முள்றியின் டைரி – 69

2020 – இழந்ததும் + கற்றதும் + பெற்றதும்

2020, சோதனை சூழ்ந்த ஒரு வருடம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது. பாழாய்ப் போன கொரோனா உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. எத்தனை மரணங்கள், எத்தனை வேதனைகள், பசி, பட்டினி,நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்த அவலங்கள், எரிகின்ற வீட்டில் புடுங்கும் வரை லாபம் என்று இந்த நிலையிலும் கொள்ளை அடித்த பிணந்திண்ணி கழுகுகள் என்று 2020 யாராலும் மறக்க முடியாத ஒரு வருடமாக முடிகிறது. 

எனக்கும் இந்த ஆண்டு மறக்க முடியாத ஒரு ஆண்டு. எனக்கும் இழப்புகள் சில இருந்தாலும், கற்றதும் பெற்றதுமே அதிகம்.

கிட்டத்தட்ட 33 வருடங்கள் கழித்து இந்தியா வந்து செட்டில் ஆகும் எண்ணத்துடன் டிசம்பர் 15, 2019 இல் இந்தியா வந்து இறங்கினேன். 

கென்யாவில் என்னை பயமுறுத்தாத நண்பர்கள் கிடையாது. என்னால் இந்தியாவில் வந்து செட்டில் ஆவது கடினம்,பேசாமல் கென்யாவிலேயே வாழ்க்கையைத் தொடரச் சொல்லி பிரியத்துடன் வற்புறுத்தியவர்களே அதிகம். நிறைய குழப்பங்கள், நிறைய பயத்துடன்தான் வந்திறங்கினேன்.

எங்கிருந்து தொடங்குவது, என்ன செய்வது, நமது நாட்டில் எல்லோரும் ஓடிக் கொண்டே இருப்பார்களே, அவர்களுடன் ரிலே ரேஸில் சேர்ந்து ஓட ஒரு சின்ன அவகாசம் தேவைப் படுமே, அந்த அவகாசம் கிடைக்குமா என்று குழப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. 

கொரோனா புண்ணியத்தால் ( ????) எனக்கு அந்த அவகாசம் நிறையவே கிடைத்தது ஒரு ஆறுதல்.

இழந்தவை :

இரண்டு நெருங்கிய சொந்தங்கள், ஒரு நெருங்கிய நண்பர், என் வாழ் நாள் முழுவதும் சேர்ந்து பயணித்த பாடகர் என்று இந்த நால்வரின் இழப்பு ஒரு மாபெரும் துயரம்.

அதிலும் அந்த நண்பரின் மரணத்தையும், பாட்டுத் தலைவனின் மரணத்தையும் இன்று வரை ஜீரணிக்க முடியாமல் அவதிப் படுகிறேன். 

என்னுடைய நண்பர்தான் மதுரையில் நாங்கள் வசிக்கும் வீட்டை கட்டிக் கொடுத்தது. அவர் மருத்துவமனையில் சேர்ந்த முதல் நாள் தற்செயலாகத்தான் நான் அவருக்கு ஃபோன் பண்ணினேன். தனக்கு கொரோனா என்றும் தானே வந்து அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ந்து விட்டதாகவும் சொன்னார். பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. மருத்துவமனையை விட்டு வெளியேறி வீட்டிற்கு வந்து சித்தா எடுத்துக் கொள்ளலாமே என்று எவ்வளவோ சொன்னேன். “எனக்கு ரொம்ப ஆரம்ப ஸ்டேஜ் முரளி. நாலே நாளில் வீட்டிற்கு வந்து விடுவேன்” என்று மிகவும் கேஷுவலாக சொன்ன அந்த நண்பரிடம் அதற்குப் பிறகு பேசவேயில்லை..

அவர் மனைவியிடம் தொடர்ந்து பேசி, என் நெருங்கிய நண்பர் சித்த மருத்துவர் என்றும்  சித்தாவுக்கு மாறினால், அந்த மருத்துவ நண்பரின் உதவியுடன் முற்றிலுமாக மீண்டு வருவதற்கு நான் பொறுப்பு என்று எவ்வளவோ சொல்லி கன்வீன்ஸ் பண்ண முயற்சித்தேன். 

ஒரு கட்டத்தில், என் நண்பரும், அவர் மனைவியும் என்னை அவாய்ட் பண்ண ஆரம்பித்தது வேதனையின் உச்சம். ஆங்கில மருத்துவர்கள் ஒரு மாதம் வைத்து 20 லட்சத்திற்கும் மேல் வாங்கிக் கொண்டு அவரையும் மேலுலகம் அனுப்பி வைத்தனர். 

பாட்டுத் தலைவன். ஏறத்தாழ கடந்த 45 வருடங்களாக அவர் பாடல் கேட்காமல் கழிந்த நாள் என்று ஒன்று இருந்ததாக ஞாபகம் இல்லை. என்னதான், அவர் சாகவில்லை நம்முடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொண்டாலும், அவர் நம்முடன் இல்லை என்ற நிதர்சனம் அவ்வப்போது வந்து நம்மை நிலைகுலையச் செய்வதைத் தவிர்க்க இயலவில்லை. 

“ சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா ? தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமா ?” என்ற கண்ணதாசனுக்கே வந்த சாவு, நமது பாட்டுத் தலைவனை மட்டும் விட்டு வைக்குமா என்ன ? 

இவர்கள் நானறிந்த நாலு பேர். நானறியாத லட்சக்கணக்கான பேரின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த 2020, மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டுப் போகிறது. 

இத்துடன் போனால் சரி. இரண்டாவது அலை மூன்றாவது அலையெல்லாம் வேண்டாம் மீனாட்சி. ப்ளீஸ். 

கற்றவை:

இந்தியா வந்தவுடன், வரலாறு சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்கள் படிக்க வேண்டும், பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆசையுடன்தான் வந்தேன்.

கொரோனா புண்ணியத்தால், வெளியேற முடியாத சூழ்நிலை உருவானதால், என்னுடைய இந்த ஆசை முற்றிலுமாக நிறைவேறியது. வரலாறு சம்பந்தமாக நிறைய படிக்கவும், என் நெருங்கிய நண்பர்களுடன் ஃபோனில் மணிக்கணக்காக  விவாதிக்கவும் இந்த கொரோனா வழி வகுத்தது.

அதேபோல், நண்பர் ராஜகுருவின் நட்பு கிடைத்ததும் நான் செய்த பேறு. அவருடைய உதவியால் “ தமிழி”யும் பழங்கால கல்வெட்டில் உள்ள தமிழும் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டேன். அது தவிர, நானும் அவரும் ஏராளமான வரலாற்று விஷயங்கள் பரிமாறிக் கொண்டோம், கொண்டிருக்கிறோம். நன்றிகள் கோடி நண்பரே. 

அவருடைய உந்துதலின் பேரில் “Archelogy” Diploma Course இணைந்துள்ளேன். மீனாட்சி மனது வைத்தால், இன்னும் ஓரிரு வருடங்களில் Ph.D. பண்ணவும் ஆசை உள்ளது. என்ன குண்டாத்தி மனது வைப்பாயா ? 

எனக்கு இந்த வீடியோ எடுப்பதும், வீடியோ எடிட்டிங் செய்வதும் எட்டாக்கனியாகவே இருந்தது. அதனால்தான், கென்யாவில் யானைகள் பற்றி எடுத்த குறும்படத்தைக் கூட இன்று வரை எடிட்டிங் செய்யாமலேயே இருக்கிறேன்.

கொரோனா புண்ணியத்தாலும், யூட்யூப் புண்ணியத்தாலும், பொறுமையாக,  வீடியோ எடுப்பது பற்றியும், எடிட்டிங் செய்வது பற்றியும் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பயன்படுத்திக் கொண்டேன்.

தம்பி அப்துல் மாலிக் என்னை கடந்த இரண்டு வருடங்களாகவே யூட்யூப் சேனல் ஆரம்பிக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

இதுதான் சான்ஸென்று சமீபத்தில் அதையும் தொடங்கி விட்டேன்.

முதலில் வரலாறு பற்றிய தேடல்களும், பின்னர் கானுயிர் படங்கள் பற்றி சொல்லிக் கொடுப்பதுமே திட்டம். அதைச் சொன்னவுடனேயே துள்ளிக் குதித்த என் நண்பர் கனடா ஶ்ரீதர், நான் உங்களுக்கு இசையமைத்துத் தருகிறேன் என்று சொல்லி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். நன்றி ஶ்ரீதர். 

எல்லாவற்றிற்கும் மேல், “ எப்போது பார்த்தாலும் ஓடிக் கொண்டேயிருக்கிறீர்கள்” என்று வருத்தப்பட்ட என் மனைவி , மகளுடன் இந்த வருடம் முழுவதும் ஒன்றாயிருக்க இந்த கொரோனா உதவியது.  

அவர்களுடன் இணைந்து சமைப்பது, வீட்டு வேலைகளுக்கு உதவுவது, கேரம் விளையாடுவது, சண்டை போடுவது என்று கொரோனா டயம் நன்றாகவே கழிந்தது. 

பெற்றவை: 

நாங்கள் 2008 இலேயே வீட்டை கட்டியிருந்தாலும், பெரிதாக Interior வேலை ஒன்றும் செய்யாமலேயே இருந்தேன். இந்த 2020  இன் தொடக்கத்தில் என் நண்பர் மிகவும் சிறப்பாக அந்த வேலையை முடித்துக் கொடுத்தார் ( இவர்தான் ஜுன் மாதம் கொரோனாவினால் மரணித்தது). 

எங்களுடைய கோயம்புத்தூர் வீட்டை பராமரிக்க முடியாமல் விற்க முயற்சித்து இந்த 2020 இல் தான், காரைக்குடியில் எங்கள் கல்லூரியில் படித்த என் சீனியர் ஒருவருக்கு விற்றேன். அதன் மூலம் அவருடைய நட்பும், அவர் குடும்பத்தினர் நட்பும் கிடைத்தது கூடுதல் போனஸ்.

இவை போக இன்னும் இரண்டு சுப காரியங்களும் நடந்தேறியது இந்த 2020 இல் தான் ( தற்சமயம் அது சஸ்பென்ஸ்). 

இந்த 2020 இல் தான் நண்பர் மணிவண்ணனின் நட்பும் கிடைத்தது. மணிவண்ணன் தஞ்சாவூரைச் சார்ந்த மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர் மற்றும் ஓவியர். எல்லாவற்றிற்கும் மேல் ஒரு அதி அற்புத மனிதர். 

இந்தியாவில் பெரிய காண்டாக்ட் எதுவும் இல்லாமல் இருந்த என்னை நிறைய பேருக்கு அறிமுகப்படுத்தி , என்னை வம்படியாக புகைப்படப் போட்டிகளில் கலந்து கொள்ள வைத்தார். அது மட்டுமல்லாது அந்த போட்டிகள் பற்றிய அனைத்து லிங்குகளும் அனுப்பி வைப்பார். அவர் புண்ணியத்தால், சமீபத்தில் இரண்டு அவார்டுகள் கிடைத்தது. இன்னும் இரண்டு போட்டிகளில் என்னுடைய படங்கள் இறுதிச் சுற்றில் வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. நன்றி மணி. 

ரஷ்யாவில் படித்த நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் சென்னையில் கிறிஸ்துமஸ் டயத்தில் ஒன்று கூடுவோம். இந்த வருடம் ஏன் மதுரையில் அந்த சந்திப்பை வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து, சென்ற வாரம் மதுரை, யானை மலை, அரிட்டாபட்டி, உத்திரகோசமங்கை, திருப்புலானி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, சாயல்குடி என்று நண்பர்களுடன் ஒரு சூப்பர் டூர். 

அதை ப்ளான் பண்ணி வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த நண்பர் வெற்றிவேலுக்கு நன்றிகள் கோடி. 

அது மட்டுமல்லாது 30 வருடங்கள் கழித்து 2020 இல்தான் என்னுடைய மிகவும் நெருங்கிய நண்பர்கள் மனோகரன், ரமேஷ் மற்றும் கனேசனின் தொடர்பு கிடைத்தது மகிழ்ச்சியின் உச்சம். அதிலும் அந்த மூன்று பேர்தான் எங்கெங்கோ தேடி என்னை கண்டு பிடித்தார்கள். அது இரட்டிப்பு மகிழ்ச்சி.

மொத்தத்தில், முதலில் சொன்ன இழப்புக்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், 2020 நன்றாகவே முடிந்திருக்கிறது. அன்னை மீனாட்சிக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி. 

தொடங்கப் போகும் 2021- உலகில் உள்ள அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல மீனாட்சி அருள் புரியட்டும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

வெ.பாலமுரளி.