாய்ங்கெ. நாய்க்கு நிற்பதற்கும் நேரமில்லை, செய்வதற்கும் சோலி இல்லைன்னு. அது போலத்தான் நம்ம பொழப்பும். 

டயம் செம ஃபாஸ்ட்டா ஓடுது. ஆனா சுத்தி முத்தி பார்த்தா துருப்புடிச்ச ஆணி கூட ஒண்ணத்தையும் காணோம். என்னத்தை ப்ளக் பண்ணினேன்னு சத்தியமா புரியலை.

கென்யாவில் இருக்கும்போதாவது அப்பப்ப அம்போசலி, மசை மாரான்னு போய் ஏதாவது ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருப்பேன். இந்தியா வந்து அதுவும் போச்சு.

சரி…ஏதாவது படிப்போம்னு டிப்ளமோ இன் ஆர்க்கியாலஜி சேர்ந்தேன். அங்க இன்னும் என்னை பெஞ்ச் மேல மட்டும்தான் ஏத்தலை. மற்ற அனைத்தும் நடக்கிறது. அசைன்மெண்ட் அசைன்மெண்ட்டுன்னு ஒண்ணு கொடுக்குறாய்ங்கெ.  அப்படின்னா என்னங்கய்யான்னு எங்கள் பேராசிரியர்கிட்ட ஃபோன் பண்ணி கேட்டால், அவர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து விட்டார். நேரே மட்டும் போயிருந்தால் ‘அடி ஸ்கேலால்’  அடி வெளுத்திருப்பார் மனுஷன். ஜஸ்ட்டுல எஸ்கேப்பு. 

இன்னும் ஓரிரு மாதங்களில் முழுப் பரிட்சையாம். இன்னும் படிக்கவும் ஆரம்பிக்கலை, அசைன்மெண்டும் எழுத ஆரம்பிக்கலை, ப்ராஜக்ட்டும் செய்ய ஆரம்பிக்கலை. ஆனால், “ ஆத்தா நான் பாஸாயிட்டேன்னு “ ஸ்டேட்டஸ் மட்டும் செய்து ரெடியா வச்சிருக்கேன் ( ஒரு வேளை பாஸாயிட்டா ஃபேஸ் புக்குல போடணும்ல….எப்பூடி).

கடந்த ஒரு வருஷத்துல பெரிய சந்தோசம்னா , ரொம்ப நாள் கழித்து கண்டுபிடித்த என் உயிர் நண்பர்கள். அதுகூட நான் கண்டு பிடிக்கலை. இந்த ஏழரையை  நம்பி பிரயோஜனமில்லைன்னு அவெய்ங்கெளாத்தான் கண்டு புடிச்சாய்ங்கெ.

அதிலும் கனேசன் மற்றும் அவன் குடும்பத்தாருடன் கோத்தகிரி சென்றதும், ரமேஷ் மற்றும் மனோகருடன் தேவகோட்டையை சுற்றியதும் அற்புதமான அனுபவங்கள் ( ஒரே உருப்படியான வேலை).

யூட்யூப் ஆரம்பிக்கோணும்னு ரொம்ப நாள் ஆசை. தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தேன். காரணம், நான் யூட்யூப் ஆரம்பித்தவுடனேயே, 4 லட்சம் 5 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் இணைந்து விடுவார்கள். அவர்களையெல்லாம் சம்தோஷப்படுத்த அடிக்கடி வீடியோ போட வேண்டும். முடியுமா என்ற சந்தேகம்.

ஒரு கட்டத்தில் , துணிந்து ஒரு யூட்யூப் சேனல் தொடங்கி விட்டேன். முதல் நாள் 10 சப்ஸ்க்ரைபர்ஸ். என் மனைவியும் மகளும் பொறுமை பொறுமை என்றார்கள். ஒரு வாரத்தில் 100 சப்ஸ்க்ரைபர்ஸ். அப்புறம் ஒண்ணும் ஏறக் காணோம்.

வெயிட் பண்ணி வெயிட் பண்ணி என்னுடைய கடைசி ஆயுதங்களான சாம, பேத , தண்டத்தை கையிலெடுத்தேன் ( அதாங்க….ஸ்ட்ரெயிட்டா காலில் விழுந்து விடுவது). 23 ம் புலிகேசி படத்தில் வருவது போல, ச்சீ என்னடா கருமம், இவ்வளவு கீழே விழுந்து விட்டானே என்று பாவப்பட்டு இன்னும் கொஞ்சம் பேர் சேர இப்போது நெருக்கி 400 சப்ஸ்க்ரைபர்ஸ். நான் கனவு கண்ட இலக்கான 4 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் இந்த ஜென்மத்தில் சான்ஸ் இல்லை என்று தெரிந்து விட்டதனால் கொஞ்சம் ஸ்லோ பண்ணி விட்டு படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன்.   

ம்ம்ம்ம்…வேறென்ன செய்தேன்……வேறென்ன செய்தேன் ????

( சரி விடு…சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும் ).

மற்றபடி, வாழ்த்திய, வாழ்த்தப் போகும் அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.

எனக்கு செயின், மோதிரம், கையில் காப்பு என்று ஏராளமான பரிசுகள் கொடுத்து என்னை நம்ம ஹரி நாடார், தவில் வித்வான் ரேஞ்சுக்கு ஆக்கிய என் மனைவி மற்றும் மகளுக்கு நன்றிகள் கோடி ( நான் திரும்ப கென்யா போய் விடக் கூடாது என்பதற்கு லஞ்சம்). 

வெ.பாலமுரளி