முள்றியின் டைரி : 51 வேர்களைத் தேடி…

1987 – செப்டம்பர் மாதம் 10 ம் தேதி,பெட்டியைத் தூக்கிக் கொண்டு தேவகோட்டையை விட்டுக் கிளம்பும்போது என்னுடைய பயணம் இவ்வளவு நீண்ட நெடியதாக இருக்கப் போகிறது என்று சத்தியமாக நினைத்துப் பார்க்கவில்லை.

ஏதோ 6 வருடம் ரஷ்யாவிற்குப் போவோம்,படிப்பு முடிந்து தாய்த்திரு நாட்டிற்கு வந்து சேவை செய்வோம் என்றுதான் கிளம்பினேன். 1993 இல் இந்தியா வந்த என்னை விதி எப்படி எப்படியோ பந்தாடியது. ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்தியாவை விட்டு கிளம்பி கென்யா வந்து சேர்ந்தேன். 1994 – ஆகஸ்ட் 15,சுதந்திர தினத்தன்று கென்யா வந்து இறங்கினேன்.

நான் படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்து 26 ½வருடங்கள் உருண்டோடி விட்டன. உடல் நிலை மற்றும் மனநிலை காரணங்களால் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு,இந்த வார இறுதியில் ( டிசம்பர் 14,2019) இந்தியா கிளம்புகிறேன்.வேலையில் என் அனுபவங்களைத் தொகுத்து “ கேக் வாக்” என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட உள்ளேன்.

வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கலாம். ஆனால்,போராட்டமே வாழ்க்கையானால் ?????என்னுடைய “கேக் வாக்” படியுங்கள்.ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி. தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்கள் மட்டும் என் புத்தகத்தைப் படித்தால்,கண்டிப்பாக தற்கொலை எண்ணத்தை ஒத்தி வைத்து விடுவார்கள். அந்த அளவிற்கு அடிபட்டிருக்கிறேன்.

நான் இன்று இரண்டு நிறுவனங்களுக்குத் தலைமை அதிகாரி ( சி. இ. ஓ),மூன்றாவது நிறுவனத்திற்கு இயக்குநர்.“தியாகி” என்ற சிவாஜி படத்தில் வசனம் ஒன்று வரும்,“ நான் (தியாகி என்ற ) இந்தப் பட்டத்தை வாங்குவதற்குள்,அப்பப்பா” என்று.அதேபோல்தான், நானும் இந்த நிலையை எட்டுவதற்குள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

என்னை வேலைக்கு எடுத்த ஒரு குஜராத்தி நண்பனே என்னை வேலையை விட்டுத் தூக்க கடந்த 25 வருடங்களாக முயற்சித்து முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருக்கிறான்.ஒவ்வொரு முறையும் அவன் பெரிய அளவில் முயற்சிக்கும்போதும் அதனை எதிர்த்துப் போராடி ஜெயிக்கும்போதும்,எனக்குப் பதவி உயர்வும்,சம்பள உயர்வும் கிடைத்தது.

ஆனால்,சமீப காலமாக இந்த விளையாட்டு எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் எரிச்சலும்,நிறைய கோபமும் வருகிறது.அவனால் ஆரம்பித்த அரசியல்,எனக்கு எங்கள் நிறுவனத்திற்குள் ஏராளமான எதிரிகளைக் கொடுத்தது. நான் விருப்ப ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தவுடன் அவர்கள் பட்ட சந்தோஷத்திற்கு அளவில்லை.அவர்களுடைய சந்தோஷத்தில் நானும் கலந்து கொள்ள முடிவெடுத்து விட்டேன்.

வருகிற வெள்ளிக் கிழமையன்று ( டிசம்பர் 13, 2019), எங்கள் நிறுவனத்தின் இயக்குனர்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு ஒரு பிரிவு உபச்சார விருந்து அளிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.அந்த விருந்திற்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்று என்னையே தேர்ந்தெடுக்கச் சொல்லி விட்டார்கள்.என் நிறுவனத்தில் கடந்த 25 வருடங்களில் யார் யார் என் தூக்கத்தைக் கெடுத்தார்களோ அவர்கள் பெயரைத்தான் முதலில் கொடுத்துள்ளேன்.நான் நாட்டை விட்டுக் கிளம்பப் போகிறேன் என்றதும் அவர்கள் படும் சந்தோஷத்தை அருகில் இருந்து காண வேண்டும். இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல மீனாட்சி அருள் புரியட்டும்.

ஆனால், இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில் ஏதோ சாதித்திருக்கிறேன் என்ற திருப்தியும் உள்ளது.எங்கள் குழுமத்தில் நான் இன்று வேலை பார்க்கும் நிறுவனம் 1999 இல் நான் ஆரம்பித்ததுதான். 1994 முதல் 1999 வரை இதே குழுமத்தில் நான் ஒரு சாதாரண பொறியாளன் மட்டுமே. 1999- இல் நான் இந்த நிறுவனத்தைத் தொடங்கியவுடன்,வித்தியாசமாக ஏதேனும் பண்ண வேண்டும் என்று,எனக்கும் என் குழுமத்திற்கும் கொஞ்சமும் அனுபவம் இல்லாமல் ஆரம்பித்த அனைத்துத் தொழில்களிலுமே இன்று எங்கள் நிறுவனம்தான் நாட்டில் முதன்மை நிலையில் உள்ளது.இன்று எனக்குப் போட்டி கென்யா நிறுவனங்கள் மட்டுமல்ல, என்னால் வளர்ந்த இரண்டு இந்திய நிறுவனங்களும்தான். பரவாயில்லை, அதிலும் எனக்கு ஒரு சந்தோஷம்தான்.

மற்றபடி,கென்யா ஒரு அருமையான நாடு…இயற்கை தன்னுடைய பேரழகை வஞ்சகமில்லாமல் கொட்டிக் கொடுத்திருக்கிறது இந்த நாட்டிற்கு.மலைப் பகுதிகளும் ,பள்ளத்தாக்குகளும்,எரிமலைகளும்,கடலும்,பனியும் ,எழில் மிகு வனங்களும்,நீர்வீழ்ச்சிகளும்,அற்புதமான மனிதர்களும்……என்னால் இந்த 25 வருடங்களில் இந்த நாட்டை முழுவதுமாக கவர் பண்ண முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் இந்த நாட்டை விட்டுக் கிளம்புகிறேன்.நான் இங்கு எடுத்த புகைப்படங்களைத் தொகுத்து “ I Love Kenya “ என்ற ஒரு வீடியோ விரைவில் வெளியிடுகிறேன். அதைப் பார்த்தால் கென்யாவைப் பற்றி ஓரவிற்கு ஒரு ஐடியா கிடைக்கலாம். ஆம்…ஓரளவிற்கு மட்டுமே.

எல்லாவற்றிற்கும் மேலாக,நைரோபியில் வருடம் முழுவதும் குளு குளுவென்றிருக்கும் சீதோஷ்ண நிலை…கடந்த ஆறேழு வருடங்களாக,உலக வெப்பமயமான நிலையினால் அதிக பட்சம் 32 ,33 டிகிரி செல்ஷியஸெல்லாம் போகிறது.நான் வந்த 90 களில்,அதிகபட்சம் வெப்ப நிலையே 28 டிகிரிதான். அதுதான் இங்கே பீக் சம்மர். அப்போது இங்குள்ள ஆப்பிரிக்கர்கள் உஸ்ஸூ தஸ்ஸென்று படும் பாட்டைப் பார்க்க வேண்டும். ஒரே தமாஷாக இருக்கும். எங்க மதுரைக்கு வாங்கலேய். சம்மர்னா என்னன்னு காண்பிக்கிறேன் என்று மனதுக்குள் சிரித்துக் கொள்வேன்.இப்போதும் கூட,சம்மர் காலங்களில் வீட்டில்,போர்வை இல்லாமல் படுக்க இயலாது. சம்மரிலும் இரவில் குளிர் வாட்டி எடுத்து விடும்.

பொதுவாக,நவம்பர் 15 வாக்கில் கோடைகாலம் ஆரம்பித்து விடும். ஆனால்,நான் இந்தியா செல்கிறேன் என்று தெரிந்ததால்தானோ என்னவோ,இப்போதும் (டிசம்பரிலும்) செம மழை விடாமல் பெய்து கொண்டே இருக்கிறது. இப்போதெல்லாம்,கொஞ்சம் வெயிலையோ,சூரிய வெளிச்சத்தையோ பார்த்தால் மிகவும் இதமாக இருக்கிறது (மதுரையில் இந்த இதம் 365 நாட்களும் காரண்டிட் )…

இங்குள்ள நண்பர்கள்…..இவர்களைப் பற்றி எழுத ஒரு டைரி பத்தாது. உயிர் கொடுப்பார்கள் தோழர்கள்….நான் என் குடும்பத்தை இந்தியாவில் விட்டு விட்டு தனியே நான்கு வருடங்களை எந்தச் சிரமமும் இல்லாமல் ஓட்டியதற்கு என் நண்பர்கள்தான் முக்கியமான காரணம். நான் என்னுடைய முந்தைய டைரியில் சொன்னது போல நான் என் நண்பர்களுக்கு நன்றியெல்லாம் சொல்லி அந்நியமாக்க மாட்டேன். அந்நியமாக மாட்டேன்.

அடுத்து என் வீட்டில் வேலை செய்யும் செசிலியா என்னும் ஆப்பிரிக்கப் பெண்மணி. வீட்டைச் சுத்தப் படுத்துதல்,சமையல் என்று சகலகலா வல்லி. சமையல் என்றால் ஆப்பிரிக்கச் சாப்பாடில்லை. சாம்பார்,வத்தக் குழம்பு,அவியல்,ரசம்,பூண்டுக் குழம்பு,இட்லி,தோசை,காரச் சட்னி,மிளகுப் பொங்கல் என்று டிப்பிக்கல் தமிழ்ச் சாப்பாடு.இங்கு ஃபேஸ்புக்கில் உள்ள என்னுடைய சில நெருங்கிய நண்பர்கள் சமீபத்தில் நைரோபி வந்திருந்தார்கள். இவள் செய்த சாப்பாட்டை மிகவும் ரசித்து சாப்பிட்டார்கள். இதைச் செய்தது ஒரு ஆப்பிரிக்கப் பெண்மணி என்றதும் அவர்களால் நம்பவே முடியவில்லை. கடந்த 2 அல்லது மூன்று வருடங்களாக எங்கள் வீட்டில் வேலை செய்யும் இவள் இது நாள்வரை ஒரு முறை கூட தாமதமாக வந்ததில்லை. அதேபோல் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததுமில்லை. நன்றிகள் கோடி சகோதரியே.

இதுபோல நான் கென்யாவிலிருந்து எடுத்துச் செல்லும் இனிமையான நினைவுகள் ஆயிரம் ஆயிரம்.இந்தியா….என்னதான் பிறந்த நாடாக இருந்தாலும்,இதுவரை வசித்ததென்னவோ வெறும் 19 வருடங்கள்தான். 32 வருடங்கள் மற்ற நாடுகளிலேயே வாழ்க்கையை ஓட்டியாகி விட்டது.விருப்ப ஓய்வு எழுதிக்கொடுத்துவிட்டு சந்தோஷமாகத்தான் கிளம்பினேன். ஆனால்,இங்கு நைரோபியில் உள்ள நண்பர்களில் ஒருவர்கூட இதை இன்று வரை நம்ப மறுக்கிறார்கள்.“ உங்களால் கென்யாவை விட்டு அவ்வளவு எளிதாக போக முடியாது முரளி” என்பது என் நண்பர்களின் ஆணித்தரமான கணிப்பு.நான் ஒரு மாதத்தில் திரும்ப வருவேனா இல்லை,இரண்டு மூன்று மாதமாகுமா என்பதுதான் இங்கு விவாதத் தலைப்பு.இவர்கள் இப்படிச் சொன்னதும் எனக்குள் கிளம்பும் பயத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை.

இந்தியா சென்று,ஓரிரு மாதங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு, புகைப்படம் சம்பந்தமாக ஒரு கம்பெனி ஆரம்பிக்கும் திட்டம் உள்ளது. புகைப்படக் கண்காட்சி நடத்துவது,ஒரு காஃபி டேபிள் புக் எழுதுவது,புகைப்பட டூர் நடத்துவது,வரலாற்றைத் தேடி பயணிப்பது,இந்தியாவில் உள்ள காடுகளில் அலைவது என்று திட்டங்கள் நிறைய.ஆனால்,அன்னை மீனாட்சி என்ன நினைத்திருக்கிறாளோ தெரியவில்லை. அவள் ஒரு நாட்டி கர்ள்.எது எப்படியோ,கென்யாவை விட்டுப் பிரியும் நேரம் வந்து விட்டது.குட் பை கென்யா.

வெ.பாலமுரளி.