இன்றுடன் மிஸ்டர் 2023 நிறைவு பெறுகிறார். ஏகப்பட்ட மன உளைச்சலைத் தந்த இந்த 2023 ஐ வாழ் நாளிலும் மறக்க முடியாது. ஆனால், அந்த மன உளைச்சல்களுக்கிடையிலும் எங்கள் மகளின் திருமணம் மிகவும் சிறப்பான முறையில் நடந்தது மட்டும் பெருமகிழ்வான விஷயம். எனவே, நல்லதை மட்டுமே நினைவு கூர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இத்துடன் நான் இந்தியா வந்தும் நான்கு வருடங்கள் ஆகின்றன.
இந்த நான்கு வருடங்களில் பெரிய அளவில் எதுவும் சாதிக்கவில்லை என்றாலும் கூட எனக்கு பிடித்தமான தொல்லியல் துறையில் வெற்றிகரமாக என்னுடைய முதல் (வலது) காலை எடுத்து வைத்து விட்ட திருப்தி இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் எனது இரண்டு ஆசான்கள்.
முதல் ஆசான் உயர்திரு. ராஜகுரு அவர்கள். எனக்கு தமிழியைக் கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாது, இந்தத் துறையில் தனக்குத் தெரிந்த அத்தனை பெரிய மனிதர்களையும் எனக்கு அறிமுகப் படுத்தி வைத்து இருக்கிறார். அதில் முக்கியமானவர்கள் உயர்திரு. சாந்தலிங்கம் அவர்கள் மற்று உயர்திரு வேதாச்சலம் அவர்கள்.
அத்துடன் நின்று விடாமல் அவ்வப்போது நான் கேட்கும் புத்தகங்களையும் தந்து உதவி விட்டு, தான் ஒன்றுமே செய்யாதது போல் அமைதியாய் இருந்து விடுவார். இவர்தான் மிஸ்டர். நிறைகுடம் நம்பர் 1. நன்றி சார்.
இரண்டாவது ஆசான் பாறை ஓவியங்களின் பிதாமகன் உயர்திரு.பாலா பாரதி அவர்கள். எனக்கு இவருடனான நட்பு தொடங்கியது மிகவும் சுவையான ஒரு சம்பவம் ( ஆமாம். அந்த “சம்பவத்தை” செய்தத்உத நான்தான்)
2020 இல் ராஜகுரு அவர்கள் புண்ணியத்தில் தினமலர் நிருபர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. எனக்கு என்னுடைய கானுயிர் படங்களை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டுமென்பது நீண்ட நாள் கனவு. அந்த நிருபர் என்னைத் தொடர்பு கொண்டதே அதற்காகத்தான். அதற்கு முன்னால், ஒரு அறிமுகத்திற்காக நான் கடந்து வந்த பாதைகளைக் கேட்டார் ( ஆமா….இவரு பெரிய டெய்சிங். கடந்து வந்த பாதையாம்ல கடந்து வந்த பாதை என்று நீங்கள் பல்லைக் கடிப்பது கேட்குது மக்கா).
நான் என்னுடைய பாதையை ரொம்ப தன்னடக்கத்துடன் ( ஹிஹிஹி ) சொல்ல, அந்த நிருபரோ , சார் நீங்கள் எடுக்கும் படங்களை விட உங்கள் பாதை ரொம்பவே இண்ட்ரஸ்ட்டிங். முதல்ல உங்கள் வாழ்க்கைப் பயணத்தையே ஒரு செய்தியாக போடுவோம், உங்கள் படங்களை இன்னொரு நாள் போடுவோம் என்றார்.
எனக்கு அதில் உடன்பாடில்லை. சார்…சார்…என் படங்களை முதல்ல போடுங்க சார், என்னைப் பற்றிய நியூஸ் வேண்டாம் சார் என்றேன் ( சத்தியமாக. நம்புங்க ப்ளீஸ்). அவர் சாரி என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டார் ( அவர் இன்று வரை என் ஃபோனை எடுப்பதில்லை என்பது வேறு விஷயம்).
அப்படி வந்ததுதான் “ 53 வயதில் 54 நாடுகள்” நியூஸ் ( மறந்து போன மக்களுக்காக ஒரு ரிமைண்டர். ஹிஹிஹிஹி). அதில் கடைசியாக “ …அதனால் கென்யாவிலிருந்து விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு தற்சமயம் இந்தியா வந்து பாறை ஓவியங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார் “ என்று முடித்து விட்டார் ( நான் சொன்ன தமிழி கல்வெட்டுக்கள்,குடை வரைக் கோயில்களை மறந்து விட்டார்).
சும்மா சொல்லக் கூடாது. தினமலரில் அந்த நியூஸ் வந்தவுடன் ஏராளமான ஃபோன் கால்கள். அதில் சில பெரிய மனிதர்களும் இருந்தனர். அதில் ஒருவர்தான் திரு.பாலா பாரதி. “ பாறை ஓவிய ஆய்வு” என்றவுடன் அவர் டென்ஷன் ஆகியிருக்க வேண்டும்.
என்னடா, நாம் இத்தனை வருடங்களாக பாறை ஓவியத்தில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இதில் எத்தனையோ மனிதர்களை சந்தித்திருக்கிறோம். ஆனால், பாலமுரளி என்னும் ஒரு கேரக்டரை கேள்விப்பட்டது கூட இல்லையே என்று.
க்யூரியாசிட்டி தாங்காமல் உடனே ஃபோன் பண்ணி விட்டார். “வாழ்த்துக்கள் சார், நான் பாலாபாரதி” என்றுதான் தொடங்கினார். ஒரு நிமிடம் என்னால் அதை நம்பவே முடியவில்லை.
ராஜகுரு சாருக்கும், அந்த தினமலர் நண்பருக்கும் என்னுடைய கோடான கோடி நன்றிகளை மானசீகமாக சொல்லி விட்டு “ சொல்லுங்க சார் “ என்றேன் பணிவாக.
அவர் நேரே விஷயத்திற்கு வந்து விட்டார். “ அப்புறம். சொல்லுங்க. இதுவரை எத்தனை பாறை ஓவியங்கள் பார்த்திருக்கிறீர்கள் ?” என்றார். நான் மிகவும் பெருமையாக “ மூ……ணு….சார்” என்றே. அந்த “ மூணு சார்” என்பதில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது ( பின்னே…மூணு பாறை ஓவியம் பார்ப்பது என்றால் சும்மாவா ?).
“நல்ல வேளை இது டம்மி பீஸு” என்று அவருக்கு அப்பதான் உயிர் வந்திருக்க வேண்டும். “ரொம்ப சந்தோஷம்” என்றார் ஒரு ஆழ்ந்த நிதானத்துடன்.
“நானும் பாறை ஓவியத்தில்தான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்” என்றார் ( “நானுமா ?????” அப்ப அவர் என்னையும் ஒரு ஆய்வாளன் என்று சேர்த்துக் கொண்டு விட்டார். ஏஏஏஏஏஏஏஏஏஏ……….ஹூரே). “தெரியும் சார். ஃபேஸ் புக்கில் பார்த்திருக்கிறேன்” என்றேன்.
அடுத்து “ நீங்க எத்தனை பாறை ஓவியங்கள் சார் பார்த்திருப்பீர்கள் ?” என்றேன். அவர் மிகவும் நிதானமாக “ ஒரு நூற்றைம்பது பார்த்திருப்பேன் சார். “ என்றார். எனக்கு ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது. இவரிடம் போய் “ மூ….ணு” என்று உதார் விட்டோமே என்பதை நினைத்து நொந்து விட்டேன் ( ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு). அத்துடன் நின்று விடாமல் “ அதெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வதில்லை சார்”.
இதைத்தான் “ நிறை குடம் தளும்பாது” என்று சொல்வார்கள் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டு, சோர்ந்து போய் “ அழைத்ததற்கு நன்றி சார்” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.
2021 இல் கொரோனோ இரண்டாவது அலை முடிந்த பிறகு, தான் எங்கு சென்றாலும், என்னை “டம்மி பீஸு” என்று உதாசீனப்படுத்தாமல் என்னையும் அழைத்துச் சென்று விடுவார். அத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் என்று எனக்கு ஒரு பெரிய லிஸ்ட்டேகொடுத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து இதுவரை கிட்டத்தட்ட 50 இடங்கள் பார்த்து விட்டேன். இன்னும் 100 இடங்களுக்கும் மேல் என்னை அழைத்துச் செல்வதாக எனக்கு உறுதி அளித்திருக்கிறார்.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இவர் என்னை அழைத்துச் சென்ற ஒவ்வொரு இடத்தையும் இதற்கு முன்னரே அவர் ஏழெட்டு தடவையாவது பார்த்திருப்பார். ஒவ்வொரு முறையும் எனக்காக திரும்பவும் வருகிறார். இந்த பெரிய மனதிற்கு என்னுடைய நன்றியை எப்படி சொல்வது ?
நிறை குடங்கள் நிறை குடங்கள் தான்.
என்னுடைய இந்த இரண்டு ஆசான்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு இந்த 2023 ஐ நிறைவு செய்கிறேன்.
அனைவருக்கும் இனிய 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வெ.பாலமுரளி.
பி.கு : இப்போதெல்லாம் நானும் ரொம்ப தன்னடக்கத்துடன்தான் இருக்கிறேன். காரணம் “ வெறும் குடமும் தளும்புவதில்லை”.