முள்றியின் டைரி : 55 . உறக்கத்தைத் தொலைத்தவன் -1

நேற்று இரவு வழக்கமான என்னுடைய அரைத் தூக்கத்தில் கடவுள் வந்தார்.

பார்ப்பதற்கு நம்முடைய சிவன் மாதிரியும் இல்லாமல், அல்லா மாதிரியும் இல்லாமல், இயேசு மாதிரியும் இல்லாமல், ஒரு மாதிரி வித்தியாசமாக இருந்தார் (இவர்தான் ஒரிஜினல் என்று நினைக்கிறேன்) .

மகனே நீ செய்யும் பணியை (?????????????? ) மெச்சினேன், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். “நீ செய்யும் பணியை மெச்சினேன்” என்று சொன்னவுடனேயே எனக்கு அவர் உண்மையான கடவுள்தானா என்று ஒரு டவுட் ( எப்படி நாம் செய்த பாவமெல்லாம் அவருக்குத் தெரியாமல் போச்சு என்ற சந்தேகம் வேற அரித்தது. ஒரு வேளை அவரும் Anti Virus Software வைத்திருப்பாரோ ?).

” இல்ல சாமி , அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்றேன்.அவரும் விடாமல் ” பரவாயில்லை. உனக்கு இன்னொரு மனிதப் பிறவி அருள்கிறேன்” என்றார்.

” இன்னொரு பிறவியாஆஆஆஆஆஆஆஆஆஆ?” என்று அலறிக் கொண்டே எழுந்து விட்டேன்.இந்த நைரோபி குளிரிலும் படு பயங்கரமாக வியர்த்திருந்தது.

மணியைப் பார்த்தேன் – இரவு 1.30உள்ள தூக்கமும் போச்சா ……….

வெ. பாலமுரளி

பி.கு:

நெடு நாள் தவம் இருந்தேன் .

கடவுளும் தோன்றினார்

பக்தா…உன் பக்தி மெச்சினோம்

என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார் .

இது தெரியாத நீர் என்ன கடவுள் என்றேன்

ந. பிச்சமூர்த்தி எழுதிய கவிதை. எப்போதோ படித்தது . இப்போது ஞாபகம் வந்தது.