இன்றும் வழக்கம்போல் 4 மணிக்கே எழுந்து விட்டேன். முதல் நாள் மாரா ஆற்றில் பார்த்த நிகழ்ச்சியே இன்னும் மறக்கவில்லை, இன்றைக்கு என்னென்ன பார்க்கப் போகிறோமோ என்று நினைத்துக்
கொண்டே கிளம்பினேன்.
மிகச் சரியாக 5.30 மணிக்கெல்லாம் சாமி வர, எந்தவொரு ப்ளானும் இல்லாமல் குத்து மதிப்பாக ஒரு திசை நோக்கிக் கிளம்பினோம்.
வழக்கம்போல் சாமியின் நண்பன் டொமினிக்கும் எங்களுடன் இணைந்து கொள்ள, எங்கள் இரண்டு வாகனங்கள் மட்டும் அந்த அத்துவான காட்டில் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிய படியே சென்று கொண்டிருந்தன.
அவ்வப்போது குறுக்கிட்ட சில சிங்கங்கள், நிறைய காட்டெருமைகள், கும்பல் கும்பலாக கழுதைப் புலிகள், கன்னா பின்னாவென்று இம்பாலா வகை மான் வகைகள் என்று அந்த விலங்குகளை அந்த அதிகாலை செயற்கை வெளிச்சத்தில் பார்ப்பதற்கு மிகவும் த்ரில்லிங்காக இருந்தது.
6 மணி இருக்கும். அங்குள்ள வன அதிகாரி ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. அமானி (சிவிங்கிப் புலி – சீட்டா) குடும்பம் ஒரு வேட்டைக்காக ப்ளான் பண்ணிக் கொண்டிருக்கிறது என்பதுதான் செய்தி. எங்களை அறியாமலேயே நாங்கள் அதே திசையில்தான் பயணப்பட்டுக் கொண்டிருந்தது எங்கள் அதிர்ஷ்டம்.
ஃபோன் வந்து ஒருபத்து நிமிடத்திலேயே நாங்கள் அமானியைப் பார்த்து விட்டோம். பெரிதாக வெளிச்சம் ஒன்றுமில்லையென்றாலும் கூட அமானி எதையோ நோக்கி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இன்னும் சூரியன் உதயமாகியிருக்கவில்லை.
அமானியோடு சேர்ந்து நாங்களும் காத்துக் கொண்டிருந்தோம். அமானியின் 3 புதல்வர்களும் அங்குதான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
வானம் தனது வர்ண ஜாலத்தைக் காண்பிக்கத் தொடங்கியது. நான் அமானியுடன் சேர்த்து சன் ரைஸ் எடுக்க என் கேமராக்களை ரெடியாக வைத்திருந்தேன். இந்த சன் ரைசின் போது மாராவின் முழுப் பரிணாமமும் சேர்த்து எடுத்தால் நன்றாகயிருக்கும் என்று சொல்ல, “ சூப்பர் மேன் சாமி” , ட்ரை பண்ணுவோம் என்று சொல்லி, வண்டியை எதிர்த் திசையில் செலுத்த ஆரம்பித்தான்.
பொதுவாக இது போல என்னுடைய சஃபாரி டிரைவர் எதிர்த் திசையில் சென்றால் நான் செமையாக டென்ஷன் ஆகி விடுவேன். ஆனால், சாமியைப் பற்றி இப்போது எனக்கு நன்கு தெரிந்து விட்டதால், மிகவும் சந்தோஷமாகி அவன் வண்டியை நிறுத்தப் போகும் நல்ல பொசிஷனுக்காக வெயிட் பண்ண ஆரம்பித்தேன்.
சாமி ஏமாற்றவில்லை. ஒரு மேடான பகுதியில் அவன் வண்டியை நிப்பாட்ட , அமானியும் , மாராவும், சூரியனாரும் சேர்ந்து அற்புதமாக எனக்கு ஒரு போஸ் கொடுக்கப் போவதறிந்து ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினேன்.
ஆனால், அன்று நிறைய மேகங்கள் சூழ்ந்திருந்ததால், சூரியனார் என்னைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு அவ்வப்போது லேசாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். நம்ம நாட்டியப் பேரொளி பத்மினி மட்டும் அங்கு இருந்திருந்தால், “ மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன “ என்று பாடியிருப்பார்.
நானும் விடவில்லை. சூரியனார் லேசாக எட்டிப் பார்க்கும்போது, அமானியைத் தேடிக் கண்டுபிடித்து அவளை முன்னாடி நிறுத்தி வைத்து ( ???) , மாராவையும், சூரியனாரையும் பின்புலத்தில் வைத்து கொஞ்ச ஃபோட்டோஸ் எடுத்துட்டோம்ல. அதே நேரத்தில் பக்கத்தில் அமானி நிற்பது தெரியாமலும், இன்னும் சிறிது நேரத்தில் தான் உயிர் இழக்கப் போவது தெரியாமலும், இம்பாலா வகை மான் ஒன்று சூரியனை பின்புலமாக வைத்து எனக்கு ஒரு போஸ் கொடுத்தது,இயற்கையின் விளையாட்டு.
அப்போது, அமானியின் புதல்வர்களும் தன் தாயுடன் சேர்ந்து இங்கும் அங்கும் நடந்து வேட்டைக்கு தங்களை தயார் செய்ய ஆரம்பித்தார்கள். எனக்கு நிறைய சில்யூட் ஷாட்ஸ் கிடைத்தன.
ஏனோ , சகோதர்கள் பிரிந்து இரண்டு பேர் மட்டும் அமானியுடன் இணைந்து கொள்ள, மூன்றாவது ( அவர்தான் மூத்தவர் என்று நினைக்கிறேன்), நம்ம சூப்பர் ஸ்டார் போல, என் வழி தனி வழி என்று வேறொரு இடத்தில் உட்கார்ந்து அங்கிருந்த மான்களை நோட்டம் விட ஆரம்பித்தார்.
அங்கு வெவ்வேறு திசையில், இரண்டு சேஸிங் நடக்கப் போவதறிந்து ஒரு சிறிய குழப்பம் – எதில் கவனம் செலுத்துவது என்று. சரி, நம்ம சூப்பர் ஸ்டாரை தொடருவோம் என்று முடிவு செய்து, அவரை நோக்கி கேமராவை செட் பண்ணி விட்டு நிமிரவும் , அவர் மிகச் சரியாக நான் இருந்த திசைக்கு எதிர்த் திசையில் ஒரு மானை விரட்டவும் சரியாக இருந்தது. என்னிடம் இருந்த 500 மிமீ லென்ஸை வைத்துக் கொண்டு அவரை ஃபோகஸ் செய்வது மிகவும் கடினமாக இருந்ததால்,ஒரு நாலைந்து ஃபோட்டோஸ் மட்டும் எடுத்து விட்டு, அவர் என்ன செய்கிறார் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.
அந்த மான் ஒரு புதருக்குள் போய் மாட்டிக் கொண்டது. நம்ம தலைவர் அதை அடிப்பதை, தூரத்தில் இலை மறைவு காய் மறைவாக பார்க்க முடிந்ததே தவிர அதை ஃபோகஸ் பண்ண முடியவில்லை. நம்ம தலைவர், பாய்ந்தான் தேசிங்கு என்று பாய்வது மாதிரி மட்டும் ஒன்றிரண்டு ஷாட்ஸ் கிடைத்தன.
சரி, நம்ம (அமானி) அம்மாவை கவனிப்போம் என்று என் கவனத்தை தலைவியின் மீது திருப்பினேன். தலைவியும் இரண்டு புதல்வர்களும் தாங்கள் இருப்பது தெரியாமல், ஒரு இம்பாலா மான் கூட்டம் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து அந்தக் கூட்டத்தை பதுங்கி பதுங்கி நெருங்க ஆரம்பித்தது.
இந்த இடைப்பட்ட நேரத்தில், அங்கு நிறைய கார்கள் வரத் தொடங்கி விட்டன. அனைத்து கார்களும் , வனக் காவலர்கள் அனுமதிக்கும் ட்ராக்கில் காத்துக் கொண்டிருந்தோம்.
அந்த மான் கூட்டத்தில் ஒரே ஒரு பெண் மான் மட்டும் தனித்து மேய்ந்து கொண்டிருக்க, அமானி அதை குறி வைத்து துரத்தத் தொடங்கியது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த மான் மரண பயத்தில், கார்கள் நிற்கும் இடத்தை நோக்கி ஓடி வரத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த கார் ஒன்று , அதன் சேஸிங் பாதையை நாம் ப்ளாக் பண்ணுகிறோமோ என்று நினைத்து தங்கள் காரை வேகமாக முன்னால் நகர்த்த முயற்சிக்க, மிகச் சரியாக அதே இடத்தை நோக்கி அந்த மானும் ஓடி வர, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் காரில் அடிபட்டு மான் கீழே விழுவதற்கும் ,அமானி வந்து அதன் குரல் வளையை கவ்வுவதற்கும் சரியாக இருந்தது.
இவை எல்லாம், நான் இருந்த இடத்திலிருந்து ஒரு 50 அடி தூரத்தில் நடந்து முடிந்து விட்டன. என்னதான் அந்த டிரைவர் நல்லது நினைத்து காரை நகர்த்தியிருந்தாலும், மான் அந்தக் காரில் அடி பட்டதால் அமானியிடம் மாட்டிக் கொண்டதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. அந்த டிரைவரைப் பார்த்து எல்லாரும் சத்தம் போட்டு திட்ட ஆரம்பிக்க, அமானி மட்டும் எதிலும் தன்னுடைய கவனத்தைச் சிதறடிக்காமல், அந்த மானின் குரல் வளையைக் கடித்து அதன் சுவாசத்தை நிறுத்துவதிலேயே குறியாக இருந்தது.
இதெல்லாம் நடந்து ஒரு ஐந்து நிமிடத்தில், மாராவின் வனக் காவலர்கள் அங்கு வந்து, நடந்ததறிந்து அந்த கார் டிரைவரின் லைசன்ஸை வாங்கி அவர் மீது பெரிய அளவில் ஃபைன் போட்டனர். பாவம் அந்த மான் , தன்னுடைய உயிருக்கு எவ்வளவு ஃபைன் என்பது தெரியாமலேயே உயிரை விட்டது.
கனத்த இதயத்துடன் நாங்கள் அந்த இடத்தை விட்டு அகன்றோம்.
கொஞ்ச தூரம் வந்து, கொண்டு வந்த சோத்து மூட்டையைத் திறந்து காலை உணவை முடித்தோம். கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு கிளம்புவோம் சாமி என்றேன். அவன் சரி என்று சொல்லி வாய் மூடவில்லை, ரேடியோவில், மாரா ஆற்றில் ஒரு ரிவர் க்ராஸிங் நடக்கப் போகிறது என்ற செய்தி வந்தது. சாமி என்னை கேலியாக ஒரு பார்வை பார்த்தான்.
சரி, மீனாட்சிக்கே நாம் ஓய்வெடுப்பது பிடிக்கவில்லை போலிருக்கு என்று நொந்து கொண்டு “ஸாவா….ட்வெண்டே” ( சரி வா….கிளம்புவோம்) என்றேன்.
மாரா ஆற்றிற்கு செல்லும் வழியில் ஒரு ஆண் சிங்கம் ஒரு காட்டெருமையை துரத்திக் கொண்டு ஓடுவதைப் பார்த்தோம். வேகமாக அதை நெருங்குவதற்குள் அவை இரண்டும் ஒரு புதருக்குள் ஓடியதால் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அந்த ஆண் சிங்கத்தின் சகோதரன் ஒருவன் பின்னாலேயே ஓடுவதை மட்டும் பார்க்க முடிந்தது. அவரை ஓரிரண்டு ஷாட்ஸ் மட்டும் எடுத்து விட்டு, மாரா ஆற்றை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
நாங்கள் ஆற்றைச் சென்றடைந்து ஒரு மணி நேரம் கழித்தே அந்த ரிவர் க்ராஸிங் நடை பெற்றது. வழக்கம் போல்,தண்ணீரில் சில போராட்டங்கள், சில உயிர் இழப்புகள் என்று இன்றும் சில சோகக் காட்சிகள் அரங்கேறின.
அதைப் பார்த்ததாலா, இல்லை அதிகாலையில் இருந்து சுற்றிக் கொண்டிருப்பதாலா, இல்லை முது வலியினாலா என்று தெரியவில்லை, மிகவும் சோர்ந்து வந்தது. சாமி, மதிய உணவிற்கு ஹோட்டலுக்குப் போய் விடுவோம் என்றேன்.
ஹோட்டலுக்குப் போய் திருப்தியாக தொழிலை (லஞ்ச்சை) கவனித்து விட்டு, ஒரு சிரமப் பரிகாரம் ( அதாங்க செமத்தியா ஒரு தூக்கம்) போட்டேன்.
மாலை நாலு மணிக்கு எழுந்திருக்கும்போது உடலும் மனதும் ஃப்ரெஷ்ஷாக இருந்தது. சூடாக ஒரு தேநீர் அருந்தி விட்டு மாலை சஃபாரி கிளம்பினோம்.
அடுத்து ? என்றான் சாமி, மணிரத்தினம் ஸ்டைலில். சும்மா ஒரு டிரைவ் போவோம். ஏதேனும் கிடைத்தால் சரி,இல்லாவிட்டால், சன் செட்டும் ஏதேனும் சில்யூட்டும் ட்ரை பண்ணுவோம் என்றேன்.
மாராவில் சும்மா ஒரு டிரைவ் செல்வதே ஒரு சுகானுபவம். ஆங்காங்கே சிறு சிறு குன்றுகளும், சவானா புல்வெளிகளும்,ஒற்றை மரங்களும், சோம்பலாக திரியும் விலங்கினங்களும் மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும்.
அன்று மாலையும் அப்படித்தான் இருந்தது. செல்லும் வழியில் ஒரு சிறிய யானைக் கூட்டம், ஒரு மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நாலைந்து சிங்கங்கள் , ஒரு ஒற்றை ஒட்டகச் சிவிங்கி என்று செம ஜாலியான டிரைவ். அப்போது நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், சில்யூட்டிற்காக காத்திருக்க முடியவில்லை.
ஒர் ஆறு மணி இருக்கும். ஒரு ஒற்றை ஆண் யானையைக் கண்டோம். சன் செட் ஆகும்போது , தலைவரை சில்யூட் எடுத்தால் சூப்பராக இருக்கும் என்று அவரை பின் தொடர முடிவெடுத்தோம். அவர் எங்கு சென்றாலும் கூடவே சென்றாம். அவர் நின்றால் நாங்களும் நின்றோம். அவர் லேசாக ஓடினால் நாங்களும் கொஞ்சம் வேகமாக் காரைச் செலுத்தினோம். தலைவர் எங்களைப் பார்த்து “ சில்லி ஃபெல்லோஸ்” என்று நினைத்திருக்க வேண்டும். நாங்கள் அதை நினைத்து கவலை கொள்ளவில்லை.
சன் செட் ஆகும்போது, தலைவர் ஆடி ஆடி நடந்து செல்வதை ஏகப்பட்ட சில்யூட் படங்கள் , வீடியோ என்று ஷூட்டித் தள்ளி விட்டேன்.
இன்று ஒரு அமர்க்களமான நாள் என்ற சந்தோஷத்துடன், நாங்கள் தங்கியிருந்த “ மாரா ஈடன்” ஹோட்டலுக்குத் திரும்பினோம்.
நாளை காலை ஈடனை காலி செய்து விட்டு, மூன்றாவது ஹோட்டல் “ கீச்வா டெம்போ” செல்ல வேண்டும். அதனால் அறைக்குச் சென்று என்னுடைய பொருட்களை பேக் பண்ண ஆரம்பித்தேன்.
ரிசப்ஷன் மூலமாக நான் நாளை அறையை காலை செய்யப் போவதறிந்து, அங்கு வேலை செய்யும் அனைவரும் போகும்போதும் வரும் போதும் “ We will miss you Bala” என்றார்கள்.
அவர்கள் என்னை மிஸ் பண்ணும்படி நான் அவர்களுடன் பெரிதாக நேரம் ஒன்றும் செலவழிக்கவில்லை. ஆனாலும், அது அவர்களுடைய கலாச்சாரம். விருந்தோம்பலில் கென்யர்கள் நம்மை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்.
முதல் நாள் எனக்கு முதுகு வலிக்கு வைத்தியம் செய்த ஃபிஸியோ தெரப்பிஸ்ட் ஏதோ அவசர வேலையாக நைரோபி சென்று விட்டதால், அந்த ஹோட்டலின் மேனேஜர் மாராவில் வேறு ஒரு ஹோட்டலில் இருந்த Physio Therapist ஐ எனக்காக வரவழைத்திருந்தார். எனக்கு நிஜமாகவே கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது – வலியினால் இல்லை. அவர்கள் அன்பினால். அந்த ஃபிஸியோ தெரப்பிஸ்ட் உதவியால், வலி நன்றாக குறைந்திருந்தது.
இப்படித்தான் கென்யாவில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் நம்மை சந்தோஷப்படுத்த நிறைய விஷயங்கள் செய்வார்கள். ஒரு முறை என் மனைவி சாம்பார் வேண்டும் என்று சொல்ல, அதன் ரெசிப்பியை கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்கள் சாம்பார் வைத்துக் கொடுத்ததும், இன்னொரு முறை நானும், என் நெருங்கிய நண்பர் குடும்பமும் ஒரு இடத்திற்கு சென்றிருந்த போது, என் நண்பரின் மனைவி தன் கையாலேயே நம்மூர் ஸ்டைல் “சில்லி” சிக்கன் செய்ய விரும்பியதால், அவரை கிச்சனுக்குள் அனுமதித்து அவருக்குத் தேவையான அனைத்து உதவியும் செய்து நாங்கள் சாப்பிட்ட அந்த “சில்லி” சிக்கனை வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாத படி செய்து விட்டார்கள்.
நிறைய இனிய நினைவுகளுடன் அன்று நன்றாகவே தூங்கினேன்.
வெ.பாலமுரளி