நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இந்தியா வந்ததற்கு பின்னால் கொண்டாடும் முதல் தீபாவளி இன்று (14.11.2020).
இந்தியாவில் தீபாவளி கொண்டாடி நிறைய வருடங்கள் ஆகி விட்டதாலா இல்லை நமக்கு வயதாகி விட்டதாலா என்று தெரியவில்லை, கோமாளி படத்தில் வரும் ஜெயம் ரவி போல எனக்கு எல்லாமே புதிதாக இருந்தன. ஒரே ஒரு வித்தியாசம், ஜெயம் ரவி போல் அல்லாமல் எனக்கு ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்பது மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது.
நான் பொடியனாக இருக்கும்போதெல்லாம், காலை 4 மணிக்கெல்லாம் டம் டும் என்று வேட்டு சத்தம் தொடங்கி விடும். நானும் வெடி வெடிக்க வேண்டுமென்று அடித்துப் பிடித்து எழுந்து, குளித்து விட்டு வெடி போட ஆரம்பிப்பேன்.
ஆனால், அரசாங்கம் கேட்டுக் கொண்டதாலா என்ன என்று தெரியவில்லை, காலை 7 மணி வரைக்கும் பெரிதாக வெடி சத்தம் ஒன்றுமே கேட்கவில்லை.
அதே போல், அந்த காலத்தில், காலை 8 மணிக்கெல்லாம், துப்புரவுத் தொழிலாளிகள்,சலவைத் தொழிலாளிகள், குறவர் சமூகத்தினர் என்று நிறையப் பேர் ஸ்வீட், தீபாவளி இனாம் கேட்டு வருவார்கள்.
நான் இந்தக் கட்டுரையை மாலை 5 மணிக்கு எழுதுகிறேன். இது வரை அப்படி ஒருவர் கூட இன்னும் வரவில்லை. யோசித்துப் பார்த்ததில், அனைவரின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருப்பது புரிகிறது.
அனேகமாக மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தீபாவளி நிகழ்ச்சிகளை டிவி யில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆண் மக்கள், நம்மால் அரசாங்கம் நஷ்டமடைந்து விடக் கூடாதென்ற நல்லெண்ணத்தில் டாஸ்மாக் நோக்கிச் சென்று மட்டையாகி இருக்கலாம். எது எப்படியோ நாடு வளம் பெற்றிருப்பது அறிந்து மகிழ்ச்சிதான்.
நாங்கள் முதலில் அருகில் உள்ள ஒரு ஆதரவற்ற ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவோம் என்று முடிவு செய்து அங்கு சென்றோம். அனைவரும் புத்தாடை அணிந்து, ஸ்வீட் காரமெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், பார்க்க யாரும் வரவில்லை என்று ஒரு சோகத்துடன் உட்கார்ந்திருந்தார்கள்.
எங்களைப் பார்த்ததும், அவர்களது முகத்தில் ஒரு லட்சம் வாலா பட்டாசு போட்டது போல் ஒரு சந்தோஷம். நாங்கள் அங்கு உட்கார்ந்திருக்கும்போதே, அங்குள்ள 80 அல்லது 85 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியைப் பார்க்க அவரது மகனா அல்லது பேரனா என்று தெரியவில்லை, ஒரு இளைஞரும் அவரது மனைவி மகளும் வந்திருந்தனர். அவர்களிடம் தன்னை உடனே கூட்டிக் கொண்டு போய் விடும்படி அவர் அழுகையுடன் கெஞ்சியது மனதை என்னவோ செய்தது. வீட்டில், ரூமில் இடம் இல்லை, இன்னும் ஒரு மூன்று மாதத்தில் புது ரூம் பார்த்து கூட்டிக் கொண்டு போய்விடுகிறேன் என்று அவரும் தர்ம சங்கடத்துடன் பொய் சொல்லிக் கொண்டிருந்தார்.
மனசு வலித்தது.
அவர்கள் ஓய்வு எடுக்கும் நேரம் வந்து விட்டதால், அங்கிருந்து கிளம்பி கடச்சனேந்தலில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றிற்கு சென்றோம்.
கிட்டத்தட்ட 40 குழந்தைகள் வெவ்வேறு வயதுகளில். வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் செம ஜாலியாக ரகளை பண்ணிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அளித்த நன்கொடைகளால் குழந்தைகள் அனைவரும் புத்தாடை அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நண்பர்கள் அனைவருக்கும் குழந்தைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.
அந்த இல்லத்தை நடத்தி வரும் நிர்வாகி, அங்கிருக்கும் சில குழந்தைகளின் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவை ஒவ்வொன்றும் நெஞ்சை பதை பதைக்க வைக்கும்படி இருந்தன.
இது பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரைவில் ஒரு டாக்குமெண்ட்ரி படம் எடுக்க எண்ணியுள்ளேன்.
என்னதான் ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடினோம் என்று ஒரு சந்தோஷம் இருந்தாலும், அவர்களின் நிலைமையை நினைத்தால் மனதை என்னவோ செய்கிறது.
Part of the game.
இந்த நன்னாளில் என்னுடைய “ தேடல்கள்” யூ ட்யூப் சேனலை லாஞ்ச் செய்திருக்கிறேன். அதனுடைய லிங்கை என்னுடைய அடுத்த பதிவில் போடுகிறேன். இந்தத் தேடல்கள் சேனலில் தமிழியைத் தேடி, வரலாற்றைத் தேடி, ஆலயங்களைத் தேடி, இயற்கையைத் தேடி என்று நிறைய தேடல்கள் இடம் பெறும். கண்டிப்பாக அவை அனைத்துமே சுவாரஸ்யமாக இருக்கும்.
அதற்காக, எல்லோரும் சொல்வது போல, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க, பெல் பட்டனை அமுக்குங்க என்றெல்லாம் தொல்லை செய்யும் ஐடியா இல்லை. அதனைச் செய்வதும், செய்யாமலிருப்பதும் உங்கள் சாய்ஸ். ஆனால், அனைத்து வீடியோக்களையும் கண்டிப்பாகப் பாருங்கள். நீங்களே சப்ஸ்க்ரைப் செய்து விடுவீர்கள் ( ஹி…ஹி…ஹி… ட்ரிக்கு ட்ரிக்கு ).
இந்த யூட்யூப் தொடங்கக் காரணமாக இருந்த தம்பி மாலிக் அப்துல் வஹாப், என் மனைவி அர்ச்சனா, மகள் நிவி மற்றும் என்னுடைய வீடியோக்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல பின்னணி இசையையும், லோகோவையும் இணைத்த நண்பர் கனடா ஶ்ரீதர், மிக முக்கியமாக என்னுடைய வரலாற்று ஆசான் உயர்திரு ராஜகுரு அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரும்ப ஒருமுறை என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள் அனைவருக்கும் உரித்தாகுக.
வெ.பாலமுரளி