1982 என்று ஞாபகம். அப்போதுதான் இந்தப் படத்தில் உள்ள நேஷனல் பனாசோனிக் டேப் ரெக்கார்டரை எங்க அப்பா வாங்கி வந்தார் .
டேப்ரெக்கார்டருடன் 4 BASF Cassettes – ம் வாங்கி வந்தார். சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்தர் சஷ்டி கவசம், சங்கராபரணம் , ABBA , TMS இசை அமைத்துப் பாடிய முருகன் பக்திப் பாடல்கள் என்ற 4 பாடல் தொகுப்புகளும் ரெக்கார்ட் பண்ணினோம். இன்னும் ஞாபகத்தில் உள்ளது.
அந்தக் காலத்தில் இது போன்ற டேப்ரெக்கார்டர், டி.வி. போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வீட்டில் வாங்கினால் அது ஒரு பெரும் திருவிழா. பள்ளிக் கூடம் தவிர வெளியே எங்கேயும் போகப் பிடிக்காது ( பள்ளிக் கூடமும் கட் அடித்து விட்டு வீட்டிலேயே இருக்கத்தான் ஆசை. ஆனால் , எங்க அப்பா, தோலை உரித்து விடுவார்). அப்படியே எங்கேயும் வெளியே போனாலும் டாண் என்று வீட்டுக்கு வந்து விடுவோம் .
அதேபோல், தினமும் தூங்குவதற்கு முன்னால் , சங்கராபரணம் பாடல்கள் அனைத்தும் கேட்டு விட்டுத்தான் தூங்குவோம். அதற்கு முன்னால் , சிலோன் ரேடியோவிலும் , எங்காவது கல்யாண வீடுகளிலும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த பாடல்கள், இப்போது வீட்டில் “ரீவைண்ட்” பண்ணி திரும்பத் திரும்பக் கேட்க முடியும் என்ற விஷயத்தையே கொஞ்ச நாட்கள் எங்களால் நம்ப முடியவில்லை. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்துக் கொண்டு, தண்ணீர் சாதம் சாபிட்டுக் கொண்டே எஸ்.பி.பி யின் ஹிட்ஸ் கேட்டது – 1982 இல் ஒரு அட்டகாசமான அனுபவம்.
அப்படித்தான் எனக்கு இசையின் மீது ஒரு ஈடுபாடு வந்தது. பின்னாளில் காலேஜ் நாட்களில், சில அபூர்வமான பாடல்களுக்காக ஊர் ஊராகச் சுற்றி அலைந்திருக்கிறேன். எஸ்.பி.பி யின் ‘நந்தா நீ என் நிலா’, ‘தேன் சிந்துதே வானம் ‘, டி.எம்.எஸ்ஸின் ‘ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்’, யேசுதாஸின் ‘கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான்” பாடல்களுக்காக அலைந்தது மறக்க முடியாத அனுபவங்கள் .
இப்போதெல்லாம் MP3, Online என்று எல்லாப் பாடல்களுமே சீப்பட ஆரம்பித்து விட்டன.
இது என்னதான் டெக்னாலஜியின் அற்புதம் என்றாலும் கூட பெரிய த்ரில் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது.
இசை சம்பந்தமாக நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு.
அதில் ஒன்று தேவகோட்டையில் நடந்தது. எங்கள் எதிர் வீட்டில் இருந்த கோனார் தாத்தாவின் பேரன் கண்ணனுக்குக் கல்யாணம். சிக்கனக் கல்யாணம். மேளதாளம் கூட வைக்காமல், அவர்கள் சொந்தக் காரர்கள் சிலரை மட்டும் வைத்து நடத்தினார்கள். திடீரென என்ன தோன்றியதோ , எங்களிடம் வந்து எங்கள் டேப்ரெக்கார்டரைக் கொஞ்ச நேரத்திற்குக் கேட்டார்கள். நானும் எடுத்துக் கொடுத்து விட்டேன்- உள்ளே என்ன கேசட் இருக்கு என்று செக் பண்ணாமலே. உள்ளே இருந்தது வாழ்வே மாயம் கேசட். கரெக்ட்டாக தாலி காட்டும் நேரத்தில் ” தாய் கொண்டு வந்ததை , தாலாட்டி வைத்ததை நோய் கொண்டு போகும் நேரமம்மா ” என்று பாட அந்த மொத்தக் குடும்பமும் டென்க்ஷன் ஆகி என்னைத் தேட , நான் நொடிப் பொழுதில் பஞ்சாய்ப் பறந்து விட்டேன்.
நம் இந்தியாவில்தான் நல்ல இசைக் கலைஞர்கள் தெருவில் வந்து பாடினால் அவர்களை பிச்சைக்காரர்களாக்கி விடுகிறோம். மேலை நாடுகளில் அது (வும் ) ஒரு கௌரவமான தொழில் . அதை யாரும் கேவலமாகவோ , அசிங்கமாகவோ நினைப்பதில்லை.
ஒருமுறை நான் மாஸ்கோவில் மெட்ரோவிற்காக காத்திருக்கும்போது, அந்த மெட்ரோ ஸ்டேஷனில் 25 அல்லது 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் சாக்ஸாஃபோனில் ஸ்டீவி ஒண்டரின் ” I just called… to say… I love you ” பாடலை வாசித்தான் பாருங்கள். அட்டகாசம். நான் “திரும்ப ஒரு முறை வாசிக்க முடியுமா?” என்று கேட்டேன். அவன் முகத்தில் அப்ப்ப்படி ஒரு சந்தோஷம். இரண்டு மூன்று முறை வாசித்துக் காண்பித்தான். அதே போல் சில ரஷ்ய மொழிப் பாடல்களும் வாசித்துக் காண்பித்தான் , என் விருப்பத்திற்கேற்ப. முடித்தவுடன், என் கையில் இருந்த கொஞ்சம் பணத்தைக் கொடுத்தேன். அவன் வாங்க மறுத்து விட்டு, “நான் வாசிப்பதை இவ்வளவு தூரம் யாரும் ரசித்துக் கேட்டதில்லை. அதுவே எனக்குப் போதும். உனக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றான் கண்களில் கண்ணீர் பனிக்க. ஒரு கலைஞனுக்குப் பாராட்டு என்பது எவ்வளவு தூரம் முக்கியம் என்பதை உணர்ந்த தருணமது.
அதே போல், சில வருடங்களுக்கு முன்னால் ஜெர்மனி சென்றிருந்தேன். அங்கு ஒரு தெருவில் , கானா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்கன் ஒருவன், இரண்டு உள்ளங்கால்களிலும் கோக் பாட்டில்களின் மூடிகளை ரப்பர் பாண்டு வைத்துக் கட்டிக் கொண்டு, அதை ஒரு தாள லயத்துடன் தட்டிக் கொண்டே புல்லாங்குழல் வாசித்தான் பாருங்கள்….விவரிக்க வார்த்தையே இல்லை. அவனுக்கும் வயது முப்பதுக்குள்தான் இருக்கும். இரண்டு ஈரோ கொடுத்தேன். அவன் அதை வாங்கிக் கொண்டு , என்னுடைய பாடல்கள் ரெக்கார்டு செய்த சி.டி. இருக்கிறது. வாங்கினால் சந்தோஷப் படுவேன் என்றான். அந்த சி.டி யில் உள்ள சில பாடல்கள் என்னுடைய வெப் சைட்டில் இருக்கின்றன. நேரம் கிடைத்தால் கேளுங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.
நீங்கள் ஒரு பாட்டுக்காக அல்லது ஒரு கேசட்டுக்காக யாரிடமாவது சண்டை போட்டிருக்கிறீர்களா ? எனக்கு அந்த அனுபவமும் உண்டு.
நான் ரஷ்யாவில் படிக்கும்போது , ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் ட்யூட்டி ஃப்ரீ ஷாப்பில் ஒரு பாக்ஸ் TDK (அ) Sony (அ) BASF கேசட் வாங்கி வருவேன். முன்னால் தயார் செய்த லிஸ்ட்டில் உள்ள பாடல்களை ரெக்கார்ட் செய்ய ஊர் ஊராக சுற்ற ஆரம்பித்து விடுவேன். இப்போதுள்ளது போல மொபைல் போன் எல்லாம் அப்போது கிடையாது என்பதால், அந்த ஊருக்கு நேரில் சென்று , அங்குள்ள குறிப்பிட்ட ஒரு ரெக்கார்டு செய்யும் கடைக்குச் சென்று விசாரித்தால்தான் தெரியும், அந்தப் பாடல்கள் அங்கே இருக்கா இல்லையா என்று. இல்லை என்றால், அவர்கள் வேறு ஒரு ஊரையோ அல்லது வேறு ஒரு கடையையோ Refer செய்வார்கள். திரும்ப ஒரு பயணம்… திரும்ப ஒரு முயற்சி என்று கதை நீண்டு கொண்டே போகும்.
இவ்வளவு கஷ்டப் பட்டு சேகரிப்பதால் என்னுடைய கேசட்டுகளை வேறு யாரிடமும் கொடுப்பதில்லை என்பதை ஒரு பாலிசியாகவே வைத்திருந்தேன். இதில் என் நண்பன் டாக்டர் ஸ்ரீதரன் மட்டும் விதிவிலக்கு. காரணம், அவனுக்கு இதில் உள்ள அவஸ்தைகள் தெரியும் என்பதால் , வாங்கிக் கொண்டு போய் ரெக்கார்டு பண்ணி விட்டு ப்ராம்ப்டாக திருப்பித் தந்து விடுவான்.
நமக்குத்தான் ஏழரை துரத்தித் துரத்தி வருமே. அப்போதும் வந்தது – ஒரு பெண் வடிவில். என்னுடைய பேட்ச் மேட். ஒரு நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில் வைத்து ” பாலா , உங்களிடம் தமிழ் பழைய பாடல்கள் நல்ல கலெக்ஷன் இருக்காமே ? கொஞ்சம் தாங்களேன் ப்ளீஸ் , ரெக்கார்டு பண்ணி விட்டுத் திருப்பித் தந்து விடுகிறேன் ” என்றாள். நான் கொஞ்சம் கூடத் தயங்காமல் என்னுடைய பாலிசியைப் பற்றி விளக்கி விட்டு , “சாரி ..தர முடியாது ” என்றேன்.
அவளும் விடாமல், என்னங்க இப்படி அலட்டுகிறீர்கள், நான் என்ன அதை தூக்கிக் கொண்டு ஓடவா போகிறேன் ” என்று வற்புறுத்த, சரி என்று ஒரே ஒரு கேசட்டை மட்டும் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு போனவள் போனவள்தான். கேஸட்டைத் திருப்பித் தரவுமில்லை, என்னைப் பார்க்கவுமில்லை. எனக்கா..சரியான மண்டைக்கு குடைச்சல். சரி, எங்காவது மாட்டாமலா போய் விடுவாள் என்று விட்டு விட்டேன்.
அடுத்த ஓரிரு மாதத்தில் நம்ம இந்தியன் எம்பஸியில் வைத்து அவளைப் பார்க்க நேர்ந்தது. என்னைப் பார்த்ததும், எதுவுமே நடக்காதது போல ” என்ன பாலா …சௌக்கியமா ? ” என்று கேட்டு விட்டு நகலப் பார்த்தாள். நானும் விடவில்லை. ” ஹலோ …என்னோட கேசட் என்னங்க ஆச்சு ? ” என்றேன், செம கடுப்பில். ” எந்தக் கேசட் ??? ஓ…அதுவா….என்னோட ஃபிரெண்டு ஒருத்தி வாங்கிக் கொண்டு போனா, திருப்பித் தரவேயில்லை. என்னடின்னு கேட்டா தொலைஞ்சு போச்சுன்னு சொல்லிட்டா ” என்றாள் ரொம்ப அசால்ட்டாக.
அவள் என்னுடைய கேசட்டை என்னுடைய அனுமதி இல்லாமல் இன்னொருவருக்குக் கொடுத்ததே தவறு. அதை அவள் என்னிடம் சொன்ன விதம் ரொம்ப ரொம்பத் தவறு.
பயங்கரக் கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டே ” என்னங்க இவ்வளவு அசால்ட்டாகச் சொல்றீங்க? இதைக் கலெக்ட் பண்றதுக்கு நான் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கேன் தெரியுமா ” என்றேன் பொறுமையுடன்.
” இதுல என்னங்க கஷ்டம் இருக்கப் போகுது ? ஒரு டாலர் கொடுத்தா கேசட். இன்னொரு டாலர் கொடுத்தா ரெக்கார்டு பண்ணித் தரப் போறாங்க. நாளைக்கு எங்க ஹாஸ்டலுக்கு வாங்க, நான் உங்களுக்கு 2 டாலர் கொடுத்து விடுகிறேன் ” என்றாள் , ஏதோ பிறந்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில் போல.
என்னால் அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை. ” ஏங்க அறிவிருக்கா ? காசு கொடுத்தா எது வேண்டுமானாலும் கிடைத்து விடுமா ?” என்றேன்.
அறிவிருக்கா என்று கேட்டது அந்தப் பெண்ணுக்கு தன்மானப் பிரச்சினையாகி விட்டது. உடனே நம்ம சொர்ணாக்கா டோனில் ” ஏய்ய்ய்ய்ய்ய்ய் ….நான் யாரு தெரியும்ல ? ….ராமநாதபுரத்து “………” என்றாள், அவள் ஜாதியைக் குறிப்பிட்டு.
நமக்கு சும்மாவே கோபம் மூக்குக்கு மேல வரும். அவள் ஜாதியைச் சொல்லி மிரட்டியதும் நிஜமாகவே என்னால் கண்ட்ரோல் பண்ண முடியாமல், ” நீ பொம்பளப் புள்ளை என்பதால் பார்க்கிறேன். இல்லாவிட்டால் உன் கன்னம் இந்நேரம் பழுத்திருக்கும். ஒழுங்கா ஓடிப் போயிரு” என்றேன்.
நான் நம்ம கேப்டன் போல நாக்கைத் துருத்தி, கையை மடக்கிய விதம் பார்த்து , நான் எங்கே அறைந்தாலும் அறைந்து விடுவேனோ என்று பயந்து போய் உடனே அந்த இடத்தைக் காலி பண்ணி விடடாள்.
நான் அதற்குப் பிறகு அந்தக் கேரக்டரைப் பார்க்கவேயில்லை.
சமீபத்தில் நான் என்னுடைய கலெக்ஷனையெல்லாம் டிஜிட்டலாக மாற்றலாம் என்ற முயற்சியில் இறங்க ஆரம்பித்த போது டொய்ங் டொய்ங் என்று சுருள் சுருளாக பழைய ஃபிளாஷ் பேக் ஞாபகத்திற்கு வந்து விட்டது. எனவேதான் இந்த டைரி.
வெ. பாலமுரளி