நான் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தது ..…. 4-வது படிக்கும்போது என்று ஞாபகம். அப்போது அணில், முயல் என்ற சிறுவர் புத்தகங்கள் வரும். நானும் என் அண்ணனும் வீட்டில் தின்பண்டம் வாங்க கொடுக்கும் காசை சேர்த்து வைத்து அந்த புத்தகங்களை வாங்குவோம் (படம் பார்ப்பது எல்லாம் படித்தது ஆகாது ராசா…).
அப்போது ஆரம்பித்த பழக்கம். பின்னால் முத்து காமிக்ஸ், இளவரசன் ஏழு கடல் ஏழு மலைகளை தாண்டி ஒரு சிறிய கூண்டில் இருக்கும் அப்பாவி பறவையை கொல்வதின் மூலமாக ஒரு மந்திரவாதியை கொல்லும் கதைகள் (அது என்னங்க லாஜிக்?), தமிழ்வாணன் கதைகள், மணியனின் பயணக்கட்டுரைகள், அசோகன் ஆரம்பித்த பாக்கெட் நாவல்கள், சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், என் அம்மா படித்ததைப் பார்த்துப் படித்த லக்ஷ்மி, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி என்று என் பள்ளிப் பருவத்தில் கன்னா பின்னா என்று படித்திருக்கிறேன் (என் பாடங்களைத் தவிர).
தமிழில் இல்லாததா ஆங்கிலத்தில் உள்ளது என்று ஆங்கிலப் புத்தகங்களை மட்டும் படிப்பதில்லை (ஆங்கிலம் தெரியாது என்பதை இப்படிக் கூட சொல்லிக் கொள்ளலாமோ).
ஓரளவிற்கு சீரியஸான புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தது கல்லூரி போக ஆரம்பித்த பிறகுதான். கல்கியின் சரித்திர நாவல்கள், மீ.ப.சோமு, அகிலன், ஜெயகாந்தன், ராகுல சாங்கிருத்யாயன், டால்ஸ்டாய் , ரஷ்ய நாட்டுக் கதைகள், கண்ணதாசன், சாண்டில்யன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், மீ.ரா, அப்துல் ரஹ்மான் என்று என் “இலக்கிய அறிவு” விரிந்தது அப்போதுதான் (ஹி….ஹி…ச்சும்மா சொல்லிப் பார்த்துக்கொண்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க).
நைரோபி வந்த பிறகு திரு. சண்முகசுந்தரத்தின் நட்பு கிடைத்தது. ஷான் ஒரு அற்புதமான நண்பர். நானும் அவரும் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது (இந்த ஜென்மங்களைத் திருத்தவே முடியாது என்று எங்கள் இருவரின் மனைவிமார்களும் கிச்சன் பக்கம் போய் விடுவார்கள்). அவர் மூலமாக தி.ஜானகிராமன் மற்றும் முத்துலிங்கம் அறிமுகமானர் (அவர்கள் புத்தகங்களைச் சொன்னேங்க). அப்போது ஷான், நான், இளங்கோ மூவரும் சேர்ந்து பேசி ஆரம்பித்ததுதான் நைரோபியின் தமிழ் நூலகம் (அப்பாடா…எப்படிடா தம்பட்டம் அடித்துக்கொள்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சான்ஸ் கிடைத்து விட்டது).
பின்னாளில் ஷான் இடத்தை நண்பர் பாலா நிரப்பிவிட்டார் ( அதெல்லாம் சரி…நீ என்ன சொல்ல வருகிறாய் ராசா?).
படிப்பதில் உள்ள சுகம் அதை நாலு பேரிடம் பகிர்ந்து கொள்வதில்தான் நிறைவு பெறும் என்று எங்கோ படித்ததாக ஞாபகம் (அதை நான்தான் சொன்னேன் என்றால் நம்பவா போகிறீர்கள் …). இந்தக் கட்டுரை எழுத முடிவு செய்தது அப்படித்தான்.
ஜெயகாந்தன் என்றாலே….”நீ ஜெயகாந்தன் புத்தகம் எல்லாம் படிப்பாயா?” என்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் சிலர் சொல்ல (அலற)க் கேட்டிருக்கிறேன் (yes…அதே “காந்தி செத்துட்டாரா?” டோனில்). மிகவும் தவறான ஒரு Perception. அவருடைய “ ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்” படித்துப் பாருங்கள். ஹென்றியும், துரைக்கண்ணும் உங்களை ஏதோ ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். ஒரு அற்புதமான நாவல்.
அதேபோல் அவருடைய சிறுகதைத் தொகுப்புகள். ஜெயகாந்தன் அளவிற்கு வேறு யாரும் மனிதர்களுடைய எண்ண ஓட்டங்களை சொல்லியிருக்கிறார்களா என்பது சந்தேகமே.
ஜெயகாந்தன் அளவிற்கு என்னை வெகுவாக பாதித்த இன்னொரு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு விஷயத்தை இப்படிக்கூட யோசிக்கலாமோ, இப்படிக்கூட ரசிக்கலாமோ என்று எண்ண வைத்தவர். அவருடைய “தேசாந்திரி” படித்து விட்டு கங்கை கொண்ட சோழபுரம் சென்றேன். கையில் ஒரு கேமராவும் வழிச் செலவிற்கு கொஞ்சமே கொஞ்சமாக பணத்தையும் தவிர ஒன்றுமே கொண்டு செல்லவில்லை. மாற்று உடை கூட இல்லாமல் உண்மையான ஒரு தேசாந்திரியாக மேற்கொண்ட ஒரு பயணம். “ அமைதியைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன். கால்கள் வலித்தன. ஓரிடத்தில் அமர்ந்தேன். அமைதி அங்கேயே இருப்பது அப்போதுதான் தெரிந்தது” என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு அர்த்தம் அங்கேதான் புரிந்தது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றிகள். என்னுடைய அடுத்த இந்தியப் பயணத்தில் புத்த கயாவும், ஹம்பேயும், நாளந்தாவும் அதே முறையில் சென்று வர ஆசை. மீனாட்சி அன்னை என்ன நினைத்திருக்கிறாளோ …தெரியவில்லை.
சரித்திர நாவல்களை எடுத்துக் கொண்டால் அகிலனின் “வெற்றித் திருநகர்” மற்றும் மீ.ப.சோமுவின் “கடல் கண்ட கனவுகள்” என்னை மிகவும் கவர்ந்த நாவல்கள். பொன்னியின் செல்வனுக்கு சமமான விறு விறுப்புடனும் சுவையுடனும் எழுதப்பட்ட நூல்கள். இன்றும் நான் மதுரைக்கு செல்லும்போதெல்லாம் “விசுவநாத நாயக்கரை” நினைக்காமல் நான் திரும்பியதில்லை.
அதேபோல் மதனின் “ வந்தார்கள்….வென்றார்கள்” ஒரு எளிய நடையில் எழுதப்பட்ட அமர்க்களமான சரித்திரப் புத்தகம். சுஜாதா கூறியதைப் போல், எனக்கு மதனைப்போல ஒரு சரித்திர ஆசிரியர் வாய்த்திருந்தால் நான் ஒழுங்காக பாஸ் பண்ணியிருப்பேன்.
நான் மொழி பெயர்ப்பு புத்தகங்கள் அவ்வளவாகப் படிப்பதில்லை. மொழிபெயர்த்தல் என்பது ஒரு கலை. அது யாருக்கும் சரியாகத் தெரிவதில்லை என்பது என்னுடைய நீண்ட நாளைய கருத்து. “ பட்டாம்பூச்சி” என்னும் ரா.கி.ரங்கராஜனுடைய நாவலைப் படித்தவுடன் என்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டேன். இது “Papillon” என்ற ஃபிரெஞ்சு கதையை தழுவிய நாவல். வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரிச்சினைகளே வாழ்க்கையானால்? பட்டாம்பூச்சி படியுங்கள்.
வாழும் கலைகள் பற்றி இன்று எவ்வளவோ பேர் எழுதி விட்டார்கள். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தவை: சுகி சிவத்தின் வெற்றி நிச்சயமும், சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸும். மிகவும் அருமையான புத்தகங்கள் (சுவாமி சுகபோதானந்தாவிற்கு ஒரு சிறிய வேண்டுகோள். தங்கள் பெயரை மாற்றி வைத்துக்கொண்டால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவோம். ஆனந்தா என்று பெயர் முடிந்தாலே மக்கள் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்).
சுஜாதாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். எளிய நடைக்கும், நக்கல், நையாண்டிக்கும் தலைவரே ஏக போக உரிமையாளர் (நான் இரண்டு முறை காந்தியைப் பார்த்திருக்கிறேன். ஏனோ இரண்டு முறையுமே அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. அப்போது எனக்கு வயது 5. அவருடைய புத்தகங்களில் நான் மிகவும் ரசித்தவை “நம்ப முடியாத கதைகளும்” , “ ஏன் எதற்கு எப்படி” யும்.
நான் படித்த மிகச் சில ஆங்கிலப் புத்தகங்களில் என்னை மிகவும் மாற்றிய புத்தகம் Rhonda Byrne எழுதிய “ The Secret”. நேரம் கிடைத்தால் படியுங்கள். உங்கள் வாழ்க்கையும் மாற்றி எழுதப்படலாம்.
இப்போது எனக்கு எஸ். ராமகிருஷ்ணனைப்போல் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.
- நமது நண்பர்கள் சில பேர் சந்தித்துக்கொண்டால் நமது வேலையைப் பற்றிப் பேசி அலுத்துக் கொள்கிறோம், உடல் நிலையைப் பற்றிப் பேசிக்கொள்கிறோம், அரசியல் பேசுகிறோம், பஞ்சு பஞ்சாக இட்லி சுடும் கலையைப் பற்றி தகவல் பறிமாறிக்கொள்கிறோம், ஆனால் என்றாவது புத்தகங்களைப் பற்றிப் பேசிக்கொள்கிறோமா? (இங்கு எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். பிஸினஸ் எப்படிங்க என்று எப்பக் கேட்டாலும் ரொம்பக் கேவலாமா இருக்குங்க என்பார்).
- நம்மில் எத்தனை பேருக்கு நைரோபியில் தமிழ் நூலகம் இயங்குவது தெரியும்?( ஆனால் என்ன புதுப்படம் CD வந்தாலும் காட்டுத் தீயைப் போல் விஷயம் எல்லோருக்கும் பரவி விடுகிறது)
- நமது பெரியார்தாசன் சொன்னது போல திருக்குறள் என்பது நான்கு வேதங்களுக்கும், பைபிளுக்கும், திருக்குரானுக்கும் சமமானது. ஆனால் நமது அனைத்து வீடுகளிலும் திருக்குறள் உள்ளதா? நமது குழந்தைகளுக்கு அதன் சிறப்பை சொல்லிக் கொடுக்கிறோமா?
- நாங்கள் கனடாவில் இருக்கும்போது, எங்கள் நண்பர்களில் பல பேர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்பதை மிகவும் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். இது ஒரு வருத்தமான விஷயமில்லையா? இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? பேசவே தெரியாது என்னும்போது தமிழ் படிக்கும் பழக்கத்தை எப்படிக் கொண்டு வரப் போகிறோம்?
- நாம் இண்டர்நெட்டிற்கும், டிவிக்கும் செலவிடும் நேரத்தில் எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பதிற்கு செலவளிக்கிறோம்?
நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை எழுதவில்லை. நமது படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறதே என்ற ஆதங்கத்தில் மட்டுமே எழுதுகிறேன். இந்தக் கட்டுரை பிடித்து இருந்தாலும் சரி, பிடிதிருக்காவிட்டாலும் சரி, ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்….விவாதிப்போம் (ஆஃபிஸில் ரொம்ப போரடிகுதுங்க).
வெ.பாலமுரளி.