முள்றியின் டைரி : 48 ஆண்டொன்று போனால்…..

இன்றுடன் ( 10.04.2018) 50 வயது நிறைவடைகிறது.

திரும்பிப் பார்த்தால் ஒன்றுமே சாதிக்காதது ரொம்பவே நெஞ்சை உறுத்துவதால், இப்போதெல்லாம் திரும்பியே பார்ப்பது கிடையாது – யாரும் கூப்பிட்டால் கூட.

கன்னா பின்னாவென்று சுற்றியதில் , இப்போது உடம்பு ஓய்வு கேட்கிறது. சமீபத்தில் சென்று வந்த ஜெர்மனி ட்ரிப்பும், சீஷெல்ஸ் ட்ரிப்பும் இதைத்தான் பொட்டிலடித்தாற்போல் சொல்லின. மனசுதான் கேட்க மாட்டெனென்று அடம் பிடிக்கிறது. என்ன செய்வது.

ரொம்ப நாள் ஆசைப்பட்ட விருப்ப ஓய்வு வேறு கண்ணுக்கு முன் வந்து கன்னாமூச்சி ஆடுகிறது. படிக்க வேண்டியதும், எழுத வேண்டியதும், (புகைப்படம்) எடுக்க வேண்டியதும் மலையளவு இருப்பதும் மிகவும் மலைப்பாக இருக்கிறது.

இவற்றிற்கிடையில் அருமையான ஒரு குடும்பமும், நல்ல நண்பர்களும் நான் வாங்கி வந்த வரம். அவர்கள் கொடுத்த தைரியத்தால், என்னுடைய “ To do List” இல் “தமிழகத்தில் பழம்பெரும் கோயில்கள்” என்னும் தலைப்பில், ஆராய்ச்சியும் புகைப்படங்களும் கலந்து ஒரு ஆய்வுப் புத்தகம் ஒன்றும் எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

விசையுறு பந்தினைப் போல் உள்ளம்

வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்…

நசையறும் மனம் கேட்டேன் நித்தம்

நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்….

இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ ?

என்ன….மீனாட்சி …..கேட்கிறதா ?

இருக்கும் குழப்பங்கள் விரைவில் தீர்ந்து மறுபடியும் ஓட வேண்டும்.

ஆம்… இதுவும் கடந்து போகும். அடுத்த வருடம் இதே நேரத்தில் திரும்பிப் பார்க்கும் போது ஏதாவது சாதித்திருக்க வேண்டும் – இன்ஷல்லா.

வெ.பாலமுரளி