முள்றியின் டைரி : 63. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…..

இன்று ( 12.08.2020 ) ‘உலக யானைகள் தினம்’.

யானைகளை நேசிக்கும் அனைவருக்கும் உலக யானைகள் தின வாழ்த்துகள்.

இந்தக் கட்டுரையை இந்த நன்னாளில் வெளியிடுவதே “டேவிட் ஷெல்ட்ரிக்”கிற்கும் அவர் மனைவி “ டஃப்னி ஷெல்ட்ரிக்”கிற்கும் நான் செய்யும் மிகப் பெரிய மரியாதையாக இருக்கும்.

மொட்டையாக ஆரம்பித்து விட்டேனோ ? மன்னிக்கவும். விளக்குகிறேன்.

டேவிட் ஷெல்ட்ரிக் பிரிட்டனில் பிறந்திருந்திருந்தாலும், அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே தன்னுடையை பெற்றோருடன் கென்யா வந்து விட்டார். படித்தது வளர்ந்தது எல்லாம் நைரோபியில் இருந்து 150 கிமீ தூரத்தில் உள்ள “நியேரி” என்னும் ஊரில்.

அங்கு அடிக்கடி பெய்யும் மழை, அந்த ஊரில் இருக்கும் பச்சை பசேல் என்ற பள்ளத்தாக்குகளை மேலும் அழகாக வைத்திருக்கும். அது போதாதென்று, ஆப்பிரிக்காவின் இரண்டாவது உயரமான மலையான “மௌண்ட் கென்யா” இந்த ஊரில் இருந்து ரொம்பப் பக்கம். அதிகாலையில் அதன் முகத்தில் விழித்து எழுந்தாலே போதும், அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் (பார்ப்பதற்கு நம்ம ஊர் கைலாச மலை போலவே இருக்கும்). இந்த ஊரில் இருந்து ஒரு 10 கிமீ தூரத்தில் இருக்கும் “அபர்டேர் நேஷனல் பார்க்”, கென்யாவில் உள்ள அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடுகளில் ஒன்று ( அதன் படம் ஒன்றை இங்கு வெளியிடுகிறேன். புரிந்து கொள்வீர்கள்).

இப்படி எல்லா திசைகளிலும் இயற்கை சூழ்ந்த சூழலில் வளர்ந்த டேவிட், இயற்கைக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

கென்யாவின் மிகப்பெரிய நேஷனல் பார்க்கான “த்ஸாவோ நேஷனல்” பார்க்கில் 1948 இல் தன்னை இணைத்துக் கொண்டு தன்னார்வலராக “வார்டனிங் சிஸ்டத்தை”க் கொண்டு வந்தார். அதன் மூலமாக இயற்கையை அழிக்க முயலும் எந்த ஒரு தீய சக்திக்கும் சிம்ம சொப்பனமாக வாழத் தொடங்கினார்.

அப்போதே “த்ஸாவோ”வில் தந்தங்களுக்காக யானைகள் தங்கள் இன்னுயிரை இழக்கத் தொடங்கியிருந்தன. அதற்காகப் போராட ஆரம்பித்த அவர் “எதிர்பாராத” இடங்களில் இருந்து நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. வெற்றிகரமாகச் சந்தித்தார். இவ்வளவுக்கும் அப்போது கென்யா இருந்தது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில்.

அவருடைய இந்த “இயற்கைக்காகப் போராடும் “ போர்க்களத்தில் அவருடைய மனைவியான “டஃப்னி ஷெல்ட்ரிக்”கும் இணைந்து கொண்டார். இவர் போன்ற போராளிகளுக்கு, தங்கள் மனைவியும் இணைந்து கொண்டால் அது போன்ற ஆனந்தம் எதுவும் இருக்க முடியாது. மகிழ்ச்சியாக போராடினார்கள்.

இயற்கைக்காக பாடுபட்ட அவரை இயற்கை கை விட்டு விட்டது. ஆம். 1977 – இல் தன்னுடைய 57 வது வயதில் மாரடைப்பில் அவர் உயிர் இழக்கும் போது கென்யாவில் உள்ள இயற்கைக்கும் பாதி உயிர் போய் விட்டது.

அவர் மனைவி டஃப்னி கலங்காமல், டேவிட் இறந்து சில மாதங்களிலேயே “ டேவிட் ஷெல்ட்ரிக் வைல்ட்லைஃப் ட்ரஸ்ட்” என்று ட்ரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து டேவிட் செய்து வந்த பணிகளை முறையாக செய்ய ஆரம்பித்தார் (இப்போது அதை வெறும் “ஷெல்ட்ரிக் வைல்ட்லைஃப் ட்ரஸ்ட்” என்று பெயர் மாற்ரம் செய்து விட்டார்கள். அப்போது தந்தங்களுக்காக யானைகளைக் கொல்லுவதும், அதனால், அனாதையாக விடப்பட்ட குட்டி யானைகள் மற்ற விலங்குகளிடம் தங்கள் உயிரை விடுவதும் அதிகரித்திருந்த கால கட்டம்.

நாம் ஏன் அது போன்ற தாயிழந்து அனாதையாக வாடும் யானைக் குட்டிகளை கொண்டு வந்து பராமரிக்கக் கூடாது என்று அவர் மனதில் உதிக்க, அதை செயல் படுத்தும் வேலைகளில் இறங்கினார்.

அது ஒன்றும் அவ்வளவு எளிதான பணியில்லை என்று ஆரம்பித்த சில நாட்களிலேயே புரிந்து விட்டது. இருந்தும் முயற்சியை கை விடவில்லை.

முதல் யானைக் குழந்தை வந்தது 1987 – இல் , கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து.

அதற்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து அதை திரும்ப காடுகளில் போய் விட்டால் அதால் சமாளிக்க முடியுமா என்று ஏராளமான கேள்விகள். ஆனால், எளிதில் பதில்கள் கிடைக்காத கேள்விகள்.டஃப்னி சோர்வடையவில்லை.

ஆரம்பத்தில் பசும்பால் கொடுத்துப் பார்த்தார். அது செரிக்காமல், குட்டி யானை சுணங்கி விழுந்தது. அது போன்ற ஏராளமான பரிசோதனைகள். கிட்டத்தட்ட அனைத்துமே தோல்வியில் முடிந்தன. இதற்கிடையில் இன்னும் சில குழந்தைகள் வந்து சேர்ந்தன.

சரியான உணவு கிடைக்காதது, அம்மாவும் காடும் இல்லாத புதிய சூழல் என்று புதிதாக வந்த குழப்பங்களால் சில குழந்தைகள் இறந்த சோகமும் நிகழ்ந்தது. டஃப்னி இடிந்து போனது அப்போதுதான்.

அதே நேரத்தில், வயதான, உடல்நலம் குன்றிய, தாய்கள் இழந்த காண்டாமிருகங்களையும் தத்தெடுக்க ஆரம்பித்தார். இன்னொரு புறம் தன் கணவர் டேவிட் விட்டுச் சென்ற இயற்கையைப் பாதுகாக்கும் போராட்டம் என்று பம்பரமாகச் சுழன்றார் டஃப்னி.

ஒரு டயத்தில் தேங்காய்ப் பால் மற்றும் சோயா பால் கலந்த ஒரு திரவம் யானைக் குட்டிகளுக்கு ஒத்துப் போக, சந்தோஷத்தில் குதித்தார் டஃப்னி. இதற்கிடையில் KWS என்னும் Kenya Wildlife Service என்ற அரசு சார்ந்த துறையும் இவருடன் இணைந்து கொள்ள டஃப்னியின் சேவை கொடி கொட்டி பறந்தது.

நிறைய யானைக் குட்டிகளும், காண்டாமிருகங்களும் வர பணத்தின் தேவையும் புரிய ஆரம்பித்தது.அப்போதுதான், யானைக் குட்டிகளைத் தத்து எடுக்கும் புதிய திட்டத்தைத் தொடங்கினார். அதன் மூலம் நிதி திரட்ட David Sheldrick Widlife Trust என்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தொடங்க, அவர் எதிர்பார்த்தது போலவே நிறைய நிதி வரத் தொடங்க பணப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.

அவர் நடத்தி வந்த “யானைகள் ஆதரவற்றோர் இல்லம்” இருப்பது எங்கள் வீட்டுக்கு மிகவும் அருகில். டிராஃபிக் இல்லாத நாட்களில் பதினைந்து நிமிடங்களில் அந்த இடத்திற்குச் சென்று விடலாம். நினைத்தால் போய் விடுவோம். தினமும் காலை 10 – 11 யானைக் குட்டிகளுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சி நடக்கும். அப்போது மட்டும் பார்வையாளர்களை ஒரு சிறிய தொகை வாங்கிக் கொண்டு அனுமதிப்பார்கள்.

அந்த ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட முப்பது அல்லது நாற்பது குட்டிகளை பாக்ஸிங் ரிங் போன்று ஒரு இடத்தை கயிற்றால் சுற்றி வளைத்துக் கட்டி , அதன் நடுவில் விட்டு விடுவார்கள். அந்த இடத்தில் அவை போடும் ஆட்டங்களை கண்டு களிக்க இரண்டு கண்கள் போதாது. ஒன்று அங்கிருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் நுழைந்து கெட்ட ஆட்டம் போடும். இன்னொன்று மற்ற குட்டிகளை வம்புக்கு இழுக்கும். மற்றொன்று, அங்கு பால் ஊட்டி விட வரும் காவலாளியைப் போய் முட்டும். பால் பாட்டில்களை கொண்டு வருபவரிடம் போய் எனக்கு உனக்கு என்று சண்டை போடும்.

சும்மா சொல்லக் கூடாது. அங்கு பணிக்கு இருக்கும் ஆப்பிரிக்கர்களும் அந்தக் குட்டிகளை மிகவும் பாசத்துடன் கவனித்துக் கொள்வார்கள்.

ஒரு சில வருடங்கள் இங்கு வைத்து பராமரித்து விட்டு ஏதேனும் ஒரு. காட்டில் போய் விட்டு விடுவார்கள். அத்துடன் அவர்கள் பணி முடிந்து விடாது. அங்குள்ள KWS காவலாளிகள் மூலம் அவற்றை சிறிது காலத்திற்கு தொடர்ந்து கண்காணிப்பார்கள். அவை ஓரளவுக்கு காட்டு வாழ்க்கைக்கு பழகிக் கொண்டதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அதைத் தொடர்வதை நிறுத்துவார்கள். பிரமிப்பான சேவை.

நான் இரண்டு முறை டஃபனியைச் சந்தித்திருக்கிறேன். முதல் தடவை சந்தித்தபோது, நான் எடுத்த யானைப் படங்கள் அனைத்தையும் பிரமிப்போடு பார்த்தார். நாம் இணைந்து ஒரு கண்காட்சி நடத்துவோமா என்று கேட்டேன். சந்தோஷத்துடன் கண்டிப்பாக என்றார். பிறகு என் வேலையில் நான் பிஸியாக இருந்ததால், அவரைப் போய் சந்திக்க இயலவில்லை.

2016 இல் யானைகள் பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி எடுக்கத் தொடங்கியிருந்தேன். அதில் ஒரு சிறு பகுதியை டஃப்னி நடத்திய ஆதரவற்றோர் இல்லத்தில் அவருடைய அனுமதியின் பேரில் எடுக்க அவரின் அனுமதி கேட்டேன். தாராளமாக எடுத்துக் கொள் என்று சொல்லி விட்டு, நான் அவசரமாக லண்டன் செல்கிறேன், வந்த பிறகு பேசுவோம் என்று சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கவேயில்லை. 2018 இல் தன்னுடைய 83 வது வயதில் அவர் இறந்த செய்தி கேட்ட பிறகுதான் , ஆகா அவரைத் திரும்பப் போய் சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்தோமே என்ற ஞாபகமே வந்தது. சில சமயம் காலதேவன் நமக்காகக் காத்திருப்பதில்லை.

டஃப்னி உயிருடன் இருக்கும்போதே அவர் மகள் ஏஞ்சலாவும் மருமகன் ராபர்ட்டும் “ஷெல்ட்ரிக் வைல்ட்லைஃப் ட்ரஸ்ட்” டுக்குள் வந்து ட்ரஸ்ட்டின் அடுத்த தலைமுறை தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். ட்ரஸ்ட்டுக்கு பிரச்சினை ஒன்றுமில்லை. டஃப்னி விட்டுச் சென்ற அடித்தளம் பலமாக இருப்பதால் இன்னும் நூறு ஆண்டுகள் ஜம்மென்று போகும்.

பாவம் இப்போது அங்கிருக்கும் குட்டிகளுக்குத்தான் சொல்லத் தெரியாத சோகம் அப்பிக் கொண்டிருக்கும். பெற்ற தாயையும் இழந்து, வளர்த்த தாயையும் இழந்து ……

அது போன்ற குட்டிகளைப் பார்த்தால் எந்த ஒரு அரக்கனுக்கும் அதன் தாய்களை பாழாய்ப்போன தந்தங்களுக்காகக் கொல்ல மனசு வராசு.

இதுவும் கடந்து போகும் செல்லங்களே.

வெ.பாலமுரளி

பி.கு: புகைப்படம் எடுக்க கென்யா செல்லும் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். நீங்கள் அடுத்த முறை கென்யா செல்லும்போது மறக்காமல் ஷெல்ட்ரிக் ட்ரஸ்ட் நடத்தும் அந்த Elephant Orphange க்கு மறக்காமல் ஒரு முறை சென்று வாருங்கள். முடிந்தால் ஒரு குட்டியை தத்து எடுக்க ஒரு சிறு தொகை கொடுத்து விட்டு வாருங்கள். உங்களுக்குக் கோடி புண்ணியம்.