முள்றியின் டைரி : 57 மறதிக்கு நான் கொடுத்த விலை.

இன்று என் மனைவிக்குப் பிறந்த நாள் (17.06.2020)

மூன்று வருடங்கள் கழித்து இன்று நாங்கள் அனைவரும் மதுரையில் ஒன்றாகக் கொண்டாடினோம். சந்தோஷமாக இருந்தது.

என் மனைவியின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும், 10 வருடத்திற்கு முன்னால் நடந்த ஒரு தரமான சம்பவத்தை நினக்காமல் இருக்க முடிந்ததில்லை.

அந்த வருடம் எங்கள் கம்பெனியின் போர்ட் மீட்டிங்கை இத்தாலியில் உள்ள  மிலான் நகரில் வைத்திருந்தார்கள்.

போர்ட் மீட்டிங் என்றாலே Deep Frying மற்றும்  Barbeque Grilling தான். மீட்டிங் முழுவதும் ரொம்ப கார சாரமாக இருக்கும். ஃப்ரை ஆவது உறுதி என்று தெரிந்து விட்டதால், அந்த வருட மீட்டிங்கை நைரோபியிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று ரொம்ப முயற்சித்தேன். எங்கள் இத்தாலிய பார்ட்னர் அதற்கு ஒத்துக் கொள்ள மறுத்து விட்டார்.

ரொம்ப டென்ஷனோடு அந்த வருடம் ஜூன் 17 மிலானில் போய் இறங்கும்போது அதிகாலை காலை மணி 4. ஹோட்டலுக்குப் போய் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, குளித்து முடித்து,  காலை உணவையும் முடித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினேன். 

என்னுடைய ஹோட்டலில் இருந்து நடந்து போகும் தூரத்தில்தான் எங்கள் பார்ட்னரின் அலுவலகம். நடந்து போய்க் கொண்டிருக்கும்போது , வழக்கம் போல் ஏழரை என் நினைவில் வந்து ஏன் என் மனைவிக்கு ஒரு ஃபோன் பண்ணி, Arrived Safely என்று சொல்லக் கூடாது என்று நினைக்க வைத்தது. 

அப்போது, இந்திய ஏர் டெல் இண்டர்நேஷனல் ரோமிங் லைன் ஒன்று வைத்திருந்தேன் – போஸ்ட் பெய்ட் லைன். இப்போது உள்ள மாதிரி வாட்ஸப் கால் எல்லாம் கிடையாது. அதேபோல், அப்போது ப்ளாக்பெர்ரி ப்ளாக்பெர்ரி என்று ஒரு ஃபோன் இருக்கும். அது குறிப்பாக ஈமெயிலுக்கானது . ப்ளாக்பெரியை கையில் வைத்துக் கொள்வது ஒரு ஃபண்டா ( இப்போது அந்த ஃபோன் கையில் இருந்தால் காறித் துப்பி விடுவார்கள் ).

அந்த லைன் என்னதான் ரோமிங் லைனாக இருந்தாலும், அதை நான் ஈமெயிலுக்காகவும், நான் செல்லும் நாடுகளில் லோக்கலில் உபயோகப்படுத்துவதற்காகவும் மட்டுமே உபயோகப்படுத்துவேன். காரணம், ஏர் டெல் இன்டர் நேஷனல் லைனுக்கு வசூலிக்கும் கட்டணம் அந்த மாதிரி “தரமாக” இருக்கும்.

ஆனால், Arrived Safely மட்டும்தானே சொல்லப் போகிறோம் என்பதால், ரொம்ப யோசிக்காமல், என் மனைவிக்கு ஒரு ஃபோன் போட்டேன். 

கால் ரேட் எகிறும் என்பது ஒரு பக்கம், போர்ட் மீட்டிங்கில் என்னை வறுத்தெடுக்கப் போவது ஒரு பக்கம் என்று செம டென்ஷனில் இருந்ததால், அன்று என் மனைவிக்குப் பிறந்த நாள் என்பது சுத்தமாக மறந்து போய் விட்டது.

ஃபோன் பண்ணி, அர்ச்சனா நான் பத்திரமா வந்திறங்கி விட்டேன். மீட்டிங் முடிந்து மெசேஜ் பண்ணுகிறேன் என்றேன். அந்தப் பக்கம் ரொம்ப ஃப்ளாட்டா “ அப்புறம் வேறு ஒண்ணும் விசேஷம் இல்லையா ? “ என்று வெறுமையாக ஒரு கேள்வி வந்தது.

அப்பக் கூட  “குமுறிக் கொண்டிருக்கும் ஒரு எரிமலையின் அமைதி அது ” என்பது எனக்குப் புரியவில்லை. கால் ரேட் எகிறிக் கொண்டிருக்கும் டென்ஷனில் “ வேறொண்ணும் விசேஷமில்லை” என்று சொல்லி விட்டு டொக்கென்று ஃபோனை வைத்து விட்டேன். 

ஃபோனை வைப்பதற்கும் , நான் செல்லும் அலுவலகம் வருவதற்கும் சரியாக இருந்தது.

ஃபோன் காலை சுத்தமாக மறந்து விட்டு, போர்ட் ரூமுக்குள் சென்று விட்டேன். மீட்டிங்கின் பாதியில் டீ பிரேக்கிற்காக எங்கள் பார்ட்னரின் ரூமிற்குச் சென்றேன். அவர் ரூம் முழுவதும் அவர் குழந்தையின் பிறந்த நாள் புகைப்படங்களாக மாட்டி வைத்திருந்தார். அப்போதுதான் எனக்குச் சட்டென்று பொறி தட்டியது. ஆஹா….இன்று அர்ச்சனாவின் பிறந்த நாளாயிற்றே என்று. உடனே  “ அப்புறம் வேறு ஒண்ணும் விசேஷம் இல்லையா ? “ வின் அர்த்தமும் புரிந்தது. 

வசமாக மாட்டிக் கொண்டது புரிந்தது. லேசாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. 

நான் மிலானில் ஒரே ஒரு நாள் மீட்டிங்கை முடித்துக் கொண்டு, அன்று நள்ளிரவு திரும்ப நைரோபி செல்ல ப்ளான் பண்ணியிருந்ததால், எங்கள் பார்ட்னரும் என்னை “வைத்து செய்து விட்டார்”. நான் அவர் அலுவலகத்தை விட்டு வெளியில் வரும்போது மணி மாலை 6. 

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, உடனே அர்ச்சனாவிற்கு ஃபோன் பண்ணி விட்டேன். அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் அனைவருக்கும் ஊகிக்க முடியும் என்பதால் , ரொம்ப விரிவாக விளக்கவில்லை. ஆனால், அந்த ஃபோன் கால் 45 நிமிடங்கள் நீடித்தது. 

மறு நாள் காலை , நைரோபி சென்று இறங்குவதற்கும், என்னுடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஃபோன் காலுக்கான தொகை ரூபாய் ஒண்ணே கால் லட்சம் என்று ஈமெயில் வருவதற்கும் சரியாக இருந்தது. 

ஃபிளைட்டில் சரியாக தூங்காததினாலா இல்லை அந்த ஈமெயிலைப் பார்த்ததினாலா என்று தெரியவில்லை தலை சுற்றி ஏர்போர்ட்டிலேயே ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து விட்டேன்.

அன்று ஒரு சபதம் எடுத்தேன். அதை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

  •   
  •  
  •   
  •  
  •   
  •  
  •   
  •  
  •   
  •  
  •   
  •  

ஆமாம்…அன்றிலிருந்து இண்டர்நேஷனல் ரோமிங் லைன் ஃபோனை எங்கும் எடுத்துச் செல்வதில்லை. ஹிஹிஹிஹிஹிஹி

வெ.பாலமுரளி.