நான் 3 வருடங்களுக்கு முன்னால், என் வேலை விஷயமாக துருக்கி ( Turkey) செல்ல நேர்ந்தது ( எனக்கு ஏழரை நாட்டுச் சனி உச்சத்தில் இருந்த நேரம்).என் அலுவல் எல்லாம் முடிந்தவுடன், வழக்கம்போல் என் கேமராவை எடுத்துக் கொண்டு அங்குள்ள கோட்டை கொத்தளங்களை புகைப்படம் எடுக்கக் கிளம்பினேன். ஏதோ ஒரு காரணத்தால் இஸ்தான்புல்லில் இருந்த அரண்மனையை அன்று மூடியிருந்தார்கள். பொதுவாக, என்னுடைய வெளிநாட்டு பயணங்களில் எனக்கு Shopping பண்ணப் பிடிக்காது( இப்படித்தான் என் மனைவியிடம் வெகு நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்).
அன்று எனக்கு வேறு வேலை எதுவும் இல்லாதலால், வினையே (??????) என்று அருகில் இருந்த ஒரு பழம்பொருள் அங்காடி ( ச்சே…தமிழ் என்னமாய் வருகிறது) ஒன்றுக்குள் நுழைந்தேன். Mr. ஏழரையும் கண்ணுக்குத் தெரியாமல் என்னை புன்னகையுடன் வரவேற்றார். சும்மா பொழுது போக்க நுழைந்த என்னை, தந்தத்தால் செய்த கைத்துப்பாக்கி ஒன்று கண்ணடித்து அழைத்தது ( அதுவா அழைத்தது?????? நேரம்…..).மிகவும் அழகான வேலைப்பாடு. கிட்டத்தட்ட 100 வருடத்தைய துப்பாக்கி. அதன் கலை அழகில் மயங்கி அதன் விலை என்ன என்று கேட்டு விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமலேயே என் Credit Card – ஐ எடுத்து நீட்டி விட்டேன். அவனும் விலையைச் சொல்லாமலேயே US$ 450 – ஐ charge பண்ணி விட்டான் ( Supply & Demand principle அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது). அந்தத் துப்பாக்கியின் அழகில் அவனுடன் எனக்குப் பேரம் பேசக் கூடத் தோணவில்லை. அதை வாங்கி விட்டு நேரே ஹோட்டலுக்கு வந்து விட்டேன்.
அன்று இரவு எனக்கு நைரோபி திரும்புவதற்கு ஃபிளைட்.அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு ஏர்போர்ட்டிற்குக் கிளம்பினேன். நான் ஏர்போர்ட் வாசலை மிதிப்பதற்கும் இஸ்தான்புல்லின் Shopping Complex ஒன்றில் குண்டு ஒன்று வெடிப்பதற்கும் மிகச் சரியாக இருந்தது ( ஏழரையின் போது இது எல்லாம் சாத்தியம் என்று பின்னால்தான் புரிந்தது).இது எதுவும் தெரியாமல் நான் அப்பாவியாக (நெசம்மாலுமே நான் அப்பாவிதாங்க), என் சூட்கேஸை Scanner-இல் போட்டு விட்டு அந்த Security Lady – யைப் பார்த்தேன். ஒரு செகண்டில் அந்த அம்மணியின் முகத்தில் அதிர்ச்சியான ஒரு ஒளிக் கீற்று. வாத் இஸ் திஸ் என்றாள். அவர்களுக்கு “T” சொல்ல வராது (ஆமா ரொம்ப முக்கியம்….). நான் உடனே அவளை கிண்டல் செய்யும் நோக்கத்தில் ஒரு கண்ணை மூடிக் கொண்டு ஆள்காட்டி விரலை அவளைக் காண்பித்து கட்டை விரலை மேல் நோக்கி வைத்து ‘”திஷ்யூம்” என்றேன். என் கிரகம் கேவலமாக வேலை செய்ய ஆரம்பித்தது அந்த நிமிடம்தான்.
அவள் என்னிடம் லைசென்ஸ் இருக்கா என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டே வாக்கி டாக்கியை எடுத்து சில பேரை பதட்டத்துடன் கூப்பிட்டாள். Something Wrong என்று உடனே பட்சி சொன்னது (நாங்க செம ப்ரைட்டுல…).சில நிமிடங்களில் ஒரு பெரிய போலிஸ் பட்டாளமே வந்திறங்கி Mr. Ali , please come with us என்றது. Mr அலியா?????? அடக் கடவுளே….. (BALAMUR “ALI” – யில் உள்ள கடைசி மூன்று எழுத்துக்களை மட்டும் வசதியாக எடுத்துக் கொண்டார்கள்). என் அப்பா மட்டும் உயிரோடு இருந்தால் வெறுத்துப் போயிருப்பார்.
வேறு வழியில்லாமல், ஆஹா..இப்படி மாட்டிக் கொண்டோமே என்று என்னை நானே நொந்து கொண்டு அவர்கள் பின்னாலேயே சென்றேன் (Yes…வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் அதே பலிகடா, அருவா Situation).நான் என் கம்பெனியில் யார் யாருக்கோ Barbeque Grill பண்ணிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் Grilling இன் Real Meaning புரிந்ததில்லை. அன்று தெள்ளந்தெளிவாக புரிந்தது. அவர்கள் அனைவருக்கும் ஏதோ அல் கொய்தா வின் ஒரு பெரிய புள்ளியை பிடித்து விட்ட மாதிரி ஒரு பெருமிதம்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என் புண்ணியத்தில் அந்த ஏர்போர்ட்டே ஸ்தம்பித்து விட்டது. ஏதேதோ கேள்விகள்….அந்தக் கடுமையான Interragation முடிந்த பிறகு அங்கு இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்த கட்டுரையின் தலைப்பை முணு முணுத்துக் கொண்டே சென்றார்கள். அவர்கள் அந்தத் துப்பாக்கியைச் சொன்னார்களா இல்லை என்னைச் சொன்னார்களா என்று தெரியவில்லை.வெ.பாலமுரளி.