முள்றியின் டைரி : 60. மாரா ஓர் மந்திரலோகம் – 3

நாளை காலை ஒரு அதிசயம் காண்பிக்கிறேன் என்று சாமி சொன்னாலும் சொன்னான், அரை மணிக்கு ஒரு தடவை முழிப்பு வந்து வாட்சை பார்த்துக் கொண்டேயிருந்தேன். அன்று இரவு மட்டும் ஒரு 10 முறையாவது எழுந்து மணி பார்த்திருப்பேன்.

கரெக்டாக 4 மணிக்கு எழுந்து, குளித்து முடித்து 4.45 க்கெல்லாம் ரெடியாகி விட்டேன். சாமி எனக்கு முன்னாலேயே எழுந்து காரை ரெடி பண்ணி காத்துக் கொண்டிருந்தான். அதற்கு மேல் என்னால் சஸ்பென்ஸை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

சாமி,நீ காண்பிக்கப் போகும் சைட்டிங் என்னவென்று சொன்னால்தான் வருவேன் என்றேன். “ சரி வர வேண்டாம்,ரூமிலேயே தூங்கு” என்று சொன்னாலும் சொல்லி விடுவானோ என்று வேறு பயமாக இருந்தது. நல்ல வேளை அவன் அப்படியேதும் சொல்லாமல், காரைச் செலுத்திக் கொண்டே “லூலு” என்னும் சிறுத்தையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.

“லூலு” என்னும் பெண் சிறுத்தை ஒரு பாவப்பட்ட தாய். கடந்த சில வருடங்களாக பல முறை கருவுற்று குட்டிகள் பல ஈன்ற போதிலும்,தன் இணையான ஆண் சிறுத்தையாலேயே அனைத்தை குட்டிகளையும் பறி கொடுத்திருக்கிறது.

பெரும்பாலான பெரும் பூனைகளுக்கு இந்த பழக்கம் உண்டு. பெண் குட்டிகள் ஈன்றதும்,அவை ஒரு ஷேப்புக்கு வந்து, ஆபத்து வந்தால்,பதுங்கிக் கொள்ளும் பக்குவம் வரும் வரை, தாய் ரொம்ப ஜாக்கிரதையாக குட்டிகளைப் பார்த்துக் கொள்ளும். அப்போது “ நோ கூடல்” “ நோ ஊடல்”. ஆண் இணைகளை அருகில் அண்ட விடாது. அவை பாட்டுக்கு ரொமாண்ஸில் இருக்கும் நேரம் பார்த்து, கழுதைப் புலி,செந்நாய், சிங்கம், காட்டெருமை, நரி போன்ற விலங்குகள் குட்டிகளைக் கொன்று விட்டு போய்க் கொண்டே இருக்கும் என்பதும் ஒரு காரணம்.

நான் சென்றிருந்த போது லூலு ஒரு குட்டியை ஈன்றெடுத்து இரண்டு மூன்று வாரங்களே ஆகியிருந்தது. ஆனால்,இந்த முறை குட்டிக்கு, லூலுவின் பாய் ஃப்ரெண்ட் தவிர புதிதாக ஒரு எதிரியும் முளைத்திருந்தது. அது அந்த ஏரியாவுக்கு மோப்பம் பிடித்து நுழைந்திருந்த இன்னொரு ஆண் சிறுத்தை. அது (வும்) லூலுவை “டேட்டிங்” கிற்கு அழைக்க,லூலுவிற்கு குட்டியை இரண்டு எமன்களிடமிருந்து பாதுகாக்கும் பெரிய பொறுப்பு வந்து விட்டது.

எனவே, அது தன் குட்டியை யார் கண்ணிலும் படாமல் வாயில் கவ்விக் கொண்டே தினமும் ஒவ்வொரு இடமாக மாற்றிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறது. அதை முந்தின இரவு , காட்டுக்குள் இருந்த ஒரு வனக் காவலன் பார்த்து விட்டு,சாமிக்கு தகவல் தர,அதை என்னிடம் சஸ்பென்ஸ் என்று சொல்லியிருக்கிறான்.

இது போதாதா எனக்கு. அசுர வேகத்தில் வண்டி போய்க் கொண்டிருந்தாலும்,என்னுடைய இரண்டு கேமராக்களையும் எடுத்து உரிய லென்ஸூகள் பொருத்தி, குத்துமதிப்பாக ISO 4000ஃபிக்ஸ் பண்ணி “ஓரளவிற்கு” தயாராக இருந்தேன்.

எங்கள் கேம்பில் இருந்து அந்த இடம் மிகவும் தொலைவில் இருந்தது. கருங்கும்மென்றிருந்த அந்த வேளையில்,எங்கள் காரின் வெளிச்சம் மட்டுமே இருந்த அந்தப் பாதையில் இரண்டு சிங்கங்கள்,காட்டெருமைகள்,வில்டபீஸ்ட் என்ற அந்த மான் வகைகள்,ஏராளமான கழுதைப் புலிகள் என்று எக்கச்சக்க விலங்குகள். வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு டிரைவ் அது.

நேரம் அதிகாலை 5.45 இருக்கும். சாமியின் நண்பன் டொமினிக்கின் கார் மட்டும் ஒரு இடத்தில் பார்க் செய்யப் பட்டு இருந்தது. அந்த காரில் இருந்த YS என்னும் இஸ்ரேலிய ஃபோட்டோகிராஃபருடன் நானும் போய் இணைந்து கொண்டேன். அதற்கு மேல் செல்வதற்கு, மசை மாரா பார்க் அனுமதிக்கும் டிராக் இல்லாதலால் , அந்த பாதையின் இறுதியில் காத்திருந்தோம்.

ஒரு 10 நிமிடத்தில் ஒரு புள்ளியாய் “தெய்வத் திருமகள்” வந்து கொண்டிருந்தாள்,வாயில் குட்டியை கவ்விய படியே. என்னுடைய 500 மிமீ லென்ஸ் வைத்து நாலைந்து படங்கள் எடுத்துப் பார்த்தால் எல்லா படங்களும் இருட்டாய் இருந்தது என்னுடைய ஹார்ட் பீட்டை எகிற வைத்தது.

கொஞ்சம் கூட யோசிக்காமல் ISO வை 10,000 க்கு மாற்றினேன். Noise என்னும் புள்ளிகள் வரும் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. தட தடவென்று மாற்றி மாற்றி இரண்டு கேமராக்களிலும் எடுக்க ஆரம்பிதேன்.

லூலு, குட்டியை பத்திரமாக ஒளித்து வைக்க பதுங்கு குழி பதுங்கு ஏதும் தென்படுகிறதா என்று தேடிக்கொண்டே எங்கள் காரை நோக்கி வந்து கொண்டிருந்தது. நாங்கள் அது நெருங்கி வர வர எங்கள் காரை பின்னோக்கி செலுத்திக் கொண்டேயிருந்தோம்.

அது அவ்வப்போது நிற்பதும்,சுற்றி முற்றி பார்ப்பதுமாக , மிகவும் ஜாக்கிரதையாக தன் தேடலை நடத்திக் கொண்டிருந்தது. பொதுவாக அது வேக வேகமாக நடந்து கொண்டிருந்தாலும்,சில சமயங்களில் ஏற்பட்ட பதற்றத்தினால் அவ்வப்போது மிதமான வேகத்திலும் ஓடியது. அப்படி ஓடும்போது,கேமராவின் செட்டிங்க்ஸில் Shutter Priority க்கு மாற்றி Slow Shutter இலும் சில படங்கள் எடுத்தேன். அப்படி எடுக்கும்போது அதன் மூவ்மெண்ட் கலங்கலாக ( Motion Blurred ) வருவதும் புகைப்படக் கலையில் ஒரு வகை.

லூலு ஒரு பதுங்கு குழியைக் கண்டுபிடித்து,குட்டியை பத்திரமாக உள்ளே வைத்து விட்டு வெளியில் வந்து , அந்த இடத்தையே கொஞ்ச நேரம் சுற்றி வந்து அருகில் எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

இது அனைத்தையும் ஒரு டாக்குமெண்ட்ரி போல படம் எடுத்து முடிக்கும்போது , சாமி முதல் நாள் இரவு “ உன் வாழ் நாள் முழுவதும் சந்தோஷப்படும்படி ஒரு சைட்டிங் காண்பிக்கிறேன்” என்று சொன்னதன் அர்த்தம் புரிந்து அவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிதேன்.

லூலு வின் கதை இத்துடன் முடிந்து விடவில்லை. நான் மசை மாரா விலிருந்து திரும்பி ஒரு வாரத்தில் லூலு இந்த முறையும் தன் குட்டியை இழந்திருந்தது, அந்தப் புது ஆண் சிறுத்தையிடம். ஆனால்,நாங்கள் படம் எடுத்த பிறகு வேறு யாரும் அதைப் பார்த்தது போல் தெரியவில்லை.

லூலுவையும்,அதன் குட்டியையும் இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை. நான் இங்கு பதிவிட்டிருக்கும் லூலுவின் படங்களை எத்தனை முறை பார்த்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை.

இது போன்ற சோகக்கதைகள் வனங்களில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.

அங்கிருந்து கிளம்பி ஒரு அரை மணி நேரத்தில் ஒரு சிங்க ஜோடி தீவிர காதலில் ஈடுபட்டிருந்தது. ஒவ்வொரு 10 (அ) 15 நிமிடமும் கூடுவதும் விலகுவதுமாக இருந்தது. லைட்டிங் ரொம்பவே ஹார்ஷாக இருந்ததால்,கொஞ்சம் படங்கள் மட்டும் எடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றோம்.

மொத்தம் 10 நாட்கள் ட்ரிப் என்பதால்,ரிவர் க்ராஸிங் எனப்படும் ஆற்றைக் கடக்கும் சம்பவத்தை கடைசி மூன்று அல்லது நான்கு நாட்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து , மாரா ரிவர் பக்கம் போகாமல் மற்ற இடங்களில் சுற்றிக் கொண்டிருந்தோம்.

ஒரு விஜய் படத்தில் விஜய்யும்,விவேக்கும் டைவர்ஷன் டைவர்ஷனாக எடுத்து திருப்பதியில் போய் நிற்பார்களே, அது போல எங்களை அறியாமலேயே “தாலெக்” ரிவர் அருகில் போய் விட்டோம். நாங்கள் சென்ற இடத்தில் தண்ணீரும் கொஞ்சம் கம்மியாகவே இருந்ததால்,இதுவும் வில்ட பீஸ்ட் க்ராஸ் பண்ணும் ஒரு இடமாக இருக்கிறது.

சுமாராக ஒரு 1000 வில்ட பீஸ்ட், பாவம் முரளி முதுகு வலியோடு சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று எனக்காகக் காத்துக் கொண்டிருந்தன. நா அந்த இடத்தை சென்றடைவதற்கும் , அவை ஆற்றைக் கடப்பதற்கும் சரியாக இருந்தது. அந்த இடத்தில் எங்கள் ஒரு கார்தான். நிறுத்தி நிதானமாக அதைப் படம் பிடித்தேன். எனக்கு பொதுவாக இது போன்ற விஷயங்களில் அதிர்ஷ்டம் மிகவும் குறைவு. ஆனால், அன்று என்னவோ, அடுத்தடுத்து எனக்கு சைட்டிங் கிடைத்துக் கொண்டேயிருந்தது.

அன்று காட்சிகள் கிடைத்த வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு மரத்தடியில் காரை நிப்பாட்டி விட்டு, கொண்டு சென்ற லஞ்சை முடித்துக் கொண்டு, இருந்த 4 Bean Bag ஐயும் அடி முதுகிற்கு சப்போர் கொடுப்பது போல அடுக்கி, காருக்குள்ளேயே அக்கடா என்று படுத்து விட்டேன்.

ஒரு மூணு மணி போல எழுந்து , முகத்தை கழுவிக் கொண்டு கிளம்பினேன். கிளம்பி ஒரு கிலோமீட்டர் கூட இருக்காது. ஒரு சிறுத்தை மரத்தின் மீது அமர்ந்து தன் இரையை “கொறித்துக்” கொண்டிருந்தது. என்னைப் பார்த்தவுடன் ஒரே ஒரு படத்துக்கு மட்டும் போஸ் கொடுத்து விட்டு, எங்கே விட்டால் அதன் இரையில் நானும் பங்கு கேட்பேனோ என்று பயந்து போய் , மரத்தின் உச்சியில் இருந்த மறைவில் போய் ஒளிந்து கொண்டது.

பின்னர் என்ன நினைத்ததோ, மரத்தில் இருந்து இறங்கி அருகில் இருந்த புதருக்குள் ஓடி மறைந்து கொண்டது.

இது ரொம்ப அலட்டுவது போலத் தோன்றியதால், உடனே கிளம்பி விட்டோம்.

ஒரு அரை மணி நேர பயணத்தில் இன்னொரு சிங்கக் குடும்பம் கண்ணில் பட்டது. ஒரு பெண் சிங்கமும் இரண்டு குட்டிகளும். எங்கள் டிராக் இருந்தது ஒரு தாழ்வான பகுதி. அருகில் இருந்த ஒரு மேடான பகுதியின் பின்புறம் இருந்து அந்த குட்டிகள் வர எனக்கு என் கண்கள் லெவலுக்கு அருமையான சைட்டிங். நான் மேலே சொன்னது போல என்னால் அதிர்ஷ்டத்தின் ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. என்னுடைய இரண்டு கேமராக்களும் பயங்கர சூடாகும் வரை ஷூட்டித் தள்ளி விட்டேன்.

கொஞ்ச நேரத்துல் அருகில் இருந்த ஒரு தாழ்வான ஓடைப் பகுதிக்கு அந்தத் தாய் சிங்கம் சென்று ஓய்வெடுக்க, அந்த இரண்டு குட்டிகளும் உருண்டு பிரண்டு அதன் தாயருகில் சென்று விளையாட ஆரம்பிக்க எனக்கு என்னையே நம்ப முடியவில்லை.

பின்னங்கால்களை மடக்கி , முன்னங்கால்களை நிறுத்தி அந்த அம்மா சிங்கம் உட்கார்ந்திருக்க, அந்த குட்டிகளில் ஒன்று எவரெஸ்ட் மலைகளில் ஏறுவது போல அதன் அம்மாவின் முதுகில் ஏறியது கொள்ளை அழகு. ஏறியது மட்டுமல்லாது அதன் முதுகைக் கடிப்பதற்கும், அந்த அம்மா சிங்கம் கொட்டாவி விடுவதற்கும் செம டைமிங். பார்ப்பதற்கு அந்த அம்மா சிங்கம் வலி தாங்காமல் கத்துவது போலவே இருந்தது. கொஞ்ச நேரம் அங்கிருந்து விட்டு கிளம்பினோம்.

வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. அப்போது ஒரு புதருக்குள் ஒரு ஆண் சிங்கம் வில்ட பீஸ்ட்டை அடித்து தின்று கொண்டிருக்க, அங்கு காத்திருந்த ஒரு கழுதைப் புலி, “ நேத்து எங்க அண்ணனையா கொன்றாய் “ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டு, சிங்கம் அசந்திருக்கும் நேரம் பார்த்து, வில்ட பீஸ்ட்டின் தலையை பறித்துக் கொண்டு ஒரே ஓட்டம்.

அன்று காலையில் இருந்து இதுபோல அடுத்தடுத்து சைட்டிங் கிடைத்துக் கொண்டேயிருந்தது. மசை மாராவில் இது சகஜம் என்றாலும் கூட அன்று கொஞ்சம் ஸ்பெஷல் போல இருந்தது. கிட்டத்தட்ட அங்கிருந்த 10 நாட்களும் அப்படித்தான் இருந்தது.

அடுத்து ? என்றான் சாமி. வேறென்ன சன்செட்டும் சில்யூட்டும்தான் என்றேன். ஆங்…சொல்ல மறந்து விட்டேனே. சாமி ஒரு அற்புதமான புகைப்படக் கலைஞனும் கூட.

சில்யூட் என்று சொன்னவுடனேயே, தாழ்வான பகுதிகளைத் தேடி எங்கு சூரியன் மறைவது அழகாகத் தெரியும் என்று பார்க்கத் தொடங்கி விட்டான். ஆனால், சூரிய பகவான் வெகு வேகமாக கீழே இறங்கத் தொடங்கினார்.

அன்று எனக்கு சூரியனுடன் கூடிய சன் செட் கிடைக்காதோ என்று கொஞ்சம் சோகமாகி விட்டேன். வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது போல Never Never Give Up என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் ஒரு ஃபோட்டோ கூட எடுக்காமல் சூரிய பகவான் மறைந்தார். ‘ஒரு வாசல் மூடி ஒரு வாசல் திறப்பான் இறைவன்’ என்று வாலி சொன்னது போல எனக்கு வேறு ஒரு லட்டு காத்திருந்தது.

பொதுவாக, சன் செட் முடிந்தவுடன் கிளம்பி விடாமல், கொஞ்சம் காத்திருந்தால், வானம் பற்பல வர்ண ஜாலங்களை சிறிது நேரம் கழிதே காண்பிக்கத் தொடங்கும். அன்றும் விதிவிலக்கல்ல. செம கலர். ஒரு சிங்கம், சிறுத்தை கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று லேசான நப்பாசை எட்டிப் பார்த்தது. ஒன்றும் மாட்டவில்லை. வனத்தின் வண்ணமும், வானத்தின் வண்ணமும் மாறிக் கொண்டேயிருக்க எனக்கோ டென்ஷன் கூடிக்கொண்டிருக்க , அந்த சமயத்தில் ‘இம்பாலா’ என்னும் ஒரு கொம்பு மான் வர, “ வாழ்க்கையில் நீ விரும்புவதை விட உன்னை விரும்புவதையே நேசி” என்ற வாழ்க்கைத் தத்துவத்திற்கேற்ப கொஞ்சமும் கவலைப் படாமல், அந்த மானை வளைத்து வளைத்து எடுக்க , எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த சில்யூட் அப்படித்தான் கிடைத்தது.

நான் அடிக்கடி சொல்வது போல, வனம் நம்மை என்றுமே ஏமாற்றாது. என்ன….என் வழி தனி வழி என்று அது தன் பாட்டுக்கு நம்மை இழுத்துச் செல்லும். நாமும் அதைத் தொந்தரவு செய்யாaம்ல் அதனுடன் பயணித்தால் , அதைப் போன்ற ஒரு சுகானுபவம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை.

எல்லாம் முடிந்து மிகவும் சந்தோஷத்துடன், கேம்ப் திரும்பினோம்.

ஓரளவுக்கு சிறுத்தையையும், சிங்கக் குட்டிகளையும் எடுத்தாயிற்று. நாளை என்ன ப்ளான் என்றான் சாமி.

கொஞ்சம் கூட யோசிக்காமல் “சீட்டா” ( சிவிங்கிப் புலி) என்றேன். அவனும் கொஞ்சம் கூட யோசிக்காமல் “Done” என்றான். சாமி ஒரு சூப்பர் மேன்.

கண்டிப்பாக நாளையும் ரொம்ப பிஸியான நாளாக இருக்கப் போகிறது என்று ஏராளமான கனவுகளுடன் படுக்கைக்குச் செல்லும்போது வழக்கம்போல் மணி 12 ஆகி விட்டது.

வெ.பாலமுரளி