எனக்கு கடந்த 2 மாதமாக ஒரு வினோதமான உபாதைங்க. கண்ணு பயங்கரமாக பொங்கி பொங்கிக் கண்ணீராகக் கொட்டித்தள்ளுகிறது.உடம்பு ஹீட்டாகி இருக்கிறதுக்கும் சான்ஸ் இல்லை. ஏனென்றால், நான் குளிர்காலத்தில் கூட தினமும் குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கும் கோஷ்டி….வேற எப்படி??? தெரியலை.
ஆஃபிஸில் எனக்குத் தனி கேபின். So, பகல் நேரத்தில் மனசு விட்டு அழுது கொட்டி ஈஸியாக சமாளித்து விடுவேன். எப்போ பிரச்சினைன்னு கேட்டிங்கன்னா – Evening வாக்கிங் போகும்போதுதான். மாலை 6 மணிக்கு Ramco Court- இல் உள்ள அனைத்துத் தாய்குலங்களும் கம்பாக வாக்கிங் போவார்கள் ( இப்படி மாங்கு மாங்குனு நடக்குறதுக்குப் பதிலாக பகலில் வேலைக்காரிகளை நிறுத்தி விட்டு ஒழுங்காக வீட்டில் வேலையைப் பார்க்கலாம்ல? சொல்லிட்டு யாரு தப்பிக்கிறது?).
நமக்கோ Prestige Issue. அவர்களுக்கு முன்னால எப்படி கண்ணீரும் கம்பலையுமாக நடப்பது….ராமன் கண் பார்க்க சீதையோ மண் பார்த்தாள்னு கம்பர் சொன்னது போல நான் பாட்டுக்கு ஒரு MP3 – யைக் காதில் மாட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் கையில் ஒரு கர்ச்சீப்பை வைத்துக் கொண்டு அவர்களை Cross செய்து விடுவேன் ( அது சரி…இதுக்கு ஏண்டா கம்பனை இழுக்குற? உனக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியல?). அவர்கள் யாரும் பார்க்காத சமயத்தில் கர்ச்சீப்பை வைத்து கண்ணைத் துடைத்து விட்டு வாக்கிங்கை Continue பண்ணுவது வழக்கமாகி விட்டது (சில சமயம் இரண்டு கர்ச்சீப் வைத்துக் கொள்வதும் உண்டு. அவ்வளவு கண்ணீருங்க).
என்னுடைய இந்த சங்கடத்தை இதுவரை யாரும் பார்த்ததில்லை (ம்க்கும்…நேற்று வரை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்).நேற்று சாயாந்திரம் பாருங்க, வழக்கம் போல என்னுடைய நாடகத்தை நடத்திக் கொண்டு நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். MP3 வேறு வேலை செய்யவில்லை. ஒரு வயசான தமிழ்க்கார அம்மாங்க…அப்பத்தான் முதல் தடவைப் பார்க்கிறேன். ஆனா அவங்க நைரோபி வந்து 2 மாதம் ஆச்சாம் ( கடந்த 2 மாதமாக நான் யார் முகத்தைப் பார்த்தேன்…????). பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் ரொம்ப – ரொம்பன்னா ரொம்ப ரொம்ப ரகசியமாக சொல்லிக்கொண்டிருந்தது (ஆனா நமக்குத்தான் பாம்புக் காதாச்சே) ” நான் சொன்னேன்ல, அது இந்தப் பையன்தான். பாவம் , யாரு பெத்த புள்ளையோ. டெய்லி பார்க்கிறேன். குமுறி குமுறி அழுதுகிட்டே நடக்குது”.
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்னு கம்பன் சொன்னது போல நானும் கலங்கி விட்டேன் ( எலேய், திரும்ப திரும்ப ஏண்டா கம்பனை வம்புக்கு இழுக்குறே?). நான் கலங்கியது இரண்டு விஷயத்துக்காக.
1. குமுறி, குமுறியா?
2. “நான் சொன்னேன்ல” என்றால் என்ன அர்த்தம்? இந்த அம்மா ரொம்ப நாளா நம்ம சோகத்தைக் கவனிக்குது போல.
ஆக மொத்தம்….நம்ம கதை ஊருக்கே தெரிஞ்சிருக்குது.
நாளைக்கு முதல் காரியமாக போய் கண் டாக்டரைப் பார்க்கணும்.
வெ.பாலமுரளி.