முள்றியின் டைரி : 52 முரளியும் சில ஆணிகளும்……(10.04.2020)

எனக்கு ஒரு ராசி உண்டுங்க.

நான் எப்போதெல்லாம் ஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டிற்கு புலம் பெயர்கின்றேனோ, அப்போதெல்லாம் நான் புலம் பெயரும் நாடு ஒரு மிகப் பெரிய பிரச்சினையை சந்திக்கும்.

ஒரு காலத்தில் சோவியத் யூனியன் என்று ஒரு பெரிய வல்லரசு இருந்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன். நான் அங்கு சென்ற ராசி , காற்று கூட புக முடியாத இரும்புத்திரை நாடு என்று வர்ணிக்கப்பட்ட அந்த வல்லரசு,சுக்கு நூறாக உடைந்து சின்னா பின்னமானது. நான் படிப்பு முடிந்து இந்தியா திரும்புவதற்குள் தாவு தீர்ந்து விட்டது – அந்த நாட்டிற்கு.

அடுத்து தலைவன் காலடி எடுத்து வைத்தது,கென்யா என்னும் பூலோக சொர்க்கம். நான் அந்த நாட்டில் நுழையும்போது அங்கு ஒரு டாலரின் மதிப்பு 42 கென்யா ஷில்லிங். நான் அங்கு சென்றது எப்படித்தான் டாலருக்குத் தெரிந்ததோ, டாலர் மதிப்பு கிடு கிடுவென்று ஏறி 100 ஷில்லிங்கைத் தாண்டியது. அங்குள்ள யாருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. என்ன நடக்கின்றது என்ற ரகசியம் தெரிந்த ஒருவனும் வாய் மூடி மௌனமாக இருந்து விட்டான்.

இந்த பொருளாதார பிரச்சினைகள் பத்தாதென்று,ஒரு மிகப்பெரிய மின் பற்றாக்குறையும் வந்து சேர்ந்தது. மின் வெட்டு என்றால்,நாம் கலைஞர் டயத்தில் சந்தித்தோமே அது போல ஜூஜூபி மின் வெட்டு அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. ஒரு 6 மாதங்கள் கென்யா சீரழிந்து விட்டது. கென்ய மக்களுக்கு மின் வெட்டு என்பது மிகப் புதிய விஷயம். மண்டை காய்ந்து போனார்கள். எனக்கோ , யாரிடம் சொல்வதென்று புரியவில்லை. சொல்லாமலும் இருக்க மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

நான் அடிப்படையில்Good Boy (??????) என்பதால்,சொல்லாமல் கொள்ளாமல்,கனடா நாட்டிற்கு புலம் பெயர முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கினேன். (அங்கு என்ன ஏழரையோ என்று நினைத்து உங்கள் இதயம் தட தடவென்று அசுர கதியில் அடிப்பது என்னால் உணர முடிகிறது).

தான் போய் இறங்கிய போது அந்த நாடு இருந்த அமைதிக்கு,இங்கு முரளியின் ராசியால் எந்தவொரு பிரச்சினையும் வராது என்று ஆணித்தரமாக நம்பினான் முரளி.நான் மனதிற்குள் நினைத்து சந்தோஷப்பட்டது ஒசாமா பின்லேடனுக்கு ஏனோ பிடிக்கவில்லையென்று நினைக்கிறேன். அந்த மூதேவி ஒரு பிளான் பண்ணி,கனடாவில் கூட இல்லை, அருகில் உள்ள அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை சாய்த்தது. அதன் எதிரொலி கனடாவிலும் நன்றாகவே எதிரொலித்தது. பிரச்சினைகள் கன்னாபின்னாவென்று தலை தூக்க ஆரம்பித்தது. முரளி குழம்பி விட்டான்.

ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான் என்னும் கதையானது என் கதை.அடுத்து எந்த நாடு செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில்,வேலியில் போற ஓணானை வேட்டியில் எடுத்து விட்டுக் கொண்ட கதையாக,கென்யாவில் என்னுடைய பழைய பாஸ் “ Country is not feeling well. Start Immediately “ என்று தந்தி ( ஈ மெயில்) கொடுத்தார்.

சரி,கென்யாவில் நாம் செய்ய வேண்டிய “கடமை” ஏதோ பாக்கி இருக்கிறது போலிருக்கிறது என்று நினைத்து,ரொம்ப யோசிக்காமல் உடனே கிளம்பி விட்டேன்.அடுத்து 15 வருடங்கள் அங்கு நடந்தது அனைத்தும் வரலாறு.தொழில் தரை மட்டத்திற்கு போய் விட்டது என்று சொல்வார்கள். ஆனால்,கென்யாவில் தொழில், தரைக்கும் கீழே குழி தோண்டி அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

நானும் என்னுடைய அவப்பெயரை துடைத்து எறிந்து விட வேண்டுமென்று படாத பாடு பட்டேன். ஆனால் , விதி வலியது. இதற்கிடையில் நாடு மூன்று கேவலமான தேர்தல்களைச் சந்தித்தது. நிறைய உயிர்ச் சேதங்கள் வேறு.

நான் நாட்டை விட்டுச் சென்ற பின்னராவது அந்த நாடு (நான் சென்ற மற்ற நாடுகளைப் போன்று) மீண்டு வரட்டும் என்று VRS வாங்கிக் கொண்டு கடந்த டிசம்பரில் தாயகம் திரும்பினேன்.

பொதுவாக,நான் புலம் பெயரும்போது அந்த நாடு மட்டுமே படாத பாடு படும். ஆனால்,இந்த முறை என்னுடைய புலம் பெயர்தல் உலகையே ஒரு ஆட்டு ஆட்டி விட்டது கொரோனா என்னும் பெயரால்.

இப்போது மறுபடியும் ஒரு மிகப் பெரிய குழப்பம், அடுத்து எங்கு செல்வது என்று. எந்த நாட்டைப் பார்த்தாலும் பாவமாக உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப்,நமது பிரதமர் மோடிஜியை மிரட்டி சில பல மருந்துகளைப் பெற்றுக் கொண்டது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. நாம் மோடிஜீயை 1000 கேள்விகள் கேட்கலாம். ஏனென்றால்,அவர் ஹமாரா தேஷ்கா பிதாஜி ஹை. ஓ டிரம்ப்வாலா கோன் ஹை ? ( வேண்டாம் வேண்டாம் ….நீ ஹிந்தியில மட்டும் பேசாத. நாங்க வேண்டுமென்றால் டிரம்பை மன்னிப்பு கேட்க வைக்கிறோம் என்று நீங்கள் கதறுவது கேட்கிறது).அவர் செய்த செய்கைக்கு பழி வாங்கும் விதமாக நாம் ஏன் அமெரிக்கா செல்லக்கூடாது என்று கூட யோசித்தேன். ஆனால்,ஒருவர் செய்த தவறுக்காக அந்த நாட்டு அப்பாவி மக்களைத் தண்டிப்பது முறையாகாது என்பதால் பொறுத்துப் போகிறேன்.

ஆனால்,என் குழப்பம் மட்டும் இன்னும் தீரவில்லை. எனக்கு ஏதேனும் ஐடியா கொடுங்களேன். ப்ளீஸ்.

வெ.பாலமுரளி.

பி.கு: எல்லோரும் கொரோனா கொரோனா என்று மண்டை காய்ந்து இருப்பதால் சும்மா ஜாலியாக (???) இருக்கட்டுமேயென்று இந்த டைரியை எழுதினேன். தயவுசெய்து யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம். நான் சென்ற 4 மாதங்களாக இந்தியாவில் அனுபவித்த சில பிரச்சினைகளை எழுதத்தான் “ முரளியும் சில ஆணிகளும்” என்று தலைப்பிட்டேன். ஆனால்,மக்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கிடையில் என்னுடைய டைரி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்க வேண்டாமேயென்று “ மேட்டரை” மாற்றி விட்டேன்.

மற்றபடி என் பிறந்த நாளுக்கு (10.04.2020) வாழ்த்திய,வாழ்த்தப் போகும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.என் மனைவி,என் மகள் மற்றும் என் கென்யா நண்பர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.இந்தப் படம் என் மகள் நிவி வரைந்து நேற்று இரவு 12 மணிக்கு கொடுத்தாள். பெண் குழந்தைகள் குடும்பத்திற்கு வரம்.மனைவி சர்ப்ரைஸா கேரட் கேக் செய்து,இரவு 12 மணிக்கு சிம்பிளாகக் கொண்டாடினோம்.