ஒருமுறை பாரதியாருக்குப் பயங்கர பசி. பேய்ப்பசி.
பசி, அவர் வயிற்றை மட்டும் கிள்ளாமல் அவருடைய கோபத்தையும் கிள்ளியது . நண்பர் வீட்டிற்குச் சென்றார். என்ன நினைத்தாரோ ” தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் கோபாவேசத்துடன்.
நண்பர் பதறி விட்டார். பாரதி இன்னும் எதுவும் சாப்பிடவில்லையென்பது புரிந்தது. மனைவியிடம் சொல்லி உணவு பரிமாறினார். அவர் பசி தணிந்ததும், ” என்ன பாரதிவாள் , நீங்களோ கவி, இப்படி ஒரு கடுமையான சொற்களை உபயோகிக்கலாமா ? ” என்றார் பணிவுடன். ” ஆமாம் ஓய், பசிக் கொடுமையால் தகாத வார்த்தைகளை வாரி இறைத்து விட்டேன். போகட்டும். நான் சொன்ன கவிதையை நானே மறந்து விட்டேன்” , என்று அசால்ட்டாகச் சொல்லி விட்டு போய் விட்டார்.
என்னதான் நமக்கு வசதிகள் இருந்தாலும், நாம் எல்லோருமே ஏதாவது ஒரு டயத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் பசியால் வாடியிருப்போம். அது மாதிரி ஏதாவது ஒன்று அல்லது இரண்டு சமயங்களில் என்றால் பரவாயில்லை. ஒரு பொறையும் டீயும் குடித்தாவது சமாளித்துக் கொள்ளலாம் ( நம்ம புத்தி போகாதுல்ல…). ஆனால் அடுத்த ‘நெல்லுச் சோறு’ எப்போன்னே தெரியாவிட்டால் ????? கஷ்டம்தான்றீங்களா ? கரெக்ட் . அந்த மாதிரி ஒரு கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த டைரி.
1987 – ம் வருடம். என் வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட வருடம். அதுவரை மணியடிச்சா சோறு எங்க அம்மாவோட வீடுன்னு ஒரு சொகுசு வாழ்க்கை. சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொண்ட மாதிரி , நானே ஆசைப்பட்டு USSR சென்றேன். மாஸ்கோவில் போய் இறங்கியவுடனேயே ” இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலமுரளி? ” card விழுந்து விட்டது. இது பற்றி என்னுடைய ” கன்னிச்சமையல்” டைரியில் முன்பே எழுதியிருக்கிறேன்.
மாஸ்கோவிலிருந்து நேரே வோல்கோகிராடு என்னும் ஊருக்கு கூட்டிப் போய் விட்டார்கள்.வோல்கோகிராடு இரண்டு காரணங்களால் மிகவும் சரித்திரப் புகழ் வாய்ந்த ஒரு நகரம்.
முதல் காரணம் நான் அங்கே படித்தேன் என்பது ( ஹி….ஹி…ஹி…)
இரண்டாவது காரணம் …..இரண்டாவது உலகப் போரில், ஜெர்மனியை ரஷ்யா பின் வாங்குவது போல வேண்டுமென்றே போக்கு காட்டி, நன்றாக உள்ளே வர வைத்து விட்டு, கடுமையான பனிக்காலத்தில் ஒரு நாள் வோல்காகிராடில் வைத்துதான் திரும்பி அடிக்க ஆரம்பித்தது. இங்கு ஆரம்பித்தது தான் ஜெர்மனியின் வீழ்ச்சி. அது ஹிட்லரின் தற்கொலை, ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு வரை போனது. அது பற்றி விரிவாக நமது ” வரலாற்றைத் தேடி” பக்கத்தில் ஒரு கட்டுரை வரும்….வரும்….வரும்….ரும்…ரும்…ரும்…ம்…ம்..ம்
ரஷ்யாவின் அதிபர் ஸ்டாலின் அழகாக ப்ளான் பண்ணி இங்கு வைத்துதான் வெற்றியைத் தேடித் தந்ததால் வோல்கோகிராடின் பெயர் ஸ்டாலின்கிராடு என்றுதான் இருந்தது. பின்னாளில் ஸ்டாலின் வில்லனாக சித்தரிக்கப்பட ஆரம்பித்த பிறகு, அதை பழையபடி வோகோகிராடு என்றே பெயர் மாற்றி விட்டார்கள்.
ரஷ்யாவின் மூன்றாவது நீளமான நதியான வோல்காவின் கரையில் அமைந்துள்ளதால் இந்த நகரத்திற்கு அந்தப் பெயர். மிக மிக அழகான ஒரு நகரம். என்ன…ஒரே பிரச்சினை – அதிகப் படியான குளிர். பகலிலேயே -40 , -50 என்று போகும். வோல்கா ஆற்றங்கரை என்பதால் குளிர் காற்று கன்னா பின்னா என்று வீசும். ” Feels Like ” என்றழைக்கப்படும் ” Wind Chill ” இன்னும் ஒரு -10 டிகிரி கேவலமாக இருக்கும்.
அங்கு வருடம் முச்சூடும் சொத சொதவென்றிருக்கும் வெள்ளை வெங்காயமும் , உ.கிழங்கும், சிக்கனும், முட்டையும், ரொட்டியும், வெண்ணெயும் தான் கிடைக்கும் . அதிலும் கறுப்பு ரொட்டி என்றழைக்கப்படும் ” Black Bread ” ஒன்று கிடைக்கும் பாருங்க. அப்பப்பா உலக மகா தண்டனை. விவரிக்க வார்த்தை கிடையாது. எப்ப்ப்பவாஆஆஆஆ…….வது அரிசி கிடைக்கும். அப்போது, அது என்னமோ எங்க கண்டதேவி திருவிழா போல இருக்கும்.
அது ‘மாரித்தான்’ ஒரு ‘நா’ …..
” ஏ…..குப்பா, சுப்பா, ராக்காயி, மூக்காயி ….நம்ம சின்னச் சாமி மவன் மொக்கராசு பட்டணத்துலேருந்து படிப்ப முடிச்சு வந்துட்டாஆஆஆஆஆன்” னு நம்ம பாரதி ராஜா படத்துல ஒரு கேரக்டர் கத்திக் கொண்டே வருவாரே, அது போல எங்க கூடப் படிக்கும் அஜய் ” எலேய்…..முரளி, பிரவீனு , நாராயண சாமி , சுந்தரு…. நம்ம மெடிக்கல் காலேஜூக்குப் பக்கத்துல இருக்கும் “த்ஸூம்” சூப்பர் மார்க்கெட்டுல அரிசி தாராய்ங்கெடாஆஆஆஆஆ. அதுவும், அளவு இல்லாம எவ்வளவு கேட்டாலும் தர்றாய்ங்கெலாம்டாஆஆஆ” என்று ஹிந்தியில் தண்டோரா போட்டுக் கொண்டே ஓடினான்.
அது ஜனவரி மாதத்தில் குளிர் காலம் உச்சத்தில் இருந்த ஒரு நாள். வெளியில் மைனஸ் நாற்பதோ நாற்பத்தைந்தோ. ஞாபகம் இல்லை. ஆனால், காட்டுக் குளிர். அது மட்டும் ஞாபகத்தில் இருக்கு. மதியத்தூக்கத்தில் கனவில் சுகமாக “நெல்லுச் சோறு” சாப்பிட்டுக் கொண்டிருந்த எனக்கு, உண்மையிலேயே ” நெல்லுச் சோறு ” சாப்பிடப் போவதறிந்து என்னையே நம்ப முடியாமல், வாரிச் சுருட்டி எழுந்து , எங்களிடம் உள்ளதிலேயே பெரிய டிராவல் பேகான என்னுடைய பையை எடுத்துக் கொண்டு நானும் பிரவீனும் , ஏகப்பட்ட குளிர் ஆடைகளை அணிந்து கொண்டு , கண்ணை மட்டும் விட்டு விட்டு மூக்கு , தாடை , தலை எல்லாவற்றையும் கவர் செய்யும் ஒரு தொப்பி ஒன்றை அணிந்து கொண்டு , கைகளில் இரண்டு மூன்று க்லௌஸையும் மாட்டிக் கொண்டு, கௌ பாய் ஸ்டைலில் ஒரு விண்டர் பூட்ஸையும் மாட்டிக் கொண்டு தலை தெறிக்க ஓடினோம், நாம் போவதற்குள் ஸ்டாக் தீர்ந்து விடுமோ என்ற பதட்டத்தில்.
அன்னிக்கு குளிர்காத்துன்னா குளிர் காத்து அப்ப்ப்ப்படி ஒரு குளிர் காத்து. Wind Chill கண்டிப்பாக -50 க்கும் கீழே இருந்திருக்க வேண்டும். நாங்கள் ஒரு ட்ராம், ஒரு பஸ் எல்லாம் மாறி அந்தக் கடைக்குப் போய் சேர்வதற்குள் , கை காலெல்லாம் விறைத்து விட்டது , நாங்கள் அணிந்திருந்த ஏராளமான குளிர் ஆடைகளையும் மீறி.
நல்ல வேளை அரிசி ஸ்டாக் இருந்தது . கடவுளுக்கு நன்றியைச் சொல்லி விட்டு, கையில் இருந்த காசையெல்லாம் போட்டு அவர்களிடம் இருந்த கடைசி நாற்பது கிலோவையும் வாங்கினோம்.அதுதான் கடைசி ஸ்டாக்காம். அடுத்த ஸ்டாக் வர இன்னும் மூன்று நான்கு மாதமாகலாம் என்று சொல்ல எங்களுக்கு பயங்கர சந்தோஷம். வாங்கிக் கொண்டு வெளியில் வந்ததற்கப்புறம்தான் தெரிந்தது , அந்தக் குளிரில் நாற்பது கிலோவைத் தூக்கிக் கொண்டு நடப்பது அவ்வளவு சுலபமில்லை என்று.
பற்றாக் குறைக்கு எங்களுக்கு ஒரு பஸ்ஸும் கிடைக்கவில்லை. சரி கொஞ்சம் தூரம் நடந்தால் அடுத்த பெரிய பஸ் ஸ்டாப்பிற்குப் போய் ஏதாவது ஒரு பஸ்ஸைப் பிடித்துப் போய் விடலாம் என்று நடக்க ஆரம்பித்தோம். குளிர் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ரத்தம் உறைவது போல ஒரு உணர்வு. மூக்கு மட்டும் திறந்திருந்ததால் அது அப்படியே Freeze ஆகி , சுப்பிரமணிய புரம் படத்தில் நம்ம சசிக் குமார் கர கரவென்று சமுத்திரக் கனியின் குரல்வளையை அறுப்பாரே, அது போல யாரோ ஹாக்ஸா பிளேடை வைத்து எங்கள் மூக்கை அறுப்பது போல ஒரு மரண வலி.
பிரவீன்தான் அந்த யோசனையைச் சொன்னான், “ஓடுவோம்டா” என்று. யோசிக்க அவகாசமில்லை. நேரம் ஆக ஆக வலி உச்சத்தைத் தொட்டது. சரி வேறு வழியில்லை என்று, அந்த நாற்பது கிலோ அரிசியையும் தூக்கிக் கொண்டு தத்தக்கா பித்தக்கா என்று ஓட ஆரம்பித்தோம்.
என்னதான் ரோட்டில் உப்பு அது இதுவென்று போட்டு ஸ்னோவை அகற்றி வைத்திருந்தாலும், முதல் நாள் பெய்த லேசான மழையால் ” Black Ice ” எனப்படும் ஒரு மெல்லிசான ஐஸ் அடுக்கு படிந்திருந்ததை நாங்கள் இருவருமே கவனிக்கவில்லை. கவனிக்கவும் முடியாது. அது அவ்வளவு மெல்லிசாக இருக்கும்.
நான்தான் முதலில் பேலன்ஸ் தவறி கீழே விழுந்தது. பிரவீன் பையைக் கெட்டியாகப் பிடித்திருந்ததால் அவனாலும் பேலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாறி விழ , அந்த 40 கிலோ அரிசியும் ரோட்டில் சிதறி விழுந்தது. எனக்கும் பிரவீனுக்கும் பலத்த அடி. கொஞ்ச நேரத்திற்கு எங்கள் இருவராலும் எழுந்திரிக்கவே முடியவில்லை . குளிர் எக்குத் தப்பாக இருந்ததால் ரோட்டில் மக்கள் நடமாட்டமே இல்லை.
சுதாரித்து எழுந்து கொஞ்ச நேரம் கீழே கொட்டிக் கிடந்த அந்த அரிசியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு இருந்த விரக்தியில் குளிர் உறைக்கவேயில்லை. ரொம்ப அசிங்கம் பார்க்காமல் உடனே கீழே சிதறிய அரிசியைப் பொறுக்க ஆரம்பித்தோம். ஒரு 5 நிமிடத்திற்கு மேல் எங்களால் பொறுக்க முடியவில்லை. குளிர் எங்களை அறுத்துப் போட ஆரம்பித்து. போதும்டா, போகட்டும். நாம ஓடுவோம் என்றான் மறுபடியும். ஓட ஆரம்பித்தோம் – இந்த முறை கொஞ்சம் ஜாக்கிரதையாகவும் மெதுவாகவும்.உடலில் எங்கெங்கே அடி என்று நின்று யோசிக்கக் கூட முடியவில்லை.
ஹாஸ்டலுக்கு வந்து ஒரு ஒரு மணி நேரத்திற்கு எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஹீட்டரைப் போட்டு விட்டு, கையைப் பர பரவென்று தேய்த்துக் கொண்டு வாய் விட்டுக் கத்திக் கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமே முதுகில்தான் நல்ல அடி.
கொஞ்ச நேரத்தில் நார்மல் நிலைக்கு வந்த பிறகு சாதம் வைத்து , சாம்பாரும் உருளைக் கிழங்குப் பொறியலும் வைத்தும் மிகவும் திருப்தியாக சாப்பிட்டோம்.
ரொம்ப நாள் கழித்து அன்று செம தூக்கம்.
மறுநாள், மீதமிருந்த அரிசி காயாமல், தண்ணீர் பதத்தால் கெட்டுப் போய் ஒரு மாதிரி வீச ஆரம்பித்து விட்டது. கண்கள் கலங்க அதைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, பாத்ரூமிற்குப் போய் தண்ணீரைத் திறந்து விட்டு வாய் விட்டு அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.
சாப்பாட்டின் அருமை சாப்பாடு கிடைக்காதவர்களுக்குத்தான் தெரியும் என்று சொல்வார்கள். எனக்கு நன்றாகவே தெரியும்.
சில சமயம், என் பெண் நிவி, சாப்பாட்டிற்கு அழிச்சாட்டியம் பண்ணும் பொழுது , ” உங்க அப்பாவைப் பாருடி . என்ன வைத்தாலும் ஒன்றுமே சொல்லாமல் சாப்பிட்டு விட்டு எழுந்து போகிறார்” என்பாள் என் மனைவி.
நான் ஒரு மெல்லிய சோகத்துடன் சிரித்துக் கொள்வேன்
வெ.பாலமுரளி