முள்றியின் டைரி 38 : நில ந…..டு…க்…க…ம்…..

பெரு மழை, வெள்ளம் , சூறாவளி, பூகம்பம், எரிமலை வெடிப்பு , நில நடுக்கம், நிலச்சரிவு, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கை அழிவை எடுத்துக் கொண்டாலும், அவை விட்டுச் செல்லும் ஆழமான ரணங்களும், வடுக்களும் சொல்லில் அடங்காது. நினைத்தாலே நடுங்கும் ( இது பீலிங்கு . புதுப் பட டைட்டில் இல்லை ).


நானும் இவற்றில் பாதியைப் பார்த்திருக்கிறேன்….ஆனால், எனக்கு இரண்டே இரண்டு சம்பவங்கள் மட்டும் வாழ்க்கையில் மறக்கவே மறக்காது. முதல் சம்பவத்தை எப்போது நினைத்தாலும் ஒரு சிறிய (அசட்டுச்) சிரிப்பை என்னால் தவிர்க்கவே முடிந்ததில்லை. இரண்டாவது சம்பவம் சில இனிய ( ???? !!!!! ) மலரும் நினைவுகளைக் கிளறி விட்டு விடும்.


அது சரி, சம்பவம் சம்பவம்ன்றியே , அது என்ன ராசான்றீங்களா ? சொல்லுவோம்ல……


அந்த சம்பவம் நில நடுக்கம்……..


சம்பவம் NO 1 : நான் பொறியியல் படித்த தாஷ்கெண்ட் நகரம், நிலநடுக்கப் பட்டையில் ( Seismic பெல்ட்- இல் ) உள்ளது. சும்மா டைம் பாஸூக்காகவெல்லாம் அடிக்கடி நிலநடுக்கம் வந்து போகும். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தாலும் கூட, போகப் போகப் பழகி விட்டது (???). ஒரு டயத்தில், ஏதாவது பொருள் கீழே விழுந்தாலும் கூட ” ச்சே …….ஒண்ணுமில்லடா ….நிலநடுக்கம்தான் . போய் வேலையைப் பாருங்க ” என்று கேஷுவலாக சொல்லும் அளவுக்குப் பழகி விட்டது.


1990 என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வருடம். என் சொந்தக் காசைப் போட்டு அந்த வருடம்தான் என்னுடைய முதல் கலர் டி.வி.யை வாங்கினேன். Panasonic – 21″. USD 450. என் இரண்டு கையும் புண்ணாகிப் போகும் அளவுக்குக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். அட நிஜம்தான். இருபத்தியோஓஓஓஓஓஓஓஓரு இஞ்ச் டி.வி.ன்னா சும்மாவா ??????? (தாஷ்கெண்ட் பூரா அதுதான் பேச்சு …ஹி…ஹி…ஹி….).


வாங்கிய முதல் சில நாட்களுக்கு….. சாரி…சில மாதங்களுக்கு தூங்கும் நேரம் சாப்பிடும் நேரம் எல்லாம் ஏகத்துக்கும் குறைந்து விட்டது. எப்போது பார்த்தாலும் டி.வி., டி.வி. , டி.விதான். தினமும் மொக்கையாக ஏதேனும் ஒரு படம் போடுவார்கள். விடாமல் பார்த்து விடுவோம். ” பணக்காரர்களும் அழுகிறார்கள்” என்னும் அழுக்காச்சி சீரியல் ஒண்ணு வருடக்கணக்காக ஓடியது. விடாமல் பார்த்திருக்கிறேன். ” ஐஸ் ஐஸ் பேபி ” ” அஸ்தரோஷ்ண… த்வேரி அக்ரிவாயத்ஸா ” ” சாய்க்கா ” போன்று ஏராளமான பாடல்கள் போடுவார்கள் நம்ம M டி.வி போல. சில பாடல்கள் ரொம்பக் கேவலமாக இருக்கும். ஆனால், ஒன்று விடாமல் பார்த்து விடுவோம்.
அந்த வயதில், என் சொந்தக் காசில் வாங்கியது என்பதால் அப்ப்ப்படி ஒரு காதல். மறக்க முடியவில்லை. இப்போதெல்லாம் புதிதாக ஒரு டி.வி. வாங்கினாலோ, இல்லை, புதிதாக ஒரு கேமரா வாங்கினாலோ பெருசாக த்ரில் ஒன்றும் இருப்பதில்லை. ஏதோ ஷேவ் பண்ணுவதற்கு பிளேடு வாங்கி வந்தது போலத்தான் இருக்கிறது ( வயசாச்சுல்ல என்று காலை வார வேண்டாம் . 28 வயதெல்லாம் ஒரு வயதில்லை ).


அன்று, என் அறை நண்பர்கள், ஏதோ பார்ட்டி என்று வெளியில் சென்று விட்டார்கள். நான் என்னுடைய புதிய ஜப்பானிய காதலியான பனாசோனிக்கை விட்டுப் பிரிய மனமில்லாமல், தலை வலி என்று (யாரையும் புண்படுத்தாத ) ஒரு பொய்யைச் சொல்லி விட்டு அறையிலேயே இருந்து விட்டேன். அறைகுறையாக ஏதோ ஒன்றைக் கொறித்து விட்டு கிட்டத்தட்ட இரவு பன்னிரெண்டு மணிவரை ஏதேதோ ப்ரோக்ராம்களைப் பார்த்து விட்டு , மனமே இல்லாமல் துங்கச் சென்றேன்.

கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும். லேசாக ஒரு அதிர்வு தெரிந்தது. டமாலென்று முழிப்பு வந்து விட்டது. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. வழக்கமான (???) நில நடுக்கமாக இருக்குமென்று அலட்சியப் படுத்தி விட்டு மறுபடியும் தூங்கி விட்டேன். ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் மறுபடியும் ஒரு அதிர்வு வந்தது. இந்த முறை கொஞ்சம் பலமாகவே இருந்தது. அதிர்வு சில வினாடிகள் நீடிக்கவே , படுக்கையில் இருந்து பாய்ந்து சென்று டி.வி.யைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன் ( நாங்கல்லாம் யாரு…….). கிட்டத்தட்ட 1/2 மணி நேரம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவில்லை. இனி நிலநடுக்கம் வராது என்று ஓரளவு ( ???!!! ) உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே மறுபடியும் தூங்கச் சென்றேன்…..


மறுநாள் காலை, எங்கள் ஹாஸ்டலில் ( Hostel No: 21 ) படு களேபரமாகப் போய் விட்டது. பாலாவுக்கு என்னாச்சு, பாலாவுக்கு என்னாச்சு என்று எல்லோரிடமும் ஒரே டென்ஷன். காரணம், அந்த இரண்டாவது நிலநடுக்கம் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருந்ததால் , ஹாஸ்டல் எந்த நேரமும் இடிந்து விழலாம் என்று பயந்து போய் , ஒட்டு மொத்த ஹாஸ்டலுமே அடித்துப் பிடித்து வெளியில் ஓடி வந்து விட்டது. நான் மட்டும் ஒத்தை ஆளாக என்னுடைய டி.வியைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்திருக்கிறேன்….( ம்க்கும்….கூட ஒரு நாலஞ்சு பேரைக் கூப்பிட்டிருக்க வேண்டியதுதானே ? ) அதை யாரிடமும் சொன்னால் காறித் துப்புவார்கள் என்பதால், என்னுடைய நெருங்கிய சில நண்பர்களைத் தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லை. கேட்பவர்களிடம் எல்லாம், நல்ல அசந்த தூக்கம் என்று மட்டும் சொல்லி விட்டேன் ( நோ….நோ….கன்ரோல் யுவர்செல்ஃப். உங்கள் லேப்டாப் பாழாகி விடும் ).


சம்பவம் No 2:


ஒரு மூன்று அல்லது நான்கு வருடத்துக்கு முன்னால், பக்கத்து நாடான டான்சானியாவில் எரிமலை ஒன்று வெடிக்க அதன் எதிரொலியாக நைரோபியில் தொடர்ச்சியாக சில நாட்கள் நில நடுக்கம் வந்து கொண்டேயிருந்தது….


கிராமப் புறங்களில் சில வீடுகளில் நல்ல பாதிப்பு. நைரோபியிலும் சரியாக கட்டாத சில வீடுகளில் பெரிய பெரிய விரிசல்கள்.


நான் முன்பே இது போல நிறைய பார்த்திருந்ததால், பெரிதாக ஒன்றும் பயப்படவில்லை ( சத்தியமாங்க …) . ஆனால், என் மனைவி, மகள் , நண்பர்களிடத்தில் அது ஒரு பெரிய டாப்பிக்காக இருந்தது. எல்லோருடைய பாஸ்போர்ட்டுகளும், கொஞ்சம் பணமும் எல்லோர் வீடுகளிலும் தயார் நிலையில் இருந்தன. நான் கொஞ்சம் மெத்தனமாக இருந்ததில் என் மனைவிக்கு செம கோபம். “மனசுக்குள் பெரிய தைரியசாலி என்று நினைப்பு” என்று திட்டிக் கொண்டேயிருந்தாள் ( வெளியில் நாம் பெரிய ஆள் என்று எவ்வளவு பெயர் வாங்கினாலும், நம் மனைவிமார்கள் மட்டும் அதை ஒத்துக் கொள்வதேயில்லை . இது யுனிவர்சல் லா என்று நினைக்கிறேன் ).


அந்த வாரத்தில் ஒரு நாள் அதிகாலை, 4 அல்லது 5 மணியிருக்கும், நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது என் நெருங்கிய நண்பர் பாலா ( மங்கை பாலா ) விடமிருந்து ஒரு ஃபோன் கால் ” நண்பா, உடனே எழுந்து வெளியே ஒடி வாங்க. பெரிய நிலநடுக்கம் ” என்று. நான் , அர்ச்சனாவையும் நிவியையும் எழுப்பி வெளியே ஓடுங்க என்று அனுப்பி விட்டு, பேண்ட் சட்டையை மாற்றி விட்டு, பாஸ்போர்ட்டுகளை எடுத்துக் கொண்டு நானும் பின்னாலேயே ஓடினேன். குறுகிய அந்த நேரத்துக்குள் நான் பேண்ட் சட்டையை மாற்றி தலையையும் வாரி ஃ பிரெஷ்ஷாக வருவதைப் பார்த்து என் மனைவிக்கு செமத்தியான கோபம் . நெற்றிக்கண் ஜுவாலையில் ஹீட் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. “இந்த நேரத்துல உங்களுக்கு யாரு பொண்ணா கொடுக்கப் போறாங்க ? ” என்றாள் கோபமாக . யாருக்குத் தெரியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு , ஹி …ஹி…ஹி….பழக்க தோஷம் என்றேன்.


முதலில் , சுறா படத்தில் வரும் தமனா போல கொஞ்சம் மேக்கப் போடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அப்படி மட்டும் போட்டிருந்தால், கார் பார்க்கிங்கில் வைத்தே என் மனைவி என்னை வெட்டிப் போட்டிருப்பாள். நல்ல வேளை தப்பித்தேன்.


வெளியில் போன பிறகுதான் தெரிந்தது, நான்தான் கடைசி என்று . என் நண்பர்கள் எல்லோரும் எனக்கு முன்னாலேயே ஆஜர். செம அரட்டைக் கச்சேரி. இதற்கிடையில், வழக்கம்போல் நம் இந்தியர்கள், ” நாஸாவிலிருந்து எச்சரிக்கை ” ” அமெரிக்க எம்பஸியில் இருந்து வார்னிங்” ” கனேடிய துதரகத்தில் இருந்து எமெர்ஜென்சி அழைப்பு. அவர்கள் குடிமக்களுக்கு தனி விமானத்தில் கனடா செல்ல ஏற்பாடு ( ச்சே …கனேடிய குடியுரிமை வாங்காம வந்தாச்சே ….)” என்று ஏராளமான புரளி எஸ்.எம். எஸ் கள் ( இது போல புரளிகளை யார் ஆரம்பிப்பார்கள் என்று கண்டுபிடித்து செவுளில் நாலு கொடுக்கணும் ). அந்த அதிகாலையிலும் கனேடேடிய தூதர் ( ??????) நாங்கள் அது போல (???) எஸ்.எம்.எஸ் கள் எதுவும் அனுப்பவில்லை என்று பதில் எஸ்.எம்.எஸ் ( அப்ப நீங்களும் எங்க இந்திய அரசாங்கம் போலத்தானா ? அப்பாடா…இப்பத்தான் சந்தோஷமா இருக்கு ) .


செம ஜாலியான கேட் டுகெதர். நேரம் போனதே தெரியவில்லை. ஒரு ஆறு அல்லது ஏழு மணி வரைக்கும் பொழுது போனதே தெரியவில்லை. நில நடுக்கம் ஒன்றும் ரிப்பீட் ஆவது போலத் தெரியாதலால், நல்ல கெட் டுகெதர் ஒன்று முடிகிறதே என்று சோகமாக அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றோம்.


அந்த நேரத்தில் ஒரு காப்பி மட்டும் கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்கு மட்டும் ஒரு சின்ன வருத்தம்.


வெ. பாலமுரளி.


பி.கு. சமீபத்திய வெள்ளத்தினால் ஏகப்பட்ட பேரிழப்புகள் என்றாலும் கூட, அந்த வெள்ளம்தான் நம் எல்லோருக்குள்ளிருக்கும் மனித நேயத்தைத் தட்டி எழுப்பியது. நிறையப் பேர், தங்கள் லேப் டாப்புகளை சார்ஜ் பண்ண முடியாதலால், தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும், அக்கம்பக்கத்தினருடனும் நிறைய நேரம் செலவழித்தார்கள் என்று எனக்கு ஒரு நண்பர் மெஸேஜ் அனுப்பியதைப் பார்த்ததின் விளைவே இந்த டைரி…….வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விரைவில் தங்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.