முள்றியின் டைரி : 56 ஒரு வங்கியின் கதை….

என்னுடைய “ முரளியும் சில ஆணிகளும்” டைரி படித்து விட்டு,சில பேர் என்னைப் பற்றியும் என் ராசி பற்றியும் இன்னும் சந்தேகம் கொண்டிருக்கலாம்.

சுடச் சுட இன்னொரு செய்தியும் சொல்லத்தான் இந்த டைரி. இந்த டைரி உங்கள் சந்தேகத்தை தெளிவு படுத்தலாம்.

நான் இந்தியா வந்தவுடனேயே போன முதல் இடம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாதான் – ஒரு கிரெடிட் கார்ட் கேட்டு.அங்கு மூன்று பேர் எனக்கு உதவினார்கள். அப்ளிகேஷன் எல்லாம் ஃபில் அப் பண்ணி வாங்கினார்கள். ஆனால்,அதற்குப் பிறகு அவர்களிடம் இருந்து ஒரு நியூஸூம் இல்லை.

இரண்டு மாதம் விட்டு விட்டு ஃபாலோ பண்ணலாம் என்று ஒவ்வொருவருக்கா ஃபோன் செய்து விசாரித்தால்…….சொன்னால் நம்ப மாட்டீர்கள்,எனக்கு உதவி செய்த மூவருமே தங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு வேலைக்கு சென்று விட்டார்கள்- தனித் தனியாக.

என்னடா…முரளிக்கு உதவி செய்ய நினைத்தது ஒரு தவறா என்று எனக்கு மகா குழப்பம். ஆச்சரியமாக,கிரெடிட் கார்ட் டிபார்ட்மெண்ட்டில் யாருக்குமே என்னுடைய அப்ளிகேஷன் விவரம் ஒன்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட 15 நாட்கள் கழித்துத்தான் ஒரு பிரகஸ்பதி , நீங்கள் NRI என்பதால், உங்கள் விண்ணப்பம் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது சார் என்றது.

எனக்கா, செம கோபம். அது மட்டுமல்லாது,நமது மத்திய நிதியமைச்சர் இந்தியாவில் வீணாய்ப் போன வங்கிகள் அனைத்தையும் ஸ்டேட் பேங்கோட இணைப்பது வேறு என்னை உறுத்திக் கொண்டேயிருந்தது. சரி,நமது அக்கௌண்டை மூடி விட்டு வேறு ஒரு புது வங்கியில் கணக்கைத் தொடங்குவோம் என்று முடிவெடுத்தேன்.

ஐசிஐசிஐ – யில் முன்பே ஒரு மோசமான அனுபவம் இருந்ததால், நான் போய் நின்ற இடம் HDFC Bank.என்னுடைய ராசி புரியாமல், செம சர்வீஸ் கொடுத்தார்கள். ஏதாவது கையெழுத்து வாங்க வேண்டுமென்றால் கூட வீட்டில் வந்தே வாங்கினார்கள் – நடக்கப் போவது என்னவென்று தெரியாமல். பூவர் ஃபெல்லோஸ்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் காலை, தூங்கிக் கொண்டிருக்கும்போது என் மனைவி “ அடித்து” எழுப்பினாள். நாம் காய்கறி வெட்டும் நேரம் வந்து விட்டது தெரியாமல்தான் தூங்கிக் கொண்டிருக்கிறோமோ என்று பதறிப் போய் அடித்துப் பிடித்து எழுந்து, “கத்தி எங்கே கத்தி எங்கே” என்றேன் பழக்க தோஷத்தில்.

காய்கறியெல்லாம் அப்புறம் வெட்டிக் கொள்ளலாம், முதலில் இந்த நியூஸைப் பாருங்கள் என்று “உண்மையின் உரைகல் – தினமலர்” செய்தி ஒன்றைக் காண்பித்தாள்.தூக்கி வாரிப் போட்டு விட்டது.

HDFC Bank கின் ஒன்ணே முக்கால் கோடி ஷேர்களை Central Bank of China 3000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி விட்டது.முரளிக்கு ஒரு கிரெடிட் கார்டு கொடுத்தது தப்பாடா என்று வருத்தப்பட மட்டுமே என்னால் முடிந்தது.

இதுவரை நான் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதிலும் பெரிய புள்ளிகள் யாரும் தலையிட்டதில்லை.“இந்திய வரலாற்றில் மு…..த…..ல் முறையாக” நமது நாட்டின் பிரதமர் மோடி ஜீ என்னுடைய பிரச்சினையில் நுழைந்தார்.

எப்படியிருந்தாலும், முரளியையோ, அவன் ராசியையோ நம்மால் ஒன்றும் செய்ய இயலாது, எனவே, முதலீட்டார்களையாவது தடுத்து நிறுத்துவோம், என்று “ இனி சைனா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஶ்ரீலங்கா போன்ற அண்டை நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசின் ஸ்பெஷல் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

“வெற்றிக் கொடி கட்டு” வடிவேலு ஸ்டைலில், இனி HDFC Bank கிலேயே கணக்கைத் தொடருவதா இல்லை வெளி நாட்டு வங்கி ஏதேனும் செல்வதா என்று ஒரு கிளி ஜோசியக்காரனைக் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

வெ.பாலமுரளி.பி.கு:

நான் பிஜேபி யில் சேரலாமா என்றும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். சாரி…எனக்கு வேறு வழி தெரியவில்லை.