முள்றியின் டைரி : 59. மாரா ஓர் மந்திரலோகம் – 2

முதுகு வலியினாலா இல்லை அடுத்த நாள் சந்திக்கப் போகும் அனுபவங்களினால் வந்த எக்ஸைட்மெண்ட்டா என்று தெரியவில்லை – கிடைத்த 3 மணி நேரமும் சரியாக உறங்கவில்லை. இடையிடையில் வந்த சிங்கத்தின் உறுமலும் ஒரு காரணம்.

ஆனால் ஹோட்டலில் தந்த ஹாட் வாட்டர் பேக் நல்ல சுகமாக இருந்தது. அதன் காரணமாக முதுகு வலி நன்றாகவே குறைந்திருந்தது.

அலாரம் வைக்காமலேயே, 4 மணிக்கு எழுந்து விட்டேன். குனிந்து நிமிர்ந்து நாலைந்து ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து விட்டு, 5.30 மணிக்கு கிளம்பி விட்டோம். அதே நேரத்தில் நிறைய மசாய் டிரைவர்களும் வெவ்வேறு ஹோட்டல்களில் இருந்து கிளம்பி விடுகிறார்கள்.

கிளம்பி ஒரு 10 நிமிடத்திலேயே நிறைய சக டிரைவர்கள் வயர்லெஸ் ரேடியோவில் (வாக்கி டாக்கியில் ) வந்து விட்டார்கள். யாருக்கும் எந்தவொரு சைட்டிங் இன்ஃபர்மேஷனும் கிடைக்காதலால்,குத்து மதிப்பாக அனைவருமே ஒரே திசையில் சென்று கொண்டிருந்தோம்.

எனது டிரைவர் சாமியும், சாமியின் தோழன் டொமினிக்கும் ஒன்றாக சென்று கொண்டிருந்தோம். ஒரு 6 அல்லது ஆறே கால் இருக்கும் , தூரத்தில் இரண்டு சிங்கங்கள் ஒரு வில்ட பீஸ்ட்டை அடித்து தின்று கொண்டிருந்ததும் , அதைப் பறிக்க இரண்டு கழுதைப் புலிகள் வம்பு பண்ணிக் கொண்டிருந்ததும் கலங்கலாகத் தெரிந்தது. அந்த இடத்திற்குச் செல்ல வன அதிகாரிகள் அனுமதிக்கும் “ட்ராக்” எதுவும் இல்லாதலால்,சுற்றி வளைத்து அந்த இடத்தை அடையும் போது மணி காலை 6.30 ஆகி விட்டது.

நாங்கள் அந்த இடத்தைச் சென்றடையும் போது, ஒரே ஒரு கழுதைப் புலியைத் தவிர மற்ற கழுதைப் புலிகள் அந்த இடத்தை விட்டு ஓடியிருந்தன. அந்த ஒரே ஒரு கழுதைப் புலியும் ஒரு சிங்கத்திடம் செமையாக ஒரு அறை வாங்கி மயங்கி விழுந்தது. இது அனைத்தும் என் கார் ஓடிக் கொண்டேயிருக்கும்போது நடந்ததால் அதைப் பார்க்க முடிந்ததே தவிர புகைப்படம் ஒன்றும் எடுக்க இயலவில்லை.

காரை பார்க் பண்ணி விட்டு,படம் எடுக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் அந்த இரண்டு ஆண் சிங்கங்களும் மயங்கி விழுந்த கழுதைப் புலியை கண்டு கொள்ளாமல்,இரையை ருசிப்பதிலேயே மும்முரமாயிருந்தன.

அப்போதுதான்,நான் அந்த கழுதைப் புலியைக் கவனித்தேன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.நான் மெதுவாக சாமியிடம்,அந்த கழுதைப் புலி சும்மா மயங்கித்தான் கிடக்கிறது. உயிருக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்றேன்.

அந்த இரண்டு சிங்கங்களில் ஒன்றுக்கு பாம்பு காது போலிருக்கு. உடனே சட்டென்று திரும்பி அந்த கழுதைப் புலியை ஒரு லுக் விட்டது. அந்த கழுதைப் புலியை பார்க்க வைத்துச் சாப்பிட்டால் வயிறு வலிக்கும் என்று நினைத்ததோ என்னவோ, அதை கொன்று விட முடிவெடுத்து நெருங்கியது.

கழுதைப் புலி அரை குறை மயக்கத்தில் இருந்ததால்,கண்களை உருட்டி அந்த சிங்கம் தன்னை நோக்கி வருவதைப் பார்க்க முடிந்ததே தவிர , எழுந்து ஓட திராணி இல்லாமல் படுத்திருந்தது.

சிங்கம் நெருங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு மூன்று இடங்களில் கடித்து விட்டு,அந்த கழுதைப் புலியை இறுக்கி அணைத்துக் கொண்டு,அதன் குரல் வளையைக் கடித்து அதன் சுவாசத்தை நிறுத்தத் தொடங்கியது. ஒரு 10 நிமிடங்கள் அதை விடவேயில்லை. கழுதைப் புலி இந்நேரம் கண்டிப்பாக இறந்திருக்கும் என்று உறுதி செய்து கொண்ட பிறகே அதை விட்டது. அதன் பிறகும் சில நிமிடங்கள் அதை உற்றுப் பார்த்து,அதன் மூச்சு முழுவதுமாக நின்று விட்டது என்பதை சரி பார்த்த பிறகே மறுபடியும் பழைய இடத்திற்குச் சென்று விட்ட கடமையைத் தொடர ஆரம்பித்தது.

இதன் இரையை அது பிடுங்கி உண்பதும்,அதன் இரையை இது பிடுங்கி உண்பதும் காட்டில் சகஜமான நிகழ்ச்சிதான். அதேபோல்,சில கழுதைப் புலிகள் ஒன்று சேர்ந்து கொண்டு ஒரு ஆண்சிங்கத்தை ரவுண்டு கட்டி அடித்ததையும் முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறேன்.

ஆனால்,உணவைப் பறிக்க வந்த கழுதைப் புலியை சிங்கம் துரத்தி கொல்வதை இப்போதுதான் முதன் முறையாகப் பார்த்தேன்.

இந்த முழு நாடகம் நடந்து முடியும்போது மணி எட்டைத் தாண்டியிருந்தது. ஒரு படத்தில் நடிகை ஓவியா சொல்வது போல, எனக்கு லேசாக பசிக்கிற மாதிரி இருந்தது. அந்த இடத்தை விட்டு விலகி ஒரு இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில் வண்டியை நிப்பாட்டி,கொண்டு சென்ற காலைச் சிற்றுண்டியை முடித்தோம். உண்டு முடித்து விட்டு காப்பியை அருந்தப் போகும் நேரம் ரேடியோவில், ஒரு சிறுத்தை வேட்டையாடப் போகிறது என்ற செய்தி வந்தது. காப்பியை திரும்ப ஃபிளாஸ்க்கிலேயே ஊற்றி விட்டு , சிறுத்தை இருந்த இடத்திற்குப் பறந்தோம்.

எங்களோடு சேர்ந்து மூன்று அல்லது நான்கு வண்டிகள்தான் இருந்தன. அதில் ஒரு வண்டி “நேட் ஜியோ” வண்டி. ஏராளமான உபகரணங்கள் வைத்து சிறுத்தையின் ஒவ்வொரு மூவ்மெண்டையும் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் நானும் போய் சேர்ந்து கொண்டேன்.

அந்த இடத்தில் வறண்டு போன ஓடை போல ஒரு தண்ணீர் பாதை இருந்தது. அந்த சிறுத்தை அதில் பதுங்கி பதுங்கி மெதுவாக அங்கிருந்த வரிக்குதிரை கூட்டத்தை நோட்டமிட்டுக் கொண்டே நெருங்கியது. ஆங்கிலத்தில் அதற்குப் பெயர் Stalking. பொதுவாக சிறுத்தை, சிவிங்கிப் புலி போன்ற விலங்குகள் “ஸ்டாக்” பண்ணும்போது, மிகவும் பொறுமையாகத்தான் தங்கள் இலக்கை நெருங்கும். அன்றும் அதுபோலத்தான், கிட்டத்தட்ட 1 மணி நேரம் கழித்தே மெதுவாக அந்த ஓடைப் பகுதியை விட்டு வெளியில் வந்தது.

நானும் பொறுமையாக அதன் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்துக் கொண்டே இருந்தேன்.

சிறுத்தை வெளியில் வந்து சில நொடிகள்தான் ஆகியிருக்கும்,எதையோ பார்த்து பயந்து போய் விடு விடுவென்று வந்த வழியிலேயே திரும்பி ஓடி அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டது. அங்கிருந்த யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. பைனாகுலரை வைத்து சுற்றிலும் பார்த்த போதுதான் அங்கிருந்த வரிக்குதிரை கூட்டத்திற்கு மறுபுறம் இரண்டு பெண் சிங்கங்கள் அதே வரிக் குதிரை கூட்டத்தை குறி வைத்து மெதுவாக பதுங்கி வந்து கொண்டிருந்தன.

ஆனால்,அதை படம் எடுக்க முடியாமல் வரிக்குதிரை கூட்டம் மறைத்திருந்து. எனவே, சிறுத்தை என்ன செய்கிறது என்பதை அவதானிப்போம் என்று முடிவெடுத்து வேறெங்கும் செல்லாமல், அதையே கவனித்துக் கொண்டும் படம் எடுத்துக் கொண்டும் இருந்தேன்.

சிங்கம் சைடில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அதுவும் தாக்குதல் நடத்தாமல் தாமதித்துக் கொண்டிருந்தது சிறுத்தைக்கு ஏதோ ஒரு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். கீழே இறங்கி வந்து மறுபடியும் ஸ்டாக் பண்ண ஆரம்பித்தது. இது எதையுமே கவனிக்காமல் வரிக்குதிரை கூட்டம் தன் பாட்டுக்கு மேய்ந்து கொண்டிருந்தது வேறு என் இதயத் துடிப்பை அதிகரிக்க வைத்தது.

“ மழை வந்தால் விவசாயிக்குக் கொண்டாட்டம். மழை வராவிட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். எது நடந்தாலும் இறைவனுக்கு இரண்டு தேங்காய்கள்” என்று கண்ணதாசன் எழுதியது போல், எனக்கு ஏதேனும் ஒரு சேஸிங் கிடைக்கப் போவது உறுதி என்று முடிவு பண்ணி ஒரே நிலையில் கேமராவோடு காத்திருந்தேன். மணியும் அந்தா இந்தா என்று 12 ஆகி விட்டது. கேமராவில் கண் வைத்தவாறு குனிந்து ஒரே நிலையில் 3 மணி நேரத்திற்கும் அதிகம் இருந்ததில், முதுகில் சுரீர் சுரீர் என்று வலி வேறு அதிகரித்துக் கொண்டிருந்தது சற்று எரிச்சலாக இருந்தது.

லைட்டிங் வேறு தலைக்கு மேல் சுள்ளென்று அடிக்க, படங்கள் எப்படி வரும் என்ற கவலை வேறு என் மனதை அரித்தது.

கொஞ்சம் நிமிர்ந்து ஸ்ட்ரெச்சிங் செய்யலாம் என்று கேமராவை சீட்டில் வைத்து விட்டு நிமிரவும், அந்த சிங்கங்கள் இரண்டும் சேஸிங் செய்யவும் கரெக்டாக இருந்தது. அந்த வரிக்குதிரை கூட்டம், நான் இருந்த திசைக்கு எதிர் திசையில் ஓடியதால் கையில் கேமரா இருந்தாலும் எடுத்திருக்க முடியாது ( அப்படித்தான் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும்).

அந்த களேபரத்தில் சிறுத்தை எங்கே ஓடியது என்றே தெரியவில்லை.

“வட போச்சே” ஃபீலிங்கில் அந்த இடத்தை விட்டு அகன்றோம்.

சிறிது தூரம் தள்ளி, ஒரு மரத்துக்கு அடியில் காரை பார்க் பண்ணி விட்டு , காருக்குள்ளேயே இரண்டு சீட் வரிசைக்கிடையில் தரையிலேயே படுத்து விட்டேன். அப்படியே ஒரு இரண்டு மணி நேரம் படுத்திருந்தேன். முதுகு வலி கொஞ்சம் குறைந்தவுடன், எழுந்து, கொண்டு சென்ற மதிய உணவையும் சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு அடுத்த அனுபவத்தைச் சந்திக்கக் கிளம்பினேன்.

முதல் நாள் சந்தித்த Topi Plane Pride தன் குட்டிகளுடன் ஒரு புதருக்குள்ளே மறைந்திருந்த விதம் வித்தியாசமாக இருக்க, கொஞ்சம் அருகில் சென்று பார்த்தோம். தூரத்தில் ஒரு காட்டெருமைக் கூட்டம் சிங்கம் இருந்த திசை நோக்கி வர, தாய்ச் சிங்கம் தன் குட்டிகளைக் காப்பாற்ற அந்த புதருக்குள் மறைந்திருந்தது.

அவ்வப்போது தன் தலையைத் தூக்கி அந்த காட்டெருமைக் கூட்டத்தை கண்காணிப்பதும், தன் குட்டிகள் அந்தப் புதரை விட்டு வெளியில் சென்று விடாதபடி ரொம்ப ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டதும்கண்கொள்ளா காட்சி. காட்டெருமை கூட்டத்தின் கண்ணில் இந்த குடும்பம் தென்படாதலால், விலகிச் சென்று விட்டது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த சிங்கக் குட்டிகள் கெட்ட ஆட்டம் போட்டன. அங்கிருந்த 7 குட்டிகளும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு, தங்கள் தாயிடம் பால் குடித்ததும், அதில் ஒன்று வயிறு முட்ட பால் குடித்து விட்டு மல்லாக்க விழுந்து எழுந்திருக்க முடியாமல் அவஸ்தைப்பட்டதும், இன்னொரு குட்டி அங்கிருந்த ஒரு ஒரு சிறு மரக் கிளையில் தலையை நுழைத்துக் கொண்டு ஸ்டைலாக எனக்கு போஸ் கொடுத்து விட்டு , தன் தலையை உள்ளிருந்து எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டதும், அங்கிருந்த ஒரு ரௌடி குட்டி இன்னொரு குட்டியின் வாலைப் பிடித்து வம்பிழுத்ததும், இன்னொரு குட்டி சர்வ சாதாரணமாக தன்னுடைய தாயின் உடம்பின் மீது நடை பழகியதும் ஒரு முழு நீள டைரிக்கான விஷயங்கள்.

சலிக்க சலிக்க படம் எடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பும் போது மணி மாலை 5 ஆகியிருந்தது. இடையிடையில் நான் முதுகு வலியில் கஷ்டப்படுவதைப் பார்த்து விட்டு சாமி, “பாலா, வலி அதிகம் இருந்தால் ஹோட்டலுக்குப் போய் விடுவோமா?” என்றான் ( வயதில் ரொம்பச் சின்னவன் என்பதால் அவன் இவன் என்கிறேன். தவறாக நினைக்காதீர்கள்).

அவன் கேட்ட கேள்விக்கு உடம்பு சரி என்று சொல்ல நினைத்தாலும், மனசோ , “ அப்ப ப்ளான் பண்ணியிருந்த சில்யூட் ?” என்று என்னையே கேள்வி கேட்டது.

கொஞ்சமும் யோசிக்காமல், “சன் செட் முடிந்து போவோம் சாமி” என்றேன். மசை மாராவில் சன் செட் எடுப்பது “ கண்ணா லட்டு திங்க ஆசையா ?” என்பது போல சுகமான ஒரு அனுபவம். அப்படி எடுக்க உங்களுக்கு ஒரு நல்ல ரசனையுள்ள டிரைவர் மட்டும் கிடைத்து விட்டால் போதும். எனக்கு சாமி கிடைத்தது , சாமி கொடுத்த வரம் ( ஹி…ஹி..ஹி…ஒரு ஃப்ளோவுல அதுவா வந்திருச்சு) .

ஒரு தாழ்வான பகுதியில் காரை நிறுத்தி விட்டு , ஏதேனும் சப்ஜெக்ட் கிடைக்குமா என்று பார்த்தோம். தூரத்தில் சில ஒட்டகச் சிவிங்கிகள் தெரிந்தன. ஆனால் , அவையும் தாழ்வான பகுதியிலேயே நின்றிருந்தன. நல்ல சில்யூட் எடுப்பதற்கு நாம் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும். ஆனால், நாம் எடுக்கப் போகும் சப்ஜெக்ட் மேடான பகுதியில் சூரியனை பின்னிறுத்தி இருக்க வேண்டும் என்பது கானுயிர் புகைப்படக் கலையின் விதி.

சன் செட் நடப்பதற்கு கொஞ்சம் நேரம் இருந்ததால், ஒட்டகச்சிங்கிகளை சில படங்கள் எடுத்து விட்டு சூரியன் மறையப் போகும் இடத்தை குறி வைத்து கேமராவை செட் பண்ணி வேறு ஏதேனும் விலங்குகள் வருகின்றனவா என்று காத்திருக்கத் தொடங்கினோம்.

சூரியன் மறைவதற்காக அந்த நிலப் பரப்பைத் தொடுவற்கும், ஒரு வில்ட பீஸ்ட் மிகச் சரியாக சூரியனுக்கு முன்னால் வருவதற்கும் டைமிங் பக்காவாக இருந்தது. அத்துடன் மேலும் சில வில்ட பீஸ்ட்டுகளும் அந்த இடத்திற்கு வர, இரண்டு சாமிகளுக்கும் நன்றி சொல்லி விட்டு தட தடவென்று சில படங்கள் எடுத்தேன்.

ஹோட்டலுக்கு விரைந்து, ஒரு குளியல் போட்டு விட்டு, இரவு உணவை முடித்து, கேமரா மற்றும் அனைத்து உபகரணங்களையும் சுத்தப்படுத்தி விட்டு, எடுத்த சில படங்களை எடிட் செய்து என் மனைவிக்கும், என் நெருங்கிய நண்பர்களுக்கும் அனுப்பி விட்டு அக்கடா என்று படுக்கையில் விழும்போதுதான் முதுகு வலியின் வீரியம் புரிந்தது.

முதல் நாள் போலவே ஹாட் வாட்டர் பேக் கொண்டு வரச் சொல்லி, கொஞ்சம் ஒத்தடம் கொடுத்து விட்டு படுக்கலாம் என்று நினைக்கும் போது மணி 12 ஐத் தாண்டியிருந்தது.

அப்போது சாமி ஓடி வந்து , “ பாலா, ஒரு குட் நியூஸ். நீ வாழ்நாள் முழுவதும் நினைத்து சந்தோஷப்படும்படி நாளை காலை ஒரு சைட்டிங் காண்பிக்கிறேன். ஆனால், நாம் காலை 5 மணிக்கே கேம்பை விட்டு கிளம்ப வேண்டும். Be Ready என்று சொல்லி விட்டு ஓடி விட்டான்.

பெரும்பாலான கென்யன் டிரைவர்கள் இப்படித்தான். சர்ப்ரைஸாக நிறைய விஷயங்கள் காண்பிப்பார்கள். ஆனால், அது என்ன என்று அதை முன் கூட்டியே சொல்ல மாட்டார்கள்.

முதுகு வலியோடு இந்த சர்ப்ரைஸூம் சேர்ந்து என்னை மண்டை காய வைத்தன.

அன்று(ம்) சிவ ராத்திரிதான்.

வெ.பாலமுரளி