முள்றியின் டைரி : 53 – ஒரு கிராமத்து அத்தியாயம்…

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் லண்டனில் இருக்கும் என் நண்பர் கனேஷ் வந்து என்னைக் கூட்டிச் செல்லும் வரையில் ”அரிட்டாபட்டி” என்னும் பூலோக சொர்க்கம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

அரிட்டாபட்டி என்னும் சிறிய கிராமம் மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் ஒரு 25 கி.மீ. தூரத்தில் உள்ளது.“ என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்” என்ற மருத காசியின் பழைய பாட்டு ஒன்று உண்டு. அந்தப் பாட்டை மருதகாசி அரிட்டாபட்டி யில் வைத்துத்தான் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு “ அரிட்டாபட்டியில்” அனைத்தும் இருக்கிறது.

இன்று ( 18.03.2020) என் மனைவியை அழைத்துக் கொண்டு இரண்டாம் முறை அங்கு சென்றேன்.எதை எடுப்பது ? எதை விடுப்பது ? எதில் இருந்து தொடங்குவது ? ஒரே குழப்பம்.

இயற்கை , வரலாறு,அரசியல் என்று அனைத்தும் கலந்து கட்டியிருக்கிறது அரிட்டாபட்டியில்.

மேலூருக்கு அருகில் உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பற்றி தெரிந்திருந்த எனக்கு , அரிட்டாபட்டியில் 160 க்கும் மேல் பறவைகள் இனம் இருக்கின்றன என்று கனேஷ் சொல்லும்போது , என்னால் நம்பவே முடியவில்லை. ஜனவரியில் கனேஷ் என்னை இட்டுச் செல்லும்போது,வெறும் பறவைகளைத் தேடியே இருந்தது எங்களது தேடல்.ஆனால்,இந்த முறைதான் அந்த கிராமத்தின் முப்பரிணாமமும் புரிந்தது. ஆடிப்போய் விட்டேன்.

இயற்கை :

அரிட்டாபட்டியைச் சுற்றி ஒரு சிறிய மலைத் தொடர் உள்ளது. அதில் கழிஞ்சமலை, நாட்டார் மலை, ராமாயி மலை, கழுகுமலை, தேன்கூடு மலை, கூகை கத்தி மலை என்று ஆறு சிறிய மலைகள் உள்ளன. ஆறும் கிரானைட் சுரங்கங்கள்.ஊரெங்கிலும் நீரோடைகளும் , குளங்களும், கண்மாய்களும் படு செழிப்பமாக உள்ளது.

இங்கு லகடு வல்லூறு, ராஜாளி கழுகு, சிவப்பு வல்லூறு, செந்தழை வல்லூறு, குட்டைக் கால் பாம்பு திண்ணிக் கழுகு , தேன் பருந்து , கொம்பன் ஆந்தை , கரும்பருந்து என்று 160 க்கும் மேற்பட்ட பறவையினங்கலும், புள்ளி மான், மினா மான், தேவாங்கு, மலைப் பாம்பு என்று மற்ற உயிரிங்களும் இருக்கின்றன என்கிறார் இந்த கிராமத்தில் வசிக்கும் சமூக மற்றும் இயற்கை ஆர்வலர் திரு அழகு ரவிச்சந்திரன்.

இவருடைய பெரும்போராட்டத்தினால், இந்தக் கிராமமும், அனைத்து இயற்கை வளங்களும், பறவைகளும், சில பல விலங்கினங்களும் மனித வல்லூறுகளிடமிருந்து காப்பாற்றப் பட்டிருக்கின்றன . விபரம் வரலாறு பகுதியில் .

வரலாறு:

அரிட்டாபட்டியின் வரலாறு சமணர்களின் காலத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும்.இங்கு ஆறு சமணர்களின் படுகைகளும், ஒரு தீர்த்தங்கரரின் சிற்பமும் உள்ளது.அதுமட்டுமல்லாது, கி.பி. 7 – 8 ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு குடை வரைக் கோயிலும் இங்கு உள்ளது. இது முற்காலப் பாண்டியர் காலத்தைச் சார்ந்தது என்ற தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகை ஒன்று உள்ளது. இந்தக் குடைவரைக் கோயிலில் லகுலீசர் என்ற சிவனின் லிங்கம் மிக அற்புதமாக செதுக்கப் பட்டிருக்கிறது, மலையைக் குடைந்து.

மிகச் சிறிய இந்தக் கோயிலின் வெளிப் புறத்தில் ஒரு விநாயகர் சிலையும் , சிவபெருமானின் சிலையும் செதுக்கப் பட்டிருக்கிறது.இங்கு தொல்லியல் துறை பெரிய ஆராய்ச்சி எதுவும் செய்தது போல் தெரியவில்லை. ஆனால், ஒரு குத்து மதிப்பாக இது முற்காலப் பாண்டியர் காலத்தியது என்று ஒரு போர்டு மட்டும் வைத்திருக்கிறார்கள்.என்னுடைய தனிப்பட்ட கருத்து, இது சமணர்கள் காலத்திய குகையில் பல்லவர்கள் குடைந்த கோயில்.

காரணம் , இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் குன்றுகளில் படிகள் செதுக்கியிருக்கும் விதம், டிப்பிகல் சமணர்கள் ஸ்டைல். குடைவரைக் கோயிலின் டிசைன் டிப்பிகல் பல்லவர்கள் ஸ்டைல். அதிலும் , இங்கிருக்கும் விநாயகர் உருவம் பிள்ளையார் பட்டியில் இருக்கும் விநாயகரின் நகல் போல் இருக்கிறது.இங்கு ஆராய்ச்சிகள் மேற்கொண்டால், இன்னும் விஷயங்கள் வெளிவரலாம்.

மேற்கூறிய சமூக மற்றும் இயற்கை ஆர்வலர் ரவிச்சந்திரனின் ஆறு வருடப் போராட்டத்தின் பயனாக, இரண்டு மாததிற்கு முன்னால், நமது ASI ( Archeological Survey of India ) அரிட்டாபட்டியை Archeological Site ஆக அறிவித்து அரசு ஆணை வெளியிட்டிருக்கிறது. நான் சென்றபோது , இந்திய வனத்துறை சார்பில் ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்திருந்தனர்.திரு அழகு ரவிச்சந்திரனுக்கும், இந்த ஊர் மக்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அரசியல்: கிரானைட் என்று ஒரு பேப்பர்ல எழுதியிருந்தாலே வட்டமடிக்கும் கூட்டத்திற்கு நடுவில், ஆறேழு கிரானைட் மலைகள் இருந்தால் ????? யெஸ். யூ ஆர் கரெக்ட். நான் மேலே சொன்ன வல்லூறுகளோடு சேர்ந்து மனித வல்லூறுகளும் அரிட்டாபட்டியை வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. நாங்கள் வேலை வாய்ப்பு தருகிறோம், வீடு கட்டித் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகள் வேறு காண்பித்திருக்கிறார்கள். ரவிச்சந்திரனோடு சேர்ந்து ஊர் முழுவதும் ஒன்று கூடி போராட அவர்கள் விரட்டடிக்கப் பட்டிருக்கிறார்கள் – தற்காலிகமாக.

இதற்கிடையில் , உள்ளாட்சி தேர்தலில் சில கட்சிகள் , இந்த ஏரியாவில் உள்ள பெரிய தொழிலதிபர்களை அணுகி எங்களை ஜெயிக்க வையுங்கள், கிரானைட் எடுக்க நாங்கள் உதவுகிறோம் என்று பேரம் பேசியிருக்கிறார்கள்.

இது தெரியாமல், சகாயம் ஐ ஏ ஏஸ்ஸின் நண்பரான இந்த ஊர் ஹீரோ அழகு ரவிச்சந்திரனும் ஊர்த்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டிருக்கிறார்.அவருடைய முக்கியமான பிரச்சாரமே “ சகாயத்தின் தம்பிகளான நாங்கள் லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் கொடுக்க மாட்டோம்” என்பதாகத்தான் இருந்திருக்கிறது.

இந்த முறை ரவியைச் சந்தித்தபோது, எலெக்‌ஷன் ரிசல்ட் என்னாச்சுங்க ரவி என்றேன். மிகவும் விரக்தியாக சிரித்துக் கொண்டே, டாஸ்மார்க்கோடு என்னால் போட்டியிட முடியவில்லை சார் என்றார் – ஓடந்துறை சண்முகம் போல்.

நம்மிடம் தப்பை வைத்துக் கொண்டு அந்த அரசியல் கட்சி சரியில்லை, இந்த அரசியல் கட்சி சரியில்லை என்று சொல்வது என்னங்க நியாயம் ?

வெ.பாலமுரளி