முள்றியின் டைரி – 5 எங்கே போகணும்னு தெளிவாச் சொல்லு மூதேவி…

1989 – ம் வருடம். நான் ரஷ்யாவில் படித்துக் கொண்டிருந்தேன். என் அப்பா இறந்து 6 மாதமாகி இருந்தது. என் அம்மாவும் சின்ன அண்ணனும் காரைக்குடியில் தங்கியிருந்தார்கள்.அப்போது என் அண்ணனிடம் இருந்து ஒரு கடிதம். கடிதம் வேண்டாம், லெட்டர்னு வெச்சுக்கலாமா? வேண்டாம், கடிதமே இருக்கட்டும் (அடச்சீ….விஷயத்துக்கு வா).


கடிதத்தின் சாராம்சம் இதுதான். ” எனக்கு அரசாங்கத்தில் வேலை கிடைத்து விட்டதால் காரைக்குடியை காலி பண்ணி விட்டு நானும் அம்மாவும் சிவகங்கை செல்கிறோம். அடுத்த முறை நீ இந்தியா வரும்போது நேரே சிவகங்கை வந்து விடு. —————-இதுதான் அட்ரஸ்”.

எனக்குக் கடிதத்தைப் பார்த்தவுடன் இரண்டு காரணங்களால் டென்ஜனோ டென்ஜன். ஒன்று, காரைக்குடி, தேவகோட்டையைத் தவிர வேறு எந்த ஊரிலும் குடியிருப்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இரண்டாவது, சிவகங்கை எங்கேயிருக்கிறது? அப்போதெல்லாம் எனக்கு பூளோகம் அவ்வளவாகத் தெரியாது. (இப்ப ரொம்பத் தெரியுமாக்கும் என்று கேட்க வேண்டாம். ஏன்னா இப்பவும் தெரியாது. ஹி..ஹி…ஹி..).


விரைவிலேயே எனக்கு இந்தியா செல்லும் வாய்ப்பு வந்தது. எப்படியோ சிவகங்கையும் போய் சேர்ந்து விட்டேன். சிவகங்கை, கிராமமும் இல்லாமல் டவுனும் இல்லாமல் சுஜாதா சொல்வது போல ஒரு மாதிரி கேனத்தனமாக இருந்தது.

வீட்டில் டி.வி. இருந்தது. ஆனால், மேலே இருந்த ஆண்டெனாவை திருப்பித் திருப்பி ரூபவாஹினியைத் தேடும் விளையாட்டு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. So, எனக்கு சிவகங்கை ஓரிரு நாளிலேயே பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் ஏதும் இருக்கவில்லை. நான் பட்ட பாடைப் பார்த்து விட்டு என் அண்ணன் ( எம்.ஜி.ஆர் நடித்த படமில்லைங்க. My Brother) என்னை அவன் அலுவலகத்திற்கு அழைத்துப் போனான்.


அரசாங்க அலுவலகம் என்றவுடன் எல்லாம் பெரிசுகளாக இருக்கும் என்று நினைத்துச் சென்ற எனக்கு ஆச்சரியம். கிட்டத்தட்ட எல்லோருமே என் அண்ணன் வயதிலேயே இருந்தார்கள். எல்லோருக்கும் என்னை அறிமுகப்படுத்தினான். கை குலுக்க கை நீட்டிய என்னை ஒரு மாதிரி ஆச்சர்யமாகப் பார்த்தார்கள் (கும்பிடணுமோ?).

“தம்பி என்ன பண்றான்?” ( டேய்… கொஞ்சம் மரியாதை கொடுங்கடா). இந்தக் கேள்வியை எப்படா கேட்பார்கள் என்று எதிர்பார்த்த மாதிரி இருந்த என் அண்ணன், உடனே, இவன் ரஷ்யாவில் Mechanical Engineering படிக்கிறான் என்றான் பெருமையாக. அவர்கள் யாரும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்த மாதிரி தெரியவில்லை. அங்கெல்லாம் என்ன பேசுவார்கள், தமிழ்தானா இல்ல ஹிந்தியா என்றது ஒரு பிரகஸ்பதி. நான் வெறுத்துப் போய் தெலுங்கும் கன்னடமும் மிக்ஸ் பண்ணி ஒரு மாதிரி பேசுவார்கள் என்றேன். அப்படியா, நமஸ்காரண்டி , பாகுன்னாரா…..எனக்கும் தெலுங்கு தெரியுமே, ஹி…ஹி…என்றது( ஓட்டுராய்ங்கெளோ?).


எனக்கு அந்த இடம் ரொம்ப அந்நியமாகவும் Uneasy – யாகவும் இருந்த்து. சரி, மகேஷ் நான் கெளம்புறேன் என்றேன். சரி எப்படிப் போவ என்றான். என்னடா கேள்வி, நீதான் யாரையாவது அனுப்பி ட்ராப் பண்ணனும் என்றேன். அவன் சிரிக்காமல், இன்னும் என்னுடைய பைக்குக்கு டிரைவர் அப்பாய்ண்ட் பண்ணலையே என்றான் ( அய்யே…ஸோக்கு….).

உடனே எல்லோரும் கெக்கே பிக்கே என்று சிரித்து என் எரிச்சலைக் கூட்டினார்கள். அப்ப எப்படிடா போவேன் என்றேன், என் பரிதாப வாய்ஸை காண்பித்துக் கொள்ளாமல். இந்தா நீயே ஓட்டிக் கொண்டு போய் விடு என்று அவன் பைக் சாவியைக் கொடுத்தான். நானா????? என்றேன் அதிர்ச்சியில். ஏன் உனக்கு பைக் ஓட்டத் தெரியாதா என்றது இன்னொரு பிரகஸ்பதி ( சனியன், எப்படிக் கண்டுபிடிச்சுச்சுனு தெரியல).

என் அண்ணனுக்கு அந்தக் கேள்வி மானப் பிரச்சினையாகப் போய்விட்டது (டேய்.. டேய்… நானே சும்மா இருக்கேன். நீ ஏண்டா உணர்ச்சிவசப்படுற என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்). அவன் ஃபாரின்ல ஜாவால்லாம் ஓட்டிருக்கான் தெரியும்ல என்றான் மிகுந்த கோபத்துடன் ( ஜாவாவா?????? டேய் போதும்டா….நான் நடந்தே போயிக்கிறேன்….).

அவன் சொன்னதை அங்கிருந்த ஒரு பய புள்ளயும் நம்பவில்லை என்பதை அவர்கள் மூஞ்சியே தெளிவாகச் சொன்னது. முரளி கெளம்புடா என்றான். அவர்களுக்கு முன்னால் நான் பைக் ஓட்டி அவர்களை மூக்குடையச் செய்ய வேண்டும் என்ற அவனது ஆசை எனக்குத் தெரியாமல் இல்லை ( அதுக்கு நானா கெடச்சேன்). சரி மகேஷ், ஒரு டீ குடிச்சுட்டு கெளம்புறேன் என்றேன். சத்தியமாக அதை அவன் ரசிக்கவில்லை. அங்கிருந்த கிரகங்கள் நக்கலாக சிரித்துக் கொண்டன (அதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்).

நான் அந்த டீயை எவ்வளவு மெதுவாக குடிக்க முடியுமோ, அவ்வளவு மெதுவாகக் குடிக்க ஆரம்பித்தேன். (நான் கடவுளை வேண்டிக் கொண்டபடியே) அந்த நேரம் பார்த்து அவர்களின் Senior Officer அங்கு வர, எனக்குக் கட்டையைக் கொடுத்துக் கொண்டிருந்த அனைத்து கிரகங்களும் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பின. அப்பாடா….


சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல உடனே டீயை வீசி எறிந்து விட்டு தத்தக்கா பித்தக்கா என்று அந்த பைக்கை ஓட்டிக் கொண்டு ( கொஞ்சம் Gap கிடைத்தாலும் அந்தக் கிரகங்கள் வந்து விடுமோ என்ற பயத்தில்) அந்த இடத்தை உடனே காலி செய்தேன். அந்த ஆஃபிஸ் வளாகத்தை விட்டு வெளியே வந்தவுடன் எனக்கு ஒரு சின்ன (??????) சந்தேகம். கியர் வைத்த வண்டியை ஓட்டும் போது கியரைப் பார்த்து ஓட்டுவதா இல்லை ரோட்டைப் பார்த்து ஓட்டுவதா என்று……Yes…you are right ..கியரைப் பார்த்தே ஓட்டுவது என்று முடிவு செய்து விட்டேன்.


சொன்னா நம்ப மாட்டீங்க. முதல் தடவையே அவ்வளவு சூப்பராக ஓட்டினேங்க. ஆனா ஒரு சின்ன்ன்ன்ன மிஸ்டேக். நான் போக வேண்டிய திசைக்கு மிகச் சரியாக எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்தேன். என்னடா, இவ்வளவு தூரம் வந்து விட்டோம் ஆனால் ஆள் நட மாட்டத்தையே காணோமே என்று எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ( நான்தான் முன்னாலேயே சொல்லியிருக்கேனே, நாங்கல்லாம் ரொம்ப ப்ரைட்டுனு).

என்ன….நான் அதை யோசிக்கும்போது கிட்டத்தட்ட 10 கி.மீ. தாண்டியிருந்தேன். Better late, than never என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு யாரிடமாவது கேட்போம் என்று வண்டியை நிறுத்தினேன். ஒரு பெரியவர் வந்தார். நான் ரொம்ப Casual ஆக இருப்பதாக நினைத்துக் கொண்டு, தாத்தா பிள்ளையார் கோவில் தெரு எங்கே இருக்கு என்று கேட்டேன். அவர் ரொம்ப அசால்ட்டாக, எந்த பிள்ளையார் கோவில் தெரு என்றார் ( எந்த பிள்ளையார் கோவிலா??? எத்தனை பிள்ளையார் கோவில் தெரு இங்க இருக்கு???).

நான் துபாய் மெயின் ரோடு மாதிரி, மெயின் ரோடுக்குப் பக்கத்தில் என்றேன். அவர் லேசாக எரிச்சலடைந்தார். வேற ஏதாவது அடையாளம் சொல்லு என்றார். நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு (நினைத்துக் கொண்டு என்றுதான் சொல்கிறேன். Note the point) பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோவில் கூட இருக்குமே என்றேன். அவர் எரிச்சல் Stage –இல் இருந்து கோபம் Stage- க்கு Promotion ஆகி, பிள்ளையார் கோவில் தெருவில் சிவன் கோவிலா இருக்கும், எங்கே போகணும்னு தெளிவாச் சொல்லு மூதேவி என்றார். இந்த Sudden Attack – ஐ நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அது வரை யாரும் என்னை அந்த மாதிரி திட்டியதும் இல்லை ( சரி…சரி…..அதற்கு முன்னால ஓரிரு முறை யாரோ தெருப்போக்கர்கள் அந்த மாதிரி என்னை திட்டியது உண்டு).


Needless to say, உடனே எனக்கு கோபம் தலைக்கு மேலே ஏறி, கண்கள் சிவக்க, மூச்சுத்திணறி… என்னை அறியாமல் நான் அந்தக் காரியத்தைச் செய்தேன். Yes…தடாலென்று அவர் காலில் விழுந்து, ஐயா, நான் இந்த ஊருக்குப் புதுசு, எனக்கு எங்க வீட்டுக்குப் போகணும், ரொம்ப பசிக்குதுனு சொன்னேன்.


அவர் சத்தியமாக அந்த Anti Climax – ஐ எதிர்பார்க்கவில்லை. உடனே, சிரித்து விட்டு, இந்தக் காலத்து புள்ளைங்களுக்கு School –இல் என்னத்தைத்தான் சொல்லித்தாராய்ங்கெளோ என்று அலுத்துக் கொண்டே சரியான வழியைக் காண்பித்தார்.

நாம் College –இல் கட்டடித்த ஏதோவொரு Class – இல் தான் சிவகங்கையில் வழியைக் கண்டிபிடிப்பது எப்படி என்று சொல்லித் தந்திருப்பார்களோ என்று என்னை நானே நொந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன்.


வெ. பாலமுரளி.