நாளை சிவிங்கிப் புலி (சீட்டாக்) களைத் தொடரலாம் என்று சொன்னவுடனேயே சாமி கொஞ்சம் கூட யோசிக்காமல் “ Done” என்று சொன்னது , அவன் மனசில் எதையோ நினைத்திருக்கிறான் என்பது புரிந்து நிம்மதியாக உறங்கச் சென்றேன்.
மறு நாள், நான் நினைத்ததற்கும் மேலாக சூப்பர் டூப்பர் பிஸியான நாளாக இருக்கப் போகிறது, அதனால் என் முதுகு வலி கடும் பிரச்சினையைத் தரப் போகிறது என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.
முதல் மூன்று நாட்கள் போலவே, அதிகாலையிலேயே எழுந்து தயாராகி விட்டேன்.
மசை மாராவில் “ மலாய்க்கா” என்னும் பெண் சீட்டாவைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மிகவும் வெற்றிகரமாக 5 பசங்களைப் பெற்று, பொறுப்புடன் வளர்த்து சமீபத்தில் உயிர் நீத்த தாய்.
இப்போது வெற்றிகரமாக, மசாய் மாராவில் பெரும் ரௌடிகளாக வலம் வரும் அந்த சகோதரர்களுக்கு “ Bora Tanu “ என்று பெயர். அதற்கு “ஸ்வஹிலி” மொழியில் “ஐந்து சகோதர்கள்” என்று பெயர். நான் அந்த “மலாய்க்கா” குடும்பத்தை இரண்டு முறை படம் பிடித்திருக்கிறேன். ஆனால், மலாய்க்கா இறந்த பிறகு அந்த சகோதரர்களை பார்க்கவில்லை.
எனவே, அன்று அந்த “ஐந்து சகோதரர்களை” த்தான் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தேன்.ஆனால், அவர்கள் தான்சானியாவிற்கு பிக்னிக் (???) சென்றிருப்பதாகவும், திரும்பி வர எத்தனை நாளாகும் என்று யாருக்கும் ஐடியா இல்லை என்றும் சாமி சொல்ல எனக்கோ மகாக் குழப்பம்.
மலாய்க்காவிற்கு அடுத்த சக்ஸஸ்ஃபுல் தாய் “அமானி”. அமானி பெற்றதும் ஐந்துதான். ஆனால், அந்த ஐந்தில் இரண்டை விதிக்கு பலி கொடுத்து விட்டு, வெற்றிகரமாக மூன்றை வளர்த்து அந்த பசங்களுடன் மகிழ்ச்சியுடன் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறது அமானி.
சாமி “அமானி” ஃபேமிலியை மனதில் வைத்துத்தான் எனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கிறான்.
இன்று புதிய ஒரு ஹோட்டலுக்கு ஷிஃப்ட் ஆக வேண்டும் என்பதால், அதிகாலையிலேயே (5.30 மணிக்கு) அந்த ஹோட்டலைக் காலி பண்ணிக் கொண்டு கிளம்பி விட்டோம்.
அந்த அதிகாலையிலேயே நிறையப் பேர் அமானியைத் தேடிக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஆறு மணி வாக்கில் அமானியையும் அதன் மூன்று பசங்களையும் கண்டு பிடித்து விட்டோம். அதை நாங்கள் மற்றவர்களுக்குச் சொல்லி மற்றவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
சூரிய உதயத்திற்கு இன்னும் சிறிது நேரம் இருந்தது. இருட்டாக இருந்ததால் என்னால் ஃபோகஸ் பண்ணுவது சிரமமாக இருந்தது. வெளிச்சம் வரட்டும் என்று காத்திருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் அந்த மூன்று பசங்களும் பயங்கரமாக விளையாட ஆரம்பித்து விட்டனர். எனக்கோ ஒரு நப்பாசை. சூரியன் உதிக்கும்போது , சூரியனை பின்புலத்தில் வைத்து அவை விளையாடினால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று. என்னுடைய நேரம்… அவை இருந்தது வேறு திசையில்.
“ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவு காத்திருந்த கொக்கு” போல நானும் காத்திருந்தேன்.
வெளிச்சம்தான் இல்லையே என்று, கேமராக்களை கீழே வைத்து விட்டு, காருக்குள்ளேயே முதுகு வலிக்கு உட்கார்ந்து நிமிர்ந்து சில எக்சர்சைஸ்கள் பண்ணி முதுகை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண முயற்சித்துக் கொண்டிருந்தேன். “ முடிந்த அளவிற்கு இப்போதே ரிலாக்ஸ் பண்ணிக் கொள் மகனே. இன்னும் சிறிது நேரத்தில் உனக்கு மிகப் பெரிய சவால் ஒன்று வைத்திருக்கிறேன் “ என்று எச்சரித்த அன்னை மீனாட்சியின் குரல் என்னுடைய எக்சர்சைஸ் மும்முரத்தில் எனக்குக் கேட்கவில்லை.
சூரிய பகவான் மெதுவாக மேலே வரத் தொடங்கினார். அமானி ஃபேமிலி வேறு திசையில் இருந்தாலும், அவற்றிற்குப் பின்னாலும் வானத்தின் வர்ண ஜாலம் தன் வேலையைக் காண்பித்துக் கொண்டிருந்தது.
எனக்கா குழப்பம் ஸ்டார்ட்டட். சூரியனாரை, மசாய் மாராவின் அழகோடு சேர்த்து எடுப்பதா இல்லை அமானி சகோதர்களை வானத்தின் வர்ண ஜாலத்தோடு எடுப்பதா என்று. அமானியைப் பிடிப்பதுதான் சிரமம் என்பதால், அமானி குடும்பத்தை ஃபோக்கஸ் பண்ண ஆரம்பித்தேன். அவை இருந்த இடத்தில் வெளிச்சம் ரொம்ப கம்மியாக இருந்ததால் நான் எடுத்த படங்களில் “ Noise” என்னும் புள்ளிகள் நிறைய வந்தன. நான் அதைப் பற்றி கவலைப்படாமல் அவற்றின் ஒவ்வொரு விளையாட்டையும் ரசித்து எடுக்க ஆரம்பித்தேன்.
ஒரு ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. “ பாலா பாலா அங்கே பாரு” என்று சாமி கூவினான். அந்த இடத்தின் இன்னொரு மூலையில் ஒரு பத்து அல்லது பதினைந்து கழுதைப் புலிகளுக்கு நடுவில் ஒரு சிறுத்தை, தான் வேட்டையாடிய ஒரு மான் இரையைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தது.
அந்த சம்பவம் நடந்த இடத்தில் நிறைய புதர்கள் இருந்ததாலும், வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்ததாலும், அதை என்னால் பார்க்க முடிந்ததே தவிர புகைப்படம் எடுக்க முடியவில்லை. ஆனால், அது பெரும் ஆக்ஷனாக இருந்ததால், அதை விடவும் எனக்கு மனசில்லை.
ஒரு பக்கம் சூரியனார் மிக அழகாக தன் வட்டத்தை கலர்ஃபுல்லாக காண்பிக்க, ஒரு பக்கம் அமானி ப்ரதர்ஸ் அடித்து புரண்டு விளையாடிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அந்தச் சிறுத்தை தன் இரையைக் காப்பாற்ற பெரும் போராட்டத்தில் ஈடு பட்டிருக்க இப்போது மீனாட்சி வாய் விட்டு சிரித்தது எனக்குத் தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது.
இரண்டு கேமராக்களையும் இரண்டு பெரிய லென்ஸ்களையும் வைத்துக் கொண்டு அவை இரண்டையும் வெவ்வேறு செட்டிங்ஸ்களில் மாற்றி மாற்றி அங்கும் இங்குமாக சுழன்று சழன்று எடுக்க ஆரம்பித்தேன். அப்போது கொஞ்சமும் எதிர்பார்க்காமல் “ Hallo Hallo …I am here” என்றது என் அடி முதுகு. சுளீர் சுளீர் என்று வலி எடுக்க , வாழ்க்கையில் அப்படி ஒரு விரக்தி நிலையை நான் என்றுமே அனுபவித்ததில்லை. ஒரு ஐந்து நிமிடத்திற்கு என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கேமரா இரண்டையும் கீழே போட்டு விட்டு படுத்து விட்டேன்.
ஒரு ஐந்து நிமிடம் கழித்து என் தொழிலைத் தொடர்ந்தேன். நான் எழுவதற்கும், அந்த சிறுத்தை தன் இரையைத் தூக்கிக் கொண்டு மரத்தின் மீது ஏறுவதற்கும் சரியாக இருந்தது. அதிலும் ஒரே ஒரு நொடி அது என் கண்களை நேருக்கு நேர் சந்தித்தது என் அதிர்ஷ்டம். சில நிமிடங்கள் கழித்து இரையை மரத்தின் மீது வைத்து விட்டு கீழே இறங்கி ஓடி ஒரு புதருக்குள் ஒளிந்து கொண்டது.
இதற்கிடையில் நல்ல வெளிச்சம் வந்து விட்டது. அமானி சகோதரர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை. எனக்கு கன்னா பின்னாவென்று ஷாட்ஸ் கிடைக்க மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டேயிருந்தேன். அவற்றிற்கு என்னைப் பாவமாக இருந்ததாலோ என்னவோ, என் காருக்கு அருகிலேயே வந்து நான் இருந்த ஜன்னலுக்கு கீழே படுத்துக் கொண்டு விளையாட ஆரம்பிக்க, என்னுடைய வைட் ஆங்கிள் லென்ஸை மாற்றி ஷூட்டித் தள்ளி விட்டேன். அவை என்னை மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக பிஸியாக வைத்திருந்தன.
அவை போட்ட ஆட்டத்தில் எனக்கு பசியே மறந்து போயிருந்தது. ஒரு டயத்தில், எடுத்தது போதும் என்று தோன்றியதால் அந்த இடத்தை விட்டு நகன்றோம்.
காலை உணவுக்காக ஓடை மாதிரி இருந்த இடத்தில் ஒரு மரத்தடியில் காரை நிப்பாட்ட, அந்த காய்ந்த ஓடைக்குள் ஒரு சிங்கம் ‘ Topi ‘என்னும் ஒரு வகை மானை அப்போதுதான் அடித்திருந்தது. நான் நாங்கள் கொண்டு போயிருந்த “பேன் கேக்” என்னும் மைதா தோசையையும், சிங்கம் தான் அடித்து வைத்திருந்த டோப்பியையும் சாப்பிட்டு, நானும் சிங்கமும் ஒரே நேரத்தில் பிரேக் ஃபாஸ்ட்டை முடித்தோம். அதையும் கொஞ்சம் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு சிறிது நேரம் அங்கேயே படுத்து இளைப்பாறினேன்.
வலி உயிர் போனது. சாமி இன்று போதும். வா “மாரா ஈடன்” என்னும் அடுத்த ஹோட்டலுக்குப் போய் செக் பண்ணி விட்டு ஓய்வெடுக்க வேண்டும். முடிந்தால் சாப்பிட்டு விட்டு மாலை வரலாம் என்றேன்.
“மாரா ஈடன்” ஒரு அருமையான ஹோட்டல். மாரா ஆற்றங்கரையிலேயே உள்ளது. எனக்கு அருமையான டெண்ட் ஒன்றைக் கொடுத்தார்கள். என் டெண்ட் வாசலில் இரண்டு சேர்களும் ஒரு காஃபி டேபிளும். மாரா ஆறு ஒரு மூன்றடி தூரத்தில் சல சலவென்று ஓடிக் கொண்டிருக்க, அந்த இடத்தில் ஆற்றின் நடுவில் இருந்த ஒரு பாறையில் ஒரு முதலை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது ( அதுக்கும் முதுகு வலியாய் இருக்குமோ ?) . ஆற்றின் மறு கரையில் ஒரு நீர் யானை ( ஹிப்போ) புல் மேய்ந்து கொண்டிருக்க எனக்கு சட்டென்று “ மாரா ஈடன்” ரொம்பவே பிடித்து விட்டது. அந்த இடத்தை ஒரு வீடியோ எடுத்து விட்டு, போய் மதிய உணவை முடித்துக் கொண்டு, ஒரு நல்ல தூக்கம் போட்டேன்.
ஃபிரெஷ்ஷாக இருந்தது. நாலு மணிக்கு எழுந்து சூடாக ஒரு காப்பி குடித்தவுடன் என் உடன் பிறந்த கொழுப்பு, என்னை மாலை ஷூட்டிங்கிற்கு ரெடியாக்கியது. சாமிக்கு ஃபோன் பண்ணிச் சொன்னவுடன் ஒரு பத்தே நிமிடத்தில் அவனும் ரெடியாகி விட்டான்.
“ பாலா, என்ன பிளான் ? “ என்றான் சாமி. அமானி ஃபேமியை சில்யூட் எடுக்க முயற்சிப்போம் என்றேன். சரி என்று கிளம்பினான்.
போகின்ற வழியில் ஐந்தாறு யானைகள் ஒரு வரிசையாய் போய்க் கொண்டிருக்க, அவற்றை கொஞ்சம் நேரம் தொடர்ந்தோம். மாலை வெளிச்சத்தில் சில நல்ல ஃபோட்டோக்கள் கிடைத்தன.
அமானி குடும்பத்தைத் தேடினால், அமானி தாய் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. அதன் பாய்ஸைக் காணோம். சூரிய அஸ்தமனத்திற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தததால், காத்திருப்போம் என்று முடிவு பண்ணி, அமானி எங்கு சென்றாலும் கூடவே சென்று கொண்டிருந்தோம்.
வழக்கம்போல், எனக்கு ஒரு (நப்) ஆசை வந்தது. சூரியன் அஸ்தமிக்கும்போது , அமானி, எறும்புப் புற்று என்று சொல்லப்படும் ஒரு Ant Hill இல் ஏறி போஸ் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று.
ஆனால், அமானி எனக்குத் தண்ணி காண்பித்தது. மிகச் சரியாக சூரியன் மறையும்போது அது போய் ஒரு புதரில் மறைந்து கொண்டது. அதைக் கண்டதும் எங்களுடன் சேர்ந்து காத்துக் கொண்டிருந்த நிறைய பேர், பொறுமையிழந்து திரும்பிச் சென்று விட , நாங்கள் ஒரு நாலைந்து கார்கள் மட்டும் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருந்தோம்.
திடீரென அமானி வெளியில் வந்து வேறு ஒரு திசையில் நடக்க ஆரம்பித்தது.
நாங்கள்தான் முதலில் சுதாரித்தது. காரை ரிவர்ஸிக்ல் எடுத்து வேறு ஒரு பாதையில் போய் அங்கிருந்த ஒரு எறும்புப் புற்றுக்கு அருகில் காரை நிறுத்தி காத்திருக்க ஆரம்பித்தோம். அதற்குள் சூரியன் மறைந்து போயிருக்க , வழக்கம்போல் வானம் தன் வர்ண ஜாலத்தைக் காண்பிக்கத் தொடங்கியிருந்தது.
பிங்கோ…..
நான் எதிர்பார்த்தது போலவே, அமானி அந்த Ant Hillஇல் ஏறி சில வினாடிகள் தன்னுடைய பசங்களைத் தேடுவது போல பாவனை செய்து கொண்டு எனக்கு போஸ் கொடுத்தது. வெளிச்சம் சுத்தமாக மறைந்து போயிருந்ததால், ஃபோக்கஸ் செய்வது ரொம்பக் கடினமாக இருந்ததால், முடிந்த வரை முயற்சித்து சில பல ஷாட்ஸ் எடுத்தேன். சிறிது நேரத்தில் அதன் பசங்களில் ஒருவனும் வந்து சேர்ந்து கொள்ள எனக்கு அழகான ஒரு சில்யூட் கிடைத்தது.
நான் முன்பு ஒரு முறை சொன்னது போல், அடிக்கடி காட்டுக்குச் சென்றால் இது போன்ற Raghavan Instinct நன்றாகவே வேலை செய்யும்.
பாலா ரொம்ப நேரம் குனிந்து ஃபோட்டோ எடுத்தால் முது வலியில் கஷ்டப்படுவான் என்று நினைத்ததோ என்னவோ, அமானியும் அதன் புதல்வனும் சிறிது நேரத்திலேயே கீழே இறங்கி மறுபடியும் ஒரு புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
எனக்கு ரொம்ப திருப்தி.
சாமி என்னைப் பார்த்து “ Are you happy Bala ? “ என்றான்.
நான் சிரித்துக் கொண்டே “Verrrrrrry” என்றேன். வழக்கம்போல் “ நாளை என்ன பிளான் ?” என்றான். முதுகு வலியின் காரணமாக ஒரு நாள் பிரேக் கொடுக்கலாம் என்று தோன்றியதால் “ நாளை பலூன் சஃபாரி” என்றேன்.
நான் இத்தனை வருடங்கள் அங்கிருந்தும் , இது வரை பலூன் சஃபாரி போனதில்லை. காரணம் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு வசூலிக்கும் 450 டாலர் கட்டணம். அந்த (2019) வருடத்தோடு விருப்ப ஓய்வெடுத்துக் கொண்டு இந்தியா செல்ல முடிவெடுத்திருந்ததால், “இன்னிக்கு செத்தால், நாளைக்குப் பால்” என்ற விவேக்கின் தத்துவப்படி, ஒரு அடி அடித்து விட்டு வந்து விடுவோம் என்று முடிவு பண்ணி முன்னாலேயே புக் பண்ணியிருந்தேன்.
அது ஒரு நல்ல அனுபவம்….
திரும்பி (மாரா ஈடன்) ஹோட்டலுக்கு வந்து அங்குள்ள மேனேஜருக்கு என் முதுகு வலியைப் பற்றிச் சொல்ல, அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஃபிஸியோதெரப்பிஸ்ட் ஆபத்பாந்தவானாக அங்கு வர என் முதுகை டெஸ்ட் பண்ணி விட்டு , அவர்தான் L4 மற்றும்L5 இல் பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. உடனே ஒருMRI எடுப்பது அவசியம் என்று சொல்லி விட்டு, சில எக்சர்சைஸ்கள் சொல்லிக் கொடுத்து விட்டு, சில மருந்துகளும் கொடுத்தார்.
இங்கு இருக்கும் வரை ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாமல் விரைவில் நைரோபி சென்று விடு என்று அறிவுறுத்தி விட்டு அவர் செல்ல, நான் பலூன் சஃபாரி பற்றியும் அதிலிருந்து எடுக்கப் போகும் படங்கள் பற்றியும் கனவு காண ஆரம்பித்தேன்.
வெ.பாலமுரளி