எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஏதாவது ஒரு மலைஉச்சியின் மீது ஏறி, அங்கிருந்து, ஒரு பறவையின்பார்வையில் சில படங்கள் எடுக்க வேண்டும்.
மலை உச்சி என்றதும், நம்ம சில்வஸ்டர் ஸ்டாவோலின்நடித்த க்ளிஃப்ஹேங்கர் படத்தில் வருவது போல , ( கேமராபேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு, ஒரு தோளில்ட்ரைப்பாடை தொங்கவிட்டுக் கொண்டு) மலைவிளிம்புகளில் வௌவால் மாதிரி தொங்கிக்கொண்டிருப்பது போல என்னை நீங்கள் கற்பனைசெய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ( இந்த டைரியின்தலைப்பைச் சொல்லிட்டோம்ல ) .
காரணம் என் ஐடியா அது கிடையாது. மலைகளில் ஏறும்கேபிள் காரிலோ அல்லது ட்ரெயினிலோ மேலே சென்று,அங்கிருந்து ஒரு 10 அல்லது 20 அடி மட்டும் மேலே மிகவும்சிரமப்பட்டு ( ????????) ஏறி , அங்கிருந்து சில படங்கள் எடுக்கவேண்டும். என் ஆசையெல்லாம் அவ்வளவே அவ்வளவுதான்( நோ நோ ….காறியெல்லாம் துப்பக் கூடாது ) .
அலுவலக வேலையாக சென்ற வாரம் ( மார்ச் 20, 2018) ஜெர்மனிக்குசெல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. போன வேலை, அங்குசென்ற ஓரிரு நாட்களிலேயே வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், என்னுடைய மலையேற்றம் ப்ராஜக்ட்டுக்காக, ஃபூஸென் என்னும் ஊருக்கு செல்ல முடிவெடுத்து ட்ரெயின்டிக்கெட்டுக்கள் புக் பண்ணினேன் (ம்க்கும்…..முன்னாலேயே எல்லாம் ப்ளான் பண்ணிட்டு,கதையை பாரு என்று சிலர் முணு முணுப்பது இங்குகேட்குது மக்கா இங்கு கேட்குது ).
ஃபூஸென், பவேரியா மாநிலத்தில் உள்ள ஒரு குட்டியூண்டுஊர். ஊரைச் சுற்றிலும் வேலி போட்டாற்போல் மலைசூழ்ந்து கொண்டு அப்ப்ப்ப்ப்படி ஒரு அழகு.ஸ்விட்சர்லாந்தையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அழகு.
முன்னால் முணு முணுத்த அந்த சிலர் கண்ணு வைத்தகாரணத்தால், போய் இறங்கிய முதல் நாள் நச நசவென்றுசெம மழை. என்னுடைய ப்ராஜக்ட் தள்ளிப் போனது.மறு நாள் எப்படியாவது போயே ஆக வேண்டும் என்றுஏகப்பட்ட கனவுகளுடன் தூங்கச் சென்ற எனக்குக்ளிஃப்ஹேங்கர் படம் நிஜமாகவே கனவில் வந்தது. மறுநாள் காலை ஆசையுடன் எழுந்து ஜன்னலைத் திறந்தஎனக்கு ஒரே அதிர்ச்சி. பனி ( ஸ்நோ) கன்னாபின்னாவென்று பெய்து கொண்டிருந்தது. அப்போதுதான்வானிலையை செக் பண்னாமல் வந்த தவறு புரிந்தது (எப்போவுமே லேட் திங்கிங்தான்).நொந்து கொண்டே, லுத்விக் II என்னும் மன்னன் ஒருவன்கட்டிய நோய்ஷ்வான்ஸ்டெயின் என்னும் கோட்டைஒன்றைப் போய்ப் பார்த்து விட்டு ஒப்புக்குச் சில படங்கள்எடுத்து விட்டு வந்தேன்.
மறு நாள் மாலை நைரோபி திரும்பஃபிளைட். என்ன நடந்தாலும் என்னுடைய ப்ராஜக்ட்டை ( ?????) அன்றே முடிக்க வேண்டுமென்ற கட்டாயம்.மறு நாள் காலை கொஞ்சம் வானம் வெறித்தாற்போல்இருந்தது. கிளம்பி விட்டேன். கேபிள் காரில் ஒரு 15 நிமிடப்பயணம். ஆல்ப்ஸ் மலையின் ஒரு உச்சத்தை அடைந்தேன்.உண்மைலேயே சொர்க்கம் அங்குதானிருக்கிறது. பற்றாக்குறைக்கு அந்த இடத்தில் ஒரு ரெட்டாரண்டை வேறு கட்டிவைத்திருக்கிறார்கள். அங்குள்ள திறந்த வெளியில் நிறையஈசி சேர்களைப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒரு பியரைவாங்கிக் கொண்டு மக்கள் அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு இயற்கையை ரசிக்கிறார்கள். எனக்கு அந்தப்பழக்கம் இல்லாததால் ( சரி….சரி….எனக்கு அன்றைக்குதொண்டை வலி இருந்ததால் ) வெறும் காபி ஒன்றைவாங்கிக் கொண்டு அந்த இடம் முழுவதையும் என்னுடைய ஐ 2 வில் ( அதாங்க என்னுடைய இரண்டு கண்களாலேயும் )பதிவு செய்தேன்.
அங்கிருந்த ஜெர்மன் அக்கா ஒன்று தன்னுடைய ஃபோனில்செல்ஃபி எடுக்க மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது.அதற்கு உதவும் பொருட்டு அதன் ஃபோனை வாங்கி சிலபடங்கள் எடுத்துக் கொடுத்தேன். அதற்கு பிரதி உபகாரமாகநான் காபி குடிக்கிறாற்போல் சில படங்கள் என்னைஎடுத்துக் கொடுத்தது. விரைவில் அந்த செல்ஃப்ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு, அடுத்த சிகரத்தில் ஏறும்என்னுடைய மெயினான ப்ராஜக்ட்டுக்குத் தயாரானேன்.
ஸ்விட்சர்லாந்தில், இது போன்ற இடங்களில் யாரும் தவறிப்போய் கூட விழுந்து விடக் கூடாது என்று மிகவும் சேஃபாகஎல்லாப் பக்கங்களிலும் அரண் போல பனியை வைத்துசுவர்கள் எழுப்பியிருப்பார்கள். இங்கு அப்படியெல்லாம்ஒன்றையும் காணோம். மக்கள் நடந்து போகும் விளிம்பிற்குஅந்தப்புரம், சாரி , விளிம்பிற்கு அந்தப் பக்கம் அதலபாதாளமாக இருந்தது லேசாகக் கண்ணைக் கட்டியது.மகனே உன் சமர்த்து என்று இயற்கையை அப்படியே விட்டிருக்கிறார்கள்.
என்னுடைய கேமரா பேக், ட்ரைப்பாட் எல்லாம் எடுத்துக்கொண்டு மேலே ஏறுவது ரொம்ப ரிஸ்க் என்று தோன்றியது.அது மட்டுமல்லாது, அடுத்த மாதம் நமது சச்சின்டெண்டுல்கரின் சாதனையில் பாதியை எட்டப் போவதும்தேவையில்லாமல் ஞாபகத்திற்கு வந்து ஒரு பீதியைக்கிளப்பியது ( அதாங்க 50 வயசாகப் போகுதுன்னு சொல்லவந்தேன்). ரொம்பவும் தாமதிக்காமல், ஒரே ஒரு லென்சை(16-35) மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும்அங்கிருந்த சேர் ஒன்றில் போட்டு விட்டு கிளம்பினேன். அப்போது அங்கிருந்த ஜெர்மன் அம்மா ஒன்று கையில்வைத்திருந்த ஹைக்கிங் குச்சிகள் இரண்டை நீட்டி “இஷ்வான்ச்டேயினியோ இலிரியலே சின்யோரே” ( நீபோட்டிருக்கும் ஷூவை வைத்துக் கொண்டு இங்கெல்லாம்ஏற முடியாது. இந்தா இந்தக் குச்சிகளை வைத்துக் கொள்இளைஞனே ” என்றது. என்ன்ன்ன்ன்ன்னது …..இளைஞனா……????????????சரி …சரி…விடுங்க. ஒரு Flow ல அதுவாவந்திருச்சு. அது சரி , உனக்கு ஜெரமன் பாஷை தெரியுமா ?ஹி…ஹி…சும்மா ஒரு கெஸ் ஒர்க்) .
அப்போதுதான் கீழேஃபிளாட்டாக இருக்கும் என்னுடைய அஃபிஷியல் ஷூவைப்பாத்ததேன். ஆஹா……யோசிக்கலையே……இருந்தாலும் அந்த அம்மா, குச்சிகளை எடுத்துக் கொண்டுபோ என்றதும் எனக்கு மானப் பிரச்சினையாகப் போய்விட்டது. “ நாங்க மதுரையில இது போல எத்தனை பனிமலையில் ஏறியிருக்கிறோம் தெரியும்ல ? “என்றுசொல்லலாமா என்று நினைத்து, ஒரு வேளை அந்தஅம்மாவிற்கு நம்ம மதுரையைப் பத்தி தெரிஞ்சிருந்தாஎன்ன செய்வது என்று சுதாரித்துக் கொண்டு, “ ஐயாம் ஓகே ஐயாம் ஓகே தங்கன் தங்கன் ( Thank you thank you ) “ என்றேன் (ஒரு வாரத்துல நாங்களும் ரெண்டு மூணு வார்த்தைகள்கத்துக்கிட்டோம்ல) .
நடக்கப் போவதை அந்த அம்மா ஓரளவிற்கு ஊகித்திருக்கும்என்று நினைக்கிறேன். கைகளைக் கட்டிக் கொண்டுஎன்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டது.நானும் டென்சிங் மாதிரி மேலே ஏற ஆரம்பித்து விட்டேன்.ஏறும் போது ஒன்றும் தெரியவில்லை. ஒரு முப்பது அல்லது நாற்பது அடி ஏறியிருப்பேன். வைட் ஆங்கிளில் ஒரு படம்எடுக்கலாம் என்று அந்தப் பள்ளத்தாக்கு இருக்கும் பக்கம்திரும்பி சில படங்கள் எடுத்த பிறகுதான் என் தலைலேசாகச் சுற்றுவதை உணர்ந்தேன். சரி , இந்த சாகசம் போதும் என்று எண்ணி திரும்பஎத்தனித்தேன். இறங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதல்லஎன்பது அப்போதுதான் புரிந்தது. இன்னும் மூன்று மாதத்தில்விருப்ப ஓய்வு பெறவிருக்கும் நான் செய்த தேவையில்லாதரிஸ்க் அப்போதுதான் புரிந்தது.
கீழே இருந்து அந்த அம்மா லெஷ்கின் லெஷ்கின் என்றுசத்தம் போட்டது ( “ ஸ்லோவா வா மூதேவி” ன்னுசொல்லியிருக்குமோ ?) . நான் ஒவ்வொரு அடியையும் எவ்வளவு ஜாக்கிரதையாகவைத்த போதிலும், அந்த ஐஸ் லேயரைக் கவனிக்கவில்லை.ஒரே ஒரு காலைத்தான் வைத்தேன். நடக்கப் போகும்விபரீதம் புரிந்து, டமாலென்று ஒரு காரியம் செய்தேன்.கேமரா இருக்கும் வலது கையை மட்டும் முடிந்த மட்டிலும்உயரப் பிடித்துக் கொண்டு சறுக்கி விழுந்தேன் ( பின்ன…….காஸ்ட்லி கேமராங்க).
அங்கிருந்த கூட்டம் முழுவதும் “ஓ” வென்று கத்த, எனக்கேதெரியாமல் பள்ளத்தாக்கு இருக்கும் பக்கத்திற்குஎதிர்த்திசையில் உருண்டிருக்கிறேன். உடனே இரண்டுமூன்று பேர் வந்து தூக்கி விட, எழுந்து நின்றபின்கேமராவைத்தான் முதலில் செக் பண்ணினேன்.நல்லவேளை ஒண்ணும் ஆகலை. நடக்கலாம் என்று முயற்சிசெய்யும்போதுதான் புரிந்தது என்னுடைய வால் எலும்பில் (அதாங்க Tail Bone) நன்றாக அடி வாங்கியிருப்பது.நல்ல வேளை தலைக்கு வந்தது உட்காருகிற இடத்தோடபோச்சே என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன்.சும்மா சொல்லக் கூடாது சிகரத்தின் உச்சியில் எடுத்தபடங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக வந்திருந்தன. சில நேரங்களில் சில வலிகளும் கூட சுகம்தான்.நைரோபி போய் முதல் காரியமாக ஒரு டாக்டரைப் போய் பார்க்க வேண்டும் .
வெ.பாலமுரளி