முள்றியின் டைரி : 65 இன்னார்க்கு இன்னாரென்று…..

என் வாழ்க்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஏராளமான சம்பவங்கள் திரைப்படங்களில் வருவது போலவே இருப்பது எப்படி என்று எப்போதும் எனக்கு புரிந்ததேயில்லை.

நான் “முள்றியின் டைரி” தொடர் எழுத ஆரம்பித்ததன் காரணமும் அதுவே.

இவன் டைரி என்னும் பெயரில் நிறைய சரடு விடுகிறான் என்று நிறைய நண்பர்களுக்குத் தோன்றக் கூடும். அதையே சிலர் நேரிலும் , முகநூல் மூலமாகவும் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படிக் கேட்கும்போது எனக்கு அவர்கள் மீது துளியளவும் வருத்தமோ, கோபமோ வருவது கிடையாது. காரணம் எனக்கே இதெல்லாம் எப்படி எனக்கு மட்டும் நடக்கிறது என்ற குழப்பம் உண்டு. அதனால் நான் மற்றவர்களை கோபித்து என்ன ஆகப் போகிறது.

அது போன்ற சம்பவங்களில், என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று , நான் பெண் பார்த்த படலம்.

எங்கள் அப்பா 1988 – இல் இறந்த பிறகு எனக்கு எல்லாமே என் சின்ன அண்ணன் மகேஷ்தான். அவன் என்னை விட இரண்டு வயது மட்டுமே பெரியவன் என்பதால், இன்று வரை வாடா போடா என்றுதான் அழைத்துக் கொள்வோம். என்னுடைய நெருங்கிய தோழன்.

நான் ரஷ்யாவில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே எனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டான். பார்த்த இடம் எல்லாம் தொழிலதிபர்கள் பெண் அல்லது அரசாங்கத்தில் பெரிய உத்தியோகத்தில் இருக்கும் பெரும் புள்ளிகளின் பெண் என்று எல்லோருமே பெரிய இடம். இது ரொம்ப நாட்கள் நடந்து கொண்டிருந்தது – என்னிடம் சொல்லாமலே.

எனக்குத் தெரிய வந்தபோது, நம்ம மணல் கயிறு “சிப்ஸ் சேகர்” போல என்னுடைய கண்டிஷன்கள் பற்றி மெதுவாகச் சொன்னேன். அவன் எரிச்சலோடு, “ என்னடா கண்டிஷன்ஸ்? “ என்றான்.

“ஒன்லி 4 கண்டிஷன்ஸ்தான்” என்றேன். “ என்ன நாலா ?” என்றான் கொஞ்சம் கோபம் மற்றும் அதிர்ச்சி கலந்த குரலில். “ஆமாம்” என்றேன். “சொல்லு” என்றான் – பல்லை கடித்துக் கொண்டே.

1. முதல் கண்டிஷன். “பெண் ஏதேனும் ஒரு டிகிரியாவது முடித்திருக்க வேண்டும்” என்றேன். அவன் முகத்தில் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து “ கண்டிப்பாக” என்றான்.

2. இரண்டாவது கண்டிஷன், “வரதட்சணை கண்டிப்பாக கூடாது” என்றேன். “ சரி…ஆனால் அவர்களே தங்கள் பெண்ணுக்கு கொடுக்க முன் வந்தால் ?” என்றான். அதுதான் மூன்றாவது கண்டிஷன் என்றேன். அவனும், அவன் குரலும் லேசாக சூடானகின.

3. பெண் நம்மை மாதிரி மிடில் க்ளாஸ், இல்லையென்றால் வறுமையான குடும்பத்தில் இருந்துதான் வர வேண்டும் என்றேன். “மனதில் என்ன பெரிய புரட்சியாளன் என்ற நினைப்போ ?” என்று கன்னா பின்னாவென்று திட்ட ஆரம்பித்து விட்டான். “சரி, நாலாவது கண்டிஷன் என்ன?” என்றான்.

4. “ நான் ஒரே ஒரு பெண்ணைத்தான் பார்ப்பேன். பெண் எப்படியிருந்தாலும் ஓகே சொல்லி விடுவேன். ஊருக்குப் போய் கடிதம் எழுதுகிறேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்” என்றேன்.

அவன் செம கடுப்பாகி,“ சரி …முயற்சிப்போம்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

நான், இளமையில், ‘’ரோஜா படத்தில் வரும் அரவிந்த் சாமி கொஞ்சம் , லேசா கலர்(???) மங்கி இருந்தால் எப்படியிருப்பாரோ , அப்படி இருப்பேன் ( ஹி..ஹி…ஹி… நெசம்ம்ம்ம்ம்ம்ம்மாங்க. அப்புறம் வெயிலில் அலைந்துதான் லேசா (??)கறுத்து விட்டேன்). என்னை பிடிக்காதவர்கள்தான் என்னை விஜய்காந்த் போல இருக்கிறேன் என்று சொல்லி என்னை வெறுப்பேற்றுவார்கள்.

அதனால்,நான் கொஞ்சம் தெனாவெட்டாகத்தான் மேற்சொன்ன கண்டிஷன்களைப் போட்டேன் – இந்தியாவில் உள்ள நிலவரம் புரியாமல்.

ஏதோ, ஃபாரினில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை, பார்ப்பதற்கு வேறு அரவிந்த் சாமி மாதிரி இருக்கிறார் ( சரி…சரி…கண்டு கொள்ளாதீர்கள்), எனவே ஏராளமான டிமாண்ட் இருக்கப் போகிறது, அதனால் யார் மனதையும் புண்படுத்தி விடக் கூடாது என்று நான், வேறு ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். ஆனால், நடந்த மற்றும் கேள்விப்பட்ட விஷயங்கள் எனக்கு மயக்கத்தை வரவழைத்தன.

எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், என் அண்ணனுக்கும்,எங்கள் அம்மாவிற்கும் நம்பிக்கை இருந்தது. நிறைய ஜாதகங்கள் பார்த்துப் பார்த்து,அவர்களே பாதி ஜோசியர்கள் ஆகி விட்டனர். ஆறாவது கட்டம், எட்டாவது கட்டம், ராகு, கேது, செவ்வாய் தோஷம் என்று நிறைய சொற் பதங்கள் எங்கள் வீட்டில் விளையாட ஆரம்பித்தன.

பெரும்பாலான ஜாதகங்கள் ஒத்து வரவில்லை. ஒத்து வரும் ஜாதகங்களும்,“ மாப்பிள்ளை ஆப்பிரிக்காவில் இருக்காராமே. இருண்ட கண்டம். தெரியாத ஊர். அதிலும் வரதட்சணை வேண்டாமாமே. ஏதோ பிரச்சினை போலிருக்கு” என்று சந்தேகித்து சாரி என்று சொல்லி விட்டார்கள். மாப்பிள்ளை ரொம்ம்ம்ம்ம்ம்பம்ம்ம்ம்பவும் பெர்சனாலிட்டியா (????) இருக்காரு , எங்கள் பொண்ணுக்கு சரி வராது என்றும் சிலர் சொல்லியிருக்கக் கூடும். மகேஷ் அதை என்னிடமிருந்து மறைத்து விட்டான். ( ம்ம்க்கும்…மாப்பிள்ளை ஆப்பிரிக்காவில் வேலை பார்க்கிறார்னு தனியா சொல்லணுமாக்கும். அதுதான் பார்த்தாலே தெரியுதே ).

விஷயம் கேள்விப்பட்டு, எனக்கு மயக்கம் வராத குறை. ஆஹா…..பசங்க பெண்களை சூஸ் பண்ணும் காலம் போய், இப்போதெல்லாம், பெண்கள்தான் பசங்களை சூஸ் பண்றாய்ங்கெ போலிருக்கு. நாம்தான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, கண்டிஷன்லாம் போட்டுட்டோமோ என்று செம டென்ஷன் ( பொண்ணுங்களுக்கும் கண்டிஷன்ஸ் இருக்கும்னு அப்போதுதான் புரிந்தது. வழக்கம் போல் லேட் திங்கிங்).

இதற்குள், எங்கள் வீட்டில் தோராயமாக 300 ஜாதகங்கள் வரை பார்த்திருப்பார்கள். யாருக்கும் குடுத்து வைக்கவில்லை . ஹி…ஹி…ஹி.. ( எல்லோரும் தப்பித்து விட்டார்கள் என்று என் மனைவி அவ்வப்போது சொல்வாள்).

இதற்கிடையில் ஒரு பட்சி சிக்கியது. எங்கள் தூரத்து உறவினராம். பல் டாக்டர். “உடனே கிளம்பி வா” என்றான் மகேஷ். என் கண்டிஷன்ஸ்தான் மகேஷிற்குத் தெரியுமே, போவோம், ஓகே என்று சொல்லி விட்டு வந்து விடுவோம் என்று ஒரு நாலு நாள் மட்டும் லீவு எடுத்துக் கொண்டு வந்தேன்.

சென்னையில் வந்த நாள் அன்றே, பெண் பார்க்கச் சென்றோம். நல்ல படித்த குடும்பம். ஆனால், ஏனோ பெண்ணின் அம்மாவும், அப்பாவும் வாயே திறக்கவில்லை. பெண்ணின் மாமாக்கள் இருவர் மட்டுமே பேசிக் கொண்டேயிருந்தார்கள். சம்பளம் எவ்வளவு, வேலை நிரந்தரமா என்று நிறைய கேள்விகள் (நிரந்தர வேலையா ???? இவெய்ங்கெ எந்த காலத்தில் இருக்காய்ங்கெ ?) . அப்போதுதான் புரிந்தது. நம்மை கூப்பிட்டது பெண் பார்க்க அல்ல. அவர்களுக்கு மாப்பிள்ளை பார்க்கவென்று. பொறுமையாக பேசிக் கொண்டிருந்தேன். இதில் பெண்ணின் தாத்தா வேறு என்னை ஒரு மாதிரி வில்லத்தனமாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் கிளம்பும்போது, அந்த மாமாக்களில் ஒருவர், “நான் இன்று மதியம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்,மற்றதெல்லாம் அங்கு பேசிக் கொள்வோம்” என்றார். நாங்களும் சரி என்று சொல்லி விட்டு கிளம்பினோம். நான் சென்னையில் தங்கியிருந்தது எங்கள் மாமா வீட்டில். வரும் வழியில் எங்கள் மாமாவிடமும், மகேஷிடமும், இந்த இடத்தையே முடித்து விடுங்கள் என்றேன். மேலிருந்து மீனாட்சி சிறிய புன்முறுவலுடன் “ Who are you to decide that man?” என்று மெதுவாகக் கேட்டது எனக்குக் கேட்கவில்லை.

மதியம் பெண்ணின் மாமா வந்தார். வந்தவுடனேயே’ கென்யாவுக்கு ஒரு எல்லையில் சொமாலியாவும், மறு எல்லையில் எத்தியோப்பியாவும், மிக அருகில் சூடானும் இருக்கிறதே. சேஃப்தானா ?” என்று தன் புவியியல் அறிவைக் காண்பித்தார். நான் கொஞ்சம் எரிச்சலாகி,“ இந்தியாவைச் சுற்றியும்தான் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான், ஶ்ரீலங்கா என்று பிரச்சினை உள்ள நாடுகளாக இருக்கின்றன. நாம் சேஃபாக இல்லையா ?” என்றேன். ஏனோ அவர் என்னுடையை புவியியல் அறிவை கண்டு கொள்ளாமல் , எனக்கு அடுத்த கட்டையை கொடுக்க ஆரம்பித்தார்.

“நீங்கள் வேலை பார்ப்பது பிரிட்டிஷ் கம்பெனி போல் இருக்கிறது. பிரிட்டிஷாரின் கம்பெனியில் வேலை செய்வது சரியா? “ என்று தன் நாட்டுப் பற்றைக் காண்பிக்க எனக்கு கோபம் வந்து விட்டது. நீங்கள் ஒரு இந்திய கம்பெனியில் வேலை வாங்கித் தாருங்கள், உடனே மாறிக் கொள்கிறேன்” என்றேன் ஒரு நக்கல் தொணியில். இது போல நிறைய எடக்கு மடக்கான கேள்விகள்.

பேச்சு வேறு மாதிரி போவதைக் கவனித்த எங்கள் மாமா, “அப்புறம் கதிரேசன்,எங்களுக்கு பெண்ணை பிடித்திருக்கிறது. மற்ற விஷயங்களை எப்போது பேசலாம் ?” என்றார்.

அதற்கு அவர் ரொம்ப கூலாக,“நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. எங்கள் வீட்டில் கூடிப் பேசி விட்டு உங்களுக்குக் கடிதம் போடுகிறோம்” என்றார். நான் எந்த விஷயத்தைச் செய்யக் கூடாது என்று என் அண்ணனிடம் கண்டிஷன் போட்டேனோ, அதை என்னிடமே அவர்கள் செய்ய, நான் வெறுத்து விட்டேன். எங்கள் மாமாவிற்கும் , என் அண்ணனிற்கும் தர்ம சங்கடமான சூழ்நிலை. சரி என்று மதுரைக்குக் கிளம்பி விட்டோம். ஆக, ஒரே பெண்ணைப் பார்த்து ஓகே சொல்லும் என்னுடைய கண்டிஷன் அடி பட்டு விட்டது.

என் அண்ணனுக்கோ செம டென்ஷன்,இவன் வந்திருக்கும்போதே, வேறு ஒரு பெண்ணைப் பார்த்து முடித்து பண்ணி விட்டால் நன்றாயிருக்கும் என்று நினைத்து தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொல்ல. அவர்,என்னுடைய கண்டிஷன்ஸ் எல்லாம் கேட்டு விட்டு,எனக்குத் தெரிந்த வீட்டில் ஒரு பெண் இருக்கிறது. ஆனால் பெண் வீடு மிகவும் மிகவும் வறுமையான ஃபேமிலி. பரவாயில்லையா ? என்று கேட்டிருக்கிறார். அது எங்களுக்குப் பிரச்சினையில்லை என்று சொல்ல , இரண்டாவது நாள் அந்தப் பெண்ணைப் பார்க்கச் சென்றோம்.

அவர்கள் வீட்டில் உட்கார கூட ஒரு சேர் இல்லை. நாங்கள் சென்ற பிறகுதான் பக்கத்து வீட்டில் போய் சில சேர்கள் வாங்கி வந்தார்கள். ஒரு சாதாரண ஓட்டு வீடுதான். பெண்ணைப் பார்க்காமலேயே, இந்தப் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென உடனே முடிவு செய்து விட்டேன். முதலில் பெண் பார்த்த வீட்டில் பெண்ணின் மாமா ஏழரையைக் கொடுத்தது போல, இந்தப் பெண் வீட்டில் ஒரு அண்ணியார் வந்தார் ( தே.மு.தி.க அண்ணியார் அல்ல. பெண்ணோட அண்ணியார் )..

உட்கார்ந்து கொஞ்ச நேரத்திலேயே, நாங்கள், எங்கள் சைடில் ஓகே, உங்களுக்கு சம்மதமா என்று கேட்க, அவர் அதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல், நீங்கள் பெண்ணுக்கும் எங்கள் வீட்டிற்கும் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அவர் கேட்ட விதமே, ரொம்ப அதிகார தோரணையில் இருந்தது. எங்கள் குடும்ப நண்பர் ரொம்ப தர்ம சங்கடத்தில்,“ அம்மா, நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறதே. பொதுவாக மாப்பிள்ளை வீட்டில்தானம்மா இது போல கேட்பார்கள்” என்றார் பரிதாபமாக.

அண்ணியார், எங்கள் வழக்கத்தில் அப்படி இல்லை. மாப்பிள்ளை வீட்டார்தான் செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே போட ஆரம்பித்து விட்டார். அந்த லிஸ்ட்டில் உள்ள அனைத்துமே மிகவும் அடாவடியாக இருந்தன. பெண்ணுக்கு இவ்வளவு, பெண்ணின் அண்ணனுக்கு செயின், வாட்ச், அண்ணிக்கு 10 பவுன் செயின் ( இதெல்லாம் ரொம்பவே ஓவர் அண்ணி ) , திருமணத்தை அவர்களின் சொந்த ஊரான ஈரோட்டில் மாப்பிள்ளை வீட்டாரின் செலவில்தான் செய்ய வேண்டும், பெண் வீட்டார் திருமணத்திற்கு சென்று வர வாகன செலவு என்று Non Stop ஆக லிஸ்ட் நீண்டது.

அண்ணியார் பேச பேச , அண்ணனார் எங்கள் முகத்தைப் பார்க்கவே பயந்து போய் ,தலை குனிந்தே உட்கார்ந்திருந்தார். முத்தாய்ப்பாக,“ இதெல்லாம் ஓகே என்றால் சொல்லுங்கள் மற்றவற்றைப் பற்றி பேசுவோம்”. அவர் பேசிய தொணி “ இல்லாவிட்டால் இடத்தை காலி பண்ணுங்கள்” என்று சொல்வது போல் இருந்ததால், நாங்கள் வேதனையுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

பின்னர்தான் தெரிந்தது,பெண்ணின் தந்தை சில வருடங்களுக்கு முன்னரே காலமாகி விட்டதாகவும்,தாயார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருப்பதாகவும், அந்தப் பெண்ணும் தன் தாயாருடன் தன் அண்ணன் வீட்டில் வசித்து வருகிறார் என்று. அண்ணன் ரொம்ப சாது என்பதால்,அங்கு பெண்ணின் அண்ணியார் வைத்ததுதான் சட்டம் போலிருக்கிறது. இந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த தன்னால் முடிந்த முயற்சியை அனைத்தையும் செய்திருக்கிறார்.

இந்தியாவில் நிலைமை இது போல எக்குத்தப்பாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. பெரும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே எங்கள் குடும்ப நண்பர் ஓடி வந்து, “தம்பி மனதில் ஒன்றும் வைத்துக் கொள்ளாதீர்கள். எங்கள் குடும்ப நண்பர் ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் தன் தங்கைக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் தவறாக நினைக்காவிடில், ஒரு எட்டு போய் பார்த்து விடலாமா ? வீடு அருகில்தான் “ என்றார்.

நான் இன்னொரு அதிர்ச்சிக்கு ரெடியாய் இருக்கவில்லை என்பதால், “ மன்னித்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் நீங்களும் எங்கள் அம்மாவும் போய் பார்த்து வாருங்கள். பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போய் , உங்களுக்கும் பிடித்திருந்தால் நான் நாளை வருகிறேன். எனக்கு நாளை மறுநாள்தான் திரும்பிச் செல்ல ஃபிளைட் “ என்றேன்.

அவர்களும் ஒத்துக் கொண்டு பெண்ணை பார்க்க, பெண் வீட்டாருக்கும் முழு சம்மதம் என்று அறிந்து மறு நாள் போய்ப் பார்த்தேன். அவர்களின் குடும்ப நண்பர் சில காலம் கென்யாவில் வசித்ததாகவும், அவர் கென்யா மிகவும் அருமையான நாடு என்றும் சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார். அது போக, என்னுடைய அனுபவத்தில் முதல் முறையாக “பையன் வீட்டில் வரதட்சணை கேட்கவில்லை. எனவே, கண்டிப்பாக நல்ல குடும்பமாகத்தான் இருக்க வேண்டும். பெண்ணை கொடுப்போம்” என்று முடிவெடுத்து, எனக்கு வாழ்வு கொடுத்திருக்கிறார்கள்.

நான் வாழ்வு கொடுக்க வேண்டும் என்று நினைத்தது போய், எனக்கு ஒரு பெண் வாழ்வு கொடுத்து, அந்தப் பெண்ணுடன் திருமணமும் ஆகி, இன்றுடன் 24 வருடங்கள் ஆகின்றன. நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருக்கிறது. அன்னை மீனாட்சிக்கு கோடான கோடி நன்றிகள்.

ஆம். இன்று எங்களுக்குத் திருமண நாள்.

“ இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற கண்ணதாசனின் பாட்டின் அர்த்தம் யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ , எனக்கு நன்றாகத் தெரியும்.

வெ.பாலமுரளி.