முள்றியின் டைரி : 46 ஊர் சுற்றிப் புராணம்

இன்றுடன் ( 26.09.2017) நான் இந்தியாவை விட்டு வெளியில் வந்து 30 வருடங்கள் ஆகின்றன.


என் வாழ்க்கையில் நான் அனுபவித்த சந்தோஷங்கள், சில துக்கங்கள், நிறைய வலிகள், சந்தித்த சில துரோகங்கள், நிறைய பாடங்கள், சில புதிய இனிய உறவுகள், நிறைய நட்புகள், சில மோசமான அனுபவங்கள் , சில அற்புதமான அனுபவங்கள், சுற்றிய புதிய தேசங்கள் என்று நான் கடந்து வந்த அத்தனை பாதைகளும் , பயணங்களும் இந்த 30 வருடங்களில்தான் .
1987 செப்டம்பர் 16 ம் தேதி நான் தேவகோட்டையை விட்டுக் கிளம்பும்போது என்னுடைய பயணம் இவ்வளவு நீண்டதாக இருக்கப் போகிறது என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.


ஏதோ ரஷ்யாவிற்குப் போகிறோம் , ஒரு 6 வருடங்கள் படிப்போம், படிப்பு முடிந்தவுடன் ஓடோடி வந்து நம் தாய்த்திரு நாட்டிற்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் தான் சென்றேன். காலம் என்ன நம்முடைய விருப்பத்தைக் கேட்டுக் கொண்டா முடிவுகள் எடுக்கிறது. ஏதேதோ திருப்பங்கள் …..


ரஷ்யா சென்ற ஒரு வருடத்தில் எங்கள் அப்பா இறந்தது, பயங்கரமான அதிர்ச்சி. ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. அதிலிருந்தும் மீண்டேன்.
சோவியத் யூனியனில் இருந்த 6 வருடங்களும் பொன்னான வருடங்கள். அருமையான நண்பர்கள், ஜாலியான வாழ்க்கை, நினைத்தால் இந்தியா என்று 6 வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. கிளம்பும் நாள் வந்தது. மாஸ்கோவிலிருந்து இரண்டு வேலை வாய்ப்புக்கள் வந்தன. ஒரே குழப்பம். நம் தாய் நாட்டுக்கு சேவை செய்வோம் என்று நான் எடுத்திருந்த சபதம்தான் அந்தக் குழப்பத்திற்குக் காரணம். என்னுடைய சின்ன அண்ணன் மகேஷூம், என்னுடைய மாமாவும் எவ்வளவோ வற்புறுத்தினார்கள், இந்தியா வர வேண்டாமென்று.


நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும்போதே என்னுடைய நண்பன் ஒருவனுடைய துரோகத்தினால், வந்த வேலைகளும் போயின. சரி, இதுவும் நல்லதுக்குத்தான் என்று இந்தியா கிளம்பினேன்.


1993 இல் படிப்பு முடிந்தவுடன் சென்னையில் சில மாதங்கள் வேலை. புதிய சூழ்நிலை நல்ல நண்பர்கள். நல்ல ஜாலியான வாழ்க்கை. அதே சமயத்தில், ஏண்டா இந்தியா வந்தோமென்று நொந்து போக வைத்த சில அனுபவங்களும் சென்னையில்தான் கிடைத்தன.. எப்படி ஓடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், பாம்பேயிலிருந்து ஒரு வேலை வந்து என்னை சென்னையை விட்டுத் துரத்தியது.


பாம்பேயில் சில மாதங்கள். அங்கேயும் என்னால் ஒன்றிப் போக முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு 30 அல்லது 40 பேர் கொண்ட ஒரு ரௌடிக் கும்பலால் தாக்கப்பட்டு ஓரிரு நாட்கள் கோமாவில் கிடந்தேன் – ஒரு அப்பாவி மனிதரைக் காப்பாற்றப் போய். இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலமுரளி என்று நொந்து நூடுல்ஸாகி விட்டேன்.


ஆபத்பாந்தவனாக கென்யாவிலிருந்து ஒரு வேலை கிடைக்க, கொஞ்சம் கூட யோசிக்காமல் ஜூட் விட்டு விட்டேன். ஏதோ நேற்றுத்தான் நைரோபியில் வந்து இறங்கியது போல் இருக்கிறது. என்னை ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துப் போக வந்திருந்த என்னுடைய மேலதிகாரி, என்னுடைய கேமரா பேக், என்னுடைய சூட்கேஸை விடப் பெரியதாக இருப்பதைப் பார்த்து அரண்டு விட்டான்.
ஏதோ புதிய பிறவி எடுத்ததைப் போல என்னுடைய புதிய வாழ்க்கை இங்குதான் தொடங்கியது. வந்து கொஞ்ச நாள் வேலையில் நிறைய பிரச்சினைகள்.

என்னடா, பிரச்சினைகள் நம்மை விடாமல் துரத்துகின்றதே என்று நொந்து போய் உட்கார்ந்திருந்த சமயம், வேறு ஒரு வேலைக்கான இண்டர்வியூ வந்தது. Production Engineer Position. ஆனால், அவர்கள் உற்பத்தி செய்து கொண்டிருந்த Product பற்றி கொஞ்சம் கூட ஐடியாவே இல்லை. அதையும் வெளிப்படையாக சொல்லி விட்டேன். ஆனால், எனக்கு அதைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் நிறைய உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் என்னை நிரூபிப்பதுடன், நீங்கள் என்னை வேலையில் எடுத்ததற்காக உங்களைப் பெருமை கொள்ள வைப்பது உறுதி என்றேன் – மிகவும் தன்னம்பிக்கையுடன். 3 மணி நேர இண்டர்வ்யூ.


Production Engineer Position என்று என்னைக் கூப்பிட்டு விட்டு Appointed as a Production Manager என்று கடிதம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு வயது 27. ஜிவ்வென்று வானத்தில் பறந்தேன். அங்கு சேர்ந்து கொஞ்ச நாட்களில் திருமணம். புதிய உறவு.
வாழ்க்கையின் புதிய பரிமாணம் புரிந்தது. அதுவரை தண்ணி அடித்துக் கொண்டு கன்னா பின்னாவென்று தான்றோன்றியாகத் திரிந்த என்னை ஒரு புதிய மனிதனாக ஆக்கியது என் மனைவிதான். மகள் நிவி பிறந்ததும் வேலையில், வாழ்க்கையில் புதிய உச்சங்கள் எட்டின.


எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தன -2000 இல் கென்யாவில் ஒரு மிகப் பெரிய மின் பற்றாக் குறை ஏற்படும் வரை. ஒரு 4 மாதங்களுக்குச் சரியான மின் வெட்டு. தினமும் இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரைக்கும்தான் மின்சாரம் கிடைக்கும். அதற்குள் நம் வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையே வெறுத்து விட்டது.


அப்போதுதான், கனடா என்னும் நாடு பூலோகத்தின் சொர்க்கம் என்று கேள்விப்பட்டு அங்கு செல்ல பி.ஆர். வாங்கினேன். பிரச்சினைகள் மிக விரைவில் சரியாகி விடும் என்று என்னுடைய பாஸ் ரொம்ப கெஞ்சிப் பார்த்தார். நான் முடியவே முடியாது என்று மறுத்து விட்டேன். பின்னே, சொர்க்கத்தைப் பார்க்கப் போகும் ஒருவனை தடுத்து நிறுத்த நினைத்தால் ?


கனடா, வாழ்க்கையின் கோர முகத்தை காட்டோ காட்டு என்று காட்டியது. மறுபடியும் ” இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலமுரளி ” நிலைக்குத் தள்ளப் பட்டேன். 3 கொடுமையான வருடங்கள். அந்தக் கஷ்டத்திலும் , காரையும் கேமராவையும் எடுத்துக் கொண்டு சுத்தோ சுத்து என்று சுற்றினேன்.


அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், கென்யாவிலிருந்து என்னுடைய பழைய பாஸ் ஃபோன் பண்ணினார். நைரோபியில் நான் விட்டுச் சென்ற கம்பெனியில் நிறைய பிரச்சினைகள் என்று வருத்தப்பட்டார். ” நீ திரும்பி வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றார். அதிர்ஷ்டம் திரும்ப ஒரு முறை என்னைப் பார்த்து கண்ணடித்தது.
வாழ்க்கையில் இரண்டாவது முறையாக ஐஸ் நழுவி விஸ்கியில் விழுந்தது. இந்த முறை அந்த வாய்ப்பை விட நான் என்ன கிறுக்கா ….ஒரு வாரத்தில் யோசித்து ( ?????) சொல்கிறேன் என்று பிகு பண்ணி விட்டு , சரி Mr. KR உங்களுக்காக வருகிறேன் என்றேன்.


2004 இல் நைரோபி இரு கை நீட்டி என்னை வரவேற்றது. என்னுடைய வாழ்க்கை நாலு கால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கியது இதிலிருந்துதான்.


டிஜிட்டல் உலகம் புகைப்படத் துறையின் புதிய பரிணாமத்தைக் காட்டியது. அயராமல், நம்ம பரோட்டா சூரி மாதிரி தொடங்கிய இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பித்தேன். புதுசு புதுசாக ஏராளமான நுணுக்கங்கள். அனைத்தும் சுவாரசியமாக இருந்தன.


வேலையிலும் நிறைய புதுப் புது அனுபவங்கள். எந்தப் பொருளை வேண்டுமானாலும் எடுத்துப் பண்ணு, நாங்கள் சப்போர்ட் பண்ணுகிறோம் என்றது என்னுடைய மேனேஜ்மெண்ட். ” கண்ணா லட்டு தின்ன ஆசையா ” என்று அசரீரி இந்த முறை சந்தோஷமான டோனில் கேட்டது.
வெவேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அடுத்தடுத்து வந்தது. அந்தா இந்தா என்று மொத்தம் 46 நாடுகள். மன அழுத்தமும் சேர்ந்தே வந்தது.


கன்னா பின்னாவென்று சுற்றியதில் கடவுள் இருப்பதை கொஞ்சம் மறந்து விட்டேன் என்று நினைக்கிறேன். 2008 இல் மாரடைப்பு ஒன்று வந்து , எனக்குக் மொஞ்சம் ஸ்பீட் பிரேக்கர் போட்டது. 40 வயதில் மாரடைப்பா என்று விரக்தி வந்து கொஞ்ச நாள் டிப்ரஷனில் அவஸ்தைப்பட்டேன்.


ஆறே ஆறு மாதம்தான். மறுபடியும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டேன் ( நானெல்லாம் திருத்த முடியாத ஜாதி) .


வேலையில் புதுப்புது ஆடு களங்கள், புதுப்புது சவால்கள், நிறையப் போராட்டங்கள், சில தொழில் சார்ந்த எதிரிகள்…..என்று வாழ்க்கை புல்லட் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறது.


சமீபத்தில் என்னுடைய அம்மா இறந்தது மிகப் பெரிய அதிர்ச்சி. அவர் இறந்ததை விட அவர் விட்டுப் போன ரணங்கள் ரொம்பவே கொடூரமானவை. வாழ்நாள் முழுவதும் உறக்கத்தைத் தொலைத்தவனாகவே இருக்க வேண்டுமென்பது நான் வாங்கி வந்த வரம்.


உடம்பு படுத்துகிறது. நாளுக்கு நாள் சோர்வு அதிகரிக்கிறது. இப்போதெல்லாம் முன்பு போல ரொம்பப் பயணம் செய்ய முடிவதில்லை. சென்ற மாதம், வாழ்க்கையில் முதல் முறையாக மசை மாரா சென்று உடல் நிலை காரணமாக சஃபாரியைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பினேன். மனசு ரொம்பவே வலித்தது.

உடம்பு, மனசு இரண்டுமே சோர்ந்திருந்ததில், என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் மிகவும் அற்பத்தனமான தவறு ஒன்று செய்ததில் என்னுடைய புத்தம் புதிய Canon 1DX Mark II உடைந்தது. அதற்காக உட்கார்ந்து கவலைப் படக் கூட நேரம் இல்லாமல் போய் விட்டது. அடுததடுத்து தான்சானியா, உகாண்டா , இந்தியா என்று பயணங்கள்.


ஆம். என்னுடைய வேலை இப்போதுதான் இன்னும் அதிகமாக பயணம் செய்ய நிர்பந்திக்கிறது. உடம்பும் மனசும் எப்போதுதான் ஒத்துப் போகப் போகிறதோ…..கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
இப்போதெல்லாம் மனசு ரிட்டையர்மெண்டையே சுற்றிச் சுற்றி வருகிறது. 2020 மத்தியில் இந்தியா சென்று விட வேண்டும் என்று ஆசை.


இதற்கிடையில், சென்ட்ரல் அமெரிக்கா, வட அமெரிக்கா , நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, ஶ்ரீலங்கா, மான சரோவர் என்று பக்கெட் லிஸ்ட் வேறு நீண்டு கொண்டே போகிறது.
வனங்களில் ஒரு தேடல் புத்தகம், Wild Life குறும்படங்கள் சில, வரலாற்றைத் தேடியில் எழுத வேண்டியவை பல என்று செய்ய வேண்டிய விஷயங்கள் வேறு வரிசை கட்டிக் கொண்டு பயமுறுத்துகின்றன.


ஆனால் , மீனாட்சி மம்மி என்ன நினைத்திருக்கிறாளோ ……தெரியவில்லை.


வெ.பாலமுரளி